பலதும் பத்தும்

காரணம் இதுவாகக்கூட இருக்கலாம்!

காலையில் எழும் போதே உடல் சோர்வாக இருப்பதாக உணர்கிறீர்களா? அப்போ இந்த பதிவு உங்களுக்கானது தான். அதிக வேலை, இடைவிடாமல் பணி செய்வது, தீவிரமான காய்ச்சலுக்கு பிறகு உண்டாகும் உடல் சோர்வானது இயல்பு. ஆனால் இதற்கு மாறாக காலையில் எழுந்திருக்கும் போதே உடல் சோர்வாக இருந்தால் அதற்கான காரணம் என்ன என்பதை உற்றுநோக்குவது என்பது இன்றியமையாதது. ஏனெனில் முதலில் காலை நேரத்தில் உண்டாகும் உடல்சோர்வு நாளடைவில் நாள் முழுக்க உடலை பலவீனப்படுத்துவதோடு மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இவற்றை தவிர்க்க உடல் சோர்வு ஏற்பட என்ன காரணம் என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

உறக்கமின்மை

ஆழ்ந்த தூக்கம் என்பது மிகவும் முக்கியமானது. நாம் குறட்டை விட்டு தூங்கினாலே நல்ல தூக்கம் என்று நினைத்துக் கொள்வோம். ஆனால் இது ஆழ்ந்த தூக்கம் கிடையாது. நாம் தூங்கும் இடத்தில் போதுமான அளவு காற்று இல்லையென்றாலும், தூங்கும் நேரத்தில் மாற்றம், போதிய நேரம் தூங்க முடியவில்லை என்றாலும் நாள் முழுவதும் உடல் சோர்வாக இருக்கும். எனவே, தூங்கி எழுந்தவுடன் உடல் சோர்வாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உங்களின் இரவு நேர தூக்கம் பற்றி யோசிப்பது அவசியம்.

தைராய்டு

உடலின் பல்வேறு செயல்களுக்கு மிக முக்கியமான காரணமாக இருப்பது சீரான தைராய்டு சுரப்புதான். பலரும் ஆரம்ப நிலையில் இதன் அறிகுறியை தீவிரமாக உணர்வதில்லை. அறிகுறி தீவிரமாகும் போது உடல் சோர்வும் களைப்பும், உணர்ந்தால் மருத்துவரின் பரிந்துரையோடு ஒரு ஹைப்பர் தைராய்டு பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதற்கான சிகிச்சை எடுத்துகொள்ளும் போதே உடல் சோர்வு இருக்காது.

நீரிழிவு

சர்க்கரை நோய்க்கான அறிகுறியில் பெரும்பாலும் உடல்சோர்வு இல்லையென்று நினைத்து விட்டுவிடுகிறோம். உண்மையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் போது பசியும், தாகமும், சிறுநீர் போக்கும் அதிகரிப்பது போல் உடல் சோர்வும் அதிகமாகிறது. எனவே, ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக உள்ளதா என்ற பரிசோதனையும் மேற்கொள்வது அவசியம்.

ரத்த சோகை

ரத்த சோகைக்கான முதல் அறிகுறி உடல் சோர்வு தான். உடல் சோர்வு தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தால் ரத்தசோகை பரிசோதனை செய்வது அவசியம். ஏனென்றால் ரத்த சோகை இருக்கும் போது உடலில் ரத்தத்தின் அளவு குறையக்கூடும். அப்போது உடல் செய்யக்கூடிய வேலைகளில் அதிகப்படியான தொய்வு உண்டாக கூடும். இது இரும்புச்சத்து குறைபாட்டால் பெருமளவு வரக்கூடும்.

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு உடல் சோர்வும் அதீத களைப்பும் இருக்கும். தொடர்ந்து சோர்வோடு காலை எழும் போதே தலைவலியும் இருந்தால் அவை பெரும்பாலும் இந்நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். சிலருக்கு எழுந்தவுடன் தலை பாரமாக இருக்க கூடும். அவர்களுக்கும் ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கலாம். இவர்கள் மருத்துவரிடம் சென்று நின்ற நிலையில், உட்கார்ந்த நிலையில், படுத்த நிலையின் ரத்த அழுத்தத்தின் அளவை கண்டறிய வேண்டும். காலையில் தூங்கி எழுந்ததும் உண்டாகும் இந்த சோர்வு ரத்த அழுத்தத்தாலும் இருக்கலாம்.

தொடர்ந்து உங்களுக்கு உடல் சோர்வு இருந்தால் 10 நாட்கள் வரை தொடர்ந்து காலையில் எழும் போதெல்லாம் சோர்வை உணர்ந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி உரிய காரணத்தை அறிந்து சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும்.

உடல் சோர்வாக இருக்கும் போது வாழ்க்கை முறையில் நீங்கள் மேற்கொள்ள வேண்டியவை,

உடல் சோர்வுக்கு மேற்குறிப்பிட்ட குறைபாடுகள் காரணமாக கண்டறியப்பட்டால் தவிர்க்காமல் சிகிச்சை எடுத்து கொள்வது அவசியம். அதே நேரம் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களை கடைப்பிடிக்க வேண்டும். மேற்குறிப்பிட்ட குறைபாடுகள் இல்லாமல் இருந்தால் வாழ்க்கை முறையில் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் இதுதான். நீங்கள் உண்ணும் உணவில் சத்தான புரதம், கார்போஹைட்ரேட், இரும்புச்சத்து, கால்சியம் என அனைத்து சத்துகளும் சரிவிகிதமாக இருக்கும்படி எடுத்துகொள்ள வேண்டும். காலை உணவாக பழத்துண்டுகளாக எடுத்துக்கொள்வதன் மூலமும் உடல் சோர்வை போக்க முடியும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button