அமெரிக்கா விதித்த வரியால் நாட்டுக்கு பெரிய அதிர்ச்சி தாங்குவது மிகவும் கடினம்

அமெரிக்கா சமீபத்தில் விதித்த பரஸ்பர வரிகள், இலங்கை எதிர்பார்க்காத பெரிய அதிர்ச்சியான விடயமெனவும் இலங்கை மீண்டெழும் நேரத்தில் இதை தாங்குவது கடினமெனவும் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை எதிர்பாராதது என்றும் நாட்டின் ஏற்றுமதி அபிலாசைகளுக்கு சேதம் விளைவிப்பதுடன் 44 வீத கட்டண கணக்கீடு நியாயமற்ற நடைமுறை எனவும் குறிப்பிட்டார்.
இது உண்மையில் ஒரு பெரிய அதிர்ச்சி, இது நாங்கள் எதிர்பார்த்த ஒன்று அல்ல. புதிய வரிகள், ஏற்றுமதியை 3 பில்லியன் டொலர்கள் அதிகரிக்கும் எமது அரசாங்கத்தின் இலக்கைத் தடுக்கக்கூடும் என தெரிவித்தார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையை பாதியாகக் குறைப்பதை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தாலும் இந்த முறை இலங்கைக்கு விகிதாசாரமாக அபராதம் விதிக்கிறது எனவும் குறிப்பிட்டார்.
அமெரிக்கா எங்களுக்கு இதைச் செய்வதற்கு எந்த அரசியல் காரணமும் இல்லை, இந்த நேரம் மிகவும் கடினமானது. நாங்கள் இப்போதுதான் நிலைபெறத் தொடங்கி இருந்தோம். இந்த நேரத்தில் இலங்கைக்குத் தாங்குவது கடினமாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகள் நிலையானதாக இருக்காது. நாட்டின் நுகர்வு முறைகளைக் கருத்தில் கொண்டு, டிரம்பின் திட்டம் நீண்ட காலத்திற்கு சாத்தியமற்றதாக இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.
அரசாங்கம் சாத்தியமான பொருளாதார தாக்கத்தை மறுபரிசீலனை செய்யும் என்றும் அதற்கு பதிலளிக்கும் விதமாக இராஜதந்திர விருப்பங்களை பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.