எனது மகன் இன்னமும் உயிருடன் இருக்கின்றார்; ஜனாதிபதிக்கான கடிதத்தில் தாயொருவர் வலியுறுத்து

எனது மகன் உயிருடன் இருக்கின்றார் என உறுதியாக நம்புகின்றேன் சாதாரண மக்களின் துயரங்களை நன்கு அறிந்தவர் என்ற அடிப்படையில் நீங்கள் எங்கள் கண்ணீரை கதறல்களை செவிமடுப்பீர்கள் என நாங்கள் கருதுகின்றோம். எங்கள் மன்றாட்டங்களை நீங்கள் செவிமடுப்பீர்கள் என நாங்கள் புதிய நம்பிக்கையை கொண்டுள்ளோம் என காணாமல்போன தனது மகனை 15 வருடங்களிற்கு மேலாக தேடிவரும் பாலேந்திரன் ஜெயகுமாரி ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
2008ம் ஆண்டு பலவந்தமாக காணாமலாக்கப்பட்ட தனது மகன் குறித்த விபரங்களை வெளியிடுமாறு கோரி பாலேந்திரன் ஜெயகுமாரி ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவிடம் இன்று கடிதமொன்றை கையளித்துள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது
கிளிநொச்சி புளியம்பொக்கணை மாசுரன்பட்டியில் வசிக்கும் நான் விதவை. நான்கு பிள்ளைகளின் தாய். ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தக்கூடிய இழப்புகளை சந்தித்துள்ளேன்.
மோதலின் போது எனது இரண்டு புதல்வர்கள் கொல்லப்பட்டனர். எனது இளைய மகன் 2008 இல் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டார்.
எனது கணவருடன் சேர்த்து நான் எனது குடும்ப உறுப்பினர்கள் நால்வரை இழந்துள்ளேன்.என்னுடன் எனது ஒரேயொருவர் மாத்திரம் இருக்கின்றார்.எனது இளைய மகள்.அவர் தற்போது என்னுடன் வசித்து வருகின்றார்.
மோதல் காலத்தில் நான் கிளிநொச்சி மாவட்டத்தின் கல்மடுவில் உள்ள பைந்தமிழ் குடியிருப்பில் எனது இளைய மகன் பாலேந்திரன் மகிந்தன்,எனது இளைய மகள் பாலேந்திரன் விபூசீகாவுடன் வசித்து வந்தேன்.
எங்களிற்கு வருமானம் உணவு ஆதரவிற்கு வேறு வழியில்லாததால் இகாபொசாதாரண பரீட்சையை எடுத்த பின்னர் எனது மகன் 2008 டிசம்பர் 18ம் திகதி வேலை தேடி வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றார்.
ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.அவரை அதன் பின்னர் நான் பார்க்கவில்லை அதன் பின்னர் அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.
யுத்தத்தின் இறுதி கட்டத்தில் நாங்கள் இடம்பெயர்ந்தவேளை எனது மகன் எங்களை தேடினார் என பலர் தெரிவித்திருந்தனர்.இவர்களில் இருவர் யுத்தத்தின் இறுதிதருணங்களில் கொல்லப்பட்டனர்.என்னால் ஏனையவர்களை தொடர்புகொள்ளமுடியவில்லை.
எனது மகனை வேறு மூவருடன் இராணுவத்தினர் கொண்டு செல்வதை பார்த்ததாக ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 15 வருடங்களாக நான் அவரை சாத்தியமான அனைத்து வழிகளிலும் தேடிவருகின்றேன்.ஆனால் இதுவரை எனது மகன் குறித்து என்னால் எந்த தகவலையும் பெறமுடியவில்லை.மேலும் பல தரப்பினரிடம் நான் முறைப்பாடு செய்துள்ளேன்.
ஆனால் அவர் உயிருடன் இருக்கின்றார் என நான் உறுதியாக நம்புகின்றேன்இநம்பதன்மை மிக்க வட்டாரங்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் நான் அவர் உயிருடன் இருக்கின்றார் என நம்புகின்றேன்.
ஐரிஸ் டைம்ஸ் செய்திதாள்,2009 இல் நீதியமைச்சினால் நிர்வகிக்கப்பட்ட அம்பேபுச புனர்வாழ்வு முகாம் குறித்து எழுதியிருந்தது.இளைஞர்கள் புனர்வாழ்வளிக்கப்படும் படமொன்றையும் அது வெளியிட்டிருந்தது.அந்த பத்திரிகை கிடைத்ததும் அதில் காணப்படுவது எனது மகன் என்பதை நான் உடனடியாக அடையாளம் கண்டேன்.
மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் 2012 இல் புனர்வாழ்வு பெறும் இளைஞர்களின் படங்களை உள்ளடக்கிய நூல் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் எனது மகனும் காணப்படுகின்றார்.அந்த புகைப்படத்தை லங்கா புவத்தே எடுத்திருந்தது.
எனது மகன் காணாமல்போன பின்னர் இலங்கையை ஆளும் ஐந்தாவது ஜனாதிபதி நீங்கள்இசாதாரண மக்களின் துயரங்களை நன்கு அறிந்தவர் என்ற அடிப்படையில் நீங்கள் எங்கள் கண்ணீரை கதறல்களை செவிமடுப்பீர்கள் என நாங்கள் கருதுகின்றோம் எங்கள் மன்றாட்டங்களை நீங்கள் செவிமடுப்பீர்கள் என நாங்கள் புதிய நம்பிக்கையை கொண்டுள்ளோம்
எனது மகனை கண்டுபிடிப்பது தொடர்பில் உங்களை தனியாக சந்தித்து பேசுவதற்கு எனக்கும் எனது மகளிற்கும் அனுமதிதாருங்கள்
2009 இல் நீதியமைச்சு நிர்வகித்த அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு முகாம் பற்றிய விபரங்களை பெற உதவுங்கள்.