இலங்கை

வட, கிழக்கில் இயங்கிய பல முகாம்களில் தமிழர்கள் படுகொலை- சித்திரவதை

பட்டலந்த சித்திரவதை முகாம் 37 வருடங்களுக்குப் பின்னர் வெளிவந்துள்ளது. இவ்வாறு வடக்கு கிழக்கில் இயங்கிய பல முகாம்களில் தமிழர்கள் படுகொலை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் என்பதற்காக அதனை மூடிமறைத்துவிட்டு சிங்கள இளைஞர்கள் மற்றும் உங்கள் கட்சியினர் மாத்திரம் பாதிக்கப்பட்டார்கள் என்று கருத்து கொண்டுவந்திருப்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே தமிழ்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தேசிய மக்கள் சக்தி வெளிக்கொண்டுவர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டு. ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது பேசும் பொருளாக ஊடகங்களிலும் பாராளுமன்றத்திலும் சர்வதேசத்திலும் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும் 1988 ஆம் ஆண்டு இயங்கிய பட்டலந்தை சித்திரவதை முகாம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

ஜே.வி.பியின் இரண்டாம் கட்ட போராட்டத்தை மேற்கொண்ட போது அவர்களை அடக்குவதற்காகச் சட்டவிரோதமாக இந்த முகாம் செயற்பட்டு வந்திருக்கின்றது மாத்திரமல்ல முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயரும் உச்சரிக்கப்பட்டுள்ளது.

1994 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்தை முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. ஆனால் விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றதுடன் உண்மைகளும் புதைக்கப்பட்டுள்ளன.

37 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜே.வி.பியினர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதைக்கப்பட்ட உண்மைகள் புதைகுழியிலிருந்து வெளியில் வந்துள்ளது இந்த ஜே.வி. பி என்ற தேசிய மக்கள் கட்சி ஆட்சிக்கு வராவிட்டால் இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்காது.

ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்கின்றது எனவே இது போன்ற வடக்கு கிழக்கில் பல சட்டவிரோத முகாம்கள் காணப்பட்டது.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கிய மட்டக்களப்பு சத்திருக்கொண்டான் படைமுகாமில் 4 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள் முதியோர்கள் பெண்கள் உட்பட 186 பொதுமக்களைச் சித்திரவதை செய்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஒரே இரவில் படுகொலை செய்து குழிகளில் போட்டு நிரப்பினார்கள் அதில் ஒருவர் வெட்டுகாயங்களுடன் தப்பி வெளிவந்து உண்மைகளைத் தெரிவித்தார்.

இந்த சத்திருக் கொண்டான் முகாம் சித்திரவதை படுகொலை காணாமல் ஆக்கப்படுவதற்கு முக்கியமான முகாமாக இயங்கியது அவ்வாறே பல முகாம்கள் இயங்கியதுடன் கொண்டு செல்லப்படுபவர்கள் திரும்பிவராதளவுக்கு கல்லடி, கரடியனாறு, கொண்டைவெட்டுவான், உட்பட பல முகாம்கள் காணப்பட்டது.

ஜே.வி.பியினர் பாதிக்கப்பட்ட விடையம் அவர்கள் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது ஏன் என்றால் தங்களுடைய தோழர்கள் சகாக்கள் கொல்லப்பட்ட விதம் சித்திரவதை செய்யப்பட்ட விதம் அதில் பங்கு கொண்ட முக்கிய புள்ளிகள் தொடர்பாக வெளியில் வந்துள்ளது.

சித்திரவதை என்பது சாதாரன விடயமல்ல அமிலத் தொட்டிகளில் இளைஞர்களைப் போட்டு கொலை செய்துள்ளனர். எங்களை பொறுத்தமட்டில் வடக்கு கிழக்கில் தமிழர்கள் சார்பாகச் செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை எண்ணிக்கை ரீதியாகச் சிறுபான்மையாக இருக்கின்றதனால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.

எனவே எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களது நீதியை வெளியில் கொண்டுவரமுடியாது ஆனால் 37 வருடத்திற்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளி உலகத்துக்கு வந்துள்ளது.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட சித்திரவதை பாலியல் பலாத்காரம் போன்ற அநீதிகள் வெளியில் கொண்டுவருவதாக இருந்தால் நாங்களும் ஆட்சியை கைப்பற்றினால் தான் முடியும் ஆனால் நாங்கள் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது.

தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலை சித்திரவதை அநியாயம் அராஜகத்தை வெளிக் கொண்டுவருவதற்கு வழியே இல்லை எனவே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் நாங்கள் உருக்கமாகவும் நியாயமாகவும் கேட்பது உங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக பட்டலந்தை சித்திரவதை முகாமை கொண்டுவந்திருப்பதாக மற்றவர்களுக்குக் கூறாமல் வடக்கு கிழக்கு பிரதேசத்திலும் இவ்வாறான படுகொலைகள் சித்திரவதைகள் நடந்துள்ளது போன்ற விடயங்களை நீங்கள் வெளிக் கொண்டுவருவதாக இருந்தால் நீங்கள் ஒரு சமத்துவவாதிகள், சத்துருக்கொண்டான், பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி போன்ற பல கிராமங்களை சேர்ந்த மக்களை வெளிப்படையாகச் சுற்றிவளைப்பில் கைது செய்து கூட்டிச் சென்று ஒரே இரவில் படுகொலை இதற்கு நீதி இல்லை.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பட்ட பகலில் 180 இற்கு மேற்பட்டவர்கள் கொண்டு சென்று காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இன்றும் கூட புதைக்கப்பட்ட புதைகுழி எது என்று தெரியாமல் உள்ளது இவ்வாறு பல முகாம்களில் இப்படியான அநியாயங்கள் நடந்துள்ளன.

ஆகவே தேசிய மக்கள் சகத்தியினர் பட்டலந்தை முகாம் ஒரு ஆரம்பப்புள்ளியாக இருந்தால் வடக்கு கிழக்கில் முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகளை வெளிக் கொண்டுவரவேண்டும்.

ஆனால் உங்களது தோழர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் நீதியைத் தேடுகின்றீர்கள் எனவே சித்திரவதை முகாம்களில் தமிழர்களுக்கு இடம்பெற்ற அநியாயங்கள் கொண்டுவரவேண்டும் என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.