யாழில் அமைச்சர் பிமல் கலந்து கொள்ளவிருந்த கூட்டத்தில் கைக்கோடாரியுடன் நுழைந்தவர் கைது

யாழ்ப்பாணத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கலந்து கொள்ளவிருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மது போதையில் கைக்கோடாரியுடன் நுழைந்து குழப்பம் ஏற்படுத்த முற்பட்டவர் கைதுசெய்யப்பட்டார்.
யாழ்ப்பாணம் கொட்டடி கற்குளம் ஸ்ரார் சனசமூக நிலையத்தின் முன்பாக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் யாழ் மாநகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரசாரம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்றது.
அமைச்சர் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு வருகை தர முன்னதாக பிரசார கூட்டம்,கட்சியின் ஏனைய யாழ் மாநகர சபை வேட்பாளர்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது.
கூட்டம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் கூட்டத்தின் பின்வரிசையில் இருந்த அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூட்டத்தை நிறுத்துமாறு கூறிக்கொண்டு கைக்கோடாரியுடன் கூட்டத்திற்கு முன்பாக சென்றார்.
அமைச்சரின் வருகைக்காக அந்தக் கூட்டத்திற்கு பாதுகாப்பு கடமைக்கு நின்ற பொலிஸார் அவரை கூட்டிச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதனையடுத்து அப்பகுதிக்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டார்.
பின்னராக அமைச்சர் பிமல் ரத்னாயக்க தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார்.
![]()