இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்: தொடர் – 17…. சங்கர சுப்பிரமணியன்


நடிகையின் ஆப்பிள் கதையை சற்று மறப்போம். எல்லாம் அறிந்த முருகப்பெருமான் ஒரு மாம்பழத்துக்காக மாங்கு மாங்கென்று (இரட்டைக்கிளவி) மென்மையான மயிலையும் வதைத்து உலகத்தை சுற்றி வந்தும் மாம்பழம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்து கோபத்தினால் கோவணத்துடன் பழநி மலைமீது ஏறி அமர்ந்ததை நினைத்தாலாவது போகிறபோது புண்ணியம் கிடைக்கும்.
முருகப் பெருமாள் கோபத்தில் பழநியில் அமர்ந்தார். ஆனால் பாண்டிய மன்னனின் கோபத்தால் சிவபெருமான் பிரம்படி பட்டார். ஓரு காலத்தில் மதுரையில் வைகையாற்றின் கரை உடைந்தது. அரசனின் ஆணைப்படி வீட்டிற்கு ஒரு ஆள் வைகைக்கரையை சீர் செய்யும் பணியில் ஈடுபடவேண்டும். ஒரு மூதாட்டி பிட்டு விற்று பிழைப்பு நடத்துகிறாள். அவள் வீட்டிலிருந்து பணிக்கு செல்ல ஆண்மகன் யாருமில்லை.
அப்போது தானே எழுதி இயக்கிய நாடகத்தில் சிவபெருமான் மூதாட்டியின் சார்பாக பணிக்கு செல்கிறார். சிவபெருமான் தான் செய்யும் பணிக்கு கூலியாக மூதாட்டியிடம் பிட்டு கேட்கிறார். ஆனால் பணியைச் சரிவர செய்யாததால் மன்னனிடமிருந்து பிரம்படி படுகிறார். இப்படியாக எல்லாம் வல்ல இறைவனே மண்சுமந்து பிரம்படி பட்டிருக்கிறார். எனவே எவரது வாழ்வும் சீராகச் சென்று சீராக முடிவதில்லை. அதில் பல சிக்கல்கள் வந்துதான் போகும்.
அதேபோல் இராமாயாணம் கதை சொல்வதென்றால் கூட இராமன் வில்லை உடைத்தார் சீதைய மணந்தார் வனவாசம் சென்றார் வனவாசம் போன இடத்தில் இராவணன் சீதையைக் கடத்துகிறான். இராமன் வானரசேனையொடு சென்று இராவணனைக் கொன்று சீதையை மீட்டு நாடு திரும்பி வந்து பட்டம்சூட்டிக் கொள்கிறான் என்பதுதான் கதை.
ஆனால் கதையை அப்படியா சொல்கிறார்கள். கதை ஓட்டத்தில் யாரெல்லாமோ வருகிறார்கள் என்னவெல்லாமோ நடக்கிறது. அதுபோல் இங்கேயும் கட்டுரையை எழுதும்போது கட்டுரையிலும் பலவற்றை சொல்லவேண்டிய நிலை கட்டுரை ஓட்டத்தில் வருகின்றது.
இரமாயாணத்தில் எல்லாவற்றையும் சொன்னாலும் முழுவதையும் சொல்லாமல் இராமருக்கு பட்டம் சூட்டுவதோடு முடிப்பதன் மர்மம் என்ன? இராமருக்கு பட்டம் சூட்டியபின்னும் இராமாயணம் இருக்கிறதே. இராமன் சரயு ஆற்றில் விழுந்து இறக்கும்வரை முழுக்கதையையும் சொன்னால் மட்டுமே அது இராமாயாணம்.
ஒருவரது வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது அவரது இறப்பு வரை சொன்னால் மட்டுமே அது வாழ்க்கை வரலாறு. அப்படியில்லாமல் அவர் பிறந்து வளர்ந்து கல்வி கற்று வேலைக்கு செல்கிறார். பின் திருமணமாகி குழந்தைகள் பெற்று வாழ்க்கையில் தக்க ஒரு நிலையை அடைந்தபின் அவர் வாழ்க்கை நிறைவுற்றது அதுதான் அவரது வாழ்க்கை வரலாறு என்றால் ஏற்றுக் கொள்ளமுடியுமா?
அவரது வாழ்க்கையில் ஒரு நிலையை அடைந்தபின் என்னென்ன ஆயிற்று? நோய் வாய்ப்பட்டாரா? இயற்கையில் மரணம் அடைந்தாரா? அல்லது விபத்தில் மரணம் அடைந்தாரா? என்று இறுதிவரை நடந்தவற்றை கூறினால் தானே அது அவரது வாழ்க்கை வரலாறாக நிறைவுபெறும்.
இப்போது மாடசாமி அண்ணாச்சியின் கேள்விக்கு பதில் சொல்கிறேன். நம்ம மதத்தில் நடப்பதை நாம் கேட்காமல் வேறு யார் கேட்பார்கள்? வேறு மதத்தவரா வந்து கேட்பார்கள். கேட்டால் அவர்களை சும்மா விட்டுவிடுவோமா? நம்ம வயலில் களை நிரம்பி இருந்தால் நாம் களை எடுப்போமா? அல்லது அடுத்த வயல்காரர் களை எடுக்க வருவாரா? வந்தால் நாம் விடுவிடுவோமா? அது நமக்கும் பொருந்தும்.
பக்கத்து இலைக்கு பாயாசம் போடுங்க என்பது ஒரு ஜோக்தான். அதைக் கடைப்பிடிக்க முடியாது. அப்படிச் சொன்னால் நீ யாருய்யா எனக்கு பாயாசம் போடச் சொல்ல? உனக்கு வேண்டுமானால் கேட்டு வாங்கிக்க. எனக்கு இப்பவே சுகர் உச்சத்தில் இருக்கு. உனக்கு நான் என்னய்யா கெடுதல் பண்ணினேன். என்னை சீக்கிரம் சொர்க்கத்துக்கு அனுப்ப பாக்குற என்று சண்டைக்கு வரமாட்டார?
நாம் கடவுளர் வாழ்ந்த காலத்தில் அவர்கள் செய்யாததை எல்லாம் செய்து மகிழ்விக்கிறோம் என்று எண்ணி பலவற்றை செய்கிறோம். எல்லாம் அவர்கள் சிலையாக இருக்கிறார்கள் எழுந்து ஒடிவிடமாட்டார்கள் என்ற எண்ணமே காரணமாகும்.
என்ன புதிர் போடுகிறேன் என்று பார்க்கிறீர்களா? கடவுளருக்கு அபிசேகம் செய்வதைப் பற்றித்தான் சொல்கிறேன். எல்லா கடவுளரும் நாம் இப்போது அவர்களுக்கு அபிசேகம் செய்வதுபோல் குளித்திருப்பார்களா?
நாம் இன்று கடவுளின் தலையிலும் உடலிலும் ஊற்றி அபிசேகம் செய்யும் பால், தயிர்,தேன் போன்ற அத்தனை பொருட்களையும் பயன்படுத்தியா குளித்திருப்பார்கள்? அவர்கள் செய்தார்கள் என்று அறியாத ஒன்றை அல்லவா நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
கடவுளர் மேலுள்ள தீராத காதலாலும் பக்தியாலுமே இப்படி செய்கிறோம் என்று நாம் சொல்லலாம். அத்தோடு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் என்பதை தெரிந்தும் அல்லவா அவருக்கு நாம் செய்கிறோம். நாம் ஆறு, குளம், கடலில் வேண்டுமானால் திறந்த வெளியில் குளிப்போம். ஆனாலும் இடுப்பில் ஒரு துணியையாவது கட்டிக் கொண்டுதான் குளிப்போம்.
குளியலறை இல்லாத ஆறு அல்லது குளம் இல்லாத கிராமத்தில் வாழும் மக்கள்கூட குளியலறை இல்லாவிட்டாலும் ஒரு மறைவிடத்தை ஏற்படுத்தி அங்கேதான் குளிப்பார்கள். ஆனால் நமக்கெல்லாம் முன்னோடியாய் நின்று காக்கும் பரம்பொருளை எல்லோரும் பார்க்கும்படி அபிசேகம் செய்கிறோம்.
நமக்கெல்லாம் உணவளித்து காக்கின்ற தெய்வங்கள் மறைவில் சாப்பிடுவார்களா? விருந்து புறத்திருக்க தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று என்று சாதாரண மனிதராய் வாழ்ந்த வள்ளுவர் சொல்லியிருக்கிறார். அவராவது விருந்தினருக்குத்தான் சொன்னார். அப்படியிருக்க பக்தர்கள் புறத்திருக்க சாவாமருந்தல்லாத பொங்கலையும் புளியோதரையையுமா கடவுள் திரைமறைவிலா சாப்பிடுவார்?
பக்தர்கள் யார்? கடவுளரின் குழந்தைகள் அல்லவா? பெற்ற பிள்ளைகளுக்கு
கொடுக்காமல் எந்த பெற்றோராவது மறைத்து வைத்து சாப்பிடுவார்களா? எந்தப் பெற்றோராவது தானுண்டு மீதத்தை பிள்ளைகளுக்கு கொடுப்பார்களா? பிள்ளைகளுக்கு கொடுத்து அவர்கள் உண்பதைக் கண்டு மகிழ்ந்தபின் அல்லவா பெற்றோர் சாப்பிடுவார்கள்.
(தொடரும்…)
![]()