கதைகள்

“ஐ…ய்…ய்..யா”…. கதை – 7 … குருதிக்குள் கிடக்கும் சங்கதிகள்… சிறுகதைத் தொடர்… மீனாசுந்தர்

என்னவோ காணக் கிடைக்காத அதிசயத்தைப் பார்ப்பது போலத் தான் இங்குள்ளவர்கள் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வங்கியின் வேறொரு கிளையில் நான் ஒரு சாதாரண ஊழியனாய்ப் பணியில் சேர்ந்து கால நகர்தலில் தற்போது பதவி உயர்வில் தலைமை நிர்வாகியாகி இங்கே பணி செய்கிறேன். அவ்வளவு தான். எல்லோரும் சக மனிதர்கள். ஒருவர் மீது ஒருவர் அன்பும், தோழமையும், நேசமும் கொண்டு வாழ்கிற ஜீவனுள்ள உயிர்கள். வேறென்ன பெரிதாய்ச் சொல்ல இருக்கிறது?

நானொன்றும் எவரெஸ்ட் சிகரத்தைத் தாண்டி எட்டிக் குதிக்கவில்லை. செவ்வாய் கிரகத்திற்குச் சென்று ஆராய்ச்சி செய்தும் வரவில்லை. ஆனாலும் இங்குள்ளவர்கள் என்னை ஏன் அப்படிப் பார்க்கிறார்கள் என்பது தான் புரியவில்லை. பெயரைச் சொல்வதற்காக மன்னிக்கவும், எல்லாம் அந்தச் சண்முகநாதனால் வந்தது. அவரை மட்டும் என் வாழ்வில் சந்தித்திருக்காவிட்டால் நான் இவர்களுக்கெல்லாம் இப்படியொரு காட்சிப் பொருளாக வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்க மாட்டேன்.

சண்முகநாதன் என் தமிழாசிரியர். இப்போது உயிரோடு இல்லை. ஆனால் அவர் விட்டுச் சென்ற ஒவ்வொரு சுவடும் எனக்குள் ஆழமாய் பதிந்து கிடக்கிறது. அவர் தான் எனக்கு எல்லாமுமாய் இருந்தார். ஒழுக்கத்தைக் கற்றுத் தந்தார். வாழ்க்கையை எதார்த்தக் கண் கொண்டு பார்க்கச் சொன்னார். மொழி மீதும் மண் மீதும் பற்றுதலையும், பிணைப்பையும் உண்டு பண்ணியவரும் அவரே. தமிழெங்கள் உயிருக்கு நேர் என்று வாழச் செய்தவரும் அவர் தானெனில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. அவரால் தான் எல்லாமும் வந்தது. வேறென்ன சொல்ல நான்?

தொடக்கக் காலத்தில் எனக்கும், அவருக்கும் சூடு பறக்கும் விவாதங்களுக்கு குறைவிருக்காது. என்னை ஒரு மாணவன் தானே என்று அலட்சியம் செய்ய மாட்டார். ஓர் அறிஞனாகப் பார்ப்பார். எனது கருத்துத் தவறென்றாலும் வாதிட்டு உணர வைப்பாரேயொழிய எடுத்தெறிந்து பேச மாட்டார். அவரைப் பிடித்துப் போக இப்படிப் பல காரணங்கள் உண்டு. ஒரு நாள் அப்படித் தான். பள்ளிக்கு எதிர்புறமுள்ள வேப்ப மரத்தடியில் நின்றுக் கொண்டிருந்தார். ஏதோ கேட்பதற்காகச் சென்று.

“சார்” என்றேன். அவ்வளவுதான். அக்கினிப் பிழம்பொன்று கண்டேன் என்பதைப் போலாயிற்று அவரின் விழிகள்
“உனக்கு எத்தனை முறைடா சொல்றது? என்னை சார்ன்னு கூப்புடாதேன்னு.”
“சாரி சார்!”
நாக்கை துருத்திக் கொண்டு கையை ஓங்கியவாறு அடிக்க ஓடி வத்தார்.
“ஐயான்னு தமிழ்ல அழகா சொல் இல்லயா? என்ன பெரிசா சார்ன்னுகிட்டு. ஜார்ஜ்புஷ், கிளிண்டன் பரம்பரைன்னு நெனப்பா உனக்கு?”
சிரித்துக் கொண்டே கோபப்பட்டார்.

சார் என்று சொல்வதில் எனக்கும் உடன்பாடில்லை தான். இருப்பினும் ஐயா என்கிற சொல் எனக்குள் ஏற்படுத்தியிருக்கும் வடுக்களை எப்படிச் சொல்வது இவரிடம்?
மெல்ல வாய்திறந்து…

“சார்… நான் சொல்றத கொஞ்சம் மனமிறங்கிக் கேளுங்க. அப்புறம் நீங்க என்ன வேணாலும் செய்யிங்க” என்றேன்.

சொல் என்பது போலப் பார்த்தார். சொல்லத் தொடங்கினேன்.
“ஐயான்ற சொல்லே எனக்குப் பிடிக்கல சார். என்னவோ ரொம்ப வெறுப்பாருக்கு. ஐயான்னாவே எங்கப்பா வேலை செய்யிற அந்தப் பண்ணை முதலாளி தான் ஞாபகத்துக்கு வர்றான். அவன் மனசுல கொஞ்சமும் ஈரமில்லாதவன் சார்… குளிர்லயும், வெயில்லயுமா மாடா உழைச்சாலும், கூலியை சரியா தர மாட்டான். ஒரு சின்ன தப்பு பண்ணினாலும் சகட்டு மேனிக்குத் திட்டுவான். ஒரு நாய்க்குக் கொடுக்கிற மரியாதையக் கூட எங்க அப்பாவுக்கோ, எங்க பெரியவங்களுக்கோ, கொடுக்கிறதில்லே. அவனுக்கு எதிர்ல உக்காரக் கூடாது. செருப்புப் போடக் கூடாதுன்னு சட்டம் வேற.. அவன் அப்பா பெரிய ஐயாவாம். அவன் தம்பி சின்ன ஐயாவாம். அவன் மவன் சின்னசின்ன ஐயாவோ என்னவோ? எவ்ளோ சின்னப் பய அந்த வாண்டு. அவன் எங்கப்பாவ கொஞ்சங் கூட மரