முச்சந்தி

30 வருடம் மேற்கு நாடுகளுக்காக அழுக்கு வேலை; பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் பல வறிய நாடுகள் மேற்கு நாடுகளுக்காக “அழுக்கு வேலை” (Dirty Works) செய்து வருவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக பாகிஸ்தான் கடந்த மூன்று தசாப்தங்களாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட மேற்கு நாடுகளுக்காக இந்த மோசமான அழுக்கு வேலையைச் செய்து வருகிறது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் (Khawaja Asif) வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகளை ஆதரித்ததையும், சோவியத் யூனியனுக்கு எதிராக முஜஹதீன் தீவிரவாதிகளை அமெரிக்கவுடன் இணைந்து ஆதரித்து வந்த விடயங்களையும் அப்பட்டமாக விமர்சித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகளுக்காக இந்த மோசமான வேலைகளை பாகிஸ்தான் செய்தது தவறு. அதற்காக நாங்கள் கடுமையாக துன்பப்பட்டோம் என்றும் கூறினார்.
இதன்மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதாக பாகிஸ்தான் அரசு ஒப்பு கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி அதனை அந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப் ஒப்புக் கொண்டுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தொடர்பும் இந்திய பதிலடியும் !
காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தான் மீது போர் தொடுக்கலாம் என்ற சூழல் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் இவ்வாறு பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் கடந்த 22 ஆம் தேதி தாக்குதல் நடத்தியதில் 29 பேர் பரிதாபமாக பலியாகினர். சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் இந்திய நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
பாகிஸ்தானில் உருவாகிய தீவிரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது என தெரிய வந்த நிலையில், பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு உள்ளது.
காஷ்மீரில் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ள இந்தியா, 48 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானியர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது.
மேலும் சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்து பாகிஸ்தானுக்கு தண்ணீர் செல்வதை இந்தியா நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் செயல்பாடுகளுக்கு பதிலடி தருவதற்காக பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அரசும் அறிவித்தது. தொடர்ந்து எல்லையில் ராணுவ படைகளை பாகிஸ்தான் குவித்து வருகிறது. முப்படைகளும் தயாராக இருக்க அறிவுறுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களை வெளியேறுமாறு எச்சரித்துள்ளது. இதனால் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தானியர்களை இந்தியா தாக்கினால், இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்க முடியாது. நாங்கள் தற்காப்புக்காக தயார் நிலையிலேயே உள்ளோம். தக்க பதிலடி கொடுப்போம் என்றும் அவர் பேசியுள்ளார்.
இதேவேளை பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார், இந்த கொடிய தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்புக்கான ஆதாரங்களை முன்வைக்குமாறு இந்தியாவுக்கு சவால் விடுத்தார்.
 இந்தியா மீண்டும் மீண்டும் பழி சுமத்தும் விளையாட்டை விளையாடியுள்ளது. மேலும் பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்புக்கான ஆதாரம் இருந்தால், தயவுசெய்து அதை எங்களுடனும் உலகத்துடனும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.
இஸ்ரேல் துணை நிற்கும் !
விரைவில் பாகிஸ்தானுக்கு பதிலடி தாக்குதல் கொடுக்க இந்திய மத்திய அரசு தயாராகி வருகிறது. எல்லையில் ராணுவ வீரர்களை தயாராக வைத்துள்ளது. கடற்படை, விமானப்படையும் பயிற்சியை தொடங்கி உள்ளது. அதேவேளை
பாகிஸ்தான் கராச்சியில் ஏவுகணை பயிற்சியை தொடங்கி உள்ளது.
இருநாடுகள் இடையே தற்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. இப்படியான சூழலில் தான் பாகிஸ்தான் மீது இந்தியா ராணுவ நடவடிக்கை எடுத்தால் இந்தியாவுடன் நாங்கள் துணை நிற்போம் என்று இஸ்ரேல் அதிரடியாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஓரன் மார்மோர்ஸ்டீன் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் நாங்கள் இந்தியாவுடன் நிற்போம்.
நண்பனுக்காக இன்னொரு நண்பன் இதை தான் செய்வான். நாங்கள் எப்போதும் இந்தியாவுடன் நிற்கிறோம். இது தான் இஸ்ரேலின் கொள்கை ரீதியான நிலைப்பாடு என தெரிவித்துள்ளார்.
மூன்று தசாப்த “அழுக்கு வேலை” (Dirty Works)
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தொலைக்காட்சி நேர்காணலில், கடந்த கால அரசாங்கங்கள் முப்பது ஆண்டுகளாக தீவிரவாதிகளை ஆதரித்து வருவதாக அதிர்ச்சியூட்டும் வகையில் ஒப்புக்கொண்டுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சில நாட்களுக்குப் பிறகு இந்த கருத்துக்கள் வந்துள்ளன.
பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பை ஆதரிப்பதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, ​​மேற்கு நாடுகளுக்கு நீண்ட காலமாக பாகிஸ்தான் “அழுக்கு வேலை” செய்வதாகக் கூறியதைத் தொடர்ந்து தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
அவர் ஸ்கை நியூஸுக்கு அளித்த சூடான நேர்காணலின் போது ஆசிஃப் அளித்த ஆச்சரியமான ஒப்புதல் வாக்குமூலம் இதுவாகும். பேட்டியில், பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளை விதித்ததற்காக புது டில்லியை ஆசிப் கடுமையாக சாடினார்.
பஹல்காம் பயங்கரவாதத்தை வளர்ப்பதில் பாகிஸ்தானின் நீண்ட வரலாறு குறித்த கேள்விகளைத் தவிர்க்க ஆசிப் முயன்றபோது, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட மேற்கு நாடுகளுக்காக இந்தமோசமான வேலையைச் செய்து வருகிறோம், என்றும் கடந்த காலத்தில் பயங்கரவாத அமைப்புகளை எவ்வாறு ஆதரித்தது என்பதையும் கூறினார். இந்த
தாக்குதல் குறித்து பாகிஸ்தானும் கவலைப்பட்டது. இருப்பினும், அவர் தனது கூற்றிலிருந்து விரைவாக பின்வாங்கி, அத்தகைய குழுக்களை ஆதரிப்பது ஒரு தவறு என்று பின்னர் வலியுறுத்தினார்.
அது ஒரு தவறு, அதனால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்று அவர் மேலும் கூறினார். லஷ்கர்-இ-தொய்பாவின் கிளையான எதிர்ப்பு முன்னணி, பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றதை முதலில் பாகிஸ்தான் அரசு இல்லை என்று கூறியது.
டெல்லியில் இருந்து வந்த எதிர்வினை எங்களுக்கு ஆச்சரியமாக இல்லை. இந்த முழு விஷயமும் பிராந்தியத்தில், குறிப்பாக எங்களுக்கு ஒருவித நெருக்கடியை உருவாக்குவதற்காகவே அரங்கேற்றப்பட்டது என்பதை நாங்கள் இலகுவாக கண்டுபிடிக்க முடிந்தது.
சிந்து நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட இந்தியாவின் சமீபத்திய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஆசிப் கூறினார்.
பாகிஸ்தானும் பயங்கரவாதத்தால் பாதிப்பு :
பயங்கரவாத அச்சுறுத்தல்கள பாகிஸ்தானிய அரசாங்கம் திட்டவட்டமாக கண்டிக்கிறது. பாகிஸ்தான் பல தசாப்தங்களாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற போக்கு தொடர்கிறது. இந்த முறை மீண்டும், குற்றம் சாட்டப்பட்ட தாக்குதலை யார் நடத்தினர் என்று தெரியவில்லை. அந்த அமைப்பைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை என்றும் அவர் கூறினார்.
தற்போது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (CCS) பாகிஸ்தானுக்கு எதிராக ஐந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் பிறகு இஸ்லாமாபாத் அரசும் 1972 சிம்லா ஒப்பந்தம் உட்பட இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் நிறுத்தி வைப்பது உட்பட எதிர் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி தற்போது பதிலடி கொடுத்து வருகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button