இலங்கை

தமிழக மீனவர் பிரச்சினையால் இந்திய உறவை பாதிக்க விடோம்!

இந்திய மீனவர் பிரச்சனையால் இருநாட்டு ராஜதந்திர உறவில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம் என தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், குறுகிய காலத்தில் இதற்கான தீர்வு வரும் என நம்புகிறோம் என்றார்.

கச்சதீவு திருவிழா நிறைவுபெற்ற பின்னர் கச்சதீவில் இலங்கை இந்திய ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கைக்கும் இந்தியாவின் தமிழ் நாட்டு மீனவர்களுக்கும் இடையிலே ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினை என்பது நீண்ட காலமாக புரையோடிப் போயிருக்கின்றது. இதற்கு தீர்வு வேண்டும் என்று இன்று நேற்றல்ல தொடர்ச்சியாக பேசிக் கொண்டு வருகின்றோம். போராடி வருகின்றோம். பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். ஆனாலும் அது பயனளிக்கவில்லை.

வெறுமெனே இந்திய மீனவர்களை கைது செய்வதற்கோ அவர்களை தடுத்து வைப்பதற்கோ அவர்களை சிறையில் அடைப்பதற்கோ பொலிஸில் தடுத்து வைப்பதற்கோ எந்தவித தேவையும் எங்களுக்கு கிடையாது.

ஏனென்றால் அந்த மீனவர்கள் என்பது சாதாரண கூலித் தொழிலாளி என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. தற்போதும் கூட சிலர் சிலையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.

எங்களுடைய கடற்பரப்பை அத்துமீறி வந்து தமிழ்நாட்டில் ஒரு சில மீனவர்கள் இழுவை மடியூடாக எங்களுடைய மீன்களை மாத்திரமல்ல எங்களை கடல் வளத்தையும் நாசமாக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த நிலைமையில் நாடு செல்லுமாக இருந்தால் நாளைக்கு எங்களுக்கு சுவாசிப்பதற்கு கூட ஒக்சிஜன் இல்லாத போய்விடும் என

கச்சதீவு திருவிழாவில் யாழ் மறை மாவட்ட ஆயர் குறிப்பிட்டார்.

இந்திய தமிழ் நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பார்களாக இருந்தால் நாளைக்கு எங்களுடைய கடற்பரப்பான இந்து சமுத்திரம் என்பது பாலைவனமாக மாறுவது தவிர்க்க முடியாதது.

முப்பது வருட யுத்ததுக்கு முகம் கொடுத்த தமிழ் மக்கள் கடந்த சில வருடங்களாக தலையை தூக்கிக் கொண்டு தங்களது வாழ்க்கையை மேம்படுத்தும் போது இந்திய தமிழ்நாட்டு மீனவர்கள் எங்களுடைய கடற்பரப்புக்குள் அத்துமீறி கடல் வளத்தை சூறையாடி விட்டு போகின்ற வழியில் நாங்கள் தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லிவிட்டு செல்கின்றனர்.

எங்கள் அரசாங்கம் யாருக்கும் எதிரானவர்கள் கிடையாது. இந்திய மீனவர்களுக்கும் எதிரானவர்களுக்கு கிடையாது.

அன்பாக பேசி பிரச்சினையை தீர்க்க முடியும் என்றால் அது மிகவும் நல்ல விடயம். அந்த விடயத்துக்காக நாங்கள் எதிர்காலத்தில் செயற்படுவோம். மீனவர் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்த முடியும்.

எனக்கு கீழ் கடற்றொழில் அமைச்சு வந்து மூன்று மாதங்களாகியும் இந்திய மீனவர்களோ மீனவ சங்கங்களோ, மீனவ அமைச்சரோ தமிழ்நாட்டு முதலமைச்சரோ, கனிமொழி சகோதரியோ யாருமே இந்த பிரச்சினையை பேசி தீப்பதற்கான முனைப்பை காட்டவில்லை. நாங்கள் பேசுவதற்கு தயாராக இருக்கிறோம்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தனது முதல் வெளிநாட்டு பயணத்தை இந்தியாவுக்கே மேற்கொண்டார். எங்களுடைய கொடுக்கல் வாங்கல் எல்லாமே முதன்மையான இடம் வகிப்பது இந்தியாவோடு தான்.

இந்திய மீனவர் பிரச்சனையால் இருநாட்டு ராஜதந்திர உறவில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோம்.

இந்த வகையில் கடந்த காலத்தில் இது தொடர்பாக பேசப்பட்டது. அதேபோன்று அதன் பிறகு இந்திய தூதர்கள் பேசினார்கள். இந்திய தூதரக அதிகாரிகள் நிறையவே பேசி இருக்கிறார்கள்.

எங்களுடைய கடற்பரப்புக்குள் இந்தியாவில் உள்ள ஒரு சில தமிழ்நாட்டு மீனவர்கள் வராமல் இருப்பதே இதற்கான நிரந்தரமான தீர்வு. தமிழ் நாட்டு மீனவர்கள் கேரளாவுக்கு செல்ல மாட்டார்கள். ஆந்திராவிற்கு சொல்ல மாட்டார்கள். பக்கத்தில் இருக்கின்ற பாகிஸ்தானுக்கு சொல்ல மாட்டார்கள். எங்களை மாத்திரமே ஏன் இவ்வாறு பயன்படுத்துகிறீர்கள்.

மீனவர் பிரச்சினைகளால் தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் கதறுவதை தொலைக்காட்சிகள் காட்டுகின்றது. எங்களுடைய பெண்களை எடுத்துக் கொண்டால் 28,000க்கும் அதிகமான பெண் தலைமைத்துவ குடும்பங்கள் இருக்கின்றனர். அதிகம் கடற்றொழிலை நம்பி இருக்கின்றனர்.

நான் தமிழ்நாட்டுக்குச் சென்றபோது மீனவர் தொழில் துறையினருடன் கலந்துரையாடினேன். தமிழக முதலமைச்சர் இது சம்பந்தமாக பேசுவார் என எதிர்பார்த்தேன். ஆனால் பேசவில்லை.

தமிழக முதலமைச்சர் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதாக கடிதத்தை மாத்திரம் எழுதுகின்றார்.

இழுவை மடி படகு தொழிலில் ஈடுபடுவது இல்லை என்ற முடிவுக்கு தமிழ்நாட்டு அரசாங்கமும் இந்திய மத்திய அரசாங்கம் உடன்பாட்டுக்கு வர வேண்டும்.

நானும் கூட ஒரு இந்திய வம்சாவளி தான். பாட்டன் பூட்டன் எல்லாமே இந்தியர்கள் தான். ஆனாலும் நான் தற்போது இலங்கையன்.நான் இலங்கையின் கடற்றொழில் அமைச்சர். அதனால் எங்களின் மக்கள் பக்கமே நான் நிற்பேன்.

“போன முறை வலை வாங்கினேன் அறுத்துப் போய்விட்டார்கள். அடுத்த முறை புது வலை வாங்கினேன் அதையும் அறுத்து போட்ய்விட்டார்கள் ஐயா. இதை நிப்பாட்டுங்க இல்லாட்டி குடும்பத்துடன் கடலில் விழுந்து சாக வேண்டும்” என பிரபாகரனுடைய சொந்த ஊரான வல்வெட்டித்துறை மக்கள் என்னிடம் தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாண மாவட்ட மக்கள் எங்களுக்கு ஒரு ஆணையை வழங்கி இருக்கிறார்கள். அந்த ஆணையை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. விசேஷமாக எனக்கு அது இருக்கின்றது. ஏனென்றால் கடந்த 15 வருடங்களாக நான் யாழ்ப்பாணத்தில் இருந்து எமது கட்சியின் அமைப்பாளராக இருக்கின்றேன். விரைவில் மீனவர் பிரச்சினைக்கான தீர்வு வந்துவிடும் என்றே நாங்கள் நம்புகிறோம் – என்றார்.

Loading

One Comment

  1. தமிழக மீனவர் பிரச்சினையால் இந்திய உறவை பாதிக்க விடோம்

    இலங்கையின் பக்கம் எந்தத் தவறும் இல்லை.சர்:வதேசக் கடல் எல்லையைத் தாண்டி இலங்கைக் கடற்கரைக்கு மிக அண்மையில் இலங்கைக் கடற்கரையில் நின்று உற்றுப் பார்த்தால் தெரியமளவிற்கு இந்திய மீனவர்கள் இலங்iகை; கடலில் மீன் பிடிப்பது தவறு அதறஇகுப் பெயர் திருட்டு.இந்தியாதான் தன் தவறைத் திருத்த வேண்டும்.

    இலங்கைக் கடலில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்வது சட்ட நடவடிக்கை.

    இந்திய மீனவர்கள் மீதான கடும் போக்கை இலங்கை தளர்த்தினால் எதிர்காலத்தில் ஒட்டகம் கூடாரத்துக்குள் தலை வைத்தது மாதிரி இலங்கைக் கடற்கரைகளில் வாடிபோட்டு இந்திய மீனவர்கள் மீன்:பிடிக்கத் தொடங்கிவிடுவார்கள்.

    ஏலையா க.முருகதாசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.