“நடுகைக்காரி -81″… ஏலையா க.முருகதாசன்

சிலம்பரசி இருந்த மேசையை நோக்கி ஜிஎம் கையில் ஒரு என்வலப்புடன் வருவதை சிலம்பரசியும்,அந்த மண்டபத்தில் வேலை செய்து கொண்டிருந்த பலரும் பார்க்கின்றனர்.
ஜிஎம் நவரட்ணராஜா சிலம்பரசியின் மேசையடிக்கு வந்ததும்,சிலம்பரசி எழும்பி நிற்கிறாள்.அவள் நெற்றியில் வேர்வைத்துளிகள் மெதுவாக அரும்புகின்றன.
ஏன்னதான் சிலம்பரசி தன்னில் தவறு இல்லையென்பது போல முகத்தை வைச்சிருந்தாலும்,உடல் மொழியில் அதைக் காட்டினாலும் அவள் பார்வதியை நோக்கிச் சொன்ன வார்த்தை சாதாரண வார்த்தை அல்ல,அது ஒருவரின் மனதைக் குத்திக் கிழிக்கும் என்பது அவளுக்கும் தெரியும்.
அந்த வார்த்தையைச் சொன்ன ஒருவரை வேலையை விட்டே நிறுத்தலாம் என்பதும் பட்டதாரியான அவளுக்குத் தெரியும்.
அவள் பார்வதியை நோக்கிச் சொன்ன வார்த்தையைக் கேட்ட கடையில் நின்றவர்களில் சிலரால் கிரகிக்கப்பட்டு அப்படிச் சொன்னது தவறென்று சிலரும், சிலம்பரசியை போன்றவர்களினால் பரவாயில்லை என்றும்,இதுக்கு ஏன் ஜிஎம்மைப் போய்ச் சந்திப்பான் என்று அபிப்பராயப்படுபவர்களின் அபிப்பராயங்களை மேவி சிலம்பரசி சொன்னது மிகப் பெருந் தவறு என்று தெல்லிப்பழைக் கிராமத்தைச் சூழும,; அதனால் அவப்பெயர் சங்கத்திற்கே என்பதை சிலம்பரசி உணரத் தொடங்கிய போதுதான் ஜிஎம் ஒரு என்வலப்புடன் சிலம்பரசியின் மேசையடியில் வந்து நின்றார்.
ஆணவத்துக்கும் நியாயத்துக்குமிடையிலும் காலம் காலமாக சமூகப் பிரிவுகள் பற்றி பெற்றோரும் அவள் சார்ந்த சமூகமும்,அயலவர்களும் கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களை நடத்துகின்ற உயர்குலத்தோர் என்பவர்களும் சொல்லிச் சொல்லி நியாயங்களையும் நீதியையும் அறத்தையும் மூளைச்சலவைக்கூடாக மழுங்கடித்து மேலோர் எனத் தம்மை நினைச்சுக் கொள்வோரால் சொல்லிச் சொல்லிக் கட்டமைக்கப்பட்ட ஒரு குடும்பத்தில் இருந்து வந்த சிலம்பரசிக்கு தான் பார்வதியைப் பார்த்து அப்படிச் சொன்னது தவறோ என அவள் அறிவு சொல்லத் தொடங்கியது.
கையில் என்வலப்புடன் சிலம்பரசியின் மேசையடிவரைக்கும் வந்த ஜிஎம் ஏதோ நினைச்சவராய் அவளைப் பார்த்து ஒபீசுக்கு வா எனச் சொல்லிக் கொண்டே திரும்பிப் போகிறார்.சிலம்பரசி தன்னிருப்பிடத்தைவிட்டு எழுந்து படபடப்புடன் ஜிஎம்மின் அறை நோக்கிப் போய்க் கொண்டடிருந்தவள் நெற்றியிலும் முகத்திலும் அரும்பிய வியர்வையை லேஞ்சியால் துடைச்சபடி மற்றவர்கள் தன்னைக் கவனிக்கிறார்களா என திரும்பிப் பார்க்கிறாள்.
சிலர் கடைக் கண்ணாலும்,இன்னும் சிலர் முகத்தை உயர்த்தியும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.கையில் என்வலப்புடன் தனது மனைவியின் மேசையடிக்கு வந்த ஜிஎம் நவரட்ணராஜா ஏதோ நினைச்சவராக மனைவியை தனது பணியறைக்கு வரச் சொல்லிவிட்டுத் திரும்பிப் போனதையம் கவனிச்சுக் கொண்டிருந்த முருகதாசன் மற்றைய பணியாளர்கள் மனைவி போவதைக் கவனிப்பதையும்,எல்லாரும் கண்சாடையால் கதைப்பதையும் அவதானிக்கிறான்.
அவனுடைய மனம் அல்லல்படுகின்றது.தனது மனைவி பலரின் கண்களுக்கும் வாய்களுக்கும் பேசுபொருளாகி புதினப்பொருளாகி நிற்பதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
தான் காதலிச்சுக் கல்யாணம் செய்தவள் இப்படி ஒரு சங்கடத்தில் சிக்குண்டுவிட்டாளே என அவனுடைய மனம் துடிக்கிறது.புடவைக் கடைக்கு துணிவாங்க வந்த ஒரு பெண்ணுடன் அவள் நிலைபற்றி தனது மனைவி அந்தப் பெண்ணை நோக்கி சொன்னது முழுப்பிழைதான் என்று அவனின் மனம் ஏற்றுக் கொண்டாலும் சரி பிழைகளுக்கு அப்பால் அவள் என்னுடைய காதல் மனைவி, பலருக்கு முன்னால் அவள் குற்றவாளியாகிவிட்டாளே,அவளுக்கு வரம் அவமானம் தனக்கு வரும் அவமானமே என்று நினைச்சு முருகதாசன் கலங்கி தலையை குனிஞ்சு கொண்டிருக்க அவனையறியாமலே அவனின் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் அவன் எழுதிக் கொண்டிருந்த தாளில் விழுந்து எழுத்தின் மையைக் கரைச்சு விடுகின்றது.

முருகதாசனுக்குக் கொஞ்சம் தள்ளி வேலை செய்து கொண்டிருந்த கனகசோதி,முருகதாசன் தலையைக் குனிஞ்சு கவலையுடனிருப்பதையும் காற்சட்டைப் பொக்கற்றிலிருந்து லேஞ்சியை எடுத்து கண்களைத் துடைப்பதையம் கண்டவன் வேகமாக எழுந்து முருகதாசனின் மேசையடிக்கு வந்தவன் அவனின் காதடிவரை குனிஞ்சு தாசன் கவலைப்படாதீர்கள் அழாதீர்கள் என்று ஆறதல் படுத்தியவன் தனது பொக்கிற்றிலிருந்து லேஞ்சியை எடுத்து முருகதாசனின் கண்களைத் துடைச்சதுடன் அவனின்: கண்ணீரால் கலைந்த எழுத்துக்களை,மேசையில் கிடந்த மையொற்றுந் தாளால் ஒற்றியபடியே அவனின் தோளில் கைவைச்சு ஆறுதல்படுத்தி மெதுவாகத் தட்டிவிட்டுப் போகிறான்.
சில மணித்தியாலங்களுக்குள் கீழே புடவைக் கடையில் சிலம்பரசி ஒரு பெண்ணுடன் நடந்து கொண்ட விடயம் மேல்மாடி அலுவலகத்தில் கிளார்க்காக வேலை செய்தவர்களின் காதுகளுக்கு ஒருவர் மாறி ஒருவர் செய்தி அனுப்பி எல்லோருக்குமே தெரிந்துவிட்டது.
ஒரு இளம் பெண் ஜிஎம்மின் அறைக்குப் போனதையும் கூடவே அவளுடன் ஒரு இளைஞன் போனதையும் பார்த்த அங்கிருந்தோர் சிலம்பரசியை ஜிஎம் கூப்பிட்டதும் சிலம்பரசியோடைதான் பிரச்சினை போல இவள் ஏதாவது வில்லங்கமான வேலையைச் செய்திருப்பாள்,இவள் எங்களோடையே கெறுக்குத்தனமாகக் கதைக்கிறவள் கடையிலை ஏதாவது செய்திருப்பாள் என அங்கை வேலை செய்து கொண்டிருந்த சௌந்தரவள்ளி பக்கத்து மேசையிலிரந்த சுகுணமாலாவுக்கு மேசையோடு வயிற்றை மடிச்சு குனிஞ்சு சொல்கிறாள்.
அதையும் கேட்டுவிடுகிறான் முருகதாசன்.முகத்துக்கு நேரே ஒன்றையும் முதுகுக்குப் பின்கால் இன்னொன்றையும் பேசும் மனிதர்களும் உண்டென்பது அவனுக்குத் தெரியாததல்ல,அதனால் சௌந்தரவள்ளி சொல்வது அவனுடைய காதுகளில் விழுந்த போதும் அமைதியாக இருந்தான்.
ஜிஎம்மின் பணியறைக்குள் போன சிலம்பரசியின் கைகளில் ஒட:டப்பட்ட என்வலப்பை ஜிஎம் குடுத்து,இதற்குள் இருக்கும் கடிதத்தில் சொல்லப்பட்டிருப்பது போல நடந்து கொள்ளுங்கள் என்கிறார்.நாங்கள் இக்கடிதத்தை மற்றவர்களுக்கு மத்தியில் தருவது நாகரீகமில்லை என்பதற்காகவே இங்கை கூப்பிட்டுத் தருகிறோம் என்கிறார்.
சரி என்பது போல தலையையாட்டிய சிலம்பரசி ஜிஎம்மிற்கு முன்னிலையிலோ அங்கு இருந்த சங்கத் தலைவர் மனோகரராஜாவுக்கு முன்னிலையிலோ என்வலப்பைத் திறந்து வாசிக்கத் தயங்கியபடி நன்றி என்று பொத்தம் பொதுவாகச் சொல்லிவிட்டு அந்த அறையைவிட்டு வெளியே வந்தவள் நேரே கணவன் வேலை செய்த இடத்தக்குப் போய் அவனிடம் என்வலப்பை நீட்டுகிறாள்.
மனைவியின் முகத்தை நிமிர்ந்து பார்த்தபடியே என்வலப்பை வாங்கியவன் மனைவியின் முகம் வெளிறிப் போயிருப்பதைக் காண்கிறான்.
இந்தக் கடிதத்தில் என்னதான் எழுதப்பட்டிருக்கும் என்ற யோசனையுடன் என்வலப்பைத் திறக்கையில்,கணவனின் முகத்தைப் பார்த்தவள் கணவனின் கண்கள் சிவந்திருப்பதையும்,மேசையில் கிடந்த தாளில் எழுத்துக்கள் கரைந்து அழுத்தியிருப்பதையம் கண்டவள் கண்கலங்கினியளா சொல்லுங்கள் என மேசையில் இரண்டு கைகளையும் ஊன்றியபடி கலங்கிக் கேட்டவள்,தனக்கு வந்த அழுகையை அடக்குவதற்காக கீழ்ச் சொண்டை உள்ளுக்குள் மடிதச்சு பற்களால் கடித்த போதும் தனக்காக தன் காதல் கணவன் அழுதிருக்கிறானே என அவள் குலுங்கி அழுகிறாள்.
சிலம்பு எல்லாரும் பார்க்கினம் அழாதை என்ற முருகதாசன் தனது வலது கையால் மேசையில் ஊன்றியிருந்த அவளின் விரல்களை ஆதரவாகத் தடவி விட்டபடியே கடிதத்தை வாசிக்கிறான்.அதில், திருமதி.சிலம்பரசி முருகதாசன் அவர்களுக்கு வணக்கம்.
