இலங்கை

செம்மணிக்கு வெளியிலும் பல மனிதப் புதைகுழிகள்; வேலன் சுவாமிகள் கூறுகிறார்

செம்மணி மனிதப் புதைகுழிகளுடைய அகழ்வு பணியானது வெறுமனே சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் செம்மணியும் செம்மணியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டு, இதனுடைய உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்திய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள், ஒட்டுமொத்த தமிழர்களாக வடகிழக்கு தாயகம் தழுவிய அளவிலே மனித புதைகுழிகளுக்கு சர்வதேச நீதிகோரி எதிர்வரும் 17 ம் திகதி செம்மணியில் அணிதிரளுமாறு அழைப்பு விடுத்தார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் நடைபெற்ற பொது அமைப்புகளின் பிரதிநிதிகளது கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது வேலன் சுவாமிகள் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் அண்மையிலே நீதிமன்றிலே சமர்ப்பிக்கப்பட்டிருந்த ராஜ் சோமதேவாவுடைய அறிக்கையை நாங்கள் முற்றுமுழுதாக மறுத்து, எதிர்த்து, கண்டித்து சர்வதேச நீதியை வேண்டி வெறுமனே சர்வதேச கண்காணிப்போடு மட்டும் நில்லாமல், முழுமையான ஆரம்பம் முதல் இறுதி நீதி வழங்கப்படும் வரை சர்வதேச விசாரணை, சர்வதேச பிரசன்னம் தேவை என்பதை வலியுறுத்தியும், செம்மணி மனிதப் புதைகுழிகளுடைய அகழ்வு பணியானது வெறுமனே சிந்துப்பாத்தி இந்து மயானத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் செம்மணியும் செம்மணியைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டு, இதனுடைய உண்மை வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும், ஒட்டுமொத்த தமிழர்களாக வடகிழக்கு தாயகம் தழுவிய அளவிலே எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணிக்கு செம்மணியிலே ஒன்று திரண்டு இந்த கண்டன போராட்டத்தை நடத்த இருக்கின்றோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினுடைய அழைப்பை ஏற்று இன்று பல அரசியல் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், பொது அமைப்புகள் என்று பலரும் இந்த கலந்துரையாடலிலே கலந்து கொண்டிருந்தார்கள்.

அனைவருடைய கருத்துக்களும் உள்வாங்கப்பட்டு இங்கே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே 16 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்த போராட்டமானது இந்த கலந்துரையாடலின் பின்பு அடுத்த நாள் செவ்வாய்க்கிழமை 17 ஆம் திகதி காலை 10:30 மணிக்கு என்று மாற்றப்பட்டிருக்கிறது. அனைவரும் வருகை தரக்கூடிய விதத்திலே அந்த திகதியும் நேர மாற்றமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்ல இந்த போராட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டு ஏகமனதான ஒரு ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக இது அமைந்திருக்கிறது.

இந்த கலந்துரையாடலிலே தவிர்க்க முடியாத காரணங்களால் பங்குபற்ற முடியாதவர்கள் அல்லது இந்த அழைப்பு உங்களை வந்து சென்றடையவில்லை என்று கருதக்கூடிய உறவுகள் இந்த ஊடக சந்திப்பு ஊடாக இங்கே பங்குபற்றி இருக்கக்கூடிய அனைத்து அமைப்புகள் சார்பிலும் நாங்கள் வேண்டுகோள் விடுப்பது, செம்மணி மனிதப் புதைகுழிகளுடைய அவசியத்தை உணர்த்தி, மனித எலும்புக் கூடுகள், குழந்தைகள், தாய்மார்கள், இளம்பெண்கள் என்று பாரபட்சம் பார்க்காமல் எங்கள் மண்ணில் கண்டெடுக்கப்பட்ட அந்த எலும்புக் கூடுகளுக்கு நீதி வேண்டும், எங்களுடைய உறவுகளுக்கு நீதி வேண்டும் என்ற அடிப்படையிலே நாங்கள் தமிழர் தேசமாக அனைவரும் அணிதிரள வேண்டும்.

இப்பொழுது வந்திருக்கக்கூடிய அனுர அரசு கூட குற்றப்புலனாய்வு துறை ஊடாக இந்த வழக்குகளுக்குள்ளே பல திருப்பங்களை ஏற்படுத்தியிருப்பதற்கு ஒரு வெளிப்பாடாகத்தான் ராஜ் சோமதேவனுடைய மிகவும் மோசமான அந்த அறிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.ஆகவே இந்த விசயத்திலே எமது உறவுகள் அனைவரும் ஒன்றுதிரள வேண்டும்.

சர்வதேச அமைப்புகள் சார்ந்த, சர்வதேச சமூகம் நாடுகள் சார்ந்த பிரதிநிதிகளையும் இந்த போராட்டத்திற்கு உங்களுடைய ஆதரவுகளை வெளிப்படுத்தி நிற்குமாறு நாங்கள் அனைத்து அமைப்புகள் சார்பிலும் கேட்டு நிற்கின்றோம் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *