கட்டுரைகள்

தமிழ் அரசியல் என்பது திருவிழாவில் தொலைந்த குழந்தையா?…. நியூசிலாந்து சிற்சபேசன்

தமிழ் அரசியலின் தளம்பல் இன்று நேற்று ஆரம்பமாகியதல்ல. காலாதிகாலமாகவே தொடர்கின்றது.

உன்னதமான தலைமைகளாக, தமிழ் மக்களினால், ஓரிருவரே கொண்டாடப்படுகின்றனர். அத்தகையோரே, தமிழ் அரசியலின் வங்குரோத்து நிலைக்கு முக்கிய பொறுப்பாளிகள் என்பதே குரூரமான யதார்த்தமாகும். ஆனால், அதனை காய்தல் உவத்தலின்றிப் பகுத்தாய்ந்து பார்க்கும் முதிர்ச்சி, சமூகத்துக்கு, வசப்படவில்லை.

1948க்குப் பின்னர் தமிழர்கள் ஒடுக்கப்பட ஆரம்பித்தமை வரலாறாகும். சிங்களக்குடியேற்றம், கல்வியில் தரப்படுத்தல், தனிச்சிங்களச் சட்டம், இனக்கலவரம் எனத் தொடர்ச்சியான நெருக்குதல்கள் ஏற்படுத்தப்பட்டன. மிதவாத அரசியல் தோற்றபோது, ஆயுதப் போராட்டம் முகிழ்த்தது. 2009ல் வன்னிப் பேரவலம் வரலாறு காணாத வலிகளை ஏற்படுத்தியது. அதன்பின்னரான, கடந்த பதினாறு ஆண்டுகள் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகவே நகர்கின்றது.

இவ்வாறாகவே ஏழுக்கு மேற்பட்ட தசாப்தம் கடந்திருக்கின்றது. இத்தகைய காலகட்டங்களினூடாக மக்களை வழிநடாத்தக்கூடிய அரசியல் தலைமை கிடைக்கவில்லை. நல்லதொரு அரசியல் தலைமை உருவாகுவதற்கு செழுமையான அரசியல் கலாச்சாரம் அவசியமாகும். அஃது, தமிழ் பரப்பில் சாத்தியமாகவில்லை.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் சர்வதேச வாக்கெடுப்பு கோரி தமிழ்  கட்சிகள் ஐ.நா சபைக்கு கூட்டுக் கடிதம்

எந்தவொரு விடயத்திலுமே, கேள்வி கேட்கமுடியாத சூழலே காணப்படுகின்றது. கேள்வி கேட்பவர், எதிரி என்னும் மனநிலை இயல்பாகிவிட்டது. ஒருவர் சொல்வதை, எத்தகைய மறுப்புமின்றி ஏற்றுக் கொள்ளவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு வளர்ந்துவிட்டது. மாற்றுக்கருத்து என்பது எதிர்க்கருத்தாக அடையாளப்படுகின்றது. அத்தகைய சூழலிலேயே “துரோகி”களும், “தியாகி”களும் உருவாக்கப்படுகின்றனர்.

சுருங்கச்சொன்னால், கருத்து மாறுபாடுகளைக் கையாளமுடியாத சமூகமாகவே காணப்படுகின்றது.

இஃது தாயகத்தின் நிலை மட்டுமல்ல. புலம்பெயர்ந்த சூழலிலும், அறுகு போல் வேரூன்றி, ஆல்போல் தழைத்துக் காணப்படுகின்றது.

ஒருகாலத்தில், வேலிச்சண்டைகளிலும் வாய்ச்சண்டைகளிலுமெனத் திணறிய சமூகமாகும். அதுவே, தற்போது சோஷல்மீடியாச்சண்டையாக வளர்ச்சியடைந்திருக்கின்றது.

உலகளாவியரீதியாக வியாபித்திருக்கின்றது. சிட்னி/மெல்பேர்ன் தொடங்கி லண்டன், பாரிஸ் கடந்து கனடா என பூமிப்பந்தெங்கிலும், சகட்டுமேனிக்கு, வார்த்தைகளால் மோதிக்கொள்கின்றனர். அதிலேயும், “கற்றோர்” என்று தம்மைத்தாமே வியந்துகொள்வோரின் பங்களிப்பு அபாரமானது. தரம்தாழ்ந்த சம்பாஷனைகள், “கல்தோன்றி மண்தோன்றாக் காலத்துக்கு முன்தோன்றிய மூத்தகுடியின்” பெருமைக்குக் கிடைக்கக்கூடிய சான்றாகிவிடுகின்றது.

தமிழ் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்த மோடி! | Sri Lanka News | Ada Derana  | Truth First

சோஷல்மீடியாவில் – குறிப்பாக, பேஸ்புக் வட்ஸ்அப் போன்ற செயலிகளூடாக நடைபெறுகின்ற உரையாடல்கள் தமிழ் சமூகத்தின் “பெறுமதியைக்” காட்டுகின்றன. எங்கும், எதிலும், எப்போதும் முரண்பாடுகள் ஏற்படுகின்றன. முரண்படுவதற்காக மட்டுமே சிலர் வாழ்கின்றனரோ என்னும் கேள்வி கூட அவ்வப்போது ஏற்படுவதைத் தவிர்க்கமுடிவதில்லை. தரமற்ற, வன்மம் நிறைந்த, அடுத்தவரை அவமதிக்கும் நோக்கத்தை மட்டுமே கொண்ட வார்த்தைகள் பிரயோகப்படுத்தப்படுகின்றன. அவை, பரந்துபட்ட தமிழ் சமூகத்தின் பண்பாட்டுச் சீரழிவையே துல்லியமாக வெளிப்படுத்துகின்றன.

இத்தகையை பின்னணியிலேயே, தமிழ் அரசியலின் தள்ளாட்டங்களை கவனிக்கவேண்டும். அரசியல்வாதிகள் வானத்திலிருந்து குதிப்பதில்லை. சமூகத்திலிருந்தே உருவாகின்றார்கள். இங்கே சமூகம் என்பது தாயகம் மட்டுமல்ல. புலம்பெயர்ந்தவர்களையும் சேர்த்தே பார்க்கவேண்டும்.

போகின்ற பாதையை, வண்டிலிலே கட்டப்பட்ட மாடுகள் தீர்மானிப்பதில்லை. ஓட்டுபவரே தீர்மானிக்கவேண்டும். அதேபோன்று, அரசியல்பாதையை மக்களே தீர்மானிக்கவேண்டும்.

இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில் தமிழ் சமூகத்தை இரண்டு பிரிவாகப் பார்க்கலாம். ஒன்று, மலையகத் தமிழர். மற்றையது, வடக்கு – கிழக்கு தமிழர். இரண்டு பிரிவினரும் ஒடுக்கப்பட்ட சிறுபான்மைச் சமூகங்களாகும் வெவ்வேறு வகையிலான ஒடுக்குமுறையை எதிர்கொண்டனர். முற்றிலும் மாறுபட்ட களநிலைமைகளுக்கு முகங்கொடுத்தனர்.

வடக்கு கிழக்கு தமிழர் தனியானதொரு நிலப்பரப்பைக் கொண்டிருந்தனர். மலையகத் தமிழர் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்தனர். அதனால், ஒடுக்குமுறையை எதிர்கொள்ள வெவ்வேறு வழிமுறைகளையே தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் காணப்பட்டது.

மலையகத் தரப்புக்கு, மக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டிய ஒற்றை இலக்கே காணப்பட்டது. மறுவளத்தில், மக்களின் வாழ்வை மேம்படுத்துவதோடு, மக்களின் அரசியல் உரிமையையும் நிலைநிறுத்த வேண்டிய இரட்டை இலக்கு, வடக்கு கிழக்கு தரப்புக்கு, காணப்பட்டது.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அநுர அரசின் இனவாதம் அம்பலம்.! | Jaffna  Breaking News 24x7

மலையகத் தமிழருக்கு கிடைத்த அரசியல் தலைமை யதார்த்தமான வழிமுறைகளை பயன்படுத்தியது என்று பெருவெட்டாகவேனும் சொல்லலாம். சாத்தியமான இலக்குகளைக் குறிவைத்தன. அதனால், ஓரளவான முன்னேற்றங்களையேனும் பெறமுடிந்திருக்கின்றது.

ஆனால், வடக்கு கிழக்கு தமிழருடைய அரசியல் தலைமை யதார்த்தங்களோடு பயணிக்கவில்லை என்பது வெள்ளிடைமலையாகும்.

ஒரு உதாரணத்திற்கு, மாகாணசபை முறைமையைச் சொல்லலாம்.

தமிழருடைய இனப்பிரச்சினைக்கு, மாகாணசபை, முற்றுமுழுதான தீர்வல்ல. ஆனால், இதுவரை காலத்தில் கிடைத்த உச்சபட்ச பொறிமுறையே மாகாணசபையாகும். அதனை வரித்துக்கொண்டு, அதிலிருந்து அடுத்த நிலைக்குப் போயிருக்கலாம். இந்தியாவின் ஆதரவையும் பேணியிருக்கலாம். ஆனால், “மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி” என்னும் வீராவேசம் பூண்டு கிடைத்த அடைவே தமிழ் அரசியலின் சாதனையாகும்.

1988ல், ஒன்றிணைந்த வட கிழக்கு மாகாணசபையை முடக்கியதில் தமிழ் அரசியலின் தீர்க்கதரிசனம் சுடர்விட்டெரிந்தது.

2013ல், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் மாபெரும் வெற்றி கிடைத்தது. அதுவே “குரங்கு அப்பம் பிரித்த” கதையாக ஐந்து ஆண்டுகள் வெற்றிநடை போட்டது.

2025ல், மாகாணசபை முறைமை இல்லாது போகலாம் என்னும் அச்சம் முன்னெப்போதிலுமே இல்லாத வகையில் உருவாகியுள்ளது.

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல, மாகாணசபை முறைமையை கையாண்டபாங்கு, மட்டுமே, தமிழ் அரசியலின் வல்லமையைப் பறைசாற்றுகின்றது.

ஆக, தமிழ் அரசியல் என்பது திருவிழாவில் தொலைந்த குழந்தை என்பதைச் சொல்லித்தான் தெரியவேண்டுமா.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *