நீண்டநேரம் கலந்துரையாடிய போதும் இலங்கை -இந்திய மீனவர் பேச்சுக்கள் தோல்வி

இலங்கை -இந்திய மீனவர்களுக்கிடையில் நேற்று புதன்கிழமை காலை வவுனியாவில் இடம்பெற்ற கலந்துரையாடலில் எவ்வித முன்னேற்றமும் காணப்படாத நிலையில் சந்திப்பு தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
மேலும் தங்களுக்கிடையில் இவர்களால் இணக்கம் எதனையும் காண முடியாத நிலையில், இந்தப் பேச்சுவார்த்தையின் பின்னர் -இருநாட்டு அரசாங்கங்களின் மத்தியஸ்தம் இல்லாமல் பேச்சுவார்த்தையை தொடர்வது பயனற்றது என்ற முடிவுக்கும் இரு தரப்பும் வந்துள்ளனர்.
நீண்ட காலமாக இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிக்கின்ற செயற்பாட்டை கண்டித்து வடமாகாண மீனவர்கள் தொடர்ச்சியாக தமது எதிர்ப்புக் குரலை கொடுத்து வந்திருந்தனர்.
இந்நிலையில் இரு நாட்டு அரசும் இதற்கான தீர்வினை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியதோடு இரு தரப்பு மீனவர்களுடைய பிரச்சினையினையும் இந்திய மத்திய அரசும் இலங்கை அரசும் மத்தியஸ்தர்களாக இருந்து தீர்வினை காண வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு வந்தது.
நீண்ட காலமாக இந்தக் கோரிக்கை நிறைவேறாத நிலையில் வட மாகாண கடற்தொழிலாளர் சமாச இணையத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் ராமேஸ்வரம் இழுவைப் படகு மீனவர் சங்கத்தினருக்கும் வட மாகாணம் உட்பட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு வவுனியாவில் நேற்று இடம் பெற்றிருந்தது.
இந்த சந்திப்புக்காக அனைத்திந்திய இழுவை மடிப்படகு சங்கத்தின் தலைவர் பி. ஜேசுராசா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழுவினர் இந்தியாவிலிருந்தும் வடமாகாணம் உட்பட்ட ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த 12 பிரதிநிதிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இதன் போது இரு தரப்பு மீனவர்களும் எதிர்கொள்ளுகின்ற பிரச்சனைகள் தொடர்பில் நீண்ட நேரம் ஆழமாகவும் விரிவாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, இலங்கை கடற்பரப்பிற்குள் வரும் இந்திய இழுவைமடிப் படகுகளாலேயே பிரச்சினைகள் வருவதாகவும் இழுவைமடிப் படகுகளின் வருகையை முற்றாக நிறுத்துவதன் மூலம்
இரு தரப்பு மீனவர்களதும் பிரச்சினைக்கு தீர்வினைக் காண்பதற்கான வாய்ப்பு கிட்டுமெனவும் தெரிவித்த இலங்கை மீனவர்கள் இழுவைமடிப் படகுகளால் தாங்கள் தொடர்ந்தும் எதிர்கொண்டு வரும் பெரும் இழப்புகள் குறித்து புள்ளி விபரங்களுடன் தெரிவித்து தங்களின் வாழ்வாதாரத்துக்கு இழுவைமடிப் படகுகளால் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்த வேண்டாமெனவும் கேட்டுக் கொண்டனர்.
ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்களுடைய கடற்பரப்பு குறைவாக காணப்படுவதன் காரணமாக அவர்களுடைய இழுவைமடி படகுத் தொழிலானது இலங்கை கடற்பரப்பிற்குள்ளும் மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது என ராமேஸ்வரம் மீனவர்களினால் இந்த சந்திப்பின்போது தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டது.
இதேவேளை வருடத்தில் 80 நாட்கள் மாத்திரமே தாம் இந்த இழுவைமடிப் படகு தொழிலை மேற்கொள்வதன் காரணமாக அதற்கு இலங்கை மீனவர்கள் தமக்கான அனுமதியை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
அது மாத்திரம் இன்றி உடனடியாக இழுவைமடி படகு தொழிலை கைவிட முடியாது எனவும் படிப்படியாக அதனை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை உள்நகர்த்தலாம் என்றும் ஏனைய கடலோர மாவட்ட மீனவர்களுடைய கலந்துரையாடல்களின் மூலமாக பெறப்படுகின்ற தீர்வின் அடிப்படையிலேயே இதற்கான முடிவினை அறிவிக்க முடியும் எனவும் இந்திய மீனவர் சங்கப் பிரதிநிதிகள் வலியுறுத்தி இருந்தனர்.
எனினும் வடமாகாண மீனவர் சங்கப் பிரதிநிதிகள் அதனை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை எனவும் இழுவைமடி படகுத் தொழில் இலங்கை கடற்பரப்புக்குள் மேற்கொள்ளுகின்ற போது கடல் வளம் அழிந்து செல்வதாகவும் இதன் காரணமாக வடபுல மீனவர்கள் தமது தொழிலில் பாரிய பிரச்சனையை எதிர் கொள்வதோடு மீன் உற்பத்தி வளமும் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்ததுடன் தமக்கான பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டி இருந்தனர்.
இந்நிலையில் இரு தரப்பினருடைய கருத்துக்களும் பரஸ்பரம் இரு தரப்பாலும் ஏற்றுக் கொள்வதற்கு தயாராக இல்லாத நிலையில் நேற்றைய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததுடன் இந்தச் சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாக இரு தரப்பினரும் தெரிவித்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் இருநாட்டு அரசாங்கத்தினுடைய மத்தியஸ்தம் இல்லாமல் குறித்த பேச்சுவார்த்தை பயனற்றது என்ற முடிவு இந்திய மீனவர்கள் மற்றும் வட மாகாண மீனவர்களின் பிரதிநிதிகளால் உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் சந்திப்பு நிறைவடைந்துள்ளது.