கவிதைகள்

கற்பனைக்குள் அடங்கா கவின்மிகு கவிதைகள்!….. கவிதை – 06 …. சங்கர சுப்பிரமணியன்

ஈன்ற தாயும் இல்லத்தரசியும்:

இங்கே மகனாக என்னை ஈன்றெடுத்தாள் அன்னை
எங்கிருந்தோ வந்து சேர்ந்தாள் இவள் என்னுடனே
பத்து மாதம் என்னை சுமந்தாள் கருவறையில்
மொத்த காலம் என்னை சுமந்தாள் உளவறையில்

ஈருயிராய்ப் பிரிந்து பெற்றெடுத்தாள் வெவ்வேறாக்கி
ஓருயிரென்று சொன்னாள் நாங்கள் ஈருடலாயிருந்தும்
பாலும் சோறும் ஊட்டி பாசமுடன் வளர்த்தாள் தாய்
பாசத்தையே இறுதிவரை தொடர வந்தாள் மனைவி

தொட்டிலில் தாலாட்டி தூங்கவைத்தாள் தாய்
தொட்டிலில் மகவைத் தலாட்டினாள் மனைவி
வெண்ணிலா காட்டி உண்ண வைத்த தாய்
தண்ணிலா முகம்காட்டி உணவளிக்க மனைவி

மகன் மறைந்தால் வேறு பிள்ளையுண்டு தாய்க்கு
கணவன் மறைந்தால் வேறு யாருண்டு மனைவிக்கு
தாய் இறந்தால் சிதைக்கு வைப்பான் மகன் நெருப்பு
கணவன் இறந்தால் மனைவி வைப்பளோ நெருப்பு

ஆதியிலே வந்தவளும் பாதியிலே சென்று விட்டாள்
பாதியிலே வந்தவளோ மீதி வரை உடன் இருப்பாள்
ஆவி பிரிந்து போனபின் அழுது புலம்புவாள் தாயும்
அவள் ஆவி பிரியும்வரை நினைத்தழுவாள் மனைவி!

சங்கர சுப்பிரமணியன்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *