இலங்கை

சட்டத்துக்கு பணிந்தே வெளியேறினேன் எவருமே என்னை அச்சுறுத்த முடியாது; தனது அரசியல் எந்த மிரட்டலுக்கும் அடிபணியாது

விஜேராமவில் இருந்தாலும், தங்காலையில் இருந்தாலும் நான் அதே ராஜபக்ஸவேதான். எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கும் எனது அரசியல் அடிபணியாது என்னை தனிப்பட்ட முறையில் குறிவைப்பதற்கு நான் பதிலளிக்க மாட்டேன் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறி தங்காலைக்கு சென்ற பின்னர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே ராஜபக்ஸ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் தெரிவித்துள்ளதாவது,

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்கும் சட்டமூலம் கடந்த 10ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட பின்னர், இதுவரை காலமும் சட்டப்படி எனக்கு வழங்கப்பட்டிருந்த விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து 11ஆம் திகதி வெளியேறினேன்.

இதற்கு முன்னர் குறித்த வீட்டில் இருந்து வெளியேறுமாறு சில அரசியல்வாதிகள் கூறிவந்தனர். எதனையும் செய்ய முடியாது குறுகிய காலத்திற்குள்ளேயே மக்களின் அதிருப்திகளுக்கு உள்ளாகியுள்ளவர்கள் தங்களின் முடியாமையை மூடி மறைப்பதற்காக இவ்வாறு ஊடகங்களின் முன்னால் கூறுவது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் அது தொடர்பான சட்டம் நிறைவேற்றப்பட்ட உடனேயே சட்டத்திற்கு மதிப்பளித்து அங்கிருந்து வெளியேற முடிவு செய்தேன். நான் எப்போதும் சட்டத்திற்கு முன்னாலும் மற்றும் மக்களின் முன்னாலும் மட்டுமே தலைசாய்ப்பேன்.

அரசியல் பயங்கரவாதத்திற்கு நாங்கள் எப்போதும் முகம்கொடுத்துள்ளோம். அதேபோன்று பயங்கரவாத யுத்தத்தை நிறைவு செய்தமையினால் அது தொடர்பில் நான் இலக்கானவனாகவும் இருக்கின்றேன். ஆனால் யுத்தத்தை முடித்தமை தொடர்பில் நான் எவ்வித தயக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. நாட்டுக்காகவே அதனை செய்தேன். நான் இப்போது எனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த பிரதேசத்திற்கே வந்துள்ளேன். எங்களால் நிர்மாணிக்கப்பட்ட அதிவேக வீதியிலேயே வந்தேன். இப்போது கிராமத்தின் உணவுகளை சுவைக்க முடியும்.

மக்கள் எங்கள் மீது வைத்துள்ள எதிர்பார்பார்ப்புகள் அதிகமாகும். இதனால் கடந்த காலங்களில் பல்வேறு சம்பவங்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. மகிந்த ராஜபக்ஸ மனதிற்கு இணங்கியவாறே தீர்மானங்களை எடுப்பவர். இப்போது போன்று மக்கள் ஆதரவு எப்போதும் எனக்கு கிடைக்கும்.

விஜேராமவில் இருந்தாலும், தங்காலையில் இருந்தாலும் மகிந்த ராஜபக்ஸ எப்போதும் மகிந்த ராஜபக்ஸவேதான். நான் உயிருடன் இருக்கும் வரையில் இந்த நாட்டுக்கு ஏதேனும் துரோகம் நடக்குமாக இருந்தால் அதற்கு எதிராக எந்தளவு துன்பங்களுக்கு மத்தியிலும் முன்னிற்பேன். எவ்வாறான அச்சுறுத்தல்களுக்கும் ராஜபக்ஸ அரசியல் பழக்கப்பட்டது என்பதனை கூறிக்கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *