செம்மணியில் மேலும் மனிதப் புதைகுழிகள்; செய்மதி படத்தின் அடிப்படையில் தகவல்

செம்மணி சித்துபாத்தி மயானத்திற்கு உள்ளேயே அகழ்வு நடக்கும் பகுதி தவிர்ந்த இன்னொரு இடத்தில் மனிதப் புதைகுழி இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதென தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் செய்மதி படத்தின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளதாக சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
செம்மணி சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி சித்துபாத்தி மயான பகுதியில் மனித புதைகுழி உள்ளதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கான ஆரம்பகட்ட பணிக்கென 10 நாட்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு அகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
நடைபெற்ற ஆய்விலும் நிபுணர்களின் அறிக்கையின் அடிப்படையிலும் குற்றம் நடந்த பிரதேசமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அகழ்வாய்வு பணி தொடர்ந்து நடைபெறும் என்று நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது.
பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் செய்மதி படத்தின் அடிப்படையில் இந்தப் பிரதேசத்திற்கு உள்ளேயே அகழ்வு நடக்கும் பகுதியைத் தவிர இன்னொரு இடத்தில் மனிதப் புதைகுழி இருப்பதற்கான சாத்தியப்பாடுகள் உள்ளதென கருத்தை முன்வைத்துள்ளார்.அந்த அடிப்படையில் அதற்குரிய ஆரம்பகட்ட அவதானிப்பை செய்த பின்னர் அகழ்வாய்வு நடவடிக்கைகள் நடைபெறும்.
ஆரம்பகட்ட பணிக்கென 10 நாட்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கொண்டு அகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது சட்ட வைத்திய அதிகாரி கேட்டதற்கமைய 45 நாட்களுக்குரிய நிதி பாதீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது – என்றார்.
![]()