இலங்கை

விகாரைக் காணி மக்களுக்கு கிடைப்பதை தடுக்க பெரும்பான்மை இனத்தவரை அழைத்துப் போராட்டம்!;  முறியடிக்க ஒன்று திரளுமாறு அழைப்பு

தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரைக் காணிகள் மக்களுக்கு கிடைக்கப் பெறுவதை தடுப்பதற்காகவே தெற்கிலிருந்து பெரும்பான்மை இனத்தவர்களை அழைத்து போராட்டம் செய்ய ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

மக்களுடைய காணிகளை அடாத்தாக பிடித்து யாருக்கும் தெரியாமல் கட்டப்பட்ட விகாரைக் காணிகளை அந்த மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதற்காக மக்களின் ஆதரவோடு இரண்டு வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறோம்.

அபிவிருத்தி குழு கூட்டங்களில் குறித்த விகாரை தொடர்பாக பலமுறை பேசியுள்ள நிலையில் அந்த விகாரை அமைக்கப்பட்டது சட்ட விரோதம் எனப் பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்வாறான ஒரு நிலையில் எதிர்வரும் பத்தாம் திகதி போயா தினத்திலும் திஸ்ஸ விகாரை அமைந்துள்ள தனியார் காணிகளை மக்களிடமே வழங்குமாறு கோரி போராட்டம் இடம்பெற உள்ள நிலையில் அதனை குழப்புவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதாவது சட்டரீதியாக குறித்த காணிகள் அந்த மக்களுக்கு கிடைக்கப் பெறுவதை தடுப்பதற்கு தெற்கில் இயங்கும் சில சக்திகளின் ஏற்பாட்டில் எமக்கு எதிராகவும் விகாரைக்கு ஆதரவாகவும் போராட்டம் இடம்பெற உள்ளதாக அறிகிறோம்.

ஆகவே எதிர்வரும் பத்தாம் திகதி இடம்பெறவுள்ள தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தை திசை திருப்பும் போராட்டத்தை முறியடிக்க கட்சி பேதங்களைக் மறந்து அனைவரும் ஒன்று திரண்டு வருமாறு அவர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *