ரணிலை உடன் கைது செய்யவும்!; ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்ய குற்றப் புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட ஜனாதிபதி அனுர திசாநாயக்கவுக்கு அதிகாரம் இருப்பதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், இடம்பெற்றுள்ள குற்றங்களுக்கு கண்களால் கண்ட சாட்சியங்கள் இருக்கின்றன. இனிமேல் தாமதிக்க வேண்டும். சாட்சியங்கள் இறக்கும் வரையில் காத்திருக்க வேண்டாமெனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கும் போது இரண்டு சட்டங்கள் உள்ளன. 1948 ஆம் ஆண்டு சட்டத்தில் பிரஜாவுரிமையை நீக்கும் சிபாரிசு வழங்குவதற்கு ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி விசேட ஆணைக்குழு சட்டத்தின் 9 ஆம் பிரிவின் கீழ் ஆணைக்குழுவுக்கு அந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பட்டலந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவால் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. தனது நண்பரான ரணில் விக்ரமசிங்கவை பாதுகாப்பதற்கு 1948 ஆம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பட்டலந்த ஆணைக்குழுவுக்கு பிரஜாவுரிமையை பறிக்கும் அதிகாரம் இல்லையெனவும் தெரிவித்தார்.
தற்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக ஆட்கொலை குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவ்வாறான குற்றச்சாட்டு உள்ளவர்களை உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும். ரணில் விக்ரமசிங்கவை கைது செய்யுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
மேலும் குற்றத்துடன் தொடர்புடைய டக்ளஸ் பீரிஸ் இன்னும் மரணிக்கவில்லை. அவர் தான் உயிருடன் இருக்கும் போதே மரணித்துவிட்டதாக விளம்பரம் செய்துள்ளார். எனவே அவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். சித்திரவதையில் ஈடுபட்ட முக்கிய அதிகாரியான நளின் தெல்கொட மற்றும் அங்கு பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும்.
எனவே இது அரசியல் பழிவாங்கல் இல்லையென்பதால் நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். பட்டலந்தவுடன் தொடர்புடைய ரணில் விக்ரமசிங்க மட்டுமல்லாது, மாத்தளை மனித புதைகுழிக்குப் பொறுப்பான கோட்டாபய ராஜபக்சவையும் கைது செய்து சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.