ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையில் சம்பந்தப்பட்ட பிள்ளையானுடனும் அரசு கூட்டு

தேர்தலுக்கு முன்னர் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறிய தேசிய மக்கள் சக்தி, இன்று மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், கொலையில் சம்பந்தப்பட்ட பிள்ளையான் குழுவினருடன் கூட்டணி அமைத்துள்ளது.களுவாஞ்சிக்குடி பிரதேச சபையில் ஆட்சியமைக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.இந்த அரசாங்கத்துக்கு வெட்கம் கிடையாது. என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முன்பாகவே தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற விளையாட்டில் ஊக்கப்பதார்த்தப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
பிரதான எதிர்க்கட்சி சபையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளமைக்கு அரச தரப்பு பொறுப்புக்கூற வேண்டும்.எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் உரையாற்றுவதற்கு போதுமான காலவகாசம் வழங்கப்படுவதில்லை. அரச தரப்பினர் அல்லது சபை முதல்வர் எழுந்தவுடன் அவர்கள் உரையாற்றுவதற்கு சபாநாயகர் அனுமதியளிக்கிறார். ஆகவே பிரதான எதிர்க்கட்சியின் வெளிநடப்பு நியாயமானது.
தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் மற்றும் பேச்சுக்களினால் தான் இந்த அரசாங்கம் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் படுதோல்வியடைந்துள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 12 உள்ளுராட்சி அதிகார சபைகளில் 11 சபைகளில் எதிர்க்கட்சிகள் தான் ஆட்சியமைத்துள்ளன. தேசிய மக்கள் சக்தி ஒரு சபையில் கூட தலைமைத்துவ பதவியை கைப்பற்றவில்லை.
தேர்தலுக்கு முன்னர் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம் என கூறிய தேசிய மக்கள் சக்தி, இன்று மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், கொலையில் சம்பந்தப்பட்ட பிள்ளையான் குழுவினருடன் கூட்டணி அமைத்துள்ளது.இந்த அரசாங்கத்துக்கு வெட்கம் கிடையாது , களுவாஞ்சிக்குடி பிரதேச சபையில் ஆட்சியமைக்க பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஆனால் இந்த பிரதேச சபையை நாங்கள் கைப்பற்றுவோம்.
![]()