இந்தியாவைப் பகைத்தால் உக்ரைனை விட மோசமான நிலைமை இலங்கைக்கு ஏற்படும்! – எச்சரித்த ராஜித

அதானியின் ஒரு பில்லியன் முதலீட்டை இழந்தமை அரசாங்கம் இழைத்த பாரிய தவறாகும். நட்பு நாடான இந்தியாவைப் பகைத்துக் கொண்டால் உக்ரைனை விட மோசமான நிலைமையே இலங்கைக்கும் ஏற்படும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கோடிக்கணக்கில் கொள்ளையடித்தவர்களை விடுத்து, சில்லறை மோசடியாளர்களையே கைது செய்கின்றனர். தற்போது கைது செய்யப்படும் அனைவரும் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
இவ்வாறு தடுத்து வைக்கப்படுவது முக்கியமல்ல. உரிய சாட்சிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
எதிராளிகளை அரசியல் ரீதியில் கைது செய்யும் கலாசாரம் ஆரம்பிக்கப்பட்டால் அது எதிர்காலத்திலும் தொடரும்.
ஆனால் எமது ஆட்சியில் இவ்வாறு எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
இந்த அரசாங்கமே தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்பதையும் இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
கடன் மறுசீரமைப்பு, கடன் மீள் செலுத்தல், ட்ம்ப்பின் வரிக் கொள்கை என பாரதூரமான பிரச்சினைகள் முன்னிருக்கும் போது அரசாங்கம் இவற்றில் ஆர்வமாக இருப்பது நாட்டின் எதிர்காலத்துக்கு ஆபத்தாகும். என்றார்.