பலதும் பத்தும்

மனிதனை கடிக்கும் தெரு நாய்களுக்கு ஆயுள் தண்டனை!

இந்தியா முழுவதும் தெருநாய் பிரச்சனை ஒரு பெரிய சிக்கலாக உருவெடுத்து இருக்கும் நிலையில் இது தொடர்பாக உத்தரபிரதேச அரசு ஒரு வினோதமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதாவது ஒரு தெருநாய் காரணமே இல்லாமல் இரு முறை மனிதர்களைக் கடித்தால் அந்த நாய்க்கு ஆயுள் முழுவதும் காப்பகத்தில் அடைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சில காலமாகவே இந்தியாவில் தெருநாய் பிரச்சனை மிக மோசமான ஒன்றாக மாறியிருக்கிறது.

தெருநாய் பிரச்சனையைக் கையாள உச்ச நீதிமன்றமும் கடந்த மாதம் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தது.

மேலும், இந்த விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து தடுப்பூசி , கருத்தடை பணிகளை எல்லா மாநில அரசுகளும் தீவிரமாக மேற்கொண்டு வந்தன.

இந்த நிலையில்தான் உத்தரப் பிரதேச அரசு வினோதமான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதாவது ஒரு மனிதனைக் காரணமின்றிக் கடித்தால் நாய்களுக்குத் தண்டனையாம். இதுபோல முதல் முறை நடந்தால் அந்த நாய்கள் 10 நாட்களுக்கு விலங்கு மையத்தில் வைக்கப்படுமாம்.

அதேநேரம் மீண்டும் அந்த நாய் காரணமில்லாமல் மனிதர்களைக் கடித்தால் வாழ்நாள் முழுவதும் அந்த நாய் அங்கேயே அடைக்கப்படும் என்றும் உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

இது கிட்டத்தட்ட நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பதற்குச் சமம். அப்படிக் காப்பகத்தில் அடைக்கப்படும் நாய்கள் தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறதாம். யாராவது ஒருவர், அந்த நாயைத் தத்தெடுத்தால் மட்டுமே அது காப்பகத்தில் இருந்து விடுவிக்கப்படும்.

மீண்டும் நாயைத் தெருக்களில் விட மாட்டோம் என உறுதிமொழிப் பத்திரம் கொடுத்தால் மட்டுமே நாயை விடுதலை செய்வார்களாம்.

கோபத்தை கட்டுப்படுத்தமுடியாத நாய்களைக் கையாளும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே அம்மாநில முதன்மைச் செயலாளர் அம்ரித் அபிஜாத் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

தெருநாய் கடி காரணமாக ஒருவர் ரேபிஸ் தடுப்பூசி பெற வந்தால், அந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நாய் விலங்குகள் மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுமாம்.

கால்நடை மையத்தில் நாய்கள் பரிசோதிக்கப்பட்டு கருத்தடை செய்யப்படாவிட்டால், கருத்தடை செய்யப்பட்டு பின்னர் 10 நாட்கள் அந்த நாயின் நடத்தை கண்காணிக்கப்படும் எனவும் விடுவிக்கப்படுவதற்கு முன்பு, அந்த நாய்க்கு மைக்ரோசிப் பொருத்தப்படும் எனவும் இதன் மூலம் நாயின் இருப்பிடத்தைக் கண்காணிக்க முடியும் எனவும் இந்திய மாநில கால்நடை அலுவலர் பிஜய் அம்ரித் ராஜ் தெரிவித்துள்ளார்.

அதே நாய் மீண்டும் மனிதனைக் காரணமின்றி இரண்டாவது முறை கடித்தால், அது வாழ்நாள் முழுவதும் மையத்திலேயே வைக்கப்படும் எனவும் நாய் காரணமில்லாமல் கடித்ததா.. இல்லை தற்காப்பிற்காகக் கடித்ததா என்பதைக் கால்நடை மருத்துவரைக் கொண்ட 3 பேர் கொண்ட குழு முடிவு செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button