கொழும்பு மாநகர சபையில் ஐ.தே.க.வின் 50 வருட அதிகாரம் பறிபோனது

கடந்த 50 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் வசமிருந்த கொழும்பு மாநகர சபையின் ஆட்சியதிகாரம் முதற் தடவையாக ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் கைகளுக்கு சென்றடைந்துள்ளது.
1947 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொழும்பு மாநகரசபையின் அதிகாரத்தை தக்கவைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி இரு சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்திலும் வெற்றி பெற்றிருந்தது.
1954 ஆம் ஆண்டு தேர்தலில் மேயர் பதவியை இழந்ததுடன், 2006 ஆம் ஆண்டு தேர்தலில் வேட்புமனு பட்டியல் நிராகரிக்கப்பட்டமையால் தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும் அத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரித்த சுயேட்சைக்குழு வெற்றி பெற்றதன் மூலம் ஆட்சியை மறைமுகமாக தக்க வைத்திருந்தது.
இறுதியாக 2018 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையின் மேயராக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ரோசி சேனாநாயக்க தெரிவு செய்யப்பட்டதுடன், இவர் முதலாவது பெண் மேயராகவும் பதவியேற்றார்.
2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி 60 ஆசனங்களை பெற்று ஆட்சியை தக்கவைத்ததுடன் ஜே.வி.பிக்கு ஆறு ஆசனங்கள் மாத்திரமே கிடைத்தது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 23 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 12 ஆசனங்களையும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி 10 ஆசனங்களையும் பெற்றிருந்தன.
2020 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவு காரணமாக சஜித் பிரேமதாச தலைமையிலான ஒரு குழுவினர் அக்கட்சியிலிருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியாக செயற்படத் தொடங்கினர்.
இதனால் அதன் பின்னர் இடம்பெற்ற சகல தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வியை சந்திக்கும் நிலை உருவானது. 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்படுவது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை.
இந்நிலையில் கொழும்பு மாநகர சபையின் ஆட்சியதிகாரத்தை 50 வருடங்களுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அல்லது அதன் சார்பு கட்சிகள் இழந்துள்ளதுடன், முதல் தடவையாக ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வெற்றி கொண்டுள்ளது.
![]()