வடக்கு கட்சிகளின் வேட்பு மனுக்கள் உட்பட நிராகரிப்பு விவகாரம் உயர் நீதிமன்றத்தினால் 59 மனுக்களும் தள்ளுபடி

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களால் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த 53 ரிட் மனுக்களும் மற்றும் 6 அடிப்படை உரிமை மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்வதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனுக்கள் கடந்த 28ஆம் திகதி முதல் ஆராயப்பட்ட நிலையில், அது தொடர்பில் இடம்பெற்ற நீண்ட வாதப் பிரதிவாதங்களின் பின்னர் வெள்ளிக்கிழமை அது தொடர்பில் தீர்ப்பை அறிவித்த உயர்நீதிமன்றம் அந்த மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.
வடக்கு, கிழக்கில் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பிரபல அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் கூட்டணிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வேட்பு மனுக்கள் தொடர்பாகவும் மற்றும் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் நிராகரிக்கப்பட்டிருந்த மனுக்கள் தொடர்பாகவும் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுக்களும் ரிட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இதன்படி தொடர்ச்சியாக அந்த மனுக்கள் மகிந்த சமயவர்தன, சம்பத் அபேகோண் மற்றும் எஸ்.துரைராஜா ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் ஆராயப்பட்டுவந்தது.
குறித்த சகல மனுக்களும் ஆராயப்பட்ட போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் தமது வாதங்களை முன்வைத்தனர். அதனை கேட்டறிந்த நீதியரசர்கள் குழாம், வியாழக்கிழமை அரச தரப்பு பதிலளிப்புக்கு காலம் ஒதுக்கியிருந்தது. அத்துடன் மனுதாரர்களை எழுத்துமூலமான சமர்ப்பணங்களை முன்வைக்கவும் சந்தர்ப்பம் வழங்கியிருந்தது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமையும் இந்த மனுக்கள் ஆராயப்பட்ட போது, சட்டமா அதிபர் தரப்பில் ஆஜராகியிருந்த பிரதி சொலிசிடர் ஜெனரல் கனிஷ்டா டி சில்வா, ரிட் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லையென வாதிட்டார். இதனை ஆராய்ந்த நீதியரசர்கள் குழாம் முதற்கட்ட ஆட்சேனையின் போதே 53 ரிட் மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.
இதேவேளை 6 அடிப்படை உரிமை மனுக்கள் ஆராயப்பட்ட போதும், அந்த மனுக்கள் தொடர்பான வேட்பு மனுக்களில் காணப்படும் குறைபாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது தள்ளுபடி செய்வதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.