அண்டங்காக்கையும் ஊர்க்குருவியும் – 03 … சோலையூர் குருபரன்

கவலையை மறப்போம்…
என்னதான் அறக்கப் பறக்க உழைத்தாலும் நமக்குக் கிடைக்கிறதுதான் கிடைக்கும். வாழ்க்கை ஒரு முடிந்த முடிவல்ல. தினம் தினம் ஆரம்பித்துக் கொண்டிருக்கும் ஒரு தொடர் பயணம். இதற்குள் வாழ்ந்துதான் பார்ப்போம் எனச் சவால்களை வென்று இலட்சியத்தை அடைபவன் மாத்திரமே வாழ்க்கையில் வெற்றி கொள்வான். இன்று பலர் பிரச்சினைகள், சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் வாழ்க்கையில் தோல்வி அடைந்து கொண்டிருக்கின்றனர். இந்த உலகில் எல்லாம் இருக்கின்றன. விடாமுயற்சியினால், தமது ஆற்றலினால் சிலர் அவற்றை அடைந்து உயர்ந்த நிலையை அடைகின்றனர். பலர் வெற்றி வாய்ப்பைக் கைநழுவ விட்டுத்து இலவு காத்த கிளி போல் கொட்டாவி விட்டுக் கொண்டு காத்துக் கிடக்கின்றனர்.
போலியான வாழ்க்கை வாழாமல் கணவனைப் பறி கொடுத்த நிலையிலும் இருப்பதைக் கொண்டு ஊர் மெச்சும்படி வாழ்பவள்தான் மாதவி. மட்டக்களப்பின் தென் மேற்கே படுவான்கரையிலுள்ள பின்தங்கிய கிராமமொன்றில் வாழ்வின் கஷ்ட, நஷ்டங்களைத் தமதாக்கி, அவற்றை வென்று இரண்டு பிள்ளைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள். மாதவி சாதாரண தரம்வரை கற்றவள். கணவன் மாதவன் 2006 ஆம் ஆண்டு கூலி வேலைக்குச் சென்றவன் வீடு திரும்பவில்லை. வேலைத் தளத்தில் வேலை முடிந்து தங்குமிடத்துக்குத் திரும்பி வரும்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் சிக்குண்டு இறந்ததாகவும் அறிய முடிந்தது. மாதவனின் வித்துடல் கூடக் கிடைக்காமையினால் உறுதி செய்ய முடியவில்லை.
மாதவன் வீட்டை விட்டுச் செல்லும்போது ஒன்றரை வயது மகனும், ஆறு மாதக் கற்பவதியாகவும் இருந்தாள் மாதவி. மாதவி படிக்கும்போதும் படிப்பை விட்ட பினனரும் விளையாட்டுக்களில் ஆர்வம் மிக்கவளாக இருந்தாள். வாட்டசாட்டமான தோற்றமும் வனப்பும், பொது நிறமும் கட்டிளைஞர்களைச் சுண்டி இழுக்கும் காந்தப் பார்வையும் கொண்டவளாக இருந்தாள். தேனிக்கள் மலர்களை நாடிச் செல்வது போல் இளைஞர்கள் பலர் மாதவியை வலம் வந்தனர். இருந்தும் மாதவனையே திருமணம் முடித்தாள். அவள் வாழ்க்கையிலும் புயல் அடித்து ஓய்ந்தது. அவள் ஓயவில்லை. வலிகளைச் சுமந்து நிமிர்ந்து நின்றாள். நான்கு மாதங்களில் பெண் குழந்தை பிறந்தது. இரு பிள்ளைகளுக்காகவும் வாழ்க்கையை அர்ப்பணித்தாள். பிள்ளைகளின் நல்வாழ்வே தனது எதிர்காலமென்று வாழத் தொடங்கினால். சவால்களை எதிர் கொண்டாள். துணிவுடன் செயற்பட்டு பிள்ளைகள் இரண்டையும் படிக்க வைத்தாள்.
மகன் பிரணவன் உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கற்று பொறியியல் துறைக்குத் தெரிவாகி இருக்கிறான். மகள் பிரணவி உயர் தரத்தில் உயரியல் தொழினுட்பப் பிரிவில் முதலாம் வருடத்தில் கற்றுக் கொண்டிருக்கிறாள். மாதவிக்கு 41 வயது. பிள்ளைகளுக்காக ஓய்வு, உறக்கமின்றி உழைத்துக் கொண்டிருக்கிறாள். அவளின் உழைப்பால் கட்டிய சிறு கல்வீடு மற்றும் ஸ்கூட்டி உந்துருளி, மாவரைக்கும் இயந்திரும், வீட்டுத் தோட்டம், மூன்று கறவைப் புசுக்கள், மூன்று கன்றுகள், ஆறேழு ஆடுகள், முப்பது முட்டைக் கோழிளும், அணிவதற்கு ஒரு சில நகை நட்டுக்களும் அவளிடம் சொத்துக்களாக உள்ளன. அத்தோடு வீட்டுக்குள் தையல் இயந்திரம், தொலைக்காட்சி மற்றும் வீட்டுக்குத் தேவையான தட்டுமுட்டுச் சாமான்களையும் வைத்திருக்கிறாள்.
இலவசக் கல்வி எண்டுதான் பேர். காசு பணம் இல்லாவிட்டால் எந்த ஒரு தேசியப் பரீட்சையிலும் சித்தியடைய முடியாது உன்ற நிலைதான் பாடசாலைக் கல்விக் கட்டமைப்பினதும், பரீட்சைக் கட்டமைப்பினதும் விதியாகும். அதிலும் கணித, உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கற்பதென்றால் இலச்ச ரூபாய்க்கு மேல் செலவாகும். மாதவியும் இவ்வாறு செலவிட்டுத்தான் பிள்ளைகளைப் படிப்பித்துக் கொண்டிருக்கிறாள். மாதவியின் தகப்பன் இறந்த பின்னர் தாயும் தன்னோடுதான் இருக்கிறாள். மாதவியும் பிள்ளைகளும் அவளுக்குப் பக்கபலமாக இருக்கின்றனர்.
“மகன்… பிரணு மாலையாகுது மனெ, மேயப் பொன ஆடு, மாடுகள் பக்கத்திலதான் மேயும் சாச்சித்து வந்து காலைக்குள்ள ஏத்திக் கட்டிடு மகன். மகள் நான் கோழிக் கூட்ட வெளியாக்கித்து வாறன். மாவரைக்க அரிசி கொண்டு வைச்சவங்க வருவாங்க அதக் கொஞசம் அரச்சிக் கொடு புள்ள” “சரியம்மா நான் அரைக்கிறன் கெதியா வாங்கோ”
காலையில் மேயப்போன மாடுகள் கந்தையாவின் வீட்டு வாசல் படலை திறந்திருந்ததனால் உள்ளே புகுந்த மாடுகள் பயிர் பச்சைகள், வாழை, மாங்கன்று எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டன. மிகுந்த கோபத்தோடு கந்தையாவும் மனைவியும் இருந்தனர். அந்த வேளையில் பிரணவன் அவர்களின் கண்ணில் பட்டான்.
“தம்பி கொஞசம் இஞ்ச வந்து பாடுங்கோ உங்கட மாடுகள் என்ன செங்சிருக்கெண்டு. இதுக்கெல்லாம் வந்திய ஆர் தாறது” என்று கந்தையா கூற, குசினிக்குள் நின்ற கந்தையாவின் மனைவி கனகம் “ஓமொம் நல்லாச் சொன்னீங்க, மாடு வளக்கிறண்டா அத ஒழுங்கா மேய்க்கணும். நாங்க தெனமும் தண்ணியக் கிண்ணிய அடிச்சிப் பாதுகாத்து வச்சிருக்க உங்கட மாடுகள் திண்டுத்துப் போனா, யார் வந்தியக் கிந்தியத் தாறது. இதெல்லாம் சும்மா விடேலாது” எனக் கூறிக் கொண்டு வெளியே வந்தாள். கந்தையா முறைத்துப் பார்க்க மனைவி அடங்கிவிட்டாள். பிரணவன் ஒன்றும் பேசாது நின்றான். “கொம்மாட்டப் போய்ச் சொல்லு.
இனிமே மாடுவந்து பயிர்பச்சையத் திண்டுத்தெண்டா நான் சும்மா இருக்க மாட்டன். மாட்டெல்லாம் புடிச்சிக் கட்டிப் போடுவன்” என்றதும் மனைவி “இதுக்கெல்லாம் ஈவிரக்கம் பாக்கேலாது. அப்புடித்தான் செய்யணும்” என்று கனகம் கோபத்தில் கத்தினாள். அங்கு நின்றால் பிரச்சினை பெரிதாகும் எனக் கருதிய பிரணவன் அங்கிருந்து விலகிச் சென்றான்.
‘அவங்க படலையை அடைத்து வைத்திருந்தா மாடுகள் ஏன் வளவுக்க போகுதுகள். திறந்திருந்தா போகுந்தானே’ என்ற சிந்தனையோடு ஆடு, மாடுகளைச் சாய்த்துக் கொண்டு காலைக்குள் விட்டு அடைத்துக் கட்டினான். “அம்மா கனகம் மாமின்ட வளவுக்குள்ள மாடுகள் போய் அவங்கட பயிரெல்லாம் சாப்பிட்டுத்து. கடுமையா ஏசிப் போட்டாவு. இனி நான் அந்தப்பக்கம் மாடு சாய்க்கப் போக மாட்டன்” என்றான் பிரணவன்.
“மகன் நீ ஏதும் எதித்துக் கதைக்கல்லத்தானே?” “இல்லம்மா நான் ஒண்டும் கதைக்கல்ல. ஒண்டும் பேசாமப் போயித்தன்” “அதுதான் சரி மகன். தேநீர் போட்டு வைத்திருக்கிறன். கால், முகத்தக் கழுவித்து வந்து குடி” எனக் கூறிக் கொண்டு ‘கனகம் அக்காவுக்கு இவனோட படிச்ச மகள் ஓ.எல்லில நல்ல ரிசல்டு எடுக்கல்ல எண்டு கொட்டித் தீக்கிறாவு. கடப்பக் கட்டி வைச்சிருந்தா மாடுகள் ஏன் போகுது’ என மனதுக்குள் நினைத்தவாறு குசினிக்குள் சென்றாள்.
ஒரு வாரத்தின் பின்னர் காலை வேளையில் மெய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் கனகத்தின் வீட்டு வாசல் படலை திறந்திருக்க உள்ளே சென்று பயிர்களைச் சாப்பிடும் போது மாடுகளைக் கண்ட கந்தையா பாடலையைச் சாத்தி மாடுகளைக் கட்டிவிட்டான.
“மாதவி! இவன் கந்தையன் உன்ட மாட்டெல்லாம் வளவுக்குள்ள போனதாமெண்டு கட்டிப்
போடடிருக்கான். கனகத்திர குணத்தப் பத்தித் தெரியும்தானே சத்தம்கித்தம் போடாம சமாதானமாகக் கதைச்சி மாடுகள அவுட்டுத்து வரப்பாரு புள்ள. எதுக்கும் தனியப் போகாத. ஆரையும் கூட்டித்துப் போ” என அழகமக்கா கூறிச் சென்றாள். மாதவிக்குக் கையும் ஓடல்ல காலும் ஓடல்ல. ‘இன்று என்ன நடக்கப் போகிறதோ’ என உண்மையில் பயந்து விட்டாள். இவற்றைக் கேட்டுக் கொண்டு மாமரக் கிளையில் அமர்ந்திருந்த அண்டங்காக்கை என்ன நடக்கப் போகிறது எனக் கூர்ந்து அவதானித்துக் கொண்டிருந்தது.
கோயில் தலைவர் சுந்தரத்தையும் அழைத்துக் கொண்டு கனகத்தின் வீட்டுக்குச் சென்றாள் மாதவி. அண்டங்காக்கையும் பின் தொடர்ந்து சென்றது.
கனகம் மாதவியைக் கண்டதும் “வாடி எண்ட சிறுக்கி், நி மாடு வளக்கிறெண்டா ஒண்ட ஊட்டுக்குள்ள வளத்துக்கோ. நீ ஊர் மேயிற மாதிரி ஒண்ட மாடுகளும் ஊர் மேயுதுகள். வந்தியக் கட்டாம நான் மாடுகளத் தரமாட்டன். நீ என்னெண்டாலும் செஞ்சுக்கோ”
“கந்தையா உண்ட பொண்டில் அந்தப் புள்ளயப் பத்திக் கண்டமாதிரிக் கதைக்கிறாள் நீயும் பாத்துத்து இருக்கிறா. அந்தப் புள்ளையப் பத்தி ஊருக்கே தெரியும். கவலயெல்லாம் மறந்து புள்ளைகளுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். உனக்குப் பயிர் அழிஞ்சிருக்கெண்டா நட்டத்தக் கேழு. நியாயப்படி நடப்பம்” என்றார் கோயில் தலைவர். குறுக்கிட்ட கனகம் “ஓ சிண்ணும் கூட்டித்து வந்திருக்கிறாளோ சிறுக்கி” “பொத்திடி வாய. இனி ஏதும் கதைச்சா? போடி உள்ள” என்று கந்தையா உறுக்கியதும் கனகம் ஒதுங்கிவிட்டாள்.
“இஞ்ச பாரு கந்தையா. மாடுகள் ஐந்தறிவு ஜீவன்கள். அதுகளுக்கு என்ன தெரியும். படலயப் பூட்டி வைச்சா ஏன் உள்ளுக்க வருதுகள். மத்த மத்த இடங்கள்ல இப்புடி ஒண்டும் நடக்கல்லயே. உங்கள்லையும் தப்பு இருக்கு. மாதவியின் பக்கம் திரும்பி “புள்ள நீ என்ன செய்யப் போறா” என்றார் தலைவர்.
“மாமா எங்கள்லையும் பிழை இருக்குது. நீங்க சொல்றமாதிரி நடந்குக்கிறன்” என்றாள் மாதவி.
“அப்ப சரி கந்தையா புள்ள தாறத்த வாங்கித்து மாட்ட அவுத்துக் கொடு. இனிமே தினமும் படலயச் சாத்தி வை. புள்ள அதக் கொடு. பாவம் புருசனும் இல்லாம. ஒத்தரிட்டையும் கையேந்தாம கஷ்டப்படுது. நம்மதான் அதுக்கு உதவணும். எங்க புள்ள அந்தக் காசக் கொடு” என்று தலைவர் கூறியதும் மாதவி கையில் இருந்த மூன்று பச்சை நோட்டுக்களை கந்தையாவின் கைக்குள் திணித்தாள். வாங்க மனமில்லாமல் கனகத்தின் வாயடைக்க வாங்கிக் கொண்டான். இருவரும் மாடுகளைச் சாய்த்துக் கொண்டு புறப்பட்டனர். பூவரசு மரக் கிளையில் அமர்ந்திருந்து அவதானித்துக் கொண்டிருந்த அண்டங்காக்கை மகிழ்ச்சியுடன் பறந்து சென்று உயரமான வேப்ப மரத்தின் சிறிய கிளை ஒன்றில் அமர்ந்து, ஊர்க்குருவியின் வரவை எதிர்பார்த்திருந்தது.
வான்வெளியில் வேகமாகப் பறந்து சென்று கொண்டிருந்த ஊர்க்குருவி அண்டங்காக்கையைக் கண்டதும் தாழப் பறந்து வந்து அருகில் அமர்ந்து கொண்டது.
“வா தம்பி இண்டைக்கு நான் சந்தோசமாக இருக்கிறன்” “என்றுமில்லாத மாதிரி இண்டைக்கு என்னக்கா சந்தொசம். சொல்லுங்களன்” என்றது ஊர்க்குருவி.
“தம்பி உனக்கு மாதவி அக்காவத் தெரியுந்தாளே. புருசன் காணாமப் போனபோது கையிலொண்டு, வயித்திலொண்டு இருந்திச்சாம். புள்ளைகள் இரண்டையும் வளத்தெடுக்க என்ன பாடுபட்டிருக்கும். கவலகளை மறந்து தன்னந் தனியனா நிண்டு, ஆரிரையும் காலக் கையப் புடிக்காம சொந்தக் காலிலேயே நிண்டு வாழ்ந்து கொண்டிருக்குது. ஒண்டு ரெண்டு பேருக்கு இதப் பாக்கக் கடுப்புத்தான். அதுல கனகத்துக்குப் பொறுக்க முடியல்ல. இண்டைக்கொரு பிரளயம் நடக்க இருந்திச்சு. மாதவி அக்கா புத்திசாலித் தனமாக கோயில் தலைவரக் கொண்டு சாமாளிச்சுப் போட்டுது”. அதுதான் சந்தோசமா இருக்கன் என்றது அண்டங்காக்கை.
“மாதவி அக்காவ எனக்கும் தெரியும். தானும் தண்டபாடுமாகத் தண்ட குடும்பமே கதியெண்டு ராப்பகலா உழைச்சி முன்னேறி இருக்கு. அதுதான் சிலருக்குப் பொறுக்கல்ல. பொன கிழம மாடுகள் பயிர அழிச்சதக் கொண்டு கனகம் பெரிய புரளி ஒண்டக் கிளப்ப இருந்திச்சு. நல்ல காலம் மாடு சாய்க்க மாதவி அக்கா போகல்ல. மகன்தான் பொயிருந்தான். மகன் பொறும காத்து வந்திட்டதாலக் கனகத்தக்கு பேயறைஞ்சமாதிரிப் போச்சுது. இண்டைக்கும் அது நடக்கல்ல. அக்கா காச்ச மரந்தானே கல்லெறியும் பொல்லெறியும் படும். இந்த உலகம் இருக்குதே வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாவும் ஏசும். அதப் புரிஞசு கொண்டு நம்மட வாழ்க்கய நாம் வாழ்ந்தாச் சரிதான். எது நடந்தாலும் அதப்பற்றிக் கவலப்படாமல், நமது மனதுக்கு எது சரியெனப் படுதோ அதச் செய்து கொண்டு நம்மட வழியில நாம் போய்க் கொண்டே இருக்க வேண்டும்.
அதைத்தானே மாதவி அக்காவும் செய்து கொண்டிருக்கிறா. அவ வழி தனி வழி அதன்படியே அவ போகட்டுமெ. வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்ல பூமியில். கவலய மறந்து எவர் கிடைப்பதைக் கொண்டு சந்தோசமாக வாழ்கிறாரோ அவரே நிம்மதியாக வாழ்வார்.” என்று ஒரு நீண்ட பிரசங்கமே வைத்தது ஊர்க்குருவி.
“என்னடா தம்பி எண்டைக்குமில்லாத மாதிரி இப்புடிக் கதைக்கிறா. நீயும் ஒலகத்தப் பாத்துத் தேறித்தா போலக் கிடக்கு” என்று பெருமைப்பட்டது அண்டங்காக்கை. “இதுதானே அக்கா உலக நடப்பு. அதைத்தானே சொன்னன். வேற புதிசா ஒண்டும் சொல்லல்லையே. அக்கா எனக்கும் நேரமாகுது. போயித்து வாறன்” என்று சொண்டினால் இறகுகளை நீவிவிட்டுச் சிறகடித்துப்
பறந்து சென்றது ஊர்க்குருவி.
வியப்போடு ஊர்க்குருவியைப் பார்த்துக் கொண்டிருந்த அண்டங்காக்கை தனது சொண்டினால் இறகுகளை நீவிவிட்டு இரைதேடப் பறந்து சென்றது. ஊர்க்குருவியும் உயரப் பறந்து வான்வெளியில் கலந்துவிட்டது.
கோயில் தலைவரின் சாதுரியத்தால் பிரச்சினை சுமுகமாக தீர்ந்ததை எண்ணி மகிழ்ச்சியோடு மாதவி குசினிக்குள் பகல் உணவு சமைத்துக் கொண்டிருந்தாள்.
களம் தொடரும்…….
![]()