“அபியும் நானும்” …. சிறுகதை …. சோலையூர் குருபரன்.

படுக்கை அறையில் காற்றாடி வேகமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. மின்விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. கட்டிலில் புரண்டு புரண்டு படுக்கிறேன். நித்திரை வரவில்லை. தனிமை. வெலைக் களைப்பு. இமைகள் செருகுகின்றன. இருந்தும் நித்திரை வரவில்லை. முயன்று பார்க்கிறேன் முடியவில்லை. நித்திரை தானாக வரவேண்டு. வரவில்லையே. கைப்பேசியில் நேரத்தைப் பார்க்கிறேன். இரவு 10.30 காட்டியது. போர்வையைப் போர்த்துக் கொண்டு, மெதுவாகக் கண்ணை மூடினேன். இருபத்தைந்து வருடங்களுக்கு முன் 1996 இல் பல்கலைக்கழகத்தில் நான்.
இயற்கை எழிலும் வனப்பும் மிக்க மத்திய மலைநாடு. கார் மேகங்கள் சூழ்ந்திருந்தன. மலைக்காற்று ஜில்லென்று மெதுலாகத் தடவிச் சென்றது. கலைப்பீட ஆர்ட் கலரிக்கு முன்னால் தனிமையில் அமர்ந்திருக்கிறேன்.
பழமையும் பெருமையும் புகழும் கொண்டது பேராதனப் பல்கலைக்கழகம். வனப்புமிக்க இயற்கைச் சூழலில் நிற்கிறது. சில பருவத்தில் ஆரவாரமின்றிச் சலசலத்தோடியும், பருவ மழையின்போது பொங்கி எழுந்து கரைபுரண்டு ஓடிச் செல்லும் மகாவலி கங்கையின் அழகும், அதன் குறுக்காக பேராசிரியர் துரைராஜாவினால் திட்மிட்டு வடிவமைத்து ஒற்றைத் தூணில் நிறுத்தப்பட்டுக் கட்டப்பட்ட நீண்ட அக்பர் பாலமும். விக்டர் ஐவர் ஜெனிங்ஸ் உபவேந்தராக இருந்தபோது கேம்பிரிஜ் பல்கலைக்கழக நூலக மாதிரியைப் போல் அவரால் வடிவமைத்துக் கட்டப்பட்ட தெற்காசியாவின் பெருமைமிகு நூலகமும். பருவகாலத்தில் பூத்துக் குலுங்கும் மரங்களும். நீண்டு கிளை பரப்பி அழகு சொரியும் மாரா மரங்களும் தனி அழகு சேர்க்கின்றன.
அக்பர் பாலத்துக்கு இடப்புறமாக நூலகம், செனற் கட்டிடம், ஹில்டா ஒபயசேகரா, சங்கமித்தா, இராமநாதன் விடுதிகளுக்கு இடையே பரந்து நீண்டு செல்லும் காதலர் பூங்காவும், இவற்றுடன் ஹிந்தகல, ஜேம்ஸ் பீரிஸ், மார்கஸ் பெனாண்டோ, லெனின்ஸ், மார்ஸ், அருணாசலம், ஜெயதிலகா, விஜேவர்த்தனா, அக்பர் ஆகிய மாணவர் விடுதிகளும், கலை, விஞ்ஞானம், பொறியியல், விவசாயம், மிருக வைத்தியம், பல் வைத்தியம், வைத்திய பீடம் ஆகிய பீடங்களும், செனற், ஜிம்னாசியம், நீச்சல் தடாகம், வளையாட்டு மைதானம், குறிஞ்சிக் குமரன் கோயில் உட்படச் சகல மதங்களுக்குமான சமய வழிபாட்டிடங்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கான விடுதிகள், வூஸ், ஹெம்பா அகிய தனியான தேநீர் சிற்றுண்டிச்சாலைகள் ஆகிய இன்னோரன்ன கட்டிடங்களுடன் அருகில் அழகு சொரியும் புகழ்மிக்க பேராதனை தாவரவியல் பூங்கா வனமும் மனதில் காட்சிகளாக ஓடிக் கொண்டிருந்தன.
இயற்கையின் அழகெல்லாம் கொட்டிக் கிடக்கும் இரம்மியமான சூழலில் விஞ்ஞானப் பிரிவில் கற்பதற்காக வந்த அழகு தேவதைதான் அபிநயா. நாலாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்ற அச்சூழலில் பிரமன் படைப்பில் பேரழகின் அதிசயமாக அபி வலம் வந்தாள். மத்திய மலை நாட்டின் எழில் கொஞ்சும் அழகு போல் அபியிடமும் அழகும் அன்பும் கொட்டிக் கிடந்தது. எல்லோரின் பார்வையிலும் அவள் ஓரு தேவதை போலவே தென்பட்டாள்.
இராணித் தேனியைச் சுற்றி வலம் வரும் ஏனைய தேனீக்கள் போல் பல மாணவர்கள் ஒரு தலைக் காதல் மயக்கத்தில் அவளைப் பின்தொடர்ந்தனர். பௌதிக விஞ்ஞானத்தில் ஓரு பேராசிரியையாக வரவேண்டும் என்ற இலக்குடன் காதல் வலையில் வீழ்ந்துவிடாமல் தனது குடும்பத்தின் பெயர், மானம் காக்கும் பெண்ணாக என்னோடு இறுதி வருடத்தில் கற்றுக் கொண்டிருந்தாள் அபி. நிச்சயம் அவள் இலக்கினை அடைவாள் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருந்தது. அத்தனை கட்டுப்பாடு அவளிடம். தன்னை ஒரு தலைப் பட்சமாகக் காதலித்து வெளிப்படுத்தியவர்கள் தோல்வியடைந்து வருத்தப்படாமல் இருப்பதற்காக அவளது காந்தப் பார்வையாலே தன்வசப்படுத்திக் கனிவாகப் பேசி புத்தி சாதுரியமாக அவர்களின் மனதைத் திசை திருப்பி விடுவாள்.
அபி கொழுப்பில் பிரபலமான செல்வாக்குமிக்க பண்பான குடும்பத்தில் பிறந்தவள். பணம், வாகன வசதி, மாளிகை எனப் பலவகை வசதிகளைக் கொண்டவள். இத்தனை இருந்தும் எளிமை, பணிவு, அன்பு, கருணை, பரோபகாரம் அவளிடம் இயல்பாகவே காணப்பட்டது. எச்சந்தர்ப்பத்திலும் தான் ஒரு பணக்காரி என்பதை வெளிக்காட்டியதே கிடையாது. நண்பர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் முதலாளாக அவள் வந்து நிற்பாள். பணக் கஷ்டமெனில் திருப்பிக் கேட்காமலே எவ்வளவு தொகையானாலும் கொடுத்து உதவுவாள். அத்தனை பரோபகாரம் அவளிடம். அன்பு காட்டுவதில் அவளுக்கு நிகர் அவள்தான். அவள் சிரிக்கும்பொது குழி வழும் மாம்பழக் கன்னமும், முத்துப் போன்ற பற்களும் பார்ப்பவர்களுக்கு ஒரு பரவச உணர்வைக் கொடுக்கும்.
விடுமுறை நாளில் அபியைப் பார்க்கப் பெற்றோர் வந்தால் நண்பர்கள் எலலோருக்கும் கொண்டாட்டம்தான். அன்றைய விருந்துபசாரம் முழுவதையும் அவர்களே கவனித்துக் கொள்வார்கள். அத்தனை கனிவும், நற்குணமும் அவர்களிடம் காணப்பட்டன. அன்றைய தினம் அவர்களோடு சேர்ந்து பல இடங்களைத் தரிசிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். பெற்றோரின் நற்பண்புகள் அபியிடமும் காணப்பட்டது.
நான் அபியைப் போன்று அழகானவன் அல்ல, என்றாலும் சுமாரானவன். என்னிடமும் ஒரு கவர்ச்சி இருப்பதாக நண்பர்கள் கூறுவார்கள். கிராமத்தில் நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்து பல இலட்சியங்களை மனதில் சுமந்து கொண்டு பல்கலைக்கழகத்துக்கு வந்தவன் நான்.
அபியிடம் காணப்பட்ட நற்குணங்கள் என்னிடமும் இருந்தன. அவளோடு நண்பனாகப் பழகிய பின்னர் என்னில் பல மாற்றங்கள் தென்பட்டன. அவளின் நண்பர்களில் எனக்கு முதலிடம் தந்தாள். எங்கும் எவ்விடத்திலும் என்னை முதன்மைப்படுத்துவாள். எனக்கு எதாவதென்றால் துடித்துவிடுவாள். நானும் முதலாம் வருடத்தில் அவளைக் காதலித்தேன். அவளின் குணத்தில் மெய்மறந்து காதலிப்பதை நிறுத்தி விட்டேன். இருந்தும் அடிமனதில் ஓர் இனம் புரியாத நெருடல் வந்து போகும். அபியின் நட்புக்காக அதனைக் காட்டிக் கொள்ளாமல் பலமுறை தவித்ததும் உண்டு. இருவரிடமும் இருந்தது தெய்வீகமான நட்பு மாத்திரமே. நண்பிகளோடு விடுமுறை நாளில் அவள் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் நண்பர்களில் நான் பிரதானமானவன்.
