இலக்கியச்சோலை

“புண்ணியபுரம்” வரலாற்று நாவலின் வெளியீடு; கோபாலகிருஸ்ணன் ஆற்றிய நூல் நயவுரை

திருமகள் பதிப்பகத்தின் வெளியீடான நீ.பி.அருளானந்தத்தின் “புண்ணியபுரம்” வரலாற்று நாவலின் வெளியீடு 15.06.2025 அன்று வவுனியா மாநகரசபை பொது நூலக கேட்போர் கூடத்தில் (மேல்மாடி) மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் சைவப்புரவலர் வி. றஞ்சிதமூர்த்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றவேளை செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் ஆற்றிய நூல் நயவுரை.

ஈழமண்ணின்; எழுத்தாளர் பிரபல நாவலாசிரியர் நீ.பி. அருளானந்தம் அவர்களின் 25 ஆவது நூலாகப் “புண்ணியபுரம்” எனும் இவ் வரலாற்று நாவல் வவுனியா மண்ணிலே வைத்து இன்று வெளிவருகிறது.

தமிழில் வரலாற்ற நாவல்கள் என்று நவீன காலத்தையொட்டிப் பார்க்கும்போது தமிழ்நாட்டில் “பொன்னியின் செல்வன்” – “சிவகாமியின் சபதம்” போன்ற வரலாற்று நாவல்களை எழுதிய கல்கி கிருஸ்ணமூர்த்தியும், ‘ராஜமுத்திரை’ – ‘கடல்புறா’ போன்ற நாவல்களைப் படைத்த சாண்டில்யன் போன்றோர்களே முதலில் நினைவில் வருவர். கலைஞர் கருணாநிதியும் ‘ரோமாபுரிப்பாண்டியன்’ என்ற வரலாற்று நாவலைப் படைத்துள்ளார். கோ.வி.மணிசேகரனும் தமிழ்நாட்டில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய வரலாற்று நாவலாசிரியர்களுள் ஒருவர். இவர்களுடன் அகிலன், நா.பார்த்தசாரதி, சோமு, கி.இராஜேந்திரன், ஜெகசிற்பியன், விக்ரமன் ஆகியோரையும் சேர்த்துக் கொள்ளலாம். வரலாற்று நாவல்களில் வெற்றியீட்டியவர்கள் இவர்கள் என்று பொதுவாகப் பேசப்பட்டாலும், எழுத்தாளர் எஸ்.பொ.அவர்களின் தரிசனத்தில் ‘வீரபாண்டியன் மனைவி’ எனும் வரலாற்று நாவல் எழுதிய அரு.ராமநாதன் அவர்களையே சிறந்த வரலாற்று நாவலாசிரியர் என அவர் சிலாகித்துக் கூறியுள்ளார்.

கி.பி 2ஆம் நூற்றாண்டில் எழுந்ததாகக் கருதப்படும் ‘சிலப்பதிகாரம்’ தான் தமிழில் முதல்நாவல் என்ற எழுத்தாளர் அகிலனின் கூற்றோடு பொருத்திப் பார்க்கிறபோது தமிழின் முதல் வரலாற்று நாவல் ‘சிலப்பதிகாரம்’ என்றே ஆகிறது. மன்னர்களின் வரலாறுகளைக் கூறுவது மட்டுமல்ல குடிமக்களின் வரலாறுகளைக் கூறுவதும் வரலாற்று நாவல்கள்தான். ஈழத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில் ஈழத்தில் வெளிவந்த சிறந்த வரலாற்று நாவல்களின் எண்ணிக்கையும் வரலாற்று நாவலாசிரியர்களின் எண்ணிக்கையும் விரல்விட்டு எண்ணும் வகையில், அதுவும் ஐந்து விரல்களுக்குள்ளேயே அடங்கிவிடுகின்றன.

எழுத்தாளர் எஸ்.பொ.இரசிகமணி கனகசெந்திநாதன் மற்றும் மதுரகவி இ.நாகராசன் ஆகிய மூவரும் இணைந்து, கண்டி அரசகுடும்பத்தின் அஸ்தமனகாலத்து நிகழ்வுகளை வைத்து 1962 இல் வீரகேசரி பத்திரிகையில் எழுதித் தொடராக வெளிவந்த ‘மணிமகுடம்’ – இது பின்னர் 2007 இல் நூலுருப்பெற்றது. செங்கையாழியானின் முதல் நாவலான 1969 இல் வெளிவந்த ‘நந்திக்கடல்;’ – 1975 இல் வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்த வ.அ.இராசரெத்தினத்தின் ‘கிரௌஞ்சப் பறவைகள்’ மற்றும் சுதந்திர இலங்கையின் ஆரம்பகால அரசியல் நிகழ்வுகளை வைத்து எஸ்.பொ.பின்னிய ‘மாயினி’ போன்றவற்றை ஈழத்தில் வெளிவந்த வரலாற்று நாவல்களாகக் கொள்ளலாம். எஸ்.பொ.வின், ‘மாயினி’ ஒரு வரலாற்று நாவல் அல்ல என்ற சர்ச்சையும் உண்டு. செங்கையாழியான் யாழ்ப்பாண இராச்சியத்தின் புகழ்வாய்ந்த மன்னனான சங்கிலி செகராசசேகரனின் வரலாற்றை ‘மாமன்னன் சங்கிலியன்’ எனும் பெயரில் நாவலாக்கியுள்ளார். இந்நாவலின் முதற்பதிப்பு 2012 டிசம்பரில் வெளிவந்தது.

இதற்கு முன்பு 1895 இல் திருகோணமலையைச் சேர்ந்த தி.த.சரவணமுத்துப்பிள்ளை எழுதி வெளிவந்த ‘மோகனாங்கி’ என்ற நாவலும், 1916 இல் வெளிவந்த சி.வை.சின்னப்பிள்ளையின் ‘விஜயசீலம்’ என்ற நாவலுமே ஈழத்தின் ஆரம்பகாலகட்டத்து வரலாற்று நாவல்கள் எனக் கொள்ளப்படுகின்றன. நீண்டகால இடைவெளிக்குப் பின்னர் 1953 ஆம் ஆண்டில் வெள்ளிவீதியார் என்பவர் ‘சுதந்திரன்’ பத்திரிகையில் ‘சிங்கைஆரியன்’ என்றொரு வரலாற்று நாவலை எழுதினார். அதன் பின்னர் 1969 இலேயே செங்கையாழியான் எழுதிய ‘நந்திக்கடல்’ வரலாற்று நாவல் வெளிவந்தது. இடையில் மட்டக்களப்பு குறுமண்வெளியைச் சேர்ந்த அருள்செல்வநாயகம் 1963 இல் ‘பாசக்குரல்’ எனும் வரலாற்று நாவலையும், 1968 இல் வீரகேசரியில் ‘வாள்முனை வாழ்வு’ எனும் தொடர் நாவலையும் எழுதினார். ஈழத்துப் பூதந்தேவனார் என்ற புனைப்பெயர் கொண்ட மட்டக்களப்பு தேற்றாத்தீவைச் சேர்ந்த க.தா.செல்வராசகோபால் ‘யாரிந்தவேடர்? என்ற வரலாற்று நாவலை 1965 இல் எழுதியுள்ளார். ஆனால், வ.அ.இராசரெத்தினம் அவர்கள் கி.மு 237 ஆம் ஆண்டின் சூரத்தீசன் ஆட்சிக்காலப் பகைப்புலத்தில் படைத்தளித்த ‘கிரௌஞ்சப் பறவைகள்’ எனும் நாவல் 1975 இல் வெளிவரும்வரை ஈழத்தில் வரலாற்று நாவல்துறை உரிய வளர்ச்சியடைந்து இருக்கவில்லையென்றே கலாநிதி. நா. சுப்பிரமணியன் அவர்கள் தனது ‘ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே, வரலாற்று நாவல் என்று கூறக்கூடிய சகல தகுதிகளோடும் ஈழத்தில் 1975 இல் வெளிவந்த முதல் வரலாற்று நாவல் வ.அ.இராசரெத்தினம் அவர்களின் ‘கிரௌஞ்சப் பறவைகள்’ தான் எனக் கொள்ளப்படுதலில் எந்தத் தவறுமில்லை. அதன் பின்னர் 1998 இல் முல்லை மணியின் ‘வன்னியர்திலகம்’ மற்றும் 2001 இல் செங்கையாழியனின் ‘குவேனி’ என்பன வெளிவந்தன.

இந்த வரிசையில் சென்னை ‘பூவரசி’ வெளியீடாக 2019 இல் வெளிவந்ததும் பால.சுகுமார் எழுதியதுமான ‘கொடி எழு அன்னப்புரவி’ எனும் குறுநாவலை, ஈழத்து எழுத்தாளர் எழுதி ஈழம் குறித்து இதுவரை வெளிவந்த நாவல்களுக்குள் இறுதியாக வெளிவந்த வரலாற்று நாவல் எனக் கருதலாம்.

இந்தப் பின்புலத்திலே ஈழத்தில் இறுதியாக வெளிவந்த இந்நாவல் வெளிவந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின் ‘புண்ணியபுரம்’ எனும் இவ் வரலாற்று நாவலின் வரவு நிகழ்ந்துள்ளது.
இதுவரை ஆறு மிகச்சிறந்த சமூக நாவல்களைப் படைத்து அவற்றில் சிலவற்றிக்கு இலங்கைச் சாகித்திய மண்டலப் பரிசுகளும் பெற்றுக்கொண்ட நண்பர் நாவலாசிரியர் நீ.பி.அருளானந்தம் இந்தப் ‘புண்ணியபுரம்’ எனும் வரலாற்று நாவலைப் படைத்ததன் மூலம் ஒரு புதிய பரிணாமத்தையும், பரிமாணத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் என்றே எனக்குப்படுகிறது. முதலில் அவருக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. இந்த வரலாற்று நாவலின் கதைச் சுருக்கம் இதுதான். அதாவது பிரதான கதை இதுதான்.

சோழ மண்டலாபதியான மன்னன் திசையுக்கிரசோழன் தன் அரிய புத்திரி மாருதப் புரவீகவல்லிக்கு ஏற்பட்ட முக அவலட்சண நோயைக் – குதிரை முகம்கொண்ட குன்மநோயைக் குணப்படுத்துவதற்கு எத்தனையோ பரிகாரங்கள் செய்தும் நோய் தீராததால் மனம்மிக்க கவலையுறுகிறான்.

மகாமந்திரி பெருங்குமரனாரின் ஆலோசனைப்படி இளவரசி மாருதப்புரவீகவல்லி தீர்த்தமாடித் தரிசனம் மேற்கொள்வதற்காக இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறாள். அங்கு தீர்த்தமாடியதில் இளவரசி தன்னைப் பீடித்திருந்த தோஷங்கள் நீங்கப்பெற்றாலும் நோய் நீங்கவில்லை. இராமேஸ்வரம் ஏகிய இளவரசி அங்கு சந்திக்க நேரிடும் ஒரு மூதாட்டி மூலம் சாந்தலிங்;கம் எனும் சன்னியாசியிடம் ஆற்றுப்படுத்தப்படுகிறாள்.

சன்னியாசி சாந்தலிங்கத்தின் அறிவுரைப்படி ‘புண்ணியபுரம்’ என்று அழைக்கப்படும் இலங்காபுரிக்கு வந்து அதன் வடபாகத்திலுள்ள கீரிமலை என்னும் இடத்திலுள்ள சிற்றாற்றில் தீர்த்தமாடும் நோக்குடன் கடல்தாண்டிப் பயணம் மேற்கொள்கிறாள்.

இராமேஸ்வரத்திலிருந்து பாய்மரக்கப்பலில் புறப்பட்டு இலங்காபுரிக்கு வந்;து கீரிமலையின் அருகிலுள்ள குமாரத்திபள்ளம் எனுமிடத்தில் பாளையம் அமைத்துத்தங்கி கீரிமலைக்கேணியில் தீர்த்தமாடி நகுலேஸ்வரத்தில் வழிபாடியற்றித் தனது நோய் நீங்கப் பெற்று அழகுத் தோற்றமுறுகிறாள். அங்கு சந்தித்த நகுலமுனிவரிடமிருந்து இலங்காபுரி பற்றிய பல வரலாற்று உண்மைகளை அறிந்தும்கொள்கிறாள். நோய் நீங்கியதற்குப் பிரதியுபகாரமாக மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலை நிர்மாணம் செய்கிறாள். இந்த இடம் முன்பு கோயில்கடவையென அழைக்கப்பட்டதாகும்.

சமகாலத்தில் யாழ்ப்பாணம் கதிரமலையிலிருந்து – தற்போதைய கந்தரோடையிலிருந்து இலங்கையை ஆண்ட உக்கிரசிங்கன் எனும் சிற்றரச வம்சத்தினன் மாருதப்புரவீகவல்லியின் அழகில் மையல்கொண்டு அவளைச் சிறைப்பிடித்துத் திருமணம் செய்து தனது பட்டத்து ராணியாக்குகின்றான்.

கதைச்சுருக்கம் இதுதான். இக்கதையை நாவல் வடிவத்தில் வாசகர்களே படித்து வாசிப்பனுபவத்தை – வாசிப்பு இன்பத்தைப் பெறுவதே பொருத்தமானது என்பதால் நாவலின் கதையைக் கடந்து நாவலின் ‘நயம்’ களுக்குள் நுழைய விழைகிறேன்.
முதலில் இந்நாவலின் பெயர் – தலைப்பு பற்றியது. கதை தமிழ் நாட்டின் சோழ மண்டலத்திலிருந்துதான் ஆரம்பமாகிறதெனினும் கதையின் பிரதான நிகழ்வுகளான சோழ இளவரசி மாருதப்புரவீகவல்லியின் நோய் நீங்குதலும் அவளது திருமணமும் புண்ணிய பூமியாகிய இலங்கைத் தீவிலே – இலங்காபுரியிலேதான் நடைபெறுவதால் மாருதப்புரவீக வல்லியின் கதைகூறும் இந்நாவலுக்குப் ‘புண்ணியபுரம்’ எனும் பெயர் கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. மகுடத்திற்கு மணி பதித்ததுபோல இப்பெயர் அமைந்துள்ளது. அடுத்து நாவலின் புனைவுமொழி அதாவது மொழிநடை பற்றிக் கூறியாகவேண்டும்.

நீ.பி. அருளானந்தத்தின் இதற்கு முந்திய ‘வாழ்க்கையின் நிறங்கள்’ (2006) – ‘துயரம் சுமப்பவர்கள்’ (2009) – ‘பதினான்காம்நாள் சந்திரன்’ (2012) ‘இந்த வனத்துக்குள்’ (2014) – ‘ஒன்றுக்குள் ஒன்று’ (2016) – ‘யோகி’ (2018) ஆகிய ஆறு சமூகநாவல்களையும் படித்தது மட்டுமல்லாமல் இந்நாவல்கள் குறித்த ஓர் அறிமுக ஆய்வையும் மேற்கொண்டு “நீ.பி யின் நாவல்கள் : ஓர் அறிமுக ஆய்வு” எனும் தலைப்பிலான கட்டுரையொன்றினையும் ‘ஜீவநதி’ சஞ்சிகை அதன் 150 ஆவது இதழாக 2021 பங்குனியில் வெளியிட்ட ஈழத்து நாவல் விமர்சனச் சிறப்பிதழில் வடித்திருந்தேன். அக்கட்டுரையிலே நான் அவரது புனைவு மொழிபற்றிக் கூறியிருந்த கூற்றொன்றினை அதன் பொருத்தப்பாடு கருதி இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.