12.04.80 ஆகிய இன்று சங்கத்தின் புடவைக் கடவைக்கு துணிவாங்க வந்த செல்வி பார்வதி தவசி என்ற பெண்ணைப் பார்த்து மலிவென்றால் காகங்கள் மாதிரிக் குளிக்காமல் வந்திங்கள் என்று சொன்ன வார்த்தைகள் உள்நோக்கத்துடன் சொல்லப்பட்டதாகவே முடிவெடுத்திருக்கிறோம்.
இது ஒரு தனிமனிதனின் சுயமரியாதையை தீண்டும் செயலாகவே சங்கம் முழுமையாகக் கருதுகின்றது.இச்சங்கம் மனிதர்களிடத்தில் ஏற்றதாழ்வுகளைப் பார்ப்பதில்லை.அனைவரும் சமம் என்பதே இச்சங்கத்தின் கட்டமைக்கப்பட்ட கோட்பாடாகும்.
இச்சங்கம் நாளாந்தம் பொதுமக்களோடு தொடர்புனகளைப் பேணுகின்ற சங்கம் என்பதற்கப்பால்,இச்சங்கம் அடிப்படையில் பொதுமக்களுடையதே என்பதையும் இதுவரையில் நீங்கள் உங்கள் பணிச் செயல்பாடுகள் ஊடாகவும் அறிந்திருப்பீர்கள்.

சங்கத்துக்கும் பொதுமக்களுக்குமிடையில் ஒற்றுமை தொடர்ந்து இருக்க வேண்டுமென்பதற்காகவே சங்க தாரக மந்திரமாக யாகவாயினும் நா காக்க என்று தொடங்கும் திருக்குறளை சங்கக் கிளைகள் அனைத்திலும் எழுதி வைத்திருக்கிறோம்.
அதனைப் புறந்தள்ளி ஒரு பெண்ணை வேதனைப்படுத்திய வார்த்தைகளை நீங்கள் பாவித்திருக்கின்றீர்கள்.;,நீங்கள் உங்கள் தவறை ஒப்புக் கொண்டதுடன் அப்பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டும் இருக்கிறீர்கள்.
நீங்கள் சொல்லிய வார்த்தைகள் சங்கம் பற்றிய தப்பான கருதுகோலுக்கு வழிவகுக்கக்கூடியது.இதை ஒரு பாரதூரமான மனிதத் தவறுக் குற்றமாக முடிவெடுத்திருக்கிறோம்.
எனவே எதிர்வரும் 14.04.80லிருந்து 18.04.80 வரை உங்களை பணியிடை நிறுத்தம் செய்திருக்கிறோம் என்பதை அறியத்தருவதுடன்,உங்களுடைய பணிநடத்தை கோர்வையிலும் இது குறிக்கப்படும்.
21.04.80 திங்கட்கிழமையிலிருந்து உங்களுடைய பணியை வழமைபோல நீங்கள் தொடரலாம்.
இங்ஙனம்
த.நவரட்ணராஜா
பொது முகாமையாளர்
என்று வாசித்து முடிக்கிறான் முருகதாசன்.கடிததத்தில் என்ன எழுதப்பட்டிருக்கும் என்பதை அறியும் ஆவலில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த அனைவரின் கண்களும் அவர்களிருவரையும் நோக்கியே இருந்தன.
மனைவியிடம் கடிதத்தைக் குடுக்க அவளும் வாசிக்கிறாள்.கவலைப்படாதீர்கள் என்று மனைவிக்குஆறதல் வார்த்ihதகளைச் சொன்னவன,; மனைவியைக் கூட்டிக் கொண்டு போய் அவளிருக்கையில் இருக்கச் செய்துவிட்டு,ஜிஎம்மின் அறையை நோக்கிப் போகிறான்.
ஜிஎம்மின் அறைக்கதவைத் தட்டி அனுமதி பெற்று உள்ளே போகும் அவனை என்ன என்பது போல ஜிஎம்மும்,தலைவரும் நிமிர்ந்து பார்க்கின்றனர்.
(தொடரும்…)
![]()