கட்டுரைகள்

இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்: தொடர் – 20….. சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

இதற்கிடையில் ஒருநாள் நான் ஊருக்கு சென்ற சமயம் என்னிடம் ஒரு புகார் வந்தது. அதாவது கோவிலை அடுத்த வீட்டில் மாடியில் மராமத்து வேலை நடந்தது. அப்போது பக்கத்து வீட்டுக்காரர் மாடியிலிருந்து மண், உடைந்த செங்கல் போன்றவற்றை கோவிலுக்குள் கொட்டியிருக்கிறார் என்பதுதான் புகார்.

நான் புகார் கொடுத்தவரிடம் சொன்னேன். சுடலைமாடன் யாருமல்ல. எனது முன்னோராக வாழ்ந்து மறைந்த ஒருவரின் நடுகல்தான். அவருக்கு என்னால் பாதுகாப்பாக ஒரு சுற்றுச் சுவரை மட்டும் கட்டிக்கொடுக்க முடிந்தது. கட்டிக் கொடுக்கத்தான் முடியும். வெளிநாட்டில் இருக்கும் என்னால் அவரைப் பாதுகாக்க முடியாது.

அவரை அவர்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர் தலையில் ஒருவர்IMG_2043.JPG மண்ணைக் கொட்டுகிறார் என்றால் நான் என்ன செய்யமுடியும் என்றேன். தன்னையே காத்துக் கொள்ளமுடியவில்லை என்றால் அவரெல்லாம் என்ன குலசாமி என்று கூறிவிட்டு ஆஸ்திரேலியா வந்துவிட்டேன்.

இரண்டு வாரங்களில் ஊரிலிருந்து உறவினர் தொலைபேசியில் அழைத்தார். மண்ணைக் கொட்டிய பக்கத்து வீட்டுக்காரர் மண்ணை அள்ளிச் சென்றுவிட்டார் என்றார். அத்தோடு மட்டுமல்ல சுடலைமாடனுக்கு ஒரு பூஜையும் போடவேண்டும் கேட்டைத் திறந்து விடுங்கள் என்கிறார் என்றார்.

அப்படி என்ன அதிசயம்தான் நடந்தது. நான் சுடலைமாடனைப் பற்றிச் சொன்னது அவரது தன்மானத்தை தாக்கியுள்ளது. பக்கத்து வீட்டு மாடியிலுள்ளவர்கள் இரவில் படுத்துத் தூங்கமுடியாமல் உறுமல் சத்தத்துடன் சீற்றம் கொண்டு விதவிதமான சத்தம் எழுப்பினாராம் சுடலைமாடன். அங்கு இருக்கும் வேப்ப மரத்தை சடசடவென(இரட்டைக்கிளவி) ஆட்டி பயமுறுத்தினாராம்.

IMG-20180214-WA0013.JPG

நான் காற்றில் வேப்பமரம் ஆடி சத்தம் கேட்டிருக்கும் என்றேன். அதைத்தான் நானும் அவரிடம் சொன்னேன் என்றார். அப்படிச் சொன்னதற்கு காற்றில் மரம் ஆடுவதற்கும் ஒரு ஆள் மரத்தின் கிளைகளைப் பிடித்து உலுக்குவதற்கும் வித்தியாசம்கூட எனக்கு தெரியாதா என்றாராம்.

பயத்தினால் மாடியிலிருந்து இறங்கி எல்லோரும் கீழே வந்து விட்டார்களாம். அப்புறம் மண்ணை அள்ளிச் சென்றுவிட்டார். சென்றதோடல்லாமல் சுடலைமாடனுக்கு பூஜையும் போட்டிருக்கிறார். பூஜை போட்டதும் இப்போது எந்த சத்தமும் இல்லையாம். வேப்பமரம் சடசடவென ஆடுவதில்லையாம். பயமேதுமின்றி மாடியில்
நிம்மதியாக தூங்குகிறார்களாம்.

என் உறவினர் சொன்னதை நான் உங்களுக்குச் சொன்னேன். நான் சுடலைமாடனைப் பார்த்து தன்னையே காப்பாற்ற முடியாத இவரெல்லாம் என்ன குலசாமி என்று சொல்லியது மண்ணைக் கொட்டியவர் காதுக்கு எட்டியிருக்கும். தான் செய்த குற்றம் அவரை உறுத்தியிருக்கும். அந்த நினைவில் படுத்திருந்திருப்பார். அந்த நினைவால் மனம் பாதிக்கப்பட்டிருப்பார் என்றே எண்ணுகிறேன்.

IMG_2044.JPGநான் மொழிபெயர்ப்பாளர் கவுன்சிலிங்கின்போது ஒருவரது மனநிலை எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிவேன். அதை நிவர்த்தி செய்ய எப்படியெல்லாம் கவுன்சிலிங் கொடுக்கப் படுகிறது என்பதையும் அறிவேன்.

ஆதலால் அவர் குற்றத்தை உணர்ந்து மண்ணை அள்ளிச் சென்றதோடு பூஜையும் போட்டதால் குற்றத்துக்கு பரிகாரம் பண்ணியதாக உணர்கிறார். அதனால் அவருள் ஏற்பட்ட மாயையான எண்ணங்கள் மறந்து பயம் நீங்கியுள்ளது. அவ்வளவுதான் என்று நான் எண்ணுகிறேன்.

நான் உறவினரிடம் சொன்னேன், கடவுள் இருக்கான் குமாரு என்பது சரியாகத்தான் இருக்கிறது என்றேன். இதை இங்கே ஏன் சொல்லுகிறேன் என்றால் இதுபோல் கடவுள் என்னை ஏன் மேலே வைத்தாய் அல்லது ஏன் கீழே வைத்தாய் என்று தகராறு செய்திருந்தாலாவது நாம் வீட்டில் அவரை எங்கு வைக்கலாம் என்று சிந்திக்கலாம்.

கடவுள் தன்பாட்டுக்கு இருக்கையில் மக்கள் செய்யும் செயல்களை எண்ணும்போது ஒன்றும் புரியமாட்டேன் என்கிறது. அவரவர்களுக்கு அவர்கள் கவலை. ஆனால் அவர்களுக்கு ஒன்றைச் சொல்கிறேன. இவர்கள் கண்ணப்பரை விட சிறந்த பக்தர்களா? ஏனென்றால் கண்ணப்பர் கடவுள் கண்ணிலேயே கால் கட்டைவிரலை வைக்கவில்லையா?

கண்ணப்பரை விடுவோம். சாதாரண மனிதர்களாவது இருப்பார்களா என்றே சந்தேகம் உள்ளது. ஏனென்றால் உயிரில்லாத அல்லது உயிருடன் மேலுலகத்தில் இருக்கிறார் என்று நம்பப் படுகின்ற கடவுளுக்கு ஒரு தனி அறை அந்த அறையையும் கீழே வைக்கலாமா அல்லது மேலே வைக்கலாமா என்று ஆராய்ச்சி செய்யும் மக்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள்.

அந்த மறதி என்ன தெரியுமா? நம்மை இந்த உலகுக்கு அறிமுகப் படுத்திய தெய்வங்களை மறந்துவிடும் மறதிதான். அந்த தெய்வங்கள் நம்மை உருவாக்கி இரத்தமும் சதையும் கொண்ட உருவாக உயிருடன் உலவ விடாதிருந்தால் இந்த மேலுலகத்தில் வாழுகின்ற தெய்வங்களைத் தெரிந்திருக்குமா?

IMG_2045.JPG

ஆதலாலால் நாம் முதலில் வணங்க வேண்டிய தெய்வம் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று ஔவையார் கொன்றைவேந்தனில் சொன்னதைச் செய்யாமல் பெற்றோர்களை வீட்டில் தங்க வைக்காமல் முதியோர் இல்லத்தில் தங்க வைத்து விட்டு ஏற்கனவே சொர்க்கத்தில் சகல சௌகரியங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் கடவுளுக்கு வீட்டிலேயே ஒரு அறையைக் கொடுக்கிறோம்.

அதிலும் அவர் கோபித்துக்கொள்வாரோ என்று எண்ணி அவருக்கு மேலே ஏறி இறங்காமல் வசதியாக இருக்க கீழே அறை கொடுக்கலாமா? அல்லது அவரே கீழே வைத்துவிட்டு மேலே நாமிருந்தால் அவரை அவமதிப்பதாகாதா? என்றெல்லாம் எண்ணுகிறோம். ஆனால் புதிதாக மாளிகை மாதிரி வீடுகட்டி இருக்கிறான் பெற்றோரை முதியோர் இல்லத்தில் விட்டிருக்கிறான் என்பார்களே அது அவமானமாகாதா என்று எண்ணுவதில்லை.

கொன்றை வேந்தனில் சொன்ன முதல் அடியையும் பின்பற்றவில்லை இரண்டாவது அடியையும் மக்கள் பின்பற்றுவதில்லை. அந்த இரண்டாவது அடி ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பதாகும். ஆலயம் தொழுவது சாலவும் நன்றென்றிருக்க இறைவனுக்கு ஏன் வீட்டில் இடம் கொடுக்க துடிக்கிறோம்?

(தொடரும்…)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *