இலங்கை

கச்சதீவை மீட்பது எமது எண்ணமல்ல; இராமேஸ்வரம் மாவட்ட விசைப்படகு மீனவ சங்கம்

இழுவை மடி வலைகளை படிப்படியாக நிறுத்த முடியும். இந்திய – இலங்கை மீனவர்கள் தொப்புள் கொடி உறவாக மீன் பிடிக்க இரு நாட்டு அரசாங்கமும் பேசி தீர்வு காண வேண்டும் என இந்திய இராமேஸ்வரம் மாவட்டத்தின் விசைப்படகு மீனவ சங்கத்தின் தலைவர் பி.ஜேசுராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இந்திய – இலங்கை மீனவ சங்க பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

நீண்ட காலமாக இருந்து வரும் இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டி இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வந்து 5 பேர் கொண்ட குழுவாக நான்கு மாவட்ட இலங்கை மீனவ சங்கப் பிரதிநிதிகளுடன் எங்கள் தொப்புள் கொடி உறவுகளுடன் எமது நிறைகுறைகளை பேசினோம். அவர்களுடைய கஷ்ட நிலைமைகளை எங்களிடம் கூறினார்கள். எங்களுடைய கஷ்ட நிலைமைகளையும் நாங்கள் கூறினோம்.

இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படையில் இந்த பேச்சுவார்த்தை இருந்தது. சுமுகமாக நடைபெற ஏற்பாடு செய்த இலங்கை மீனவ சமாசத்திற்கு நன்றிகள்.

கடந்த 9 வருடங்களுக்கு முன் இரண்டு அரசாங்கங்களும் பேசிய பின்னர் மீனவர் பிரச்சினை பேசப்படவில்லை.9 வருடங்களில் இரண்டு நாட்டு மீனவர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த பாதிப்பை எவ்வாறு நிறுத்துவது என்று பேசப்பட்டது. அவர்களது கோரிக்கை இந்திய இழுவைமடி வலைகளை முற்றாக நிறுத்த வேண்டும். அதனை நிறுத்தினால் கடல்வளம் பாதுகாக்கப்படும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார்கள்.

நாங்கள் இந்த இழுவைமடி வலையை படிப்படியாக குறைப்பதற்கு இந்திய மற்றும் தமிழக அரசாங்கம் ஊடாக சம்மதிக்கின்றோம் எனக் கூறினோம். அடுத்த கட்டமாக ஏனைய மாவட்ட மீனவ அமைப்புக்களையும் ஒன்று திரட்டி இந்திய அரசு, தமிழக அரசு, இலங்கை அரசாங்கம் உதவியுடன் இதனை பேசி நல்லதொரு தீர்வை அடுத்த கட்டமாக எட்ட முடியும் என பேசியுள்ளோம்.

வயிற்றுப் பிழைப்புக்காக மீன் பிடிக்கும் மீனவர்களை இலங்கை அரசாங்கம் தமது சட்டத்தின் படி 6 மாதம், ஒரு வருடம், 2 வருடம் என சிறை வைத்துள்ளார்கள். அந்த மீனவர்களை மனிதாபிமான முறையில் விடுவிக்கப்பட வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரமாகவும் தீர்வு காண வேண்டும் என கோரியுள்ளோம்.

அடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது அதனை செய்யலாம் என இலங்கை மீனவர்கள் கூறியுள்ளார்கள். நிச்சயமாக இலங்கை, இந்திய அரசாங்கங்கள் பேசி இதற்கு ஒரு தீர்வை எட்ட வேண்டும். இந்திய – இலங்கை கடற்பரப்பு மிகக் குறைவாக உள்ளது. அதிலும் கச்ச தீவு இலங்கைக்கு கொடுத்ததால் கடல் பரப்பு குறைவாக உள்ளது. அதனால் தான் எல்லை தாண்டும் பிரச்சினை ஏற்படுகிறது.

இதில் இந்திய – இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றோம். நிலைமையை கருத்தில் கொண்டு இரண்டு அரசாங்கங்களும் இணைநது இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

அரசியல் தலைவர்கள் தமது அரசியல் இலாபத்திற்காக சில கோரிக்கைகளை முன்வைக்கிறார்கள். அது எமக்குத் தெரியாது. எங்களுடைய எண்ணம் கச்ச தீவை மீட்பது அல்ல. இரு நாட்டு மீனவர்களும் தொப்புள் கொடி உறவாக அப் பகுதியில் மீன் பிடிக்க வேண்டும். இரு பகுதி மீனவர்களும் பாதிக்காத வகையில் இரு நாட்டு அரசாங்கமும் நல்ல முடிவை எடுக்க வேண்டியது கட்டாயம். அவர்கள் எடுப்பார்கள் என நாங்கள் நம்புகின்றோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.