தடை விதித்த பிரிட்டன் அமெரிக்காவை திட்டிய விமல்

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட நால்வருக்கு பிரிட்டன் தடை விதித்துள்ள நிலையில், அது அமெரிக்காவால் விதிக்கப்பட்ட தடையாக நினைத்து செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்காவுக்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச கடும் சீற்றத்துடன் கருத்துக்களை வெளியிட்டார்.
தனது அலுவலகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பை நடத்தியே அவர் அமெரிக்காவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தார்.
இதன்போது வீரவன்ச மேலும் கூறுகையில்,
இலங்கையில் 10 வருடங்களுக்கு முன்னர் பயங்கரவாதத்தை தோற்கடித்த யுத்தம் தொடர்பில் அடிக்கடி மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுகளை ஐக்கிய அமெரிக்க குடியரசு முன்வைத்து வந்தது. இதன் அடுத்தக் கட்டமாக ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் இலங்கை பாதுகாப்பு படையில் இருந்த முன்னாள் பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகி வந்த கருணா அம்மானுக்கும் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் சொத்துக்கள் அமெரிக்காவுக்குள் இருந்தால் அவற்றை அரசுடமையாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பயங்கரவாதத்திற்கே ஊக்கமளிக்கப்படும்.
அமெரிக்காவின் ஆசீர்வாதத்துடன் இஸ்ரேல் காசா எல்லையில் புரியும் குற்றங்கள், சுற்றியுள்ள நாடுகளில் பரப்பியுள்ள யுத்த நிலைமை, மனித பேரவலம் ஆகியன நடக்கும் நிலைமையில் அமெரிக்காவின் அரசாங்கமும் அதிகாரிகளும் இலங்கையை யுத்தத்தில் இருந்து மீட்பதற்காக பங்களித்த இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக இவ்வாறு முறையற்ற வகையில் பதிலளிப்பது பயங்கரவாதத்திற்கு உதவுவதாகவும், விடுதலைப் புலிகளுக்கு வெள்ளையடிப்பதாகவும் இருக்கும். இதன்மூலம் பயங்கரவாதிகளின் அபிலாசைகளே முன்னேற்றமடையும்.
தற்போதைய அரசாங்கம் ஐக்கிய அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளை பேணுகின்றது. கொழும்பிலுள்ள தூதுவருடனும் நெருக்கமான தொடர்புகளை பேணுகின்றது. இந்நிலையில் இந்நாட்டு பாதுகாப்பு பிரதானிகள் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடித்தவர்களுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தடுப்பதற்காக இராஜதந்திர தொடர்புகளை இதில் பயன்படுத்த வேண்டும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பயன்படாத இராஜதந்திர தொடர்புகள் போரில் பயன்படாத வாள், பலாக்காய் வெட்டுவதற்கா என்று கேட்கின்றேன் என்றார்.