“நடுகைக்காரி -80″… ஏலையா க.முருகதாசன்

அவர் எவராக இருந்தாலும் தவறு செய்பவர்கள்,தாம் செய்யம் தவறை உணர வேண்டும்.அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும்.ஒருவரை அவமதிக்கும் சொற்கள் வெறும் சொற்களல்ல,அவை சுடுசொற்கள்
தீயினால் சுட்டபுண் உள்ளாறும் – ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
ஜிஎம்; நவரட்ணராஜா சிலம்பரசியைப் பார்த்து நீங்கள் இவரைப் பார்த்து என்று சொல்லத் தொடங்கியவர் உங்களுடைய பெயர் என்னவென்று கேட்க,பார்வதி என்கிறாள் பார்வதி.பார்வதியின் குரலில்: இருந்த மிடுக்கான தன்மை ஜி எம்மையும் தலைவர் மனோகரனையும் திகைக்க வைக்கின்றது.அவர்கள் இருவரின் முகத்திலும் அவர்களையறியாமலே புன்னகை ஒன்று தென்படுகின்றது.
சில நிமிடங்களுக்கு முன்தான் கலங்கிக் கோபமாகி குமுறிக் கொண்டிருந்தவள் சோர்ந்துவிடாமல் தனது பெயரை அறுத்துறுத்துச் சொல்லியதைக் கேட்ட ஞானமும் மகிழ்ந்து திகைச்சான்.
பெண்ணென்றால் இப்படித்தான் இருக்க வேணும் என மனசில் நினைச்சுக் கொண்டான்.
பார்வதியைத் திரும்பிப்: பார்த்த ஞானம் தனது இடது கையை மேசையில் ஊன்றி பெருவிரலால் நாடியைப் பிடித்தவன் சுண்டு விரலை மேல் உதட்டுக்கு மேலே மூக்குக்கு நடுவில் வைச்சு தனக்கு வந்த மகிழ்ச்சியைவிரல்களுக்கிடையில்: மறைச்சுக் கொண்டான்.
ஜிஎம் நவரட்ணராஜாவின் முகத்திலும் சங்கத் தலைவர் மனோகரன் முகத்திலம் தோன்றிய புன்னகை ரேகையைக் சிலம்பரசி கவனிக்கத் தவறவில்லை.
இவரேன் இவளுக்கு வக்காலத்து வாங்க வந்திருக்கிறார் என்பது போல முகத்தைத் திருப்பாமலே ஞானத்தைக் கடைக்கண்ணால் பார்த்தவள்,இவர் என்னுடைய கணவரின் நண்பனாச்சே என்று நினைவை மீட்டவள் ஓ அதுக்குள்ளை கொஞ்ச நேரத்துக்குள்ளை கண்ணாலும் சிலுக்குச் சிமிதாவின்ரை சொண்டாலும் இவள் மயக்கிப் போட்டாளாக்கும் என கற்பனை செய்கிறாள் சிலம்பரசி.
பார்வதியின் முகமம் கண்ணகளும் கோபத்தாலும் அவமானத்தாலும் சிவந்திருந்தன.துணி வாங்கும் போது விலைகளில் எற்பட்ட ஏற்றம் இறக்கம் பற்றியோ,கடைக்குத் துணி வாங்க வந்த ஒருவர் துணியின் தரம் பற்றி அறிஞ்சு,தோய்க்கவெண்டு வாளிக்குள்ளை போட்டு தண்ணீர் ஊற்றினாலே முழுச்சாயமும் போயிடும் அந்தத் துணிக்கா இந்த விலை என்று சொல்ல அதைக் கேட்கும் துணி விற்கும் யாராவது நாங்களா துணியைச் செய்கிறனாங்கள் என்று கேட்டு,நாங்கள் உங்களை துணி நெய்யச் சொல்லேலை,கொள்வனவு செய்யிற துணியை நல்ல தரமானதாகச் செய்திருக்கலாமே என்று துணி வாங்க வந்தவர் சொல்ல அது மெல்ல மெல்ல வளர்ந்து வாக்குவாதமுhக மாறி அதனால் வாடிக்கையாளருக்கும் விற்பனையாளருக்குமிடையில் தோன்றிய மனக் கசப்பு நீடிக்காமல் அப்படியே அமந்துவிடுவதும் உண்டு.
சில வேளைகளில் அந்த வாக்குவாத மனக்கசப்பு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாடிக்கையாளருடன் இன்னொரு வாடிக்கையாளரைச் சினேகிதமாக்கிவிடுவதும். உண்டு.
நானும் கவனித்தனான்தான் அவள் கொஞ்சம் தடிப்புக்காறிமாதிரி நடந்து கொள்ளுகிறா,தன்னுடைய சங்கம்,தான்தான் துணி நெய்தவள் மாதிரி கடைக்கு வருகிறவையை கிண்டலடிக்கிற போக்கு இருக்குது என்று சொல்கிறவர்கள் அதை துணிவாங்குகிற பராக்கில் மறந்துவிடுவார்கள்.
கடையைவிட்டுப் போகும் போது,வீடுகளுக்குப் போய்ச் சேர்ந்ததன் பின்பும்கூட வாடிக்கையாளர்கள் துணி விற்கும் பெண்ணினதோ ஆணினதோ தம்முடன் விற்பனை சம்பந்தமாக நடந்து கொண்டதை தமக்கு அறிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
அது நாளடைவில் அவரவர் நினைப்பிலிருந்து மறைந்துவிடும்.ஆனால் சிலம்பரசி பார்வதியை நோக்கிச் சொன்ன வார்த்தை பார்வதியின் வாழ்வில் என்றுமே மறக்க முடியாத வார்த்தை.
அதனால்தான் சங்க ஜிஎம்மின் அறையிலிருந்த போதும் பார்வதியால் தனது சுயமரியாதையை,தனது மனித தன்மையை மதிக்காத சிலம்பரசியை மன்னிக்க முடியாதவளாகக் கொதித்துக் கொண்டிருந்தாள்.
மனிதர்களில் ஏற்ற தாழ்வைப் பார்க்கின்ற ஒருத்தி தனக்கருகிலேயே தான் நடந்து கொண்டது தவறு என்று தெரிந்தும் எவ்வித மனச்சாட்சி உறுத்தலும் இல்லாமல் இருப்பதை பார்வதியால் சீரணிக்க முடியவில்லை.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக எரிமலை போல கிளம்பும் ஆக்ரோசமான கோபம்கூட மற்றவர்களின் விடு விடு அதைப் பெரிசு படுத்தாதை என்ற ஆறுதல் வார்த்தைகளினால் அடங்கி கரைந்துவிடுவதுமுண்டு.
ஆனால் பார்வதியைச் சீண்டிய வார்த்தைகள் அப்படியானவையல்ல தமிழ்ச் சமூகம் தம்மை எவ்வாறு பார்க்கின்றது என்பதை தனது பெற்றோரிடமிருந்தும் உறவினர்கள் நண்பர்கள் அயலட்டை என பலரிடமிருந்தும் அவள் அறிந்து கொண்டவை ஏற்கனவே அவளை நோகடித்திருந்தது.
அதன் வெப்பியாரத்தில் இருந்தவளை சிலம்பரசியின் சொற்கள் இன்னும் அவளுக்கு குமுறும் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது.எந்தவிதத்திலும் அவளால் அமைதியடைய முடியவில்லை.சிலம்பரசி பார்வதியின் மனதை புண்ணாக்கியிருந்தாள்.
நீங்கள் கதைதச்சது தவறு என்பதை ஒப்புக் கொண்டு பார்வதியிடம் மன்னிப்புக் கேழுங்கள் என்று ஜி எம் நவரட்ணராஜா சிலம்பரசியைப் பார்த்துச் சொன்னதும்,சிலம்பரசி தான் பார்வதியிடம் மன்னிப்புக் கேட்பது கௌரவக் குறைச்சல் என யோசிச்சு இதுக்கு அவாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமா என்று கொஞ்சம் அலட்சியமாகக் கேட்க,கேட்கத்தான் வேண்டும் என சங்கத்தின் தலைவர் மனோகரன் கடுமையான தொனியில் சொல்லுகிறார்.
சில விநாடிகள் தயங்கிய சிலம்பரசி நான் அப்படிக் கதைசச்தற்கு என்னை மன்னியுங்கள் என பார்வதியைப் பார்த்துச் சொல்லுகிறாள்.
பார்வதி அதை ஏற்றுக் கொண்டது போல தலையாட்டினாலும்,சிலம்பரசிக்கு சங்கம் ஏதாவது தண்டனை குடுக்க வேணும்,குடுத்தால்தான் இவர் இனிமேல் என்னை அவமதித்தது போல யாருடனும் நடந்து கொள்ள மாட்டார் என தனக்குள் நினைச்சுக் கொள்கிறாள்.
பார்வதியையும் ஞானத்தையும் பார்த்து நீங்கள் போங்கள்,சிலம்பரசி நடந்து கொண்டது தவறு நாங்களும் மன்னிப்புக் கேட்கிறம் என்கிறார் ஜி எம் நவரட்ணராஜா.
ஞானமும் பார்வதியும் ஜிஎம்மின் அறையைவிட்டுப்: போனதும்,நீங்கள் சொன்ன வார்த்தைகள் எவ்வளவு பாரதூரமானவை என்று உங்களுக்கு விளங்கவில்லையா.இது பொதுமக்களின் சங்கம்,நானோ ஜிஎம்மோகூட பொதுமக்களின் வேலையாட்கள்தான்.அது மட்டுமல்ல துணிக்கடையின் உள்சுவரில் யாகவாயினும் நா காக்க என்ற திருக்குறளை அங்கை ஏன் எழுதியிருக்கிறோம் என்றால் வாடிக்கையாளர்களுடன் கடையில் வேலை செய்பவர்கள் பண்பாகக் கதைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று சங்கத் தலைவர் மனோகரன் சொல்ல அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் சிலம்பரசி.
சங்கத்தில் பலரிடம் சிலம்பரசி திமிராக கதைப்பது மட்டுமல்ல சங்கக் கிளைகளுக்கு இருப்பு எடுக்கப் போகும் போதுகூட சங்கக் கிளை முகாமையாளர்களை திருடர்கள் போல கணிப்பதும் அவர்களுடன் கடுமையாக நடந்து கொள்வதால் அவளை யாருக்குமே பிடிப்பதில்லை.
அவளுடைய முற்கோபம் மற்றவர்களை மதிக்காது அலட்சியப்படுத்தல் போன்றவற்றால் அவளை வேலையைவிட்டு நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் சங்க நிர்:வாகத்துக்கு அடிக்கடி வருவதுண்டு.
அதற்குத் தடையாக சிலம்பரசி பொருளாதார வணிக விசேட பட்டதாரியாக இருப்பதுடன் பல்கலைக் கழகத்தில் அவள் ஆங்கிலத்தையும் ஒரு பாடமாக படிச்சிருந்தாள்.
ஆங்கிலத்தில் சரளமாகக் கதைக்கவும் எழுதவும் அவளால் முடிந்திருநத்து.அவளின் கல்வித் தகுதி சங்கத்துக்கு தேவையாக இருந்தது.இவ்வளவு கல்வித் தகுதி உள்ளவள் ஏன் சங்க வேலையை விரும்பினாள் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவளுடைய பொருளாதாரப் பட்டப்படிப்பும் வணிகபட்டப்படிப்பும் சங்கத்தின் வணிக மேம்பாட்டுக்கு உறுதுணையாக இருந்ததால் அவளால் ஏற்படும் தொல்லைகளை சங்கம் சகித்துக் கொண்டிருந்தது.
அவளுக்கு கல்வியின் மேல் இருந்த ஆசையால் யாழ்ப்பாணத்துக்கு போய் சிங்கள மொழியையும் படிச்சுக் கொண்டிருந்தாள்.
ஜிஎம் சிலம்பரசியைப் பார்த்து உங்களுக்கு ஒரு கடிதம் கொஞ்ச நேரத்தாலை வரும் இப்ப நீங்கள் உங்கடை வேலையைப் போய்ச் செய்யுங்கள் ஆனால் துணிக்கடைக்குப் போக வேண்டாம் என்று அவளைப் போகச் சொல்லுகிறார்.
துணிக்கடைக்கு திரும்பி வந்த பார்வதியையும் ஞானத்தையும் கடையில் நின்ற ஒரு சிலரோடு நீலாவும் தமக்கையும்,புஸ்பகலாவும் தாயும் மங்களேஸ்வரியும் தாயும் ஜிஎம் என்ன சொல்லியிருப்பார் என்பது போலப் பார்க்க,பார்வதியின் தாய் வேகமாக மகளுக்கருகில்: வந்து மேலை என்ன நடந்தது என்று பார்வதியைப் பார்த்துக் கேட்க அவாவை என்னிடம் மன்னிப்புக் கேட்க வைச்சவை எனச் சொன்ன பார்வதி வாம்ம போவம் துணியும் வாங்க வேண்டாம் ஒன்றுமே இந்தக் கடையிலை வாங்கத் தேவையில்லை என்று கையைப் பிடிக்க விடு கையை அவை இவைக்காண்டி நாங்கள் ஏன் வந்த வேலையை விட்டிட்டுப் போவான் என்று சொல்ல இதுவரையில் எல்லாவற்றையும் கவனிச்சுக் கொண்டிருந்த புஸ்பகலாவின் தாய் அம்மா சொல்றதுதான் சரி,இந்தக் கடை தனிப்பட்ட ஆட்களின்ரை கடைஅல்ல இது. பொதுமக்களின் கடை மக்களுக்கு நல்ல தரமான துணிகளை மலிவான விலையில் கொடுப்பதற்கே சங்கம் இக்கடையை வைச்சிருக்குது,எங்களுக்கு இக்கடையில் உரிமையிருக்கு என்று சொல்ல பார்வதி அமைதியானாள்.
தான் அவமானப்படுத்தப்பட்டதை அவளால் சீரணிக்க முடியவில்லை.தான் சிறுமியாக இருந்த போது தனது தகப்பனாருடன் சன்னதி கோவிலுக்குப் போயிட்டு வரும் போது அச்சுவேலியில் ஒரு தேத்தண்ணிக் கடையில் வெளியில் நிறுத்தி தனக்கும் தகப்பனுக்கும் போத்தலில் தேத்தண்ணி தந்ததையும் தனது சிறிய தாயார் அம்பனை வயலில் வேலை செய்யப் போன போது தானும் அவளுடன் போய் அங்கு வேலை செய்தவர்களுக்குச் சிரட்டையில் தேத்தண்ணி குடுத்ததையும் அடிக்கடி நினைப்பவள் இன்று தனக்கேற்பட்ட அவமானத்தையும் நினைச்சுப் பார்த்தவளால் இயல்பு நிலைக்கு வர முடியவில்லை.
அவளுக்கு ஏற்பட்ட கோபமும் கவலையும் முகத்தில் இன்னமும் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
அப்பொழுதுதான் எல்லாரும் பார்வதியைக் கவனிச்சார்கள்.அவளுடைய மிடுக்கான கம்பீரமான அழகான தோற்றம் எல்லாரையும் கவர்ந்தது.
அப்பொழுது மங்களேஸ்வரி,முருகதாசனின் ஆகிய இருவரின் தாய் பார்வதிக்கருகில் வந்து அந்தப் பிள்ளை அப்படிக் கதைச்சது பிழைதான்,அவள் உங்களிட்டை மன்னிப்புக் கேட்டாலும் அது உங்கடை மனசைவிட்டு ஆறாதுதான் என்கிறாள்.
தனது மகனின் மனைவிதான் பார்வதியை அவமானப்படுத்தியவள் என்பதும் சிலம்பரசி அப்படி நடந்து கொண்டது மிகப்பெரும் பிழை என்பதை அவள் மனச்சாட்சி ஒப்புக் கொண்டது.அந்த உண்மையை அவள் யாரிடமும் சொல்லில்லை,மங்களேஸ்வரியம் மௌனமாக இருந்தாள்.துணி வாங்க வந்த வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருந்தனர்.
நீலாவும் தமக்கையும் கடையைவிட்டு வெளியேறும்போது நீலா பார்வதியையும் ஞானத்தையும் கடைக்கண்ணால் பார்த்தவாறு கடையைவிட்டு வெளிறினாள்.
தான் கூனிக்குறுகி நின்ற போது வாருங்கள்: போய்க் கதைப்பம் என்று அவளை ஜிஎம்மிடம் கூட்டிக் கொண்டு போன ஞானத்தை நன்றியுணர்வோடு பார்வதி பார்த்தாள்.
அந்தப் பார்வைக்குள் வேறு ஏதோ ஒன்றும் இருந்ததது.எனக்காக வந்து கதைச்சதை என்றைக்கும் மறக்கமாட்டன் மிகவும் நன்றி என்ற ஞானத்தைப் பார்த்துச் சொன்ன பார்வதி நீங்கள் படிக்கிறியளா இல்லாட்டில் வேலை செய்கிறீர்களா என்று கேட்க நான் மகாஜனாவில் படிக்கிறன் என அவன் பதில் சொல்ல நானும் படிக்கிறன். யூனியன் கொலிஜ்ஜில் என்கிறான்.
அவர்களிருவரும் கதைச்சுக் கொண்டிருப்பதை கூறுகுறிப்பாக புஸ்பகலா பார்க்கிறாள்.பார்வதி ஞானத்தைப் பார்க்கும் பார்வை சரியில்லையே என புஸ்பகலா நினைக்கிறாள்.
சங்க மேல்மாடிக் கட்டிட அறையில் சாட்டுக்கு வேலை செய்வது போல பைல்களைப் புரட்டிக் கொண்டிருந்த சிலம்பரசியை நோக்கி ஜிஎம் கையில் ஒரு கடிதத்துடன் வந்து கொண்டிருந்தார்.
(தொடரும்…)