பலதும் பத்தும்

வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி!

வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி என்று கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈரான் மீது ஒபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் கடந்த 13ஆம் திகதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அப்போது, ஈரானின் அணு ஆயுத பயன்பாட்டுக்கு எதிரான தாக்குதல் இது என இஸ்ரேல் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து ஈரானும் பதில் தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கிடையில், ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் இறங்கியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் போர் பதற்றம் மேலும் அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து குறித்த சம்பவம் தொடர்பில் தனது x  தளத்தில் கவிதையொன்றை பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில்

உலகின் தலையில் மெல்லிய இழையில்
ஆடிக்கொண்டிருக்கிறது அணுகுண்டு
வக்கிர மனங்களால் உக்கிரமாகுமோ யுத்தம்
கலங்குகிறது உலகு…
ஈரானின் அணுசக்தித் தளங்களில் டொமாஹக் ஏவுகணைகள் வீசி
அவசரப்பட்டுவிட்டது அமெரிக்கா…
வல்லரசுகள் நல்லரசுகள் ஆகாவிடில் புல்லரசு ஆகிவிடும் பூமி…
தான் கட்டமைத்த நாகரிகத்தைத் தானே அழிப்பதன்றி
இதுவரை போர்கள் என்ன செய்தன?.
போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்.
அணுகுண்டு முட்டையிடும் அலுமினியப் பறவைகள்
அதனதன் கூடுகளுக்குத் திரும்பட்டும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த கவிதையானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button