கருப்புச் சட்டையும் கத்திக் கம்புகளும் …. கதை…. சோலச்சி


அதிகாலை ஐந்து மணி.
அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தை துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டு இருந்தனர். வளாகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளும் உணவு பொட்டலங்கள் மடித்த சறுகு இலைகளும் சிதறிக் கிடந்தன. பகல் நேரத்தில் மரத்தடியில் உட்கார்ந்து ஊர் கதை பேசுபவர்கள் சளியைக் காரி துப்பி இருந்தனர். சிலர் வெற்றிலையை போட்டு மென்று துப்பி ஆங்காங்கே ரத்த கரையாக்கி வைத்திருந்தனர்.
“இவங்க நடுவீட்டுக்குள்ள இப்படி எச்சியத் துப்புவாங்களா…. இல்ல கண்டத தின்னுப்புட்டு கண்டமேனிக்கு போடுவானுகளா… அரசாங்க ஆசுபத்திரினா தர்ம ஆசுபத்திரினு அவ்ளோ எளக்காரமா போச்சா… நாம என்ன மானத்துலருந்து தொபுக்கடினு குதுச்சா வந்தோம். இந்தக் கையிலேயே கூட்டிபெருக்கிட்டு ஒருவாயி கஞ்சி குடிக்கிறதுக்குள்ள போறும்போறும்னு ஆயிருது. கெடக்குற லொட்டு லொசுக்கத்தான் அள்ளுவோம்னு பாத்தா… கருமம் புடுச்ச நாத்தத்தையும் சேத்துல அள்ள வேண்டிருக்கு.. எச்சியக் காரிக்காரி துப்புறவனுக காலால் மண்ணைத் தள்ளிட்டு போனா அவுங்க கெவுரவம் கொறஞ்சுருமா… இல்ல கெவுலிதான் சவுனத்த மாத்திசொல்லிப்புடுமா… வெலங்காதவனுக…..” துப்புரவு பணியாளர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.
தூங்கு மூஞ்சி மரத்திலிருந்த காக்கைகளும் நாக்கனத்தான் குருவிகளும் கர்புர்…க்யாங்..கிராக்… க்ச்சு…சச்சு என பறக்கவும் கத்தவும் உட்காரவுமாக இருந்தன. வளாகம் முழுவதும் நாய்கள் நாக்கை தொங்க போட்டவாறு மோப்பம் எடுத்துக்கொண்டு திரிந்தன. உள் நோயாளிகளுக்கு துணையாக வந்தவர்கள் வெளியில் இருக்கும் தேநீர் கடைகளை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
அப்போது, பலத்த ஒலியை எழுப்பியவாறு உள்ளே நுழைந்தது அந்த லாரி.. தொழிற்சாலையில் எழுப்பும் அபாய சங்கை விட அதிகமாகவே அதன் ஒலி இருந்தது.
அலறல் சத்தம் கேட்டதும் காவலாளி ஒருவர் வேகமாய் ஓடி வந்தார். மற்ற பணியாளர்களும் அவசர அவசரமாக நுழைவாயிலுக்கு ஓடி வந்தனர். அறைகளின் சன்னல்கள் வேகவேகமாய் திறக்கப்பட்டன. சிலர் சன்னல் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தனர். சிலர் உள்ளிருந்து நுழைவாயிலுக்கு படையெடுத்தனர். இப்படி ஒரு அபாய ஒலியை எப்போதும் அந்த ஆசுப்பத்திரியில் கேட்டதே இல்லை. லாரியின் பக்க வாட்டில் மழைத் துளி போல் இரத்தம் சொட்டு சொட்டாய் மண்ணில் விழுந்த வண்ணம் இருந்தது.
வண்டியை விட்டு இறங்கிய சுந்தரத்திடம் “எதுக்குயா லாரிய அலறவிட்டுக்கிட்டு உள்ள ஓட்டி வந்த….? அதுல என்னயா இருக்கு…?” காவலாளி கேட்டுக் கொண்டு இருக்கும் போதே கேண்டியனில் டீ குடித்துக் கொண்டு இருந்த காவலர்கள் இருவர் லத்தியோடு ஓடி வந்தனர். சுந்தரம் எதுவும் பேசவில்லை. ஆனால், மெதுவாக லாரியின் பின்பக்க கதவை மட்டும் திறந்தான்.
மூன்று உடல்கள் இரத்தத்தில் மூழ்கி முனகிக் கொண்டு கிடந்தன. மூவரும் அணிந்திருந்த கருப்புச் சட்டை ஆயிரம் கிழிசல்களை சுமந்து கொண்டு இருந்தது. இடுப்புக் கீழ் வேட்டியை இழந்து டவுசர் மட்டுமே அணிந்திருந்தனர். அந்த டவுசர்களும் ஆண் குறியை மறைக்கக் கூட வக்கத்துப் போய் தோரணமாய் தொங்கியது. இரத்த வாடையில் வேடிக்கை பார்த்த சிலர் மயக்கம் போட்டு கீழே விழுந்தனர். சிலரின் கண்களும் வாயும் மூடாமல் சிறிது நேரம் அசைவற்றுப் போனது.

அடுத்த சில நொடிகளில் மூன்று பேரையும் ஆசுப்பத்திரி ஊழியர்கள் ஸ்டெச்சரில் படுக்க வைத்து வேகமாய் அவசர வார்டுக்குள் தள்ளிக் கொண்டு சென்றனர். முதலுதவிகள் செய்யப்பட்டன. மூச்சு மட்டும் ஊசலாடிக் கொண்டு இருந்தது. மூன்று பேரின் கண்களும் திறக்கவே இல்லை. ம்….ம்….ம்ம்….. மூச்சு அனத்திக்கொண்டு வந்தது.
“ஏதோ ஊருக் கலவரம் போல….. உசுரு பொழைக்க மாட்டானுக…”
“அங்காளி பங்காளி சண்டையா இருக்குமோ…?”
“மனசே இல்லாம இப்படி வெட்டிருக்கானுக… படுபாவிகளா…. அந்த முனீசுவரன்தான் அவனுகளுக்கு கூலியக் கொடுக்கனும்….”
அங்கிருந்தவர்கள் தங்களுக்கு பேசிக் கொண்டனர்.
இன்னார் என அடையாளம் காட்ட முடியாத அளவுக்கு முகம் சிதைந்து போயிருந்தது. வெட்டுப்பட்ட உதடுகள் ஏதேதோ சொல்லிக் கொண்டே இருந்தன. கால், கை என வெட்டுப் படாத இடமே இல்லை. புருவத்தில் வெட்டுப்பட்டதால் அதில் வழிந்த இரத்தம் கண்களுக்குள் உறைந்து போனது. ஈட்டியாலும் அரிவாளுடன் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
பொழுது விடியத் தொடங்கியிருந்தது. மருத்துவமனை முன்னால் பழக்கடை போடுபவர்கள் தள்ளு வண்டிகளில் பழங்களை அடுக்கி வைக்கத் தொடங்கினர். வழக்கம் போல் வாசலின் தெற்கு புறம் கிளி சோசியம் பார்ப்பவர் சாக்குப் பையை விரிக்க ஆரம்பித்தார். அப்போதுதான் தகவலறிந்து காவல்துறை வாகனமும் தனக்கான ஒலியை எழுப்பியவாறு உள்ளே நுழைந்தது. வேகமாய் இறங்கிய எஸ்.பி.சண்முகநாதன் மற்றும் சிலரும், தலைமை மருத்துவர் அறைக்குள் சென்றனர். காவலர்கள் சிலர் வெளியிலேயே நின்றனர்.
“வெக்காளியம்மன் கோயில்ல முதல் மரியாதை யாருக்குனு அவனுக அடிச்சக்கப்போயி பந்த பஸ்துக்கு எல்லாரும் அங்க போக வேண்டியதா போச்சு. அதனால சரியான நேரத்துக்கு இங்க வர முடியலயே…. என்ன கலவரம்.. ஏதுன்னு புரியல…..” எஸ்.பி.சண்முகநாதனின் எண்ண ஓட்டம் இப்படியாக இருந்தது.
“சாரமலைல கல்லுக் காலு ஏத்தி மூணாங் குளத்துல இருக்க அய்யாவு வீட்ல எறக்கிட்டு, கூலி ஆளுங்கள நடுப்பட்டில விட்டுட்டு சாயலோகம் ரோட்டுல திரும்பி வந்துக்கிட்டு இருக்கும் போதுதான் புளியம்தோப்புல அலறல் சத்தம் கேட்டுச்சு. ஆளுங்க கூட்டமா கியாமுயானு கத்திக்கிட்டு இருந்தாங்க. எல்லாரு கையிலயும் கம்பு, நீளமா அருவா, ஈட்டி, மம்பட்டினு வச்சுருந்தாங்க. வண்டியப் பாத்ததும் காட்டுப் பக்கம் ஓடிட்டாங்க…”
“அப்போ… எத்தன மணி இருக்கும்…?” காவல் உதவி ஆய்வாளர் அதட்டல் தொனியில் கேட்கவும் சுந்தரத்தின் கைகள் உதறியது. நடுக்கத்தை கட்டுப்படுத்திக் கொண்டான்.
“மூனுல இருந்து மூன்றைக்குள்ள இருக்குமுங்க சார்…! வண்டிய விட்டு எறங்கவே பயமா இருந்துச்சு.. அன்னக்கினு பாத்து கிளினரு வேற லீவு போட்டுருந்தான். எப்புடியோ மனச தேத்திக்கிட்டு பயந்து பயந்துதான் கீழ எறங்குனேன். ரோடுபூராம் ரத்தமா கெடந்துச்சு. ரோட்டுல காலு வைக்க முடியல. சுத்தும்முத்தும் பாத்தேன். ஒருத்தரக்கூட காணோம். ஈங்குருவி கூட கத்தல. லவக்குலவக்குனு இவங்கள தூக்கி போட்டுக்கிட்டு வண்டிய ஓட்டினு வந்தேங்க… உசுரு இருக்கானு கூட பாக்கல…. சார்….” காவல்துறை உதவி ஆய்வாளரிடம் சாட்சி சொல்லிக் கொண்டு இருந்தான் சுந்தரம். அவனது கைகளில் நடுக்கம் குறையவே இல்லை. நெஞ்சு… படக் படக்குனு துடித்தது. எப்படி ஏத்திக்கொண்டு வந்தோம் என்றே அவனுக்கு புடிபடவில்லை.
அப்போது, கருப்புக் கொடியை முகப்பில் பறக்கவிட்ட படி அம்பாஸ்டர் கார் ஒன்று வேகமாக ஆசுபத்திரிக்குள் நுழைந்தது. அதிலிருந்து நசீர்பாயும், பகுத்தறிவு பாசறையின் தலைவர் அழகுமணியும் இறங்கினார். இவர்களைப் பார்த்தும் எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிருந்து வேகமாக வந்தார்.
“பசங்க நிகழ்ச்சிய முடிச்சுக்கிட்டு நல்லாதானே போனாங்க. திட்டம் போட்டு நடந்துருக்கு. இதுக்கு ஒரு முடிவு கட்டாம விடுறதுல்ல” முணுமுணுத்துக் கொண்டே வெரசாக நடந்தார் நசீர்பாய்.
“பாய் நம்ம பசங்களா….?” எஸ்.பி அடுத்து பேசுவதற்குள்…
“சார்….பசங்களுக்கு மட்டும் ஏதாச்சும் ஆகட்டும். சம்பந்தப்பட்டவனுக சங்க அறுத்தர்றேன்..” சொல்லிக் கொண்டே அவசர வார்டுக்குள் தலைவர் அழகுமணியுடன் நுழைந்தார் நசீர்பாய்.
“கொஞ்சம் பொறுமையா இருங்க பாய்…! சட்டம் வேடிக்கைப் பார்க்காது…” சொல்லியவாறு தன் முகத்தை காவல்துறை உதவி ஆயவாளர் பக்கமாக திருப்பினார் எஸ்.பி.
“மிஸ்டர் மனோகரன்… நீங்க அஞ்சு பேரும் உடனே புளியந்தோப்புக்கு போயி விசாரணை பண்ணுங்க. சுந்தரத்த பத்தரமா கூட்டிட்டுப் போயிட்டு கூட்டி வரணும். பின்னாடியே நானும் வந்தர்றேன். எந்தச் சூழ்நிலையிலயும் வண்டில சுந்தரம் இருக்கது யாருக்கும் தெரியக் கூடாது…”
காவல் துறை வாகனம் புறப்பட்டுஆசுப்பத்திரியின் நுழைவாயிலுக்கு வெளியே வந்தது. வாசலில் ஐந்தாம் எண் அரசுப் பேருந்தும் வந்து நின்றது.
“அய்யோ…. எம்புள்ளய கொன்னுட்டானுகளே….! அய்யாவூடு… அய்யாவூடுனு நெனச்சுதானே அவனுக வூட்ல பண்ணக்கி இருந்து காப்பாத்துன்னே.. பாவிப்பயலுக ஏம்புள்ளைக கழுத்த அறுத்துட்டானுகளே. அவனுக இண்டழிஞ்சு போகோ. சங்கிலிக்கருப்பா… ஓங்கண்ணு அவுஞ்சா போச்சு…!” தலைவிரி கோலமாய் கதறி ஒப்பாரி வைத்த ஆராயி பேருந்தில் இறங்கும் போதே தடுமாறி விழுந்தாள். அங்கேயே புரண்டு ஒலமிட்டாள்.
சட்டை அணியாத உடம்பு… கிழிந்து போன பழைய வேட்டியுடன் வந்திறங்கிய ரெங்கனோ…. ” புள்ளயப் பெத்து, குருவி காப்பாத்தன காப்பாத்துனனே…! கருவ அறுத்துப் புட்டானுகளே…! வயலுக்கருப்பா…! ஒங்… கண்ணும் அவிஞ்சா போச்சு..” தலையில் அடித்துக் கொண்டு கதறினார்.
. அடுத்தடுத்து அஞ்சாறு பேர் வந்திறங்கினார்கள். கதறல் ஒலியை தவிர அந்தக் காலை வேளையில் வேறு எந்த ஒலியும் கேட்கவில்லை. தூங்க மூஞ்சி மரங்களில் அமர்ந்திருந்த ஏழெட்டு காக்கைகளும் தன்னிலை மறந்தன. சாலையோரத்து நாய்கள் கூட மிரட்சியுடன் வேடிக்கை மட்டுமே பார்த்தன.
. எஸ்.பி.சண்முகநாதன் தலைமை மருத்துவருடன் ஆலோசனை செய்து கொண்டு இருந்தார். அவசர வார்டுக்குள் இருந்து வெளியே வந்த நசீர்பாயையும் தலைவர் அழகுமணியையும் ரெங்கன் உள்பட அனைவரும் சூழ்ந்து கொண்டார்கள்….
“பாய்… பாத்தீகளா… ஒங்க புள்ளைகள…? மூச்சுக்கு மூச்சு… எங்க பாயி… எங்க பாயினு சொல்லுவானுகளே..! இப்போ மூச்சு இல்லாம கெடக்குறானுகளே…!” தலையில் அடித்துக் கொண்டு கதறினாள் ஆராயி. அடுத்த நொடியே தொப்பென மயங்கி விழுந்தாள். வாழ வேண்டிய பசங்கள இப்புடி பண்ணிட்டானுகளேனு நசீர்பாய்க்கு கோபம் தலைக்கு ஏறியது. தலைவர் அழகுமணி அனைவருக்கும் ஆறுதல் கூறிக்கொண்டு இருந்தார். கீழே விழுந்த ஆராயியை அங்கிருந்த பெண்கள் தூக்கினர்.
“அய்யோ…. அய்யோ… ஆராயி பேச்சு மூச்சு இல்லாம கெடக்குறாளே….” தலையில் அடித்துக் கொண்டு கத்தினாள் கதிராயி…
‘ஒன்னும் இல்ல… ஒன்னும் இல்ல… காத்த விடுங்கம்மா…” தரையில் படுக்க வச்சு முந்தானையால் விசிறினர். “நா… சாகல… எம் மயன காட்டுங்க. எம்மயன கண்ணுல காட்டுங்க….” தலையை நாலா பக்கமும் ஆட்டி ஆட்டி பித்து பிடித்தவள் போல் கத்தினாள் ஆராயி. சத்தம் கேட்டு விரைந்து வந்தார் எஸ்.பி. சண்முகநாதன்.
“பாய்.. தலைவர கூட்டிக்கிட்டு கொஞ்ச நேரம் வெளியில நில்லுங்க… இவங்க மூனு பேரு மட்டும் உள்ள வரட்டும்.” சாந்தமான குரலில் எஸ்.பி சொன்னதும் தலையாட்டியபடி வெளியில் வந்தார் நசீர்பாய்.
“ஏன்… நசீர்… இந்த பசங்க என்ன பாவம் பண்ணுனாங்க…? மத்தவங்களப் போல மானத்தோட தலை நிமிர்ந்து வாழனும்னு நெனச்சது தப்பா…? மேல் சாதினு சொல்றவங்களுக்கு இவனுக நாலுபேர போல நல்லா வர்றத ஏத்துக்க முடியல…. அதான் யீகோ….. மனுசனுக்குள்ள எவனும் அடிமையே இல்ல….” பாய் தோள்பட்டையில் தட்டிக் கொடுத்தார் அழகுமணி.
ஆராயி, ரெங்கன், கதிராயி மூவரையும் உள்ளே அழைத்துச் சென்றனர். அடையாளம் தெரியாத அளவுக்கு உடம்பெங்கும் கட்டு. மூன்று பேருக்கும் செயற்கை சுவாசம் ஏறிக் கொண்டு இருந்தது. இரத்தம் சொட்டுச் சொட்டாய் உடம்புக்குள் செலுத்தப்பட்டுக் கொண்டு இருந்தது. சுருட்டை முடியும், கருத்த உடம்புமாய், கொஞ்சம் குண்டாக இருந்த இருபத்தெட்டு வயது தவராசாவை அடையாளம் காட்டினாள் ஆராயி.
வயிறு ஒட்டிய உடம்பு, ஒடுக்கு விழுந்த முகம் கொண்ட சாமிக்கண்ணை அடையாளம் காட்டினார் ரெங்கன். “சாமி… ஆனி மாசம் வந்தா… இருவத்தாறு வயசு சாமி….” அழுத ரெங்கனை முதுகில் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினார் எஸ்.பி. இருபத்தைந்து வயது சுப்பிரமணியனின் கால்களை பிடித்துக் கொண்டு, அவசர வார்டு அதிரும் அளவுக்கு ஒப்பாரி வைத்தாள் கதிராயி. மூவரையும் தேற்றியபடி வெளியே அழைத்து வந்து, தனது கண்களில் வழிந்த கண்ணீரையும் துடைத்துக் கொண்டார் எஸ்.பி. சிவப்பு விளக்கை எரியவிட்டபடி, ஓசை எழுப்பியவாறு அம்பாஸ்டர் கார் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்தது. அவசர அவசரமாய் மாவட்ட ஆட்சித் தலைவர் கீழே இறங்கி மருத்துவமனை வார்டுக்குள் சென்றார். வணக்கம் தெரிவித்தபடி அதிகாரிகள் சிலரும், மருத்துவர்களும் அவரைப் பின் தொடர்ந்தனர்.
எஸ்.பி. சண்முகநாதனும் உடன் சென்றார். வளாகம் முழுவதும் மீண்டும் மீண்டும் கதறல் ஒலி. காண்பவரின் கண்களை படபடக்க வைத்தது. கதறல் சத்தம் ஒவ்வொரு முறையும் தனக்கான நீதியை அழுத்தமாகவே கேட்டுத் துடித்தது.
“நீதி செத்துப் போச்சா…. ஒரு பாவமும் அறியாத புள்ளைகள ஆட்டக் கொதறன கொதறி வச்சுருக்காங்களே… இத தட்டிக் கேக்க ஒரு நாதியும் இல்லையா…..” நெஞ்சில் அடித்துக்கொண்டாள் ஆராயி.
மாவட்ட ஆட்சித் தலைவர் கலாராணி பாதிக்கப்பட்டவர்களை உள்ளே சென்று பார்வையிட்டார். மூவரும் போஸ்ட்மாடம் பண்ணினதுமாறி கட்டுண்டு கிடந்ததைப் பார்த்து வெடவெடத்து போனார் கலைக்டர். அந்தக் கொடூரக் காட்சி அவரின் கண்களை பதம் பார்த்தது. மனசு பதறியது. அழுகையும் ஆத்திரமும் முட்டிக்கொண்டு வந்தது. கட்டுப்பாடுத்த நினைத்தாலும் அவரையும் மீறி கண்கள் குளமாகின.
“பொழச்சுக்குவாங்களா….?” நா… தழுதழுக்க கேட்டார் கலைக்டர்.
“பொழச்சுக்குவாங்க மேடம்… ஒவ்வொருத்தருக்கும் எரநூறு தையலுக்கு மேல போட்டுருக்கு… எல்லாம் வெட்டுக் காயம்… கத்திக் குத்து.. மூனு பேருக்கும் குதிகால வெட்டி எடுத்துருக்காங்க….” தலைமை மருத்துவர் சொல்லிக் கொண்டே வெளியே வர, எல்லோரும் கலைக்டரை சுற்றி வளைத்துக் கொண்டனர்.
“கலைட்டர் அம்மா…! எங்க புள்ளய பாத்தீகளா…? பேசுனானு்ங்களா….? இந்த ஈன சாதியிலயா வந்து அவனுக பொறக்கனும்…?” தலையிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாள் ரெங்கன் மனைவி சீரங்கி.
மாவட்ட ஆட்சித் தலைவரால் எதுவும் பேச முடியவில்லை. அவர்கள் கைகளைப் பிடித்துக் கொண்டு தன் கட்டுப்பாட்டில் இருந்து மீறிய கண்ணீரால் ஆறுதல் சொல்லியபடி அம்பாஸ்டர் காரில் உட்கார முயன்றவரை பத்திரிகையாளர்கள் சிலர் சூழ்ந்து கொண்டனர்.
“சட்டம்…. அநியாயம் செய்றவங்களுக்கு துணை போகாது… பாதிக்கப்பட்டவங்களுக்கு நீதி கிடைக்கும்” வேறு எதுவும் பேசாமல் கனத்த இதயத்தோடு வாகனத்தில் சென்றார்.
“அய்யோ…. எத்தனை சாமி இருந்தும் எங்கப் புள்ளைகள ஒரு சாமி கூட காப்பாத்தலயே… கண்ண முழிச்சு பாருங்கடா… நாங்க பெத்த புள்ளைகளா….” அலறல் ஒலி அதிர வைத்துக் கொண்டே இருந்தது.
காவல்துறை வாகனம் அரசநாட்டு கண்மாய் வழியாக எடைவஞ்சி கிராமத்துக்குள் நுழைந்து சாயலோகம் சென்ற போது மணிமுள் எட்டைத் தொட முயன்றது. அங்கிருந்து குண்டும் குழியுமாய் கிடந்த புளியந்தோப்பு சாலை அவர்களை வரவேற்றது. வாகனம் மேடு பள்ளத்தில் ஏறி இறங்கி ஆட்டம் கண்டபடி சென்றது.
“இந்த ரோட்ட நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடிதானடா போட்டானுக.. அடப்பாவிகளா…. அதுக்குள்ளயா…?” மனோகரன் தனக்குள் நொந்து கொண்டார்.
கோபால் வண்டிய நிறுத்துங்க… மனோகரன் சொன்னதும் புளியந்தோப்புக்கும் சாயலோகத்துக்கும் இடையில் வாகனம் நின்றது. எதிரே மக்கள் மூட்டை முடிச்சுகளை சுமந்தபடி, கைக்குழந்தைகளை தூக்கிக் கொண்டு சாயலோகம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். மனோகரன் மெதுவாக வண்டியில் இருந்து கீழே இறங்கினார். மக்களின் முகத்தில் விரக்தியும், வேதனையும் மட்டுமே தெரிந்தது. மனோகரன் குறுக்கிட்டார்…
“எங்கள விடுங்க சாமி… இதுவரைக்கும் பட்ட தொயரம் பத்தாதா…? இருக்க குடிசயையும் எரிக்கப் போறதா… ஆளாளுக்கு வந்து மிரட்டுறானுக…. கால் போன போக்குல எங்காச்சும் போயி உசுரக் காப்பாத்திக்குறோம்…” முந்தானையால் கண்ணீரை துடைத்தவாறு கூறினாள் போதும்பொண்ணு. குழந்தைகள் செய்வதறியாது விழித்தனர்.
“சாமி… எங்களுக்குனு இந்தப் புள்ளக் குட்டிகதான் இருக்கு….! அவங்களயும் எழந்துட்டு… இந்த கட்டைக எந்தச் சீமைய சாமி புடிக்கப் போவுது…? அந்தா தெரியுதுல ஊர்காளியம்மா கோயில், அவ கண்ணுக்கு முன்னாடிதான் சாமி நடந்துருக்கு…. போயி அங்க இருக்க பாலக் கட்டைய பாத்துட்டு சொல்லுங்க சாமி…” சொல்லிக் கொண்டே சுப்பன் தன் பேரனை தோள் பட்டையில் சுமந்து கொண்டு சென்றார். மற்றவர்களும் பின் தொடர்ந்தனர்.
அந்த வானம் முழுவதுமாய் விதவைக் கோலம் பூண்டிருந்தது. சாலையோர மரம், செடி, கொடிகள் சுவாசித்தலை மறந்து சிலையாகி நின்றன. ஆள்காட்டி பறவைகள் கூட கத்துவதை நிறுத்தி விட்டு வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தன. வாகனத்தைத் தாண்டி வேதனையை சுமந்தபடி மக்கள் சென்று கொண்டு இருந்தனர்.
“எல்லாரும் எங்கப் போகப் போறாங்க. என்ன செய்யப் போறாங்க. பச்சப்புள்ளைங்க மொகத்த பாக்க முடியலயே… இத்தன காலமா வாழ்ந்த எடத்த விட்டுட்டு எங்க போவாங்க. அடக்கொடுமையே…. “ மனோகரன் புலம்பிக் கொண்டே வந்தார்.
“கோபால்.. வண்டிய பாலக்கட்டைக்கிட்ட நிறுத்துங்க… நா நடந்தே வர்றேன்..” அவருடன் மற்ற காவலர்களும் நடந்தே சென்றனர். காவலர்கள் பனி போர்த்திய உடலாக உறைந்து போயினர். சாலையோரம் சிதறிக் கிடந்த பெருங்கற்களில் இரத்தம் பூசப்பட்டு இருந்தது. கற்களாலும் மண்டையை குத்தி உள்ளனர் என்பதை உணர முடிந்தது. ஆட்டுக்கு தழை வெட்டும் அரிவாள் கம்பு இரத்தம் வழிந்தபடி வேலி மறைவில் கிடந்தது. நெற்களத்திற்கு சாணம் தெளித்ததைப் போல் சாலையில் கொட்டிக் கிடந்தது மனித இரத்தம்.
பாலக்கட்டை வாய்க்காலை உற்றுப் பார்த்தார் மனோகரன். மனிதர்களின் கால் தடம் நிறையவே தெரிந்தது. வெட்டுப்பட்டது மூனு பேர் மட்டும்தானா…? வேறு உடல்கள் ஏதேனும் தென்படுகிறதா என தனக்குள் நினைத்தவர் முட்புதருக்குள் கண்களை சுழட்டினார். எதுவும் தென்படவில்லை. வாய்க்கால் வழியாக கொஞ்ச தூரம் நடந்து போனார். கால் தடங்கள் மட்டுமே இருந்தது. பாலக்கட்டைக்கு திரும்பி வந்தார். சிறிது நேர யோசனைக்குப் பிறகு ஊர்க்காளியம்மனை திரும்பிப் பார்த்தார்.
“ஏச்சுப் பொழைக்கிறவன் மட்டும்தான் சாமி இருக்குனு இன்னமும் கத்திக்கிட்டு இருக்கான். ஒனக்கு எந்த சக்தியும் இல்லனு அவனுக்கும் தெரியும்… இத வெளியில சொன்னா அவன் பொழைக்க முடியாதே…?” ஒனக்கு உண்மையாலுமே சக்தி இருந்தா காப்பாத்திருக்கலாமே. நீயெல்லாம் பொய்யிங்கிறதாலதான் போலீஸ்காரங்களயே உருவாக்கியிருக்காங்க. உதட்டை திறக்காமலேயே சிரித்துக் கொண்டே வண்டியில் உட்கார்ந்தார்… எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாகவே வண்டி ஊருக்குள் நுழைந்தது.
பாதையில் ஒன்றிரண்டு வயதானப் பெண்களைத் தவிர வேறு யாருமில்லை. வெறிச்சோடி காணப்பட்டது ஊர். எந்த நாய்களும் பாதை பக்கம் வரவே இல்லை.
அப்படி என்னதான் அங்கு நடந்தது…?
புளியந்தோப்பு… கருவை மரங்களுக்கு இணையாக தென்னை மரங்களும், மா மரங்களும், வாழை மரங்களும் செழித்து வளர்ந்த பூமி. பணப் பயிரான கரும்பும், உணவுப் பொருளான நெல்லும் வயல்வெளிகளில் செழுமை கூட்டிக் கொண்டு இருக்கும். ஆடு மாடுகளுக்குப் பஞ்சமே இல்லை. அனைத்து வீடுகளிலும் ஆடு மாடுகள் வளர்க்கப்பட்டு வந்தன. குளத்துப் பாசனமும், கிணற்றுப் பாசனமும் கொண்டது. பசுமையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தவர்கள் ஊரின் கீழ் பக்கம் குடிசைகளால் அமைந்த இந்த சேரி மக்கள்தான்.
“ஏன்டா முத்தா….ஓம் பொம்பளயாளு நாளைக்கு கோயில் செய்க்கி நட வருவாளா..? அய்யா கேட்டுட்டு வரச் சொன்னாரு….” சைக்கிளை விட்டு கீழே இறங்காமல் இடது நுனிக்காலை மட்டும் தரையில் ஊன்றியபடி கேட்டான் பன்னிரெண்டு வயது பழனியாண்டி. இவன் மேல வீட்டு சுப்பையாவின் இரண்டாவது மகன்.
“இல்லங்க…. அய்யாமயனே…. பெரியபண்ணை வீட்டுக்கு நடப் போறதா சொல்லிக் கிட்டு இருந்தாளே…” இது அறுபது வயது முத்தன் சொன்னது.
“ஆமடா…! எழவு எட்டுக்கு எல்லாம் சட்டியத் தூக்கிக்கிட்டு இங்க வந்துருங்க… வேலைக்கின்னா… வேற பக்கம் போயிருங்க… தீவாளி, ஆடி அம்மாசினுட்டு நெல்லுசோறு வாங்க வருவீங்கள்ள… அப்ப வாங்க..! எங்க ஆயாள சாணியக் கரச்சு ஊத்தச் சொல்றேன்…” சட்டென்று கிளம்பினான் பழனியாண்டி.
“அய்யாமயனே… கோவிச்சுக்காதீங்க…” தலை சொறிந்த படி நின்ற முத்தனை முறைத்தபடியே சென்றான். திண்ணையில் உட்கார்ந்து சாப்பிட்டவாறு இதைக் கவனித்துக் கொண்டே இருந்தான் சாமிக்கண்ணு. கோபம் கட்டுக்கடங்கவில்லை. அந்தக் காலைப் பொழுதும் அவனுக்கு உச்சி வெயிலாகவே மண்டை சுர்….ரென இருந்தது.
“நம்ம தெருவுக்குள்ள அவனுக வரும் போது நாய்க கூட செத்துப் போயிருது போல… லொள்ளுனு கொலச்சா என்ன கொறஞ்சா போவுது. வாயே தொறக்க மாட்டேங்குதுக..” நொந்து கொண்டான்.
இப்படித்தான் ஒருநாள் பகல் பொழுது. உச்சி வெயிலில் ஊருக்கு ஒதுக்குப்புறமாய் இருக்கும் ஒற்றையடிப் பாதையில் கரும்பைத் தின்றவாறு நடந்து வந்து கொண்டு இருந்தான். வெள்ளிக்கிழமை பெரிய சந்தையில் வாங்கிய பழைய பேண்டும். முழுக்கை சட்டையும் சாமிக்கண்ணை அழகுபடுத்தியிருந்தது.
“நாம டவுனுக்குப் போனா கூட…. சட்டை போடாமத்தான் போறோம்.. அப்புடியே போனாலும் ஒரு பெரிய துண்ட போத்திக்கிறாம்.. இப்புடி இருக்க நம்ம ஊருக்குள்ள எவன்டா…. குழாசட்ட போட்டுக்கிட்டு இவ்வளவு வெரசா போறது….” கிணத்து மேட்டில் நின்ற சண்முகம் குறுகுறுவென பார்த்தான்.
“யார்டா… அங்க போறது…?” ஐம்பத்து ஐந்து வயது சண்முகத்தின் அதட்டலான குரல் கேட்டு திடுக்கிட்டுப் பார்த்தான் சாமிக்கண்ணு. உடம்பு வெடவெடத்து வேர்த்து கொட்டியது.
“அய்யா…. நானு… ரெங்க… மவனுங்க…..” உதடுகள் நடுநடுங்க பயந்து கொண்டே பதிலளித்ததுதான் தாமதம்…
“ஏன்டா…. தான் திங்க தவிட்ட காணோமாம்….! வாரத்துக்குப் பத்து பன்னிக் குட்டிகள வாங்கி வளக்குறீகளோ….? அய்யாவூடா ஆகனும்னு ஆசையோ….? ஈன சாதிப் பயலே…. குழா சட்ட போட்டு மினுக்குறீகளோ… நில்லுடா…. இங்கேயே போட்டு ஒன்ன பொதச்சுடுறேன்….” மண் வெட்டியோடு ஓடி வந்தான்.
சிங்கத்திடம் தென்பட்ட குட்டி மானைப் போல கரும்பை தூக்கி எறிந்து விட்டு தலைதெறிக்க ஓடி வந்ததை எண்ணிப் பார்த்தபோது அவனுக்கு இப்போதும் அதிகமாகவே படபடத்தது. தட்டில் மீதி இருந்த சோற்றை நாய்க்கு கொட்டிவிட்டு, கையை கழுவி வீட்டுக் கொடிக் கயிற்றில் கிடந்த அம்மாவின் சேலையில் துடைத்துக் கொண்டான்.
நான்கைந்து மாதங்களுக்கு முன்னால்தான் நசீர்பாய் அந்தச் சேரிக்கு வந்தார். பெரிய கருவமரத்தடியில் கிடந்த தகட்டுக்கல்லில் நசீர்பாய் உட்கார, எல்லோரும் நின்று கொண்டு இருந்தார்கள்.
“எதுக்கு நிக்கிறீங்க…? ஒக்காருங்கப்பா…” என்றதும் குழந்தைகள் சிலர் தகட்டுக்கல்லில் உட்கார மற்றவர்கள் ஆங்காங்கே உட்கார்ந்தனர். பேச்சு தொடங்கியது.
“இல்லங்க பாய்… நாங்க இப்புடியே இருந்தர்றோம்… ஒங்க அத்தாவும் எங்க மேல ரொம்ப பந்தபாசமாத்தான் இருப்பாக…! நீங்களும் அத்தா மாறியே கடுகளவும் கொறையாம இருக்கீக… அந்த நேச பாசம் போதும் பாய். நீங்க சொல்ற மாறியெல்லாம் எங்களுக்கு ஒத்து வராது பாய்….” குரல் தாழ்த்தி பேசிய சின்னானை தனது கைகளால் இறுக பிடித்துக் கொண்டார் நசீர்பாய்.
ஒட்டு மொத்த சேரியும் நசீர்பாய் முகத்தையே ஏக்கத்தோடு பார்த்தன. அங்கிட்டும் இல்லாம இங்கிட்டும் இல்லாமனு எல்லோரது மனசும் தத்தளித்தது. பாய் சொல்றது சரிதான் என்று தோன்றினாலும் அவர்களால் பொதுவான ஒரு முடிவை எடுக்க முடியவில்லை. ஊரு கட்டுப்பாட்ட மீறி போனாக்க…. நாளப்பின்ன எதும் பிரச்சினைனா….. இதுதான் எல்லோருக்குமான யோசனை.
கூரை வீட்டுத் திண்ணையொன்றில் கட்டப்பட்டிருந்த மாட்டுக்கறி தோரணத்தை நாய் ஒன்று கவ்வ… “ஏத்தா… ஊம அந்த நாய வெரட்டிட்டு தோரணத்த தூக்கிகட்டு…” என்றவாறே அவிழ்ந்த கோவணத்தை இறுக கட்டிக் கொண்டார் பழனி.
“நல்லா ஒழைக்கிறீக….! ஆனாலும் வீடுவீட்டுக்கு சட்டி தூக்குற நெலமமட்டும் மாறலயே. இதப்பத்தி என்னக்கியாச்சும் ஒக்காந்து யோசனை செஞ்சுருக்கீங்களா…” எதிரே நின்ற தங்கராசை தன் கைகளுக்குள் அணைத்துக் கொண்டு “இவனுக்கு வயசு பதிமூனு இருக்குமா….? இவன் கூட படிக்குற புள்ளைக வீட்டுக்கே தீபாவளி அன்னக்கி சட்டி தூக்கிப் போனத பாத்தப்ப…. என் உசுரே ஆடிருச்சு…!” பாய் சொன்ன போது அத்தனை பேரு கண்களும் கலங்கின.
“நாய் போயி மூத்தரம் அடிக்குது. கண்டத தின்னுட்டு பேண்டு வைக்கிது… ஆனா, நீங்க அந்த கோயிலு பாதையில கூட போக முடியல.. நா.. கருப்புச் சட்டக்காரன்தான்…. அய்யா பெரியாரோட உண்மையான தொண்டனா இருக்குற என்னால இந்த இழிவ பாத்துக்கிட்டு வெறுமென இருக்க முடியாது… இன்னக்கி பொழுது சாயுறதுக்குள்ள, சாயலோகத்துல இருக்க நம்ம வீட்டுக்கு விருப்பம் உள்ளவங்க வாங்க…! படிச்சவங்க நெறைய பேரு வருவாங்க… அவங்களோட அறிமுகம் கெடைக்கும். நெறைய புத்தகம் இருக்கு. புத்தகம் படிங்க… ஏதாவது கைத் தொழில் கத்துக்க ஏற்பாடு பண்றேன். சுயமா சம்பாதிக்க ஆரம்பிச்சா இந்த இழிவுத்தனம் காலப் போக்குல மாற ஆரம்பிக்கும். புள்ளைங்களயும் நல்லா படிக்க வைக்கலாம்….” பாய் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே…..
நான்கைந்து இளைஞர்கள் “நாங்க வர்றோம் பாய். இனிமேலும் கூனி குருகி எங்கனால வாழ முடியாது” தவராசா, சாமிக்கண்ணு, சுப்பிரமணியன் மூவரும் ஒன்றாக சொன்னதும் பாய் முகம் மலர்ந்தது. ஏதோ பெரிய சாதனை செய்ததுபோல் பாய் உணர்ந்தார். மூனு பேர் முப்பது பேராக மாறுவார்கள் என நம்பினார். அவரது நம்பிக்கை வீண் போகவில்லை.
அப்போதிலிருந்து சேரி இளைஞர்கள் சாயலோகம் நசீர்பாய் வீட்டுக்கு செல்வதும் வருவதுமாய் இருந்தனர். சாதி வெறி பிடித்தவர்கள் விருந்து சமைக்க தயாராகிக் கொண்டு இருந்தனர். அந்தச் சூழ்நிலையில்தான் சாயலோகத்தில் பெரியார் சிலை திறப்பு விழா பணிகள் நசீர்பாய் தலைமையில் தீவிரமாகிக் கொண்டு இருந்தது. சமயம் பார்த்து அய்யாமார்கள் தங்களை தயார்ப் படுத்திக் கொண்டனர்.
அந்த நாளும் வந்தது. சேரி இளைஞர்களான சாமிக்கண்ணு, தவராசா, சுப்பிரமணியன், பொன்னன் நால்வரும் கருப்புச் சட்டை வெள்ளை வேட்டியை அணிந்து கொண்டு கால்வாய் கரையில் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் உற்சாகமாக போய்க் கொண்டு இருந்தனர். பிணந்திண்ணி கழுகு ஒன்று அவர்கள் எதிரே வட்டமிட்டுச் சென்றது. அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை… அவர்கள் எதிரே மாட்டு வண்டியில் வந்து கொண்டு இருந்த அறுபது வயது பொன்னுச்சாமி குறுக்கிட்டார்.
“எங்கப்பா… கௌம்பிட்டிக…?” குரல் கேட்டு நின்றனர். யாராவது நம்மளப் பாத்து இப்புடி கேக்கமாட்டாங்களா என ஏங்கிக் கொண்டிருந்த தவராசா “அய்யாசெலை தெறக்குறாங்கள்ள…! அங்க தாங்கய்யா போறோம்…” என்றான். இதைச் சொல்லும்போதே அவனுக்குள் இனம்புரியாத மகிழ்ச்சி. அவனுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் அப்படித்தான் இருந்தது.
“ம்… போயிட்டு பத்தரமா வந்து சேருங்கப்பா…. நீங்களாச்சும் நாலெழுத்து படிச்சு நல்ல துணிமணி போட்டு நடக்குறத பாக்கும்போது அஞ்சாறு எளனித் தண்ணிய அள்ளிக் குடிச்சமாறி மனசுக்கு குளுகுளூனு இருக்குது..” சிரித்த முகத்துடன் கடவாய் பல்லை நறுநறுவென பொன்னுசாமி கடித்துக் கொண்டதை நால்வரும் கவனிக்கவே இல்லை. சாயலோகம் செல்வதிலேயே குறியாக இருந்ததால் நடையில் வேகத்தைக் கூட்டினர்.
சாயந்தரம் புளியந்தோப்பு கோயில் வீட்டில் அடக்கி ஆளும் கூட்டத்தைச் சேர்ந்த பத்துப் பதினைந்து பேர் ஒன்று கூடி… ஏதேதோ… கிசுகிசுத்தனர்.
கொஞ்ச நேரத்தில் களைந்து சென்றனர். அனைவரது முகமும் வெறி பிடித்தாற் போல் இருந்தது. ஒவ்வொருவரும் உடம்பை முறுக்கேற்றிக் கொண்டனர்.
அன்றிரவுதான் அந்தக் கோரநிகழ்வு நடந்தேறியது. ஊர் அசந்து உறங்கும் நேரம். மரங்கள் வேகமாக அசைந்து பெரும் காற்றை உண்டாக்கிய போதும் பறவைகள் சத்தமிடவில்லை. அந்த அசைவில் “கீஞ்ச்…. கீஞ்ச்…” என்று தேவாங்கு மட்டும் ஒலி எழுப்பியது. பக்கத்தில் இருப்பவர் யார் என்பது கூட தெரியாத அளவுக்கு அமாவாசை இருட்டு.
திறப்பு விழா, முடிந்த மகிழ்ச்சியில் தவராசா, சாமிக்கண்ணு, சுப்பிரமணியன், பொன்னன் நால்வரும் நடந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தனர். இருட்டு பயம் போக்க “அச்சம் என்பது மடமையடா….” என்ற பாடலை உரக்க பாடிக் கொண்டனர். கீச்மூச்சுனு ஒரு சத்தத்தையும் காணோம். ஆக்காட்டி குருவி அங்கிட்டும் இங்கிட்டுமா கத்திக்கிட்டு திரியும். அதைக்கூட காணோம்னா…. இந்த இருட்டு அதுகளுக்கும் பயத்தக் காட்டிருச்சோ…. நமக்கே தெக்குதெச புடிபடலயே… பாவம் அதுக என்ன பண்ணும்… பேசிக்கொண்டே ஊர்க்காளியம்மன் கோயில் எதிரே இருக்கும் பாலக்கட்டை அருகில் வந்த போதுதான்…. எல்லாம் நடந்து முடிந்தது.
காத்திருந்த கழுகுகள் கண்மூடித்தனமாக வேட்டையாடின. கத்தி, அரிவாள், ஈட்டியால் தாக்கினர். இப்படி நடக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. திடீர் தாக்குதலால் நால்வரும் செய்வதறியாது முழித்தனர். நசீர்பாய்…….நசீர்பாய்…… இருட்டே மிரண்டு போகுமளவிற்கு நால்வரும் அலறினர்.
“என்னடா…. நசீர்பாய் போட்டு ஆட்டுது… அவன அப்புறமா கவனுச்சுக்குறோம்… மொதல்ல இவனுகள முடிங்கடா…” உரத்த குரல் கேட்டதும் அரிவாளால் சரமாரியாக வெட்டு விழுந்தது.
அந்தத் தாக்குதலில் இருந்து பொன்னன் மட்டும் உயிர் தப்பினான். அவன் ஓடுவதை அம்மாவாசை இருட்டும் காட்டிக் கொடுக்கவில்லை. அந்த பூமித்தாயும் பொறுத்துக் கொண்டாள். வரப்பு தடுக்கி தடுமாறி விழுந்து எழுந்த போது பொன்னனுக்கு சிராய்ப்புகள் மட்டுமே ஏற்பட்டிருந்தது. எதையும் யோசிப்பதற்கு நேரமில்லை. சேரிக்குள் நுழைந்தால் போதும் என எண்ணினான். ஊர் நாய்கள் வாயே திறக்கவில்லை. பெரும் போர்வை கொண்டு போர்த்தியது போல் மூச்சை அடக்கிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் அவன் வீட்டுத் திண்ணையில் படுத்துக் கொண்டான். அவனால் தூங்க முடியவில்லை… தேடிப்பிடித்து கொன்றுவிடுவார்களோ என்ற பயம் அவனைப் பாடாய்படுத்தியது. இன்னேரம் அவுங்க மூனு பேரும் செத்துருப்பானுகளோ….. அய்யோ…. இன்னக்கி சீக்கிரமா விடிஞ்சுறாதா……. பொன்னன் மனசு கிடந்து பிசைந்தது.
“முருகையா… அவனுகள அருவாக் கெலனால மண்டையில கொத்துடா….! இவனுகள இப்புடியே விட்டோம்னா… நம்மல எந்த ஊருனு கேட்பானுக… நம்ம தின்னு போடுறத குனிஞ்சு வாங்கிக் குடிக்கிற பயலுவளுக்கு அறிவு மசுரு கேக்குதா. அதுக்குத்தான்டா… அந்த பாய ஆரம்பத்துலயே போடனும்னு சொன்னே…. அவனையும் உசுரோட விட்டோம் பலபேருக்கு கொம்பு சீவி விட்ருவான். ஒத்த வீட்டுகாரனு நெனச்சா… இம்புட்டுக்கும் அவன்தான்டா காரணம்…” கொதித்து எழுந்தது வேலுச்சாமியின் குரல்.
“மாப்ள… இவனுகளுக்கு சமாதி கட்டுனாதாண்டா… மத்தவனுக ஆட்டம் அடங்கும்…” சொல்லிக் கொண்டே மூனுபேர் உடலிலும் ஈட்டியால் சதக் சதகென குத்திக் கொண்டு இருந்தான் முருகையா…
கோயிந்தா….கோயிந்தா….னு மூனு பேரையும் மேலே தூக்கி எறிந்து வெட்டுவதும் குத்துவதுமாய் தொடர்ந்தது… வலி ஈரக்கொளையை வண்டு குடைவது போல் குடைந்தது. வலியால் துடிப்பதைப் பார்த்து எக்காளமிட்டு சிரித்தனர்.
“அய்யா….. விட்டுடுங்கய்யா… இனிமே போவல…”
“ஒங்க மாட்டுச் சாணியெல்லாம் அள்ளுனனே…”
“பெரியய்யா… முடியாம கெடந்தப்ப அவருட்டு பீய நாந்தானே அள்ளுனேன்… குண்டியும் கழுவி விட்டேனே….”
“அய்யா… எங்க சின்னம்மாவ… பெரிய வாக்காலுல ஏங்கண்ணு முன்னாடியே பண்ணாததயெல்லாம் பண்ணுனீகளே….! கடைசியில தூக்குலயும் போட்டு கொன்னீகளே….! இப்ப வரைக்கும் யார் கிட்டயாச்சும் சொன்னேனா….?”
“பெரியப்பா மகள… கெடுத்து, வக்கப் போருல வச்சு எரிச்சிகளே…! அதப்பத்தி வாயி தொறந்துருப்பேனா…..அவ ஓடிப் போயிட்டானுதானே சொல்லிக்கிட்டு இருக்கேன்…..”
“எங்கள விடுங்கய்யா…. இதக் கூட யார் கிட்டயும் சொல்லல…. இன்னங்கொஞ்ச நேரத்துல செத்துருவோம்போல….” மூவரும் முனங்கியது கத்தி குத்தில் மெதுவாகவே கேட்டது.
பரதேசி பய மவனுக இன்னும் செத்துத் தொலையலடா… ஏதோ மொனங்குறானுகடா….வாயிலயே போடுங்கடா…. மொகர ஓடஞ்சு சில்லு சில்லா தெறிக்கட்டும்… மடார்மடாரென உருட்டுக்கட்டையால் அடி விழுந்தது. முண்டவும் இல்லை… முணங்கவும் இல்லை…..
“எச்சிக்களப்பயலுக இன்னயோட செத்துட்டானுகடா… இனிமே எவன் மொளச்சு வர்றாரு பாப்போம். வக்காலி…… மூத்தரத்த மொகரையில அடிங்கடா…” எவனோ சொன்னதும் அனைவரும் கைலியை தூக்கிக் கொண்டு மூத்திரத்தை அடிக்கும் போதுதான் லாரி வெளிச்சத்தைக் கண்டதும் எல்லோரும் தலைதெறிக்க ஓடி ஒளிந்தனர். என்னமோ ஏதோனு பதபதப்போடுதான் லாரியிலிருந்து சுந்தரம் இறங்கினான்.
“பங்காளி…. லாரிக்காரப் பயலையும் ஒரேபோடா போட்றவா… காரப்பத்தைக்குள்ளிருந்து எவனோ சொல்ல… அட நீ வேற பொணத்த அள்ளிக்கிட்டுப் போயி பொதையலா எடுக்கப் போறான்… மற்றொருவன் சொன்னான்.
திண்ணையில் படுத்திருந்த பொன்னன் எப்பொழுது விடியும் என காத்திருந்தான். சோம்பலை கிழித்துக் கொண்டு உரத்த குரலெடுத்து சேவல் ஒன்று கூவியது. இன்னும் கொஞ்ச நேரத்துல விடிஞ்சுரும்…. இதுக்குமேலயும் திண்ணையில இருக்க முடியாது என்கிற முடிவுக்கு வந்தான். மனசு திக்திக்கென்று இருந்தது. தட்தட்டென கதவைத் தட்டினான். என்னமோ..ஏதோனு கதவைத்திறந்து வந்தனர். சொற்கள் வெளியே வர முடியாமல் திணறியது.
அய்யோ….என்னாச்சோ தெரியலயே… எதையும் பாத்து பயந்துட்டானா… ஒன்னுமே புரியலயே…. அவனை அமைதிப்படுத்தினர். அவன் அம்மா குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வந்தாள். தண்ணீரைக் குடித்தும் குடிக்காமலும் ஓ….வென கத்தினான்…. ஆத்……தீ ஏம்புள்ளைக்கி என்னாச்சு….. சேரி முழுதும் ஒப்பாரி சத்தம் அதிர்ந்தது. பொன்னன் வீடு இழவு வீடாக மாறிப்போனது. பொழுது விடிஞ்சும்விடியாமலும் இருந்தது. சேதி கேட்டதும் சிலர் அலறிக்கொண்டே ஆசுபத்திரிக்கு ஓட்டமெடுத்தனர்.
காலை பத்து மணியளவில் பொன்னன், மணி, குமரன் மற்றும் நாலஞ்சு சிறுவர்களும் ஆசுபத்திரிக்குள் நுழைந்தனர். வராண்டாவில் அங்கிட்டும் இங்கிட்டுமா ஏதேதோ யோசனையில் நடந்து கொண்டே இருந்தார் நாற்பத்தைந்து வயது நசீர்பாய். பொன்னனைப் பார்த்ததும் கீழே இறங்கி ஓடி வந்தார். பசங்க மொகமே சரியில்லையே… தப்பான திட்டத்தோடு ஏதும் வந்துருக்கானுகளா…. ஊரு நெலவரமும் ஒன்னுமே தெரியல… அங்கருக்க நம்ம ஆளுக என்னானாங்க…. குழப்பமான மனநிலையில் தாம் இருந்ததை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
“யப்பா… ஒங்களுக்கு ஒன்னும் ஆகலையே….! மனசு கெடந்து பதறியது. பொன்னா… நீ எப்புடிப்பா தப்பிச்ச….? சின்னப் பசங்கள எதுக்குப்பா இங்க கூட்டி வந்த…? ஒருவித படபடப்பான சூழ்நிலைக்கு ஆளானார்… அடுத்த கணமே அனைவரையும் அன்போடு அணைத்துக் கொண்டார்.
“அண்ணே… அய்யா போயிட்டாகளா….?” பொன்னனின் குரல் வலுவிழந்து காணப்பட்டது
“தலைவரு… இவ்ளோ நேரம் இங்கதான் இருந்தாரு. இப்பதான் அசோக் லாட்சுக்கு போயிருக்காரு…”
“அண்ணே..! வெட்டுனவனுகள… திருப்பி வெட்டனும்ண்ணே.. சின்னப் பசங்க கூட இப்ப வெறியோடதான் வந்துருக்கானுக. நாம நல்ல துணிமணி கட்டுனா… படிச்சா இவனுகளுக்கு எதுக்கண்ணே எரியுது….” மணியின் குரல் ஓங்கி ஒலித்தது. ஏதோ வாக்குவாதம் நடப்பதை உணர்ந்த எஸ்.பி.சண்முகநாதனும் அருகில் வந்து சேர்ந்தார்.

“நானு நெனச்சது சரியாத்தான் இருக்கு. அது என்னடா…? எல்லாரு இடுப்புலயும்….” கோபமானார் நசீர்பாய். சட்டையை விலக்கி பார்த்தார்.
“போட்ருக்க சட்டையில ஆயிரம் ஓட்டை.. திங்க சோறு இல்ல… இதுல பழிவாங்குறீகளோ….! இதுக்கா நானு கெடந்து ராத்திரி பகலா அலையுறேன். வேணாம்டா…. உள்ள குத்துயிரும் கொள உயிருமா கெடக்குறானுக…. அவனுகள பாக்குறதா… ஊருக்குள்ள உள்ளவனுக நம்ம மனுசமக்கள என்ன பண்ணி வச்சுருக்கானுகளோ அதுவும் தெரியல… இப்புடி வந்து நின்னா இதுல ஒங்கள வேற எப்புடி பாதுகாக்குறது…… கோபம் முட்டிக்கொண்டு வந்தது.
சற்று நிதானித்தவராக “ஒங்க மூனு பேத்துக்கும் வேலக்கி போற வயசு வந்துருச்சுய்யா. டவுனுக்குள்ள ஏதாவது ஒரு வேலையில சேத்து விடுறேன். குடும்பத்த பாருங்க… இவனுகளுக்கு படிக்கிற வயசுய்யா……. புருஞ்சுக்கோங்கய்யா……” நசீர் பாயின் கண்களில் மளமளவென வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார். அவரின் முகம் எஸ்.பியின் பக்கம் திரும்பியது.
“பாத்தீங்களா….. எஸ்.பி. சார்..? சேரில உள்ளவனும் மனுசன்தானே. இவனுக திருப்பி அடிக்க ஆரம்பிச்சா… நம்ம நாட்டுல ஒரு உசுரு கூட மிஞ்சாது. சேரினா… அவ்வளவு எளக்காரமா போச்சுல….? எத்தனை நாளக்கிதான் அடங்கியே போறதாம்…?” நசீர்பாயின் கண்கள் நெருப்பைக் கக்கியது. தலைகுனிந்து மவுனமானார் எஸ்.பி.சண்முகநாதன்.
“நா கருப்புச் சட்டக்காரன்தாய்யா… கத்திக்கம்பு எடுக்குறவன் இல்ல… பகுத்தறிவு சிந்தனை ஒங்களுக்கும் வரனும்னுதாயா இவ்வளோ பாடுபடுறேன். பலபேரு பகுத்தறிவ குழில போட்டு பொதச்சுட்டு என்னமோ இவனுகதான் இந்த மண்ண காக்க வந்ததுமாறி ஆட்டம் போடுறதுனாலதான் இங்க பிரச்சனையே உருவாகுது…” நசீர் பாயின் கருத்தை ஆமோதிப்பது போல் அவரின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டார் எஸ்.பி.
அழுது அழுது குரல்கள் ஓய்ந்து போயிருந்தன. சற்றே நிசப்தமான உணர்வு. படர்ந்து வளர்ந்த வேப்பமரம் கிளைகளை மெல்லியதாய் அசைத்தது.
இளைஞர்களின் தோளில் தட்டி கண்களை மெதுவாக மூடி திறந்து உதடுகள் திறக்காமல் வாசமிக்க மலர்களை தனது புன்னகையால் மலர விட்டார் எஸ்.பி.
“தம்பிகளா…! சட்டம்… அதோட வேலையை சரியாச் செய்யுமுனு இப்போதைக்கு நம்புவோம். நீங்க எப்ப திருப்பி அடிக்கனும்னு நெனச்சீகளோ….? அப்பவே இந்த உலகம் கால் தூசுக்கு சமம். ஆனா… கத்திய தூக்க ஆரம்பிச்சீக… வாழ்க்கை பாழாப் போயிரும். ஓங்க தைரியத்தை மழுங்கடிக்கிறதா நெனச்சுக்காதீங்க.. யாரு உங்கள கால்ல போட்டு மிதிச்சானுகளோ…. அவனுக முன்னாடி கால்மேல கால் போட்டு உக்காரனும். பொழக்கிறதுக்கான வழிய நா… சொல்லித் தாரேன்ய்யா. படிப்புல வேகத்த கூட்டுங்க… முழுமையான கல்விதான் முக்கியம்.
அரவேக்காடுகதான் சாதிய வச்சுக்கிட்டு ஆட்டம் போடுவானுக… எத்தனை நாளக்கித்தான் சாதிக்காக முட்டி மோதுவானுக. அவன் சாதிக்காரனே அவன திருப்பி அடிக்க ஆரம்பிச்சுருவான்…..? நீங்க படிச்சு பெரிய ஆளா வாங்கய்யா….” கைகளால் அணைத்துக் கொண்டு அவசர வார்டுக்குள் அழைத்துச் சென்றார் நசீர்பாய். அப்போது அவர்கள் அறியாமலேயே இடுப்பில் சொருகி இருந்த கத்திகள் கீழே விழுந்தன….
( solachysolachy@gmail.com )
![]()