கட்டுரைகள்

இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்: தொடர் – 16…. சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

இன்னொன்றையும் இச்சந்தர்பத்தில் சொல்வது நன்றென்று எண்ணுகிறேன். இப்பிறவியில் தூக்குத் தண்டனையே என்றாலும் முன்கூட்டியே தெரிந்து விடுகிறது. அடுத்த பிறவியில் என்ன தண்டனை என்பதே நமக்கு தெரியாது.

கொதிக்கும் எண்ணெய் கொப்பரைகளில் தள்ளிவிடப்படுவோமா மாடுகளுக்கு மத்தியில் சிக்கி உயிரிழப்போமா அட்டைப் பூச்சிகளுக்கு மத்தியில் அவதியுற்று மடிவோமா? என்ற குழப்பம் ஏற்படுகிறது.

மருத்துவமனையில் குழந்தைகள் மாறுவதுபோல் எவனுக்கோ கொடுக்க வேண்டிய தண்டனையை நமக்கு கொடுத்தால் அதை இறந்தபின் எப்படி கண்டுபிடித்து எங்கு முறையிடுவது என்பதில்தான் குழப்பமுள்ளது.

இப்படி ஒரு குழப்பம் வரும் என்று தண்டனை நூலை இயற்றியவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் பழங்காலங்களில் மகப்பேறு வீட்டிலேயே”” நடந்திருப்பதால் குழந்தை மாறும் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆனால் கலிகாலம் என்று ஒன்று வரும் அதில் குழந்தைகள் மருத்துவமனையில் மாற வாய்ப்புண்டாகும் என்பது கடவுளுக்கே தெரியாமல் போனதுதான் விந்தை.

வதாரங்கள் தோன்ற ஒரு காரணம் இருக்குமென்றால் மனிதன் தோன்றவும் காரணம் இருக்கும். சான்றாக தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்தது மக்களுக்காக ஒளிவிளக்கு கண்டுபிடிக்கவே. அதேபோல் திருவள்ளுவர் திருக்குறளை எழுதும் காரணத்துக்காகவும் வான்மீகி இராமாயாணம் எழுதும் காரணத்துக்காகவும் பிறந்திருக்கலாம் அல்லவா?

வடிவேல் காமெடி போல் கடவுள் என்றால் ரத்தம் மனிதர்களுக்கு என்றால் தக்காளிச் சட்டினியா? கடவுள் என்றால் அவதாரம் மனிதன் என்றால் பிறவியா? நன்றாகவே இருக்கிறது நியாயம். திருவள்ளுவராவது தமிழர் அவரை அவதாரமாக ஏற்றுக் கொள்ளவேண்டாம். வால்மீகையாவது அவதாரமாக ஏற்றுக் கொள்ளலாம் அல்லவா?

என்னைக் குறை கூறுஎஇறார் மாடசாமி அண்ணாச்சி. தாமஸ் ஆல்வா, ரைட்பிரதர்ஸ் போன்றவரை விட்டு விட்டேனாம். அது அவர்கள் பிரச்சனை. தன் வீட்டுப்பிள்ளையை ஒழுங்காக வளர்த்தால் போதும். மற்றவீட்டுப் பிள்ளையை வளர்ப்பது அவர்கள் பொறுப்பு. எங்கேயோ போற மாரி ஆத்தா என்மேலே வந்து ஏறத்தா (கிராமப்புறவழக்கில் சொல்லப்படுவது) என்பது எனக்கு வேண்டாம்.

நமக்கு உணவு என்றால் அதை உழைத்து உண்ணவேண்டும். கடவுளுக்கு உணவு என்றால் அவர் உழைக்க வேண்டியதே இல்லை. நாம் உண்பது உணவென்றால் கடவுள் உண்பது பிரசாதம். மனிதனுக்கும் கடவுளுக்கும் ஒரு வேறபாடு உண்டு. நாம் அங்கும் இங்கும் ஓடித் திரிகின்றோம்.

ஆனால் கடவுளோ கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையோ, கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே என்று ஆடாமல் அசையாமல் ஓரிடத்தில் இருந்து
உலகை வழிநடத்துகிறார். இப்போது மாடசாமி அண்ணாச்சி எனக்கும் ஒரு வேறுபாடு தெரியுமே என்று வம்படியில் வந்து வண்டியில் ஏறுகிறார்.

அவர் என்னிடம் சொன்னதை நான் உங்களுக்கு சொல்கிறேன். எதையும் சொன்னால்தானே தெரிகிறது. ஒருவருக்கு பிறந்தநாளோ திருமணநாளோ விருது பெற்றதோ வெள்ளிவிழா கொண்டாடியதோ மற்றவர்கள் சொன்னால்தானே தெரிகிறது. அப்படிச் சொல்லும்போது ஒரு புளகாங்கிதம் ஏற்படுகிறதே அதை விவரிக்க வார்த்தைகள் பற்றாது.

அதையும் குன்றிலிட்ட விளக்காய் ஒருவர் பரப்ப வேண்டுமே? ஏதோ என்னால் முடிந்தது ஏழைக்கு ஏற்ற எள்ளுண்டையாக அவர் சொன்னதை உங்களிடம் சொல்லி அதன் மூலம் யான் பெற்ற இன்பத்தை பெருக இவ்வையகம் என்று சொல்கிறேன். நாம் சாப்பிட்டு மீதியை குப்பைத் தொட்டியில் போடுகிறோம். ஆனால் சிலர் அப்படி செய்வதில்லை. எச்சிக் கையால் காக்கா விரட்டாதவர்கள் எப்படி குப்பையில் போடுவார்கள?

இப்படிப் பட்டவர்கள் சில சமயங்களில் அந்நியன் போல் உருமாறி தர்மவான்களாகி விடுவார்கள்? அட அட (இரட்டைக்கிளவி) என்னே ஒரு ஈகைத்தன்மை? இப்போது நம்ம சின்னாளப்பட்டி சடகோபன் ஒனக்கு ரொம்பவும்தான் பெருமைய்யா அப்பப்போ சந்தடி சாக்கில கேசரியில் முந்திரி பருப்பு கிடைப்பதுபோல இரட்டைக்கிளவின்னு இரட்டைக்கிளவின்னு  சொல்லிட்டு இருக்கிறாயே என்கிறார்.

நல்ல மனிதர் மனதில் வைத்துக் கொள்ளாமல் மனதில் பட்டதை சொல்கிறாரே. மனதில் பட்டதைத்தானே சொல்கிறார். நாட்டில் நடப்தையே சொல்கிறார். இல்லாததைச் சொல்லவில்லையே. அவரை நான் தவறாக எண்ணமுடியுமா? சரி, இப்ப எச்சிக்கையால் காக்கா விரட்டாதவர்கள் எப்படி தர்மப் பிரபுக்களாக மாறினார்கள?
என்பதைப் பார்ப்போம்.

குப்பையில் போடாமல் பிச்சைக்காரர்களுக்கு போட்டு தர்மவான்களாக மாறிவிடுகிறார்கள். அவர்கள் மாறுவது இருக்கட்டும் மாடசாமி அண்ணாச்சி சொன்ன வேறுபாடு என்ன என்பதை மறந்து விட்டேனே? மனிதர்கள் சாப்பிட்ட மீதத்தை பிச்சைக்காரர்களுக்கு
கொடுக்கிறார்கள். கடவுளோ சாப்பிட்டு மீதத்தை பக்தர்களுக்கு கொடுக்கிறார்.

இரண்டுமே உண்டு முடித்த மீதந்தான். அதுதான் அந்த வேறுபாடு. உடனே அண்ணாச்சி மேல் கோபம் கொள்ளாதீர்கள். இந்த கோபம் குஷ்புவுக்கு கோயில் கட்டும்போது எங்கே போனது? யாரோ ஒரு நடிகை, வயதாகிவிட்டதால் பெயர் கூட மறந்துவிட்டது. ஞாபகமறதி எனக்கு கொஞ்சம் அதிகமே. அதுவும் ஒருவகையில் நல்லதாயப் போயிற்று.

வயதுபோன காலத்தில் நிம்மதியாக பக்கோடா சாப்பிட்டோமா பானுமதி நடித்த படத்தை பார்த்தோமா என்றில்லாமல் நமக்கு தீங்கு செய்தவர்களை எல்லாம் மறக்காமல் இருந்தால் வயதானதினால் என்ன நன்மை? கழுதைக்கும் வயதாகிறது நமக்கும் வயதாகிறது என்ற கதை ஆகிவிடாதா? சரி அந்த நடிகை விடயத்தைக்கு வருவோம்.

அந்த நடிகை ஆப்பிளைக் கடித்தாளா? கொய்யாவைக் கடித்தாளா என்பதும் மறந்து விட்டது. நடிகையல்லவா ஆப்பிளைத்தான் கடித்திருப்பாள்? பக்கத்தில் பக்கிரிசாமி கொய்யா ஆப்பிளைவிட அதிகம் என்கிறார். இதுபோன்று எழுதிக்கொண்டு ஒரு நீரோட்டமாகப் போகும்போது இடைத்தரகர்கள் வந்து நமக்கு இம்சையைக் கொடுப்பார்கள்.

என்னதான் அரிசியில் கல்லெடித்து நன்றாக அலசி கழுவி சோறு பொங்கினாலும் மனைவி வேண்டாகாதவனாக இருந்தால் எப்படி ஒரு கல் பல்லைப் பதம் பார்க்குமோ அப்படி இதுபோன்றவர்கள் வரத்தான் செய்வார்கள். அதையெல்லாம் சகஜமப்பா என்று கவுண்டமணி சொல்வதுபோல் கடந்து செல்லவேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *