இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?…. நியூசிலாந்து சிற்சபேசன்

வடக்கு கிழக்கில் மிதமிஞ்சிய இராணுவப்பிரசன்னம் என்பது யதார்த்தமாகும். அங்கேயே, இராணுவத்தின் மூன்றின் இரண்டு பகுதியினர், நிலைகொண்டுள்ளதாகக் கணிக்கப்படுகின்றது.
அதனால், யுத்தம் முடிவடைந்து எண்ணிரண்டு ஆண்டுகளின் பின்னரும், இராணுவமயப்பட்டதாகவே தமிழ் பிரதேசங்கள் காணப்படுகின்றன. யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில், பாதுகாப்பு என்னும் கோதாவில் தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டன.
அவ்வாறு அபகரிக்கப்பட்ட தனியார் காணிகள், யுத்தம் முடிவடைந்த பின்னர்
விடுவிக்கப்படவில்லை.
அதனால், உரிமைக்காகப் போராடப் புறப்பட்ட இனமொன்று, தன்னுடைய தனிப்பட்ட சொத்துக்காகப் போராட வேண்டிய நிலைக்குத் தள்ளபட்டது.
ராஜபக்சா முதல் திசநாயக்க வரை அனைவருமே ஒரே சிந்தனையையே கொண்டிருக்கின்றனர்.
அதனால், காணி விடுவிப்பு என்பது அம்புலி காட்டுகின்ற கதையாகவே தொடர்கின்றது.
காணி விடுவிப்பை, ஒரு சலுகையாகக் கருதுகின்ற மனப்பாங்கு அரசியல்வாதிகளிடம் காணப்படுகின்றது.
ஒவ்வொரு தேர்தல் காலத்திலும், காணி விடுவிப்பு, ஒரு சடங்காகவே நடாத்தப்படுகின்றது.
அப்போதும்கூட, அற்பசொற்பமான காணிகளே விடுவிக்கப்படுகின்றன.
காணிகள் விடுவிப்புடன், பாதை விடுவிப்பும் தொடர்புபட்டது.
சில பிரதேசங்களிலே, காணிகள் விடுவிக்கப்படுகின்றன. ஆனால், பாதைகள் விடுவிக்கப்படுவதில்லை. சிலசந்தர்ப்பங்களில், கட்டுப்பாடுகளுடன் பாதை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றது.
அதற்கு, பலாலி வீதியின் ஒரு பகுதியே எடுத்துக்காட்டாகும்.
குடாநாட்டின் முக்கிய வழித்தடங்களில் பாலாலி வீதி குறிப்பிடத்தக்கதாகும். இஃது 1850களை அண்டிய காலப்பகுதியிலே அமைக்கப்பட்டதாகும். கந்தர்மடம், திருநெல்வேலி, கோண்டாவில், உருப்பிராய், ஊரெழு, புன்னாலைக்கட்டுவன், வயாவிளான், பலாலி என பல பகுதிகளூடான வீதியாகும். குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கல்வி, வணிக மையங்களைக் கொண்டிருக்கின்றது.
அஃது 1990ல் மூடப்பட்டது. 2025லேயே மீண்டும் பொதுமக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டது. ஆனாலும்கூட, பாதசாரிகளுக்கு அனுமதி கிடையாது போன்ற கட்டுப்பாடுகள் உள்ளன.
எந்தவொரு யுத்த சிலமனும் இல்லாத சூழலிலேகூட, சொந்த மண்ணிலே பாதம் பதிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையே தமிழ் மக்களுக்குக் காணப்படுகின்றது.
ஆரம்பத்தில், காலை 6 முதல் மாலை 5 மணி வரையே பொதுமக்களின் பாவனைக்கு திறந்துவிடப்பட்டது. மாலை 5 மணிக்கு மூடப்படுவதனால், தொழிலுக்குச் செல்பவர்களினால் அதிகமாகப் பயன்படுத்த முடியவில்லை. அஃது மக்களின் ஆதரவுக்கு அரசு ஏங்கிய காலமாகும். அதனால், மற்றுமொரு சலுகையை வழங்கியது. மாலை 7 மணிவரையென நேரம் நீட்டிக்கப்பட்டது.
வயாவிளான் சந்தியிலிருந்து, பருத்தித்துறை – பொன்னாலை வீதி வரையிலான சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரம், பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படுகின்றது.
அதனாலேயே பொதுமக்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
இஃது, மிதமிஞ்சிய இராணுவப்பிரசன்னம் ஏற்படுத்துகின்ற நெருக்கடிக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமேயாகும்.
யுத்தமற்ற சுழலிலே, ஏன் இராணுவப்பிரசன்னத்தைக் குறைக்க முடியவில்லை என்பது இயல்பான கேள்வியாகும்.
ருசி கண்ட பூனை அடுப்பங்கரையை மறக்காது என்பார்கள். வளம்கொழிக்கும் செம்பாட்டு மண்ணின் விளைச்சல், வடகடலின் மீன்வளம் என மூன்று சாகப்தங்களுக்கு மேலாக, ஊரான்சொத்தை ஆண்டனுபவித்த போகத்தைக் கைவிட முடியவில்லை.
இராணுவப் பிரசன்னம் என்பது, தமிழ் மக்களின் வளங்களைச் சுரண்டும் பொறிமுறை என்று சொல்வதுகூட மிகையில்லை.
அதற்கப்பால், பெளத்த – சிங்கள அடையாளங்களை தமிழ் பிரதேசங்களிலே நிறுவுவதற்கும் இராணுவத்தினர் பயன்படுகின்றனர்.
தையிட்டி விகாரை தொடர்பிலான சர்ச்சை பூதாகரமாகிய பின்னரும்கூட, அங்கே புதிய கட்டிடத்தொகுதியொன்றை இராணுவத்தினரே அமைத்திருக்கின்றனர்.
தையிட்டி, நிலாவரை, நீராவியடிப் பிள்ளையார், வெடுக்குநாறிமலை, குருந்தூர்மலை, கிண்ணியா, குடும்பிமலை, உகந்தைமலை, மயிலத்தமடு-மாதவனை என எல்லா விடயங்களிலுமே இராணுவத்தின் மறைகரம் உண்டு.
ஆக, மிதமிஞ்சிய இராணுவப்பிரசன்னம் என்பது பாரிய சமூகப் பிரச்சனையாகும்.
அத்தகையதொரு பிரச்சினை தொடர்பிலான ஹர்த்தாலே, “எடுத்தேன் கவிழ்த்தேன்” என்னும் பாணியிலே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மடுத்திருவிழாவும், நல்லூர் உற்சவமும் மதம் – மொழி – இனம் கடந்து கவனிக்கப்படுகின்ற நிகழ்வுகளாகும்.
அத்தகையதொரு விழாச் சூழலிலேயே, ஆகஸ்ட் 15ல் ஹர்த்தால் அறிவிக்கப்பட்டது.
அதற்கு மடுவிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியது.
அதனால், ஆகஸ்ட் 18க்கு ஹர்த்தால் மாற்றப்படுவதாகச் சொல்லப்பட்டது.
ஆனால், ஆகஸ்ட் 18ல் நல்லூர் திருவிழா பூர்த்தியடையவில்லை என்பது மட்டுமல்ல. அஃது தேர்த்திருவிழாவை அண்டிய காலப்பகுதியுமாகும்.
கூடவே, நல்லூர் திருவிழாவையொட்டி கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகளும்
நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதிலே புத்தகக் கண்காட்சியும் ஒன்றாகும்.
அத்துடன், ஆகஸ்ட் 18, தவணை விடுமுறைக்குப் பின்னர் பாடசாலைகள் ஆரம்பமாகிய தினமாகும்.
இத்தகையதொரு சூழலிலேயே, ஹர்த்தாலுக்கான எதிர்ப்பு அதிகரித்தது.
அதனால் ஹர்த்தால் ஏற்பட்டாளர்கள் பதட்டமடைந்தனர். காமெடியான அறிவிப்புக்களை வெளியிட ஆரம்பித்தனர்.
மாலை 4 மணிவரையில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு என்றார்கள்.
அதன்பின்னர், காலை மட்டுமே ஹர்த்தால் என்று சப்பைக்கட்டு கட்டினார்கள். மதியம் 12 மணிக்குப் பிறகு கடைகளைத் திறக்கலாம் என்று சொன்னார்கள்.
இவ்வாறாகவே ஹர்த்தால் நடைபெற்றது.
அதனால், ஹர்த்தால் நடந்தது. ஆனால் நடக்கவில்லை என வடிவேலு பாணியிலேயே சொல்ல முடிகின்றது.
எப்படி நடந்திருக்க வேண்டிய ஹர்த்தால். இப்படி ஆகிவிட்டதே என விசனம் கொள்ளவேண்டியதாகிவிட்டது.
தமிழ் மக்களுடைய பிரச்னையை நீர்த்துப்போகச் செய்வதுதான், ஹர்த்தால் ஏற்பட்டாளர்களின் நோக்கமோ என்னும் எண்ணத்தைக் கடந்துசெல்ல முடியவில்லை.
இராணுவப்பிரசன்னத்தை தமிழ் மக்கள் எதிர்க்கவில்லை. அதனையே, ஹர்த்தாலின் விறுத்தம் வெளிப்படுத்துவதாகச் சொல்லுவதற்கு வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றது.
![]()