பலமுறை இருவரும் தனிமையில் இருவரும் சந்தித்துப் பேசியிருக்கிடீறாம். எந்தவிதமான விரசமும் இருவரிடமும் தோன்றியதில்லை. அதனால் என்மீது அளவுகடந்த நம்பிக்கை அவளுக்கு. அவளிடம் சில கட்டுப்பாடுகள் இருந்தது போல் என்னிடமும் இரந்தன. நண்பர்களோடு உரையாடும் போது எச்சந்தர்ப்பத்திலும் தொட்டுப் பேசமாட்டாள். அன்பு, கருணை, பாசம், நேசம், பரிவு, கனிவு என்பவற்றால் நண்பர்களை வசப்படுத்திக் கொள்வாள். பொய், புரட்டு, ஏமாற்று அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காது. அத்தகையவர்களிடம் இருந்து எப்போதும் ஒதுங்கியே இருப்பாள்.
கிராமத்தில் மதிக்கத்தக்க நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன் நான். அம்மா, அப்பா இருவரும் ஓரளவு படித்தவர்கள். தங்கை உஷா வைத்திய பீடத்தில் முதலாம் வருடத்தில் கற்றுக் கொண்டிருக்கிறாள். தம்பி பிரவின் உயர்தரக் கணிதப் பிரிவில் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறான். அவன் மாவட்டதில் மெரிட்டில் சித்தியடைவான் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் உளளது. அம்மா, அப்பா இருவரும் எனக்கு வாழ்க்கையைக் கற்றுத் தந்திருக்கிறார்கள். மூன்று பேருக்கும் படிப்புக்குச் செலவு செய்வதனால் வீட்டில் சில கஷ்டங்களும் உள்ளன. இருந்தும் அப்பா அதனைச் சமாளித்துக் கொண்டிருக்கிறார்.
அப்பா “உனக்குக் கிடைக்க வேண்டியது என்றோ ஒரு நாள் உனக்குக் கிடைக்கும். இன்னொருவருக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டியதைத் தட்டிப் பறிக்காதே” என அடிக்கடி கூறுவார். அதுவே என் வாழ்க்கையில் தாரக மந்திரமாகவும் ஆகிவிட்டது. அபி விடயத்திலும் வெளிக்காட்டாமல் அதையே கடைப்பிடித்து வந்தேன். இதுவரை எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் வெளிக்காட்டவுமில்லை.
அபியின் பெற்றோர்மீது அளவு கடந்த மரியாதை வைத்திருந்தேன். அதேபோல் அவர்களும் என்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். அபியும் நண்பிகளும் இருமுறை எனது வீட்டுக்கு வந்திருந்தார்கள். அபி அம்மா, அப்பாவோடு அன்ரி, அங்கிள் என மனந்திறந்து, வெளிப்படையாகப் பழகுவாள். எங்கள் வீட்டிலுள்ள எல்வோலருக்கும் அபியைப் பிடிக்கும். அபியும் அவர்கள்மீது அளவு கடந்த மரியாதை வைததிருந்தாள்.
தேக்கி வைத்த இன்ப உணர்வுகள் அடிமனதில் பதிந்திருக்குமல்லவா, சில வேளை கனவிலும், நனவிலும் அவள் வந்து பரவசப்படுத்துவாள். அதனை அன்றே மறந்து விடுவேன். என்னைப் புரிந்து கொண்டு என்றோ ஒரு நாள் என்னிடம் வருவாள். தன் விருப்பத்தைச் சொல்லுவாள். அதுவரை ‘இலவு காத்த கிளி போல்’ பொறுத்திருப்போம் என்ற நம்பிக்கையோடு என் இலச்சியத்தின் மீது கவனத்தைச் செலுத்திச் செயற்பட்டுக் கொண்டிருந்தேன். இப்படிச் சில எண்ண அலைகள் என்னுள் வந்து சென்றாலும் எனது மனதில் சலனமோ சஞ்சலமோ இல்லாமல் உறுதியாக இருந்தேன். நான் அபியைக் கண்டு பேசிய நாளில் இருந்து இன்றுவரை அவளும் மனதில் தேவையற்ற சலனம், சஞ்சலங்களுக்கு இடம் கொடுக்காமலே இருந்தாள். இது இருவரினதும் தூய்மையான நட்புக்கு அடையாளம்.
“ அசோக் என்னமோ தெரியல்ல அம்மாவும் , அப்பாவும் தொலைபேசியில் கதைக்கும்போது அடிக்கடி உள்களப் பற்றித்தான் விசாரிக்கிறாங்க” எனப் பலமுறை கூறி இருக்கிறாள்.
சில வேளைகளில் வீட்டில் இருந்து பணம் வருவது தாமதமானால் என் முகம் பார்த்துக் குறிப்பறிந்து தேடி வந்து உதவிடுவாள். அவள் நடந்து வரும் அழகு பல்கலைக்கழகத்தின் பசுமையான சூழலுக்கு அழகு சேர்க்கும்.
அபி விஞ்ஞான பீடத்துக்கு அருகிலுள்ள விடுதியில் தங்கி இருந்தாள். நான் கலைப் பீடத்துக்கு அருகிலுள்ள விடுதியில் தங்கி இருந்தேன். அபி எக்காரணம் கொண்டும் விரிவுரைக்குச் சமுகமளிக்காமல் இருக்கமாட்டாள். அதேபோல்தான் நானும். வெளியில் அபியை நண்பிகளோடு மாத்திரமே காணலாம்.
அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை. காலை 9.00 மணி இருக்கும். மலையகத்துக்கே உரிய காலநிலையும் அத்னோடு இணைந்த இளந்தென்றல் காற்றும் எங்களை வருடிச் சென்றது. நகருக்குச் செல்வதற்காகக் கலைப்பீட ஆர்ட் கலரிக்கு முன்னால் நானும் நண்பர்கள் சிலரும் அமர்ந்து பேரூந்தை எதிர்பார்த்து பேசிக் கொண்டிருந்தோம்.
“மச்சான் அசோக் நம்மட படிப்பு முடிய இன்னுமொரு தவணைதான் இருக்கு. இனிப் படிப்பிலதான் கவனம் செலுத்தணும்” என்றான் காந்தன். “படிப்பு மட்டுமா நமது தேவதை யாருக்குச் சொந்தமாகப் போறாளோ” என்று நீண்ட பெருமூச்சுவிட்டான் நந்தன்.
தினமும் நண்பிகளோடு விடுதியில் இருந்து வெளியே வரும் அபி அன்று தனிமையில் வந்து கொண்டிருந்தாள். அவள் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது.
“மச்சான் இண்டைக்கு அபி தனியாத்தான் வாறாள்றா” எனக் காந்தன் வியப்போடு கூறினான். “மச்சான் நம்மளப் பார்த்துக் கொண்டுதான் வாறாள்றா” என்றான் நந்தன். “அவளுக்கு ஏதும் அலுவலாக இருக்கும். எதற்கும் வரட்டுமே” என்றேன். எல்லோரும் வைத்த கண் வாங்காமல் அபியைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.
அருகில் வந்தவள் “எல்லோருக்கும் காலை வணக்கம்” கூற நாங்களும் “கா..கா..லை வணக்கம்” என்றோம். அருகில் வந்து அமர்ந்து கொண்டாள்.
சிறிது நேரம் அமைதி. வியப்போடு ஆளை ஆள் பார்த்துக் கொண்டிருக்க, அமைதிக்கு முற்றுப் புள்ளி வைத்தவளாக “அசோக் கோயிலுக்குப் போகணும் வாறீங்களா? ப்ளீஸ்” என்றவள் என்னருகில் வந்தாள். அபி அருகில் வர என்னை அறியாமலே எழுந்துவிட்டேன். என் அடி மனதில் இதமான புத்துணர்ச்சி வந்து என்னைப் பிரமிப்பில் ஆழ்த்தச் செய்வதறியாது நின்றேன். எல்வோரும் இருவரையும் ஏற இறங்கப் பார்த்தனர்.
நந்தன் “போ மச்சான் போ” எனக் கூற சகலரும் அனுமதிப்பது போல் எங்களைப் பார்த்தனர். “அசோக் ப்ளீஸ் நேரமாகுது வாங்களன் போகலாம்” என்றதும் ‘பசுவைத் தொடரும் இளங்கன்று போல்’ நானும் அபியைப் பின் தொடர்ந்தேன். வந்த பஸ்ஸில் இருவரும் ஏறினோம். நன்பர்கள் பஸ்ஸில் ஏறாமல் “அபியா இது” எனக் கேட்பது போல் எங்களை அதிசயமாகப் பார்த்து மெய்மறந்து நின்றனர். அபி இருக்கையில் அமர்ந்தாள். “அசோக் இதுலவந்து அமருங்க..” என்று என்னைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒருவித உணர்வு கலந்திருந்தது. நானும் அருகில் அமர்ந்தேன். பல நூறு கேள்விகள் என்னைக் குடைந்தெடுத்தது.
என் மௌனத்த்தைக் கலைப்பது போல் “அசோக் இப்ப நாம கோயிலுக்குப் போகல்ல. நிறையப் பேசணும். பூங்காவுக்குப் போவோம் வாறீங்களா? எனக் கேட்டாள். அவளின் கனிவான குரலும் அந்தக் காந்தப் பார்வையும் என் மனதில் மின் அலை பாயந்தது போல் இருக்க என் அடிமனதில் இருந்து “ம்ம்” என பதில் வந்தது.
அபி இருக்கையில் இருந்து எழுந்து, மணியை அழுத்தினாள். இருவரும் பூங்காவுக்கு முன்னால் இறங்கினோம். நுழைவுச் சீட்டினை அபி எடுத்து, முன்னால் இருந்த பெட்டிக் கடையில் சில நொருக்குத் தீனிகளை வாங்கினாள். “வாங்க போவொம்” என்றதும், இருவரும் உள்ளே நுழைந்தோம். என் அருகில் வந்தவள் தன் மிருதுவான வலக்கரத்தால் என் இடக்கரத்தைப் பற்றினாள். காண்பது கனவுபோல் இருந்தது. இருவரும் பல கனவுகளோடு புது இராகம் மீட்கப் புறப்பட்டோம்.
இருவரும் பாதை ஓரத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து சிறிது நேரம் அமைதியாக இருந்தொம். அபியே தொடர்ந்தாள். “இறுதிப் பரீட்சை முடிந்து வெளியேறுவதற்கு நான்கு மாதங்கள் மாத்திரமே உள்ளன. இருவருக்கும் பல எதிர்பார்ப்புக்கள், கனவுகள், கற்பனைகள் உள்ளன. அவை எல்லாம் நிறைவேற வேண்டும் என்றுதான் நான் அமைதியாக இருந்தேன். அம்மா, அப்பா இருவரும் உங்கள் மேல் அதிக பற்றுடன் இருக்கிறாங்க, நானும் அப்படித்தான் உங்கள் மீது பிரியமாக இருக்கிறேன். அதனால்தான் அவர்கள் இருவரும் உங்கள் கிராமத்துக்குப் போக வேண்டும். உங்கள் பெற்ரோரோடு பேச வேண்டும் என்று ஆவலோடு இருப்பதாகச் சொன்னாங்க. நீங்களும் என்னைக் காதலிப்பது எனக்குத் தெரியும்”
“மௌனம் கலைத்துவிட்டோம. உங்கள் பெறறோர் சம்மதம் அசியம். இனி என்ன பயம். இருவரும் இளஞ் சிட்டுக்களாகக் காதல் வானில் சிறகடித்துப் பறப்போம். நமது இலச்சியம் நிறைவேற வேண்டும். அதனால் சில நிபந்தனைகள் என்னிடம் உள்ளன. பரீட்சை முடியும் வரையும் எமது கற்றலுக்கான பொன்னான நேரத்தை வீணடிக்கக் கூடாது. தேவையற்ற சந்திப்புக்களைத் தவிர்த்துக் கொள்வோம். படிப்புத்தான் நமக்கு முக்கியம். மற்றதெல்லாம் இரண்டாம் கட்டம்தான். இன்றிலிருந்து நாம் காதலிப்பது வெளிப்படையாகிவிட்டது. நான் உங்களுடையவள். உங்களுக்கானவள். இதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். இதில் எனது பெற்றோரும் உறுதியாக இருக்கின்றனர். படிப்பு முடிந்து இருவரும் எதிர்பார்க்கின்ற உத்தியோகம் கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வோம். ஜஸ்ட் இரண்டு வருடங்கள். அதுவரை இரு மனம் கலந்த காதலர்களாக இருப்போம். இது நான் பல நாள் யோசித்து எடுத்த முடிவு. நீங்களும் இதற்கு உடன்படுவீர்கள் என நம்புகிறேன்” எனக் கூறி என் பதிலை எதிர்பார்த்து மௌனமானாள்.
அபி கூறும்போது என் மனதில் மகிழ்ச்சி பொங்கியது. அந்தரத்தில் மிதப்பது பொல் இருந்தது. என் காத்திருப்புக்கு அபியடமிருந்து பதில் கிடைத்த சந்தோசம். சந்தோசத்தில் மௌனமானே்.
என் மௌனத்தைக் கலைத்தவளாக “அசோக் ஏன் மைளனமாக இருக்கிறீர்கள். உங்கள் கருத்தைக் கூறுங்களன். என்னுடைய கருத்தைக் கூறி இருக்கிறேன்” என அபி கூறியதும்,
“அபி நீ எனக்குக் கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். உனது விருப்பம்தான் என் விருப்பம். நீ கூறியவாறு நடந்து கொள்கிறேன். எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். எந்த விடயத்திலும் உன்னோடு நானிருப்பேன்” என்றதும் அபி மனதில் தேக்கி வைத்த காதல் உணர்வு வெளிப்பட எதிர்பார்க்காமலே என் கையைப் பிடித்து முத்தமிட்டாள்.
“இது ஒன்றே போதும் அசோக். உங்கள் இறுதி மூச்சு உள்ளவரை உங்களுடன் நான் இருப்பேன். இதைச் சாப்பிடுங்கள் முடிந்ததும் போகலாம்” என இரு மனதும் ஒருமனதாகித் தம்முள் எழுந்திருந்த பல நூறு வினாக்களுக்கு இதமான அந்தச் சூழலில் விடையும் கிடைத்தது. இருவரும் கரம் பற்றும் நாளை எதிர்பாரத்துக் கொண்டு காதல் வானில் சஞ்சரிக்கத் தயாராகினோம்.. அங்கிருந்து புறப்பட்டு இருவரும் விடுதிகளுக்குச் சென்றோம. காமம், விரசம் இல்லாத எங்கள் காதலை நண்பர்கள் பாராட்டினர். எதிர்பார்த்த பரீட்சையும் முடிந்து பல்வகைப்பட்ட கனவுகளோடு பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறினோம்.
பரீட்சை முடிவு வந்தது. நாங்கள் இருவரும் முதல் வகுப்பில் சித்தியடைந்தோம். இருவருக்கும் இரு பல்கலைக் கழகங்களில் விரிவுரையாளர்களாக நியமனம் கிடைத்தது. அபியின் சம்மதத்துடன் நான் இலங்கை நிருவாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து, எனது கனவுப்படி உயர் பதவியும் கிடைத்தது. இருவருக்கும் திருமணம் நடந்து ‘ஆசைக்கு ஒன்று ஆஸ்த்திக்கு ஒன்று’ என்பது போல் இரு பிள்ளைகள். மூத்தவன் வினோத் பொறியியல் பீடத்தில் இரண்டாம் வருடத்தில் கற்றுக் கொண்டிருக்கிறான்.
மகள் ஆசா உயர்தரம் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றி பெறுபேறை எதிர்பார்த்துக் பொண்டிருக்கிறாள். நிச்சயம் அவள் மாவட்டத்தில் முதலாம் இடத்தில் சித்தியடைவாள் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் இருக்கிறது. அபி தான் நினைத்தது போல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகிப் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கான பீடாதிபதியாகக் கடமையாற்றிக் கொண்டிருக்கிறாள். நான் அமைச்சொன்றில் மேலதிக செயலாளராகக் கடமையாற்றுகிறேன். எங்கள் இருவரினதும் கனவுகளும் இலச்சியமும் நிறைவேறிய சந்தோசம், மகிழ்ச்சியோடு வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது.
வீட்டுக்குள் பூனை பலமாகக் கத்தும் சத்தும் கேட்டு திடுக்குற்று விழித்தேன் நேரம் நள்ளிரவு 12.30. பூனையின் அலறல் நின்றுவிட்டது. சுகமான சிந்தனைகளோடு மீண்டும் போர்வைக்குள் நுழைந்தான்.
இக்கதை சிறிது கற்பனை கலந்த உண்மைச் சம்பவம்.