இலக்கியச்சோலை

மலையக இலக்கியத்திற்கு வலிமை சேர்த்த சாரல் நாடனின் படைப்பாக்கம்!….  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(மலையக இலக்கிய முன்னோடி சாரல்நாடன் நினைவு தினம் ஜூலை 31, 2014)
இலக்கியத்தின் எல்லைகளை விசாலித்ததாக்கும் முயற்சிகளில் இளம் வயதினர் இன்று மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றனர். நம்நாட்டின் சமகால அரசியல் நடவடிக்கை இதற்கு மேலும் உந்துதல் தருவதாக அமைந்துள்ளது.
‘இல்லையென்பார் இல்லை’ என்றதொரு சமுதாய அமைப்பை நோக்கி கம்பர் காலத்திலிருந்தே தமது பயணத்தை வலியுறுத்தி வந்த நம்மவர்கள் – அழிவை அழித்தொழிக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தில் – இலங்கையின் அரசியலில் வழிதவறிய, நடைதவறிய நிலையில், இழப்புகளையும் இழப்போம் என்றை உறுதிபூண வேண்டும் என 1990இல் வெளியான சார்ள்ஸின் “இழப்புகளையும் இழப்போம்” ஹைக்கூ கவிதை தொகுதி முன்னுரையில் சாரல்நாடன் குறிப்பிட்டுள்ளார்.
சாரல்நாடன் என்ற பெயரில் எழுதிய கருப்பையா நல்லையா (மறைவு: ஜூலை 31, 2014)  இலங்கையின் மலையக எழுத்தாளர்களுள் முக்கியமானவர். மலையகம், மலையக இலக்கியம் தொடர்பில் பல ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். சாரல் வெளியீட்டகம் என்ற பதிப்பகம் மூலம் நூல் வெளியீட்டிலும் ஈடுபட்டவர். சிறுகதை, புதினம், மற்றும் ஆய்விலக்கியங்களை எழுதியவர்.
அடக்குமுறைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் சாரல் நாடன், இலங்கையின் இரு சாதியத்தார் அரச அடக்கு முறைகளுக்கெதிராக கிளர்ந்தெழுவதில் ஒன்று பட்டு நிற்றலைக் குறிக்கும் படைப்பாக இது அமைகிறது. நிழலில்லாத சூரிய வெளிச்சம் இனச்சலுகை காட்டாத ஆட்சியாளரின் அடக்கு முறைக்கு குறியீடாக கவிதைகள் எழுந்துள்ளன என இம்முன்னுரையில் தெரிவித்துள்ளார். அத்துடன் ஈழத்து மலையக இலக்கிய வளர்ச்சியை ஆய்வு செய்யப்போகின்ற ஆய்வாளர்கள், விமர்சகர்கள் காலக்கணக்கெடுப்பு நடத்தும் பொழுது 1930 களின் பின்னர் நடேசய்யர் யுகம் என்றும், 1950களின் பின்னர் சி.வி. வேலுப்பிள்ளை யுகம் என்றும் 1980களின் பின்னர் சாரல் நாடன் யுகம் என்றும் கணிக்க வேண்டும்.
ஹைக்கூவை மூன்றடிமுத்து என்பர், மூன்றாவதடி தரும் சுகமான அதிர்ச்சி கவிதையின் மதிப்பை உயர்த்த உதவுகின்றது எனவும் அப்படி அமைந்த ஹைக்கூ கவிதைகளே சிறப்படையும் என ஹைக்கூ கவிதைகளை பற்றி சாரல் நாடன் குறிப்பிட்டுள்ளார்.
 அரசியல் சமூகக் கருத்துக்களை வெளிப்படுத்தும் ஆற்றல் மிகுந்த கருவியாக ஹைக்கூவைப் பயன்படுத்துவதில் சார்ள்ஸின்
‘’இழப்புக்களையும் இழப்போம்” என்ற ஹைக்கூத் தொகுதி வெற்றியடைந்து உள்ளமை தெரிகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மலையக மண்ணின் மைந்தன் :
சாரல்நாடன் நுவரெலியா மாவட்டம், சாமிமலை, சிங்காரவத்தை தோட்டத்தில் கருப்பையா, வீரம்மா ஆகியோருக்கு 1944 மே 9 இல் பிறந்த இவரது இயற்பெயர் நல்லையா. அப்கொட் தோட்டப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், அட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியில் தனது இடைநிலைக் கல்வியையும் கற்றார். கண்டி அசோக வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி பின்னர் ஓய்வு பெற்றார்.
அட்டனில் படித்த போது பாடசாலை இதழ்களில் கவிதைகள் எழுதி வந்தார். பின்னர் மலைமுரசு, வீரகேசரி, தினகரன் இதழ்களில் எழுதத் தொடங்கினார். 1962 இல் வீரகேசரி நடத்திய மலையக எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் இவருடைய கால ஓட்டம் என்ற சிறுகதைக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. புனைவுகளை விட இவரது ஆய்வு நூல்களே இவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தது. மலையகத்தை மையமாக வைத்து இவர் 14 நூல்களை எழுதியுள்ளார்.
சாரல்நாடனின் நூல்கள் :
மலையக எழுத்தாளர்கள் எவரும் அதிகம் ஆர்வம் காட்டாத ஆய்வுத்துறைகளில் அக்கறை காட்டியவர் சாரல் நாடன். அடுத்தவர்களின் கட்டுரைகளின் குறிப்புக்களை சேகரித்து எழுதுவதில் இவருக்கு விருப்பம் இல்லை. தகவல்கள் சரியானவையா ஆதாரங்கள் உண்மையானவையா என்பதை நேரில் தேடிப்பிடித்து விளக்கம் பெற விரும்பிய சாரல் நாடன், மலையகத் தமிழர் (1990), மலையக வாய்மொழி இலக்கியம் (1993), மலைக் கொழுந்தி (சிறுகதைகள், 1994), சி. வி. சில சிந்தனைகள் (1986), தேசபக்தன் கோ. நடேசையர் (1988), பத்திரிகையாளர் நடேசைய்யர் (1998), ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.
மலையக மண்ணின் மைந்தனான சாரல் நாடனின் தேடலின் அற்புத அறுவடை தான் ‘தேசபக்தன் கோ. நடேசய்யர்’ என்ற மலையகத்தின் மாமனிதரைப் பற்றிய நூல். ஒரு காலத்தில் மலையகம் பற்றிய தகவல்களைப் பெற சி.வி.யிடம் தான் போவார்கள். அவர் இல்லாத கால கட்டத்தை நிறைவு செய்தவர் சாரல். அவரது இடத்தை நிரப்ப கருத்துக்கெட்டிய வரை மலையகத்தில் எவரும் இல்லை என்பதே உண்மை நிலையாகும். அத்துடன் மலையகம் வளர்த்த தமிழ் (1997), இன்னொரு நூற்றாண்டுக்காய் (1999), மலையக இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் (2000), மலையகத் தமிழ்ர் வரலாறு (2004), பேரேட்டில் சில பக்கங்கள் (2005), பிணந்தின்னும் சாத்திரங்கள் (2002), இளைஞர் தளபதி இரா. சிவலிங்கம் (2010) ஆகிய நூல்களையும் சாரல் நாடன் எழுதியுள்ளார்.
சாரல் நாடன் ஒரு சகாப்தம்:
சாரல் நாடனின் எழுத்துக்கள் தென்றலாக வீசி, புயலாக மலையக இலக்கியத்திற்கு வலிமை சேர்த்துள்ளமை என்பது உண்மையே. மலையக இலக்கிய வராலாற்றில் அவருக்கு தனி அத்தியாயம் எழுதப்பட வேண்டும். கவிமணி சி.வி.யின் பன்முக ஆற்றலை இன்றைய தலைமுறையினர் அறியும் வண்ணம் ‘சி.வி. சில சிந்தனைகள்’ என்ற படைப்பையும் சாரல் நாடன் தந்துள்ளார்.
தேனீக்கள் பறந்து பறந்து பூக்களில் மகரந்தத்தை சேகரிப்பது போல நூல் நிலையங்களை தேடி சாரல் நாடன் போனார். கொழும்பு தேசிய சுவடிக்கூடம், நூதனசாலை நூலகம், கண்டி சத்தியோதய நூலகம் அட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் சகோதரத்துவ நூலகம், நுவரெலியா நூலகம், போன்றவற்றில் அதிக நூல்களைத் தேடிப் படித்தார். தேசிய சுவடிக்கூடத்தில் பழம் பத்திரிகைகளையும் நுணுகி ஆராய்ந்தார். மாதக் கணக்கில் விடுமுறை எடுத்து ஆங்கில, தமிழ் பத்திரிகைகளில் குறிப்புக்கள் சேகரித்தார். இதனாலேயே அவரது படைப்புக்கள் அதிகமாக ஆய்வு இலக்கியங்களாகவே இருந்திருக்கின்றன.
விருதுகைள விரும்பாத விருட்சம் :
சாரல் நாடன் எழுதிய “தேசபக்தன் கோ. நடேசய்யர்'”, “பத்திரிகையாளர் கோ. நடேசய்யர்” ஆகிய இரு நூல்களும் இலங்கை சாகித்திய விருதைப் பெற்றன. வீரகேசரி பத்திரிகை நடத்திய மலைநாட்டு எழுத்தாளர்களுக்கான முதலாவது சிறுகதைப் போட்டியில் இவரது “கால ஓட்டம்” என்ற சிறுகதை இரண்டாம் இடத்தைப் பெற்றது. ஆயினும் அவர் விருதுகளை விரும்பாத விருட்சமாகவே மலையக மண்ணில் மிளிர்ந்தார்.
பொதுவாக மலையக இலக்கிய வரலாற்றைக் கால அளவை அல்லது அதன் வளர்ச்சி படிநிலைகளை மூன்று கால கட்டங்களாக நோக்கலாம். கோ.நடேசையர் காலம் முதல் கால கட்டம் எனவும்  சி.வி. யின் காலத்தை இரண்டாம் கால கட்டம் எனவும் சாரல் நாடன் தொட்டு இதுவரையான காலத்தை  மூன்றாம் காலக்கட்டம் என்றும் பிரிப்பவர் உண்டு.
உண்மையில் இவை அங்கீகரிக்கப்பட்ட அல்லது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, அறியப்பட்ட கால வரையறையாக இல்லாவிட்டாலும் இந்த ஒவ்வொரு இலக்கிய ஆளுமைகளை முன்னிறுத்தி மலையக இலக்கிய வளர்ச்சிப் பரிணாமத்தை நிச்சயம் வகைப்படுத்துதலே ஆரோக்கியமானதாகவும் நியாயமானதாகவும் இருக்கும்.
இப்படியான வகைப்படுத்தல்கள் உலக இலக்கிய கலாசாரத்துக்குள்ளும் இயல்பாக இருக்கும் ஒரு போக்குடைமை என்பது யாவரும் அறிந்தது. மேலும் மேற்சொன்ன காலவரையறையும் அதற்குள் உழைத்திருக்கும் அவர்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் மிகவும் அபரிமிதமாக இருந்து வந்திருப்பது காலம் தந்த அறிவு.
அந்த அடிப்படையில் மலையக இலக்கிய செல்நெறிகளில் கோ. நடேசய்யர், சி.வி யை விட மலையக இலக்கிய கலாசாரத்துக்குள் பலதரப்பட்ட இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டவர்களில் முதன்மையானவராக  திரு சாரல் நாடனை காணலாம்.
மலையக மண்ணின் மைந்தனான சாரல் நாடனின் கவிதை வரிகள் அவரின் கவிப்புலமை ஆற்றலை எமக்கு வெளிக்காட்டி உள்ளது. சாரல் நாடனின் எழுத்துக்கள் தென்றலாக வீசி, புயலாக மலையக இலக்கியத்திற்கு வலிமை சேர்த்துள்ளமை எனபதும் உண்மையே.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *