ஆகாயப்பந்தல்: 09… ஏலையா க.முருகதாசன்

மதுசாவை அந்தப் பறவைகள் இரண்டும், மனிதர்கள் பார்ப்பது போல உற்;றுப் பார்க்கவே திகைச்ச மதுசா சாரிணியைப் பார்த்து அந்தப் பறவை என்னைப் பார்க்கிற விதம் எனக்கு ஏதோ மாதிரி தெரியுது என்கிறாள்.
சாரிணி சில விநாடிகள் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.அந்தப் பறவைகள் இரண்டும் ஆண் பெண் சோடிப் பறவைகள்.அவை பூமிக்குரிய பறவைகளும் அல்ல..சாரிணியின் பெற்றோர் வாழ்ந்த கிரகத்திற்கு சொந்தமான பறவைகள்.
சாரிணியும் அவளின் அண்ணன் சரவணனும் போகும் நகரத்திலேதான் பிறந்தவர்கள்.அவர்களின் பெற்றோர்களான மகேந்திரராஜாவும் சசிகலாவும் வேற்றுக் கிரகத்தைச் சேர்ந்தவர்கள்.அங்கேதான் அவர்களுக்குத் திருமணமும் நடந்தது.
அவர்கள் இருவரும் எப்படி ஜேர்மனிக்கு வந்து குடியேறிவர்கள் என்பது எவருக்குமே தெரியாது.ஜேர்மனியில் ஆள்விபரங்கள் சம்பந்தப்பட்ட கட்டுப்பாடும் அதுசார்ந்த தகவல்களம் மிகவும் கடுமையானவை.
சரவணன் சாரிணியின் பெற்றோர்கள் ஆரம்ப காலங்களில் கிழக்கு ஜேர்மனியில் இருந்தவர்கள்.அங்கிருந்துதான் போகும் நகரத்து வந்திருக்கிறார்கள்.
கிழக்கு ஜேர்மனியும் மேற்கு ஜேர்மனியும் ஒன்றாகிய 1989 ஆண்டுக்குப் பிறகு போகும் ; நகரத்துக்கு வந்து வசிக்கத் தொடங்கினார்கள்.அங்கு அவர்கள் வாழ்ந்ததற்கான விபரங்களை போகும் நகர நிர்வாகத்திடம் கொடுத்துத்தான் தங்களை போகுநகர குடிமக்களாகப் பதிந்து இருந்தார்கள்.
அவர்கள் தங்களைப் பற்றிய இரகசியத்தை எவருடனுமே பகிர்ந்து கொள்வதில்லை.
சரவணனும் சாரிணியும் பிறந்து அவர்கள் வளர்ந்த பின்பே தாங்கள் பூமிக்குரிய மனிதர்கள் அல்ல வேற்றுக்கிரக வாசிகள் என்பதையும்,தங்களடைய கிரகத்தில் உள்ள மனிதர்களைப் போலவே பூமி மனிதர்களும் இருக்கிறார்கள் என்ற விபரத்தை பிள்ளைகளுக்குச் சொன்ன பெற்றோர்கள் அந்த இரகசியத்தை பூமிக் கிரகத்திலிருக்கும் வரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொல்லியுமிருக்கிறார்கள்,பெற்றோரின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு தாங்கள் வேற்றுக்கிரகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல பூமிக்குரியவர்கள்தான் என்பது போல மிகக் கவனமாக நடந்து வருகிறார்கள்.
ஏதாவது சொல்லிச் சமாளிக்க வேண்டும் என்பதற்கப்பால் தனது அண்ணனுக்கு மனைவியாகவும்,தனக்கு அண்ணியாகவும் தனது பெற்றோருக்க மருமகளாகவும் வரப்போகிறவளிடம் பொய் சொல்லக்கூடாது என்று சாரிணி நினைச்சிருந்தாலும் இப்போதைக்கு உண்மை பேசுவதைத் தவிர்ப்பதே நல்லது என்றெண்ணிய சாரிணி அவண்ணா இந்தப் பறவைகளைப் பற்றி அண்ணிக்கு விளங்கப்படுத்திச் சொல்லுங்கள் என்கிறாள்.
அண்ணா என்று சொல்வதைத்தான் சாரிணி அவண்ணா என்று தாங்கள் கண்டுபிடித்த மொழியில் சொல்லுகிறாள் என்றெண்ணிய மதுசா அடுத்த கணமே இது அவர்களின் கிரக மொழியாக இருக்கலாம் எனவும் நினைக்கிறாள்.

சரவணன் சாரிணி குடும்பம் பூமிக்குரியவர்கள் அல்ல என்பதை மதுசா மெதுவாக நம்பத் தொடங்கிவிட்டாள்.ஆனால் அதனால் அவள் எவ்வித பதட்டமும் அடையவில்லை.தனக்கும் அந்தக் கிரகத்துக்குமிடையில் ஏதிர்காலத்தில் தொடர்புகள் ஏற்படுமோ அல்லது அங்கேதான் தனது வாழ்க்கை அமைந்துவிடுமோ என்றுகூட அவள் யோசிக்கத் தொடங்கினாள்.
ஒரு விநடிப் பொழுதில் ஒரு கோடி எண்ணங்கள் மனதில் எழுவதுண்டு.அதே போல மதுசாவின் மனதில் பல எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தன.
ஜேர்மனியில் போகும் என்ற நகரில் ஒரு குடும்பம் வேற்றுக்கிரகத்திலிருந்து வந்த மனிதர்களாக,மனித உருவில் அதுவும் தங்களைப் போல தமிழர்களாக இருப்பது நடைபெறக்கூடிய விடயமா நான் இப்பொழுது அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பது நிஜமா அல்லது கனவா என்றுகூட அவள் யோசிக்கத் தொடங்கினாள்.
கனவு காணும் போது ஒருசில விநாடிகள் நிஜமாகத் தோன்றி தான் காண்பது கனவு என்ற நிலை கனவு காண்பவருக்க ஏற்படுவது போலவும் அடுத்த பிறவியில் நான் காணப் போகும் இடங்கள் இவைதானோ என கனவு காணும் மனிதர்கள் போல மதுசா யோசிக்கத் தொடங்கினாலும்,சரவணன் தன்னோடு யூனிவேர்சிற்றியில் படிப்பவன் அவனின் தங்கச்சி தாய் தகப்பன் என எல்லாரும் நிஜந்தான் என அமைதியடைந்தாள்.
மனதில் ஒரு குழப்பம் எற்பட்டுவிட்டாலோ,தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டாலோ அதிலிருந்து மீண்டு ஒரு நிலையான தெளிவு பெறுவது பல விடயங்களில் சாத்தியமானாலும்,இப்பொழுது மதுசாவுக்கு ஏற்பட்டது இலகுவாக அவள் முடிவெடுப்பதற்குரிய விடயமல்ல.
ஒன்றாகப் படிக்கிற காரணத்தினால் சரவணன் கூப்பிட்டான் என்று அவனுடைய காரில் எறி வந்தோம் அது ஒன்றாகப் படிக்கிற சக மாணவனுடனான நட்பு மட்டுமே எனத்தான் ஆரம்பத்தில் மதுசா நினைச்ச போதம்,அவள் அந்த வீட்டில் தங்கி நிற்கும் ஒவ்வொரு விநாடிப் பொழுதும் அவளை வேறொரு உலகத்து மனிதர்களால் உள்வாங்கப்படுவது போல உணர்ந்தாள்.
அவளால் வார்த்தைகளால் விபரிக்கமுடியாதவாறான ஒரு உணரஇவு அவளைச் சூழத் தொடங்கியது.
அந்த இரண்டு பறவைகளும் அவளை உற்று உற்றுப் பார்ப்பது போலத் தோன்றியதைச் சாரிணியிடம் சொல்ல,அந்தப் பறவைகள் எங்கிருந்து வந்தன என்ற விளக்கத்தைச் சரவணன் சொல்லத் தொடங்கினான்.
நான் உங்கடை வீட்டுக்கு வரும்போது அடிக்கடி நிறம் மாறும் பூக்களைக் கொண்டு வந்தேனே அவை ஆகாயத்தில் அதாவது மிக உயரத்தில் வளிமண்டலத்துக்கு அப்பால் பிரபஞ்சத்தின் முதல் அடுக்கில் முளைத்து வளர்கின்ற செடியிலிருந்து இந்தப் பறவைகள் கொத்திச் சாப்பிடும் பழம் விதைகளிலிருந்து முளைத்த செடிப்பூக்கள்.
அவ்விதைகளை இப்பறவைகள் அங்கு மிதக்கிற கட்டியல்லா ஐஸ்ஜெலியில் தமது சொண்டுகளைத் தேய்த்து விடும் போது அவை அங்கிருந்து சிறு துளித்துளிகளாக வழிந்து மேகக் கூட்டங்களில் விழுகின்றன,அந்த மேகக் கூட்டங்கள் மழையாக பெய்கின்ற போது மழைநீரோடு விதைகள் அரிதாக நிலத்தில் விழுகின்றன.அப்படி எங்களுடைய வீட்டின் முன்புறத்தில் விழுந்த விதையிலிருந்து முளைத்த செடியில் பூத்த பூக்களே அவை.
இந்தப் பறவைகள் இங்குள்ள பழங்கள் எதையமே சாப்பிடுவதில்லை.அடிக்கொருதரம் மேலே ஆகாயத்தை நோக்கிப் பறந்து அங்கு பழங்களைச் சாப்பிட்டுவிட்டு மீண்டும் திரும்பிவந்து இந்த மரக்கெவரில் அமர்ந்து விடும்.
இரவு நேரங்களில் நாங்கள் நித்திரையாக இருக்கும் போதும் பறந்து சென்று மீண்டும் திரும்பி வந்துவிடுகின்றன என்று சரவணன் சொல்ல,சரவணன் சொல்வது போல இந்தப் பறவைகள் ஆகாயத்தில் வளிமண்டலம் முடியுமிடத்தின் எல்லையில் பிரபஞ்ச அடுக்குத் தொடங்கும் இடத்தில் வாழும் பறவைகள் அல்ல,இவை இவர்களின் சொந்தக் கிரகத்திற்குச் சொநதமான பறவைகள் என மதுசாவின் அறிவு உறுதியாகத் தீர்மானித்துக் கொண்டது.

ஆனால் அதனை வெளிப்படையாக சசரவணனிடமோ சாரிணியிடமோ வெட்டொன்று துண்டு இரண்டாகக் கேட்க முடியவில்லை.அடிக்கடி இங்கு வருவேன்தானே அப்பொழுது ஆறுதலாகக் கேட்கலாம் என்று பேசாமலிருந்தவளிடம் ஒரு சந்தேகம் வலுக்கத் தொடங்கியது.
இவர்களுக்கு உறவினர்களோ நண்பர்களோ யாருமே இந்த போகும் நகரத்திலில்லையா என அவர்களைக் கேட்போமா விடுவோமா என மதுசா முடிவெடுக்க முடியாமல் குழம்பினாள்.
தங்கள் குடும்பத்துக்கே போகும் நகரத்தில் தன்னுடைய அப்பா வழியிலும் அம்மா வழியிலும் உறவினர்கள் ஐந்து கிலோ மீற்றர்,பத்துக் கிலோ மீற்றர் வித்தியாசத்திலிருக்கிறார்கள் என்று நினைத்தவள் சரி கேட்டுவிடுவம் என்று முடிவெடுத்து சாரிணி உங்களுக்கு ஜேர்மனியில் சொந்தக்காரர்கள் யாருமே இல்லையா எனச் சாரிணியிடம் கேட்க,இருக்கிறார்களே இங்கை இந்தச் சிற்றியில் அம்மாவின்ரை தம்பியின் குடும்பம் அதாவது எங்களுடைய கானிமா குடும்பம் என்றவள் உடனே சமாளித்து சின்னமாமா குடும்பத்தினர் இருக்கிறார்கள் அண்ணி என்றவள் அப்பாவின் தங்கச்சி குடும்பம் முன்சனில் இருக்கினம் என்றாள்.
இன்றைக்கு மத்தியானச் சாப்பாட்டுக்கு இஞ்சை வருகினம் அதுவும் உங்களைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வத்தோடு வருகினம் என்று சாரிணி சொன்னதும் திகைச்சுப் போன மதுசா என்னைப் பார்க்கவா என் அவை என்னைப் பார்க்க வருகினம் என்று கேட்க,சாரிணி சரவணன் பக்கம் தற்செயலாகத் திரும்புவது போலத் திரும்ப அவன் கண்சாடை காட்ட, ஏனென்றால் அண்ணி நீங்கள்தானே வருங்கால என்றவள் சட்டென்று சொல்வதை நிறுத்துகிறாள்.
தன்னைச் சுற்றி ஏதோ நடக்குது அதுவும் சுகமான ஒன்று நடக்குத என்பதை மதுசாவால் உணர முடிகின்றது.
அந்தப் பறவைகளிரண்டும் அவளையே கூர்ந்து பார்ப்பதும் பிறகு அங்குமிங்குமாகப் பறந்துவிட்டு வந்திருப்பதுமாக இருந்தன.
(தொடரும்….)
![]()