இலங்கையின் மிக முக்கிய இடமாக விரைவில் வடக்கு!; எங்கள் ஆட்சியில் உருவாக்கித் தருவோம்

அண்மையில் ஜனாதிபதி பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை வடக்கு மாகாணத்துக்கு நேரடியாக வருகை தந்து ஆரம்பித்து வைத்திருக்கின்றார். இதுவரை காலமும் வடக்கு மாகாணத்தையும், யாழ்.மாவட்டத்தையும் வித்தியாசமான கோணத்தில் பார்த்த உலகம் இனிவரும் காலங்களில் இலங்கையின் மிக முக்கியமான இடமாக வடக்கு மாகாணத்தை உலகம் பார்க்கின்ற ஒரு காலத்தை எமது ஆட்சியில் உருவாக்கித் தருவோம் என்ற உறுதிமொழியை இந்தச் சந்தர்ப்பத்தில் வழங்குகின்றேன். இதற்கு முன்னோடியாகத் தான் மண்டைதீவில் சர்வதேச மைதானம், மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றத் தென்னை முக்கோண வலயத் திட்டம் போன்ற பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்கு வடக்கு மாகாணத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் நிதிப் பங்களிப்பில் பனை அபிவிருத்திச் சபையின் ஊடாக உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும், பனைமர நடுகை நிகழ்வும் நேற்றுத் திங்கட்கிழமை முற்பகல் யாழ்.கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற போது பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த கால அரசாங்கங்கள் வரவு செலவுத் திட்டத்தில் ஏனைய மாகாணங்களுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு வடக்கு மாகாணத்துக்குக் கிள்ளித் தான் கொடுத்தார்கள். மக்கள் பிரச்சினையை வைத்துக் கொண்டு அரசியல் செய்தார்கள். ஆனால், தற்போதைய எங்கள் ஆட்சியில் வரவு-செலவுத் திட்டத்தில் ஏனைய மாகாணங்களுக்கு அள்ளிக் கொடுத்துவிட்டு வடக்கு மாகாணத்துக்கு வாரி வழங்கியுள்ளோம்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக்குவதில் வடக்கிலுள்ள தமிழ்மக்களும், முஸ்லீம் மக்களும் பாரிய பங்களிப்பைத் தந்தனர். இந்த நாட்டில் தமிழ்மக்களுக்கும் ஒரு பிரச்சினையிருக்கிறது. அந்தப் பிரச்சினையை நாங்கள் இதயபூர்வமாக உணர்ந்திருக்கின்றோம். அறிந்திருக்கின்றோம். எனவே, இந்த மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முதல்கட்டமாகப் பொருளாதார ரீதியாக வடக்கு மாகாண மக்களைப் பலப்படுத்த வேண்டும். அதற்காகத் தான் 2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அதிகூடிய நிதியை வடக்கு மாகாண அபிவிருத்திக்கு நாங்கள் ஒதுக்கீடு செய்தோம்.
மக்களால் புறக்கணிக்கப்பட்ட, மக்களால் விரட்டியடிக்கப்பட்ட சிலர் வடக்கில் மீண்டும் பதவிகளைப் பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். வடக்கு மாகாண மக்கள் இன்று ஒரு தெளிவோடு இருக்கிறார்கள். மீண்டும் மீண்டும் மக்களை ஏமாற்றி, திசை மறித்து அவர்களை வைத்து இனியும் அரசியல் செய்யும் கலாசாரத்துக்குத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இடம் கொடுக்கப் போவதில்லை. வடக்கு மாகாண மக்களும் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ வேண்டும் என்பதே எங்கள் அரசின் விருப்பம் எனவும் குறிப்பிட்டார்.
![]()