நீ.பி.அருளானந்தத்தின் புனைவு மொழியும் ஏனைய நாவலாசிரியர்களிடமிருந்து அவரைத் தனித்துவமாக வேறுபடுத்திக் காட்டுகிறது. முழுக்க முழுக்கச் சுத்த இலக்கணமென்றும் சொல்ல முடியாத பேச்சுமொழியென்றும் செல்லமுடியாத (சில இடங்களில் தொய்வு போலத் தோற்றம் காட்டுகிற) ஒரு கலப்பு (ர்லடிசனை) மொழிநடை இவருடையது. கதம்பமொழி என்று கூட வர்ணிக்கலாம். கவனத்தை உள்ளீர்க்கும் கவர்ச்சியானது இது.

சொற்கள் ஒரு நேர்கோட்டில் தொடுக்கப்படாமல் – கோர்க்கப்படாமல் – ஒற்றைப்பூக்களாய்த் தொடுக்கப்பெற்ற மல்லிகைச்சரம் போலில்லாமல் சொற்கள் ஒன்றோடொன்று பின்னியும் பிணைந்தும் இடறியும் உட்புகுந்தும் மேலெழுந்தும் ஒரு பூமாலை அடர்த்தியாகத் தொடுக்கப் பெற்றது போன்றதான ஒரு மொழிநடை. கருத்தூன்றிப் படிக்கும் போதுதான் அதன் பொருள் விளக்கம் விஸ்வரூபம் எடுக்கிறது. பலாப்பழத்தோலின் மேல் முள்ளிருந்தாலும் அத்தோலை நீக்கிச் சுளைகளை உண்ணும்போதுதான் அதன் சுவை தெரிகிறது. நீ.பி.அருளானந்தத்தின் புனைவுமொழியும் பலாச்சுளை போன்றதே. சற்றுச் சிக்கலாய்த் தோன்றினாலும் இந்த மொழிநடைதான் நீ.பி இன் தனித்துவம்.

இந்த வரலாற்று நாவலில் நீ.பி. அருளானந்தம் அவர்கள் வழமைபோல் அல்லாமல் நூற்றிற்குத் தொண்ணூற்றியொன்பது விழுக்காடு இலக்கணத்தமிழைக் கையாண்டுள்ளார். ஒரு வரலாற்று நாவலுக்கு இது அவசியமானதும்கூட. வரலாற்று நாவலுக்குரிய தனித்துவமான மொழிநடையும் நீ.பி.அருளானந்தத்திற்கு ‘வாலாயம்’ ஆகியுள்ளதை இந்நாவலின் புனைவுமொழியில் அவதானிக்க முடிகிறது.

இந்நாவலில் வரும் காட்சி மற்றும் களவர்ணனைகள் தமிழில் வரலாற்று நவீனங்களுக்குப் பேர்போன தமிழ்நாட்டு எழுத்தாளர்களான கல்கி – சாண்டில்யன் மற்றும் கோவி. மணிசேகரன் போன்றோரின் மொழிநடைக்குச் சமதையாக அல்லது அதனிலும் மேம்பாடுடையதாக அமைந்திருப்பது மிகைப்பட்ட கூற்றல்ல என்பது இந்நாவலை நீங்கள் முழுமையாகப் படிக்கும்போது புரிந்து கொள்ளுவீர்கள்.

இந்நாவலின் முதல் அத்தியாயமே இவ்வாறுதான் தொடங்குகிறது.

‘இயற்கையின் வனப்பையெல்லாம் தன் ஒளிக்கண்ணால் காணவருவதுபோல வெளித்தோன்றி கொண்டிருந்தான் காலைக் கதிரவன். ஆதவன் ஒளிக்கதிர் திறந்ததும் மிதக்கும் பனிமூட்டம் கண்தெரியாமற் போனதாய் மெல்ல மெல்ல விலகி பின்பு அடையாளம் காணாத அளவிற்கும் மறைந்து போனதாகியது. விழித்திருந்த ஒளிப்பார்வையாலே அந்த சோழ மண்டலமே சொர்க்க பூமியான இருப்பில் புதுவெளிச்சம் பெற்றுவிட்டதுபோல துலங்கியது. துன்பம் கலைந்து கலைந்து அழியும் நேரமாக அந்த விடிகாலைப் பொழுது மலரவும் ஏலவே கேட்ட காண்டாமணியின் ஓங்கார நாதம் மீண்டும் கேட்கத் தொடங்கியதாக இருந்தது. அந்த நாத கடல் பொங்கி வந்ததாய் அவ்வேளைதனில் அரண்மனையையும் நிரப்பியதாய் இருந்தது’.

ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோற்றுப்பருக்கை பதமாக இப்பந்தியை எடுத்துக் கொள்ளலாம்.

இந்நாவலின் பிறிதொரு நயம் என்னவெனில் சம்பவங்களால் மட்டும் கதை நகர்த்தப்படாமல் இந்நாவலில் வரும் கதா மாந்தர்களின் மனக்கோலங்கள் – அகத்தூண்டல்கள் – அடிமனதில் உறைந்திருக்கும் உளவியலை வார்த்தைகளில் வடித்து வாசகர்களும் தாமாகவே அவற்றை அனுபவித்து உணரும்படியான உரையாடல்கள் மூலமாகவும் நாவலை நகர்த்திச் செல்வது உண்மையிலேயே பாராட்டுக்குரியது.

மேலும், இந்நாவல் கூறும் கதைக்கு அப்பால் நாவலில் ஆங்காங்கே தூவப்பட்டிருக்கும் அரியதகவல்களும் வாழ்க்கைக்கான அறிவுரைகளும் இந்நாவலுக்குப் பெறுமதி சேர்க்கின்றன.
(உதாரணம்)
‘ஊன் இன்றி வாழும் யோகிகள் வில்வம், அரசு, ஆத்தி இலைகளின் தளிர்களில் ஒன்றை நீரில் தோய்த்து உண்டுவிட்டு ஊன் இன்றிக் காற்றைச் சுவாசித்ததாய் யோகத்தில் இருப்பார்களாம். எலும்பும் தோலுமாக காலெல்லாம் காய்த்துப் போனாலும் உடல் மட்டும் வஜரம்போல அவர்கள் உறுதியாக இருப்பார்களாம்.’

‘இராமேஸ்வரத்தில் அக்கினி தீர்த்தம் என்று சொல்லப்படுகிற கடல்நீரிலே தீர்த்தமாடி நிறைவு செய்தபின்பு அந்த மண்ணில் இராத்தங்கல் தங்கக்கூடாது என்ற விதிமுறை’

‘எல்லா ஆசைகளும் நீங்கி தனிமையாக கடவுளை தியானிக்கும் நிலைதான் உண்மையில் சன்னியாசம்’

பிரதான கதைக்கும் மேலதிகமாக குமரிக்கண்டம் அது கடல் கோள்களினால் நிலத் துண்டங்களாகப் பிரிந்தமை – இலங்காபுரியைத் தலைநகராகக் கொண்ட இராவணனின் ஆட்சி அவனது சந்ததி போன்ற விடயங்களை விபரிப்பதும் ஆங்காங்கே வாசகனை நிறுத்தி வரலாற்றுக் குறிப்புக்களைத் தருவதும் இந்நாவலுக்குக் கனதி சேர்க்கின்றன. தொண்டமானாறு வாய்க்கால் வெட்டப்பட்ட விடயமும் அதனூடாக மேற்கொள்ளப்பட்ட உப்பு வணிகமும் யாழ்ப்பாண இராச்சியம் மற்றும் சமகால சிங்கள மன்னர்கள் பற்றிய விடயங்களும் தற்போது காங்கேசன்துறை என அழைக்கப்படும் காயாத்துறைமுகமூடாக புத்தகயாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பாய்மரக்கப்பல் பயண விடயமும் மற்றும் நகுலமுனிவர் கீரிமலையில் தீர்த்தமாடித் தனது கீரிமுகம் நீங்கிய விடயமும் இதில் அடங்கும். வரலாற்று மாணவர்களுக்கு அரிய பல விடயங்களை இந்நாவல் வழங்குகிறது. வரலாற்று மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் ஓர் உசாத்துணை ஆவணமாகவும் இந்நூல் அமைந்துள்ளது எனலாம்.

காட்சிகளைக் ‘கமரா’ வினால் படம் பிடித்ததுபோல வாசகனின் கட்புலனுக்குள் கொண்டுவரும் புனைவுமொழியும் குறிப்பிடத்தக்க நயம்களிலொன்றாகும். இந்நூலுக்கு முன்னுரை வழங்கியுள்ள பேராசிரியர். எஸ். சிவலிங்கராஜாவும் இக்காட்சிப்படுத்தல் சிறப்பைச் சிலாகித்துள்ளார்.
(உதாரணம்)
‘கப்பலின் இறகு போன்ற பாய்களிலே காற்று உட்பரவி வீங்கி அழகாகப்பெருத்த நிலையில் பாய்மரக்கப்பல் விரைவாக செல்லத்தொடங்கியிருந்தது.’

இளவரசி மாருதப்புரவீகவல்லியின் அவலட்சணமான முகத்தோற்றத்தை நேரடியாகச் சொல்லாமல், இராமேஸ்வரம் நோக்கிய பயணத்தில் காட்டினூடாகச் செல்லும்போது அவலட்சணமுடைய கருங்குரங்கு இளவரசியைக் கண்டு சினமுறுவது ஆன சம்பவமொன்றைக் கற்பனையிலே படைத்து கருங்குரங்கைக் குறியீட்டுப் படிமமாகப் படைத்துள்ளமை நாவலில் வந்துள்ள நல்லதொரு உத்தியாகும்.

பாத்திரங்களின் உரையாடல்களினூடாக இயற்கை நேசிப்பையும் இயற்கையின் பாதுகாப்பையும் வலியுறுத்துவது இந்நாவலின் மேலதிக பரிமாணம் ஆகும். ஒரு படைப்பு சமூக நாவலாயிருந்தாலென்ன – வரலாற்று நாவலாயிருந்தாலென்ன – சிறுகதையாக விருந்தாலென்ன அப்படைப்புக்கு வசீகரத்தையளிப்பது அப்படைப்பின் அழகியல் ஆகும். அந்த அழகியலை வழங்குவதில் வர்ணனைகள் – உவமைகள் – உருவகம் – படிமம் – குறியீடு – பொருத்தமான சொல்லாட்சி என்பனவாகும். இவற்றை அளவோடும் அக்கறையோடும் நீ.பி.அருளானந்தம் இந்நாவலின் புனைவுமொழியில் பொங்கலிலே முந்திரிப்பருப்பு கலந்ததுபோல புகுத்தியிருக்கிறார்.

இவற்றிக்கு உதாரணமாகச் சில கதைவரிகளைக் காட்டலாம்.

சூரியோதயத்தைச் சுட்டுவதற்கான,

உலகை மறைத்த இருளை சூரியன் தன் விரிகதிர்களைப் பரப்பி விலகிப்போகுமாறு செய்து விட்டான்.

கோடி யோசனைகளுக்கு அப்பால் உள்ளதான சூரியன் அக்கினியை எழுப்பி பூமியில் ஒளிப்புஸ்டியை காலை வேளையிலே மெல்லமெல்ல உண்டாக்க ஆரம்பித்துவிட்டான்.

என்ற வரிகள் கவனிப்புக்குரியவை.

களத்தோடு ஒட்டியதாயும் கதைக்கருவுடன் ஒட்டியதாயும் நீ.பி. அருளானந்தம் கையாண்டுள்ள புத்தம்புதிய உவமைகள் சிலவற்றை உதாரணமாகக் காட்டலாம்.

ஊதும் துருத்தியின் நெருப்புப் போலன்றல்லவோ பின்பு வெயில் தகதகக்கும்.
சோலையின் மலையிலிருந்து விழும் அருவி நீரிலே நான் குளித்து ஆடுவது போன்ற மகிழ்ச்சியாக இருக்கிறது இளவரசி முத்துக்களை வரிசைபடக் கோர்த்ததுபோல அவளும் சொற்களை ஒழுங்காய் அமைய கேட்க கருங்குரங்குகள் நெருப்புப்பொறி தம்மில்பட்டதுபோல அங்குமிங்கும் கிளைகிளையாய் பாயத்தொடங்கி கொடியடர்ந்த அந்த சோலையே சிதையுறமாப்போல கலங்கியது.

விரைந்து செல்லும் குதிரைகளினது குளம்பொலிகளாக நெஞ்சு கடகடவென அடிக்கத் தொடங்கி விட்டது.

முல்லைக்கொடி போன்று தோற்றமுள்ள இளவரசியோடு பட்டிப்பூக்கள் போன்றதாக சொல்லிவிடக்கூடிய அவளது பணிப்பெண்களும் மலர் உதிர்த்த பூங்கொம்புபோல உலகத்து நினைவெல்லாம் இவ்வேளை மனத்திலிருந்து துறந்துவிட்டு அந்த மேட்டுநிலப்பக்கத்திலே ஒரு சிறுகுடிசை குடை விரித்தது போன்ற தோற்றமாகத்தான் இருவரது கண் பார்க்கவும் தெரிந்துது. ‘கடலளவு பெரிதான சந்தோஷம்’ என்பது நல்ல படிமம்.

‘துகள் துகளான அளவிலாக கயல்விழி ஆனந்தத்திலே விக்கவிக்கச் சிரித்தாள்’ வாசகனை வசீகரிக்கின்ற புனைவுமொழி இது.

காய்ந்த புற்களால் வேயப்பட்ட கூரையென்பதைக் காட்ட ‘நிறம் மாறிய புற்களின் போர்வையாக அந்த குடிசையின் மேற்பகுதி’ என மொழியோட்டத்தில் உத்தியைக் கையாளுவது பச்சைப்புல் குடிசையின் கூரையில் பழுப்புநிறமாக மாறியுள்ளதை இவ்வாறு கூறுகிறார்.

ஒரு சில சன்னியாசிகள் வர்ண வஸ்திரங்களைக் கட்டிக் கொண்டு பல குளிசங்களைக் கோர்த்துத் தலையில் கட்டிக் கொண்டு – என்ற வரிகளில் வரும் ‘குளிசங்கள்’ என்பது ஒரு புதிய சொல்லாட்சியாகும்.

இவ்வாறு இவரது புனைவுமொழி குறித்துச் சிவாகித்துக்கொண்டே போகலாம். விரிவஞ்சியும் நேரமுகாமைத்துவம் கருதியும் நயம் உரைக்கும் எனது பணியை நிறைவு செய்ய விழைகிறேன்.

நிறைவாக நண்பர் நீ.பி.அருளானந்தம் அவர்கள் இப் ‘புண்ணியபுரம்’ நாவலின் மூலம் தன்னையொரு சிறந்த வரலாற்று நாவலாசிரியராகவும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஈழத்தைப் பொறுத்தவரை 1895 இலிருந்து ஆரம்பித்து இன்;று 2025 வரையிலான 130 வருடகாலத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய வரலாற்று நாவல்களே படைக்கப்பட்டுள்ளன எனும் பகைப்புலத்தில் இப் ‘புண்ணியபுரம்’ நாவலின் வரவு முக்கியத்துவம் மட்டுமல்ல இதன் உருவம் உள்ளடக்கம் மற்றும் உத்தி காரணமாக முன் வரிசையில் வைக்கப்பட வேண்டியதொன்றுமாகும். நன்றி. வணக்கம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *