உருமாறும் உண்மைகள்!… கதை… சங்கர சுப்பிரமணியன்


லாஸ் ஏஞ்சல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் ஜேலன் டாசன் என்ற பத்தொன்பது வயது கர சிறுவன் 2022 A6 மாடல் ஆடி காரைத் திருடினான் என்று குற்றம் சாட்டப்பட்டு நீதிவான் வால்டர் கிரேசன் முன் நிறுத்தப்பட்டிருந்தான்.
ஆனால் அந்த குற்றம் பொய்யாக சித்தரிக்கப்பட்டு தன் மீது போடப்பட்ட வீண்பழி என்பதை வழக்கறிஞர் உதவியின்றி தானாகவே வாதாடி தான் குற்றமற்றவன் என்பதை நிரூபித்தான்.
எங்கிருந்து அவனுக்கு அநீதியின் முகத்திரையை கிழிக்கும் மனவலிமையும் தன்னம்பிக்கையும் வந்தது? காரணம் அவனது தாயார். அவர் இருபது ஆண்டுகளாக வழக்கறிஞரிடம் உதவியாளராக பணி புரிபவர். அவர் தினமும் வழக்குகளில் சந்தித்த பல்வேறு அனுபவங்களை ஜேலனிடம் கூறுவார்.
இதனால் அரசு வழக்கறிஞர் எப்படி வாதிடுவார் அதற்கு எதிரணி வக்கீல் எப்படி
பதில் கொடுப்பார். வழக்குகள் எப்படி திசை திருப்பப்படும் சாட்சிகள் சரிவர இல்லாவிட்டால் எப்படி வழக்கு வலுவின்றி தோல்வியடையும் என்ற விபரங்கள் அனைத்தும் ஜேலனுக்கு ஒரு வழக்கறிஞரை விட நன்றாகவே தெரியும். இதுவே அவனை வழக்கில் வெற்றிபெற வைத்தது.
கீழேயுள்ள கதையை நான் எழுதக் காரணம் நான் படித்தறிந்த மேற்குறிப்பிட்ட அந்ந
வினோத வழக்குதான். உண்மை எவ்வாறு உருமாறி உலகை நம்ப வைக்கிறது என்பதை இப்புனைவு நம்மை நன்றாய்ப் புரியவைக்கும்.
கீழ் நீதிமன்றத்தில் சக்கையனின் வழக்கில் கொடும்நாட்டுக்கு நாடுகடத்த வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ததால் அந்த வழக்கு பெரிய பரபரப்புடன் உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது. இந்த கொடும்நாடு என்பது நரகத்தைப் போன்றது. நரகத்தில் எண்ணெய்க் கொப்பரைகளில் எண்ணெய் கொதித்துக் கொண்டிருப்பதுபோல் இங்கு வேறுவிதமான ஏற்பாடுகள் இருக்கும்.
நீதிமன்றத்தில் வழக்கைப் பற்றி பார்வையாளர்கள் பல்வேறு கருத்துக்களை பரிமாறிக் கொண்டிருந்த படியால் நீதிமன்றம் சந்தையாக மாறியிருந்தது.
சற்று நேரத்தில் நீதிவான் நீதிமன்றத்துக்குள் நுழையவும் சலசலப்பு ஓய்ந்து அமைதியானது. டவாலி சக்கையன் பெயரைச் சொல்லி மூன்றுமுறை அழைக்க சக்கையன் சாட்சிக்கூண்டுக்குள் ஏறி நின்றார்.
“நீங்கள் உங்கள் தரப்பு வாதத்தை இப்போது எடுத்து வைக்கலாம்” என்று நீதிவான் சக்கையனது வழக்கறிஞரை நோக்கி கூறினார்.
உடனே சக்கையனின் வழக்கறிஞர், “ என் கட்சிக்காரர் வெள்ளிமலையில் வீற்றிருக்கும் இறைவன் வினோதனனை இழிவு படுத்தினார் என்பதற்காக கொடும்நாட்டுக்கு நாடு கடத்தும் தீர்ப்பை எதிர்த்து என் கட்சிக்காரர் சில ஆதாரங்களை கூற விரும்புகிறார் என்றார்.
உடனே நீதிபதி உங்கள் தரப்பு ஆதாரங்களை எடுத்து வைக்கலாம் என்று சக்கையனிடம் கூற கூண்டில் நின்ற சக்கையன் பேச ஆரம்பித்தார்.
ஐயா, வணக்கம். வினோதனன் மக்கள் வணங்கக்கூடிய ஆண்கடவுள் என்றாலும் அது ஒரு பெண் தெய்வம் என்று நான் சொன்னதற்கு ஆதாரம் கிடைத்துள்ளது. ஒரு சமயம் சமூகத்தில் மிகவும் பிரபலமான ஒருவருக்கு வினோதனனை கட்டித் தழுவி வணங்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்படி தழுவும்போது வினோதனின் பின்புறத்தில் பின்னல்போடப்பட்ட சிகையலங்காரத்ததை அந்த பிரபலமானவரால் உணரமுடிந்தது. அப்படியே ஒரு கணம் புல்லரிப்புக்கு உள்ளானார்.
இந்த அனுபவத்தை அவர் சிறந்த பக்திமானான வேதாந்தரிஷியிடம் கூற அதை அப்படியே அவர் தான் எழுதியுள்ள மதமும் மார்க்கமும் என்ற நூலில் கூறியுள்ளார் என்றார்.
இப்படிச் சொன்ன உடனேயே சக்கையனின் வழக்கறிஞர் தங்கள் பார்வைக்கு அந்நூலை சமர்ப்பிக்கிறேன் என்று கூறி தயவுசெய்து பக்கம் எழுபத்து எட்டில் கூறப்பட்டுள்ளதை தங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன் என்று கூறி அந்நூலை நீதிவானுக்கு அனுப்பி வைத்தார்.
இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் சலசலப்பு ஏற்படவே அமைதி, அமைதி என்று நீதிவான் தன்னிடமிருந்த சுத்தியால் சிலமுறை தட்ட அமைதி நிலவியது. நூலைப் பார்வையிட்ட நீதிவான் ஆமோதிப்பது போல் தலையை ஆட்டியபடியே வேறு ஏதாவது சொல்ல விரும்பகிறீர்களா? என்று சக்கையனை வினவ,
“ஆம், ஐயா” என்றவர் தொடர்ந்து, “வினோதனனின் வாகனம் ஆடு. கோவில் வளாகத்தில் ஆடுசம்பந்தமாக எவ்வித சிற்பத்தையும் எங்கும் காணமுடிவதில்லை. ஆனால் கோவிலைச் சுற்றியுள்ள மதில் சுவர்களிலும் கோவில் கோபுரத்திலும்
சிம்மத்தின் சிற்பங்கள் உள்ளன. தைக்யமதத்தின் பெண் தெய்வமான மகுளாயினியின் வாகனம் சிம்மம் என்பதால் இது மகுளாயினியினி அம்மனின் கோவிலாகத்தான் இருக்க வேண்டும், ஐயா” என்றார்.
உடனே எழுந்த எதிரணி வழக்கறிஞர் நான் இதை ஆட்சேபிக்கிறேன் என்றதும் சக்கையனின் வழக்கறிஞர் மறுக்க நீதிவான் எதிரணி வழக்கறிஞரிடம் வாதத்தை வைக்குமாறு வேண்டினார்.
“இதை ஏற்றுக் கொள்ளமுடியாது. இது தைக்யமதத்தின் ஆண்தெய்வமான வினோதனன்தான் என்றார். இதற்கு ஆதாரமாக சிலையின் கைகளின் அமைப்பு வில் ஏந்துவதுபோல் உள்ளது என்றார்.
இதற்கு சக்கையனின் வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்து அது வினோதனன் அல்ல என்றும் வெள்ளிமலையில் இருப்பது வீராச்சாமிதான் என்றும் கூறினார். கையின் அமைப்பு
கோடரியை பிடிப்பது போல்தான் உள்ளது என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபிக்கப் பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் விழாக்காலங்களில் பக்தர்கள் கோடாரியினால் மரத்துண்டுகளைப் பிளந்த வழிபடும் வழக்கத்திலிருந்தே இதை ஏற்க முடிகிறது என்றார்.
மேலும் மலைகளிலெல்லாம் வீராச்சாமியே இருப்பார். எங்காவது கடவுள் வினோதனன் மலைமீது இருப்பதாக கேள்விப் பட்டிருக்கிறீர்களா? என்று கேள்வியையும் நீதிவான் முன் வைத்தார்.
இவ்வாறாக வாதமும் பிரதிவாதமும் பகல் நேரம் முடிந்து மாலையும் தொடர்ந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிவான் தீர்ப்பை மறுவாரத்துக்கு ஒத்திவைத்தார்.
வாரம் ஒன்று முடிந்து நீதிமன்றத்தில் பெரும்திரளான பார்வையாளர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். குறித்த நேரத்தில் வந்த நீதிவான் வந்து
இருக்கையில் அமர்ந்தார்.
ஊசி விழுந்தால் கேட்குமளவுக்கு அமைதியைக் காணமுடிந்தது. நீதிவான் தீர்ப்பை வழங்கத் தயாரானார். இருதரப்பு வாதங்களையும் பலகோணங்களிலும் ஆதாரங்களின் அடிப்படையிலும் ஆராய்ந்த பின்னரே இத் தீர்ப்பை வழங்குகிறேன்.
மதமும் மார்க்கமும் என்ற நூல்தான் மேலதிக விபரங்களை இந்த வழக்குக்கு தந்துள்ளது. இந்த நூலாசிரியரின் கருத்து ஏற்றுக்கொள்ளத் தக்கவகையில் உள்ளது. இவரைப்பற்றியும் நான் ஏராளமான ஆதாரங்களைத் திரட்டியதன் அடிப்படையில் இவர் கருத்தை உண்மைக்கு புறம்பாக கூறுவதில்லை என்றும் அறிந்தேன்.
அடுத்ததாக வினோதனன் என்ற ஆண்தெய்வத்தையும் நம்ப முடியாதபடி
கோடாரிப் பண்டிகை பற்றி சக்கையனின் வழக்கறிஞர் குறிப்பிட்டது இந்த வழக்குக்கு
வலுசேர்க்கிறது.
இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் காலத்துக்கு காலம் கடவுளும் கடவுள் வழிபாடும் மாறி வந்திருக்கின்றன என்பதை அறியலாம். சிலமதங்களின் வழிபடுமிடங்கள் தகர்க்கப்பட்டு மற்ற மதத்தின் வழிபடுமிடமாக மாற்றப்பட்டுள்ள வரலாறு நம் நாட்டில் அதிகம்.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு சக்கையன் மதத்தையோ கடவுளையோ எதற்காகவும் இழிவு படுத்தவில்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது. வரலாற்றில் நிகழ்ந்தவைகளைத்தான் சொல்லியிருக்கிறார். இதில் எவ்விதமான அடிப்படை நோக்கமும் கிடையாது என்பதால் இவர்மேல் எந்தவித குற்றமும் இல்லை என்று தீர்ப்பளிக்கிறேன்.
மேலும் கீழ்க்கோட்டில் வழங்கிய தீர்ப்பினால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான இவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நல்நாட்டில் வாழ வாய்ப்பு கொடுக்கப்படும் என்றார். இப்போது அது என்ன நல்லநாடு என்ற கேள்வி மாடசாமி அண்ணாச்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது. நல்நாடு என்பது நம்ம சொர்க்கம் போன்றது.
நீதிவான் தீர்ப்பை மேற்கொண்டு வாசித்தார். மேலும் அங்குள்ளவர்கள் பங்கேற்கும் ஊர்மிளா, பிரமிளா மற்றும் நிர்மலா நடனத்தில் முதல்வரிசையில் அமர்ந்து நடனத்தை கண்டு களிக்கவும் ஒரு வாய்ப்பையும் வழங்கவேண்டும் என்று இந்த நீதிமன்றம் ஆணை பிறப்பிக்கிறது என்று தீர்ப்பளித்தார்.
இங்கு நீதிவான் குறிப்பிட்ட ஊர்மிளா, பிரமிளா மற்றும் நிர்மலா போன்ற நடனமாடும் நாட்டிய நங்கைகள் நம்ம ரம்பை, ஊர்வசி மற்றும் திலோத்தமை போன்றவர்கள் என்பதை மாடசாமி அண்ணாச்சிக்காக மீண்டும் தெளிவு படுத்துகிறேன். நீதிவான் தீர்ப்பை வாசித்து முடித்ததும் இத்துடன் கோர்ட் கலைகிறது என்றார்.
அதனைத் தொடர்ந்து விடுதலை பெற்ற பறவை விண்ணில் பறப்பதுமோல் சக்கையன் நீதிமன்றத்திலிருந்து மகிழ்ச்சியுடன் வெளியேறினா்.
கொடும்நாட்டுக்கு செல்வதில் இருந்து விடுபட்டதோடு அழகிய நங்கைகளின் நாட்டியத்தைக காணும் பெறும்பேறு கிடைத்ததை அறிந்த அவர் மனம் ஆனந்தக் கூத்தாடியது.
கவலையை மறந்து அவர் உதடுகள், “மாங்கனிக் கன்னத்தில் தேனூற, சிறு மைவிழிக் கிண்ணத்தில் மீனாட, தேன் தரும் வாழைகள் போராட, தேவியின் பொன்மேனி
தள்ளாட…ஆட என்று தங்கரதம் வந்தது வீதியிலே என்ற பாடலை உதிர்த்தன.