3 நாட்களில் 20 எலும்புக் கூடுகள் கண்டுபிடிப்பு; நேற்றும் 5 எலும்புக் கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் நேற்று புதன்கிழமை சிறுவர்களது உட்பட புதிதாக ஐந்து மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டதுடன் கடந்த மூன்று நாள்களில் இருபது மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன் அவற்றில் இரண்டு மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
அகழ்வு பணிகள் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி புதைகுழி வழக்கின் 18 ஆம் நாள் இன்று (நேற்று) யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.18ஆம் நாள் அகழ்வின் போது புதிதாக ஐந்து மனித எலும்புக் கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டதுடன் கடந்த மூன்று தினங்களில் 20 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அவற்றில் இரண்டு எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது.
மொத்தமாக 85 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 67 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது. காப்பு வடிவிலான சான்றுப் பொருள் உடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்றார்.
தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா குழுவினர், சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள், தடயவியல் பொலிஸார், குற்றப்புலனாய்வுப் திணைக்களத்தினர், தொல்லியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் சிவரூபி சஜிதரன் ஆகியோரின் பங்கேற்புடன் அகழ்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
![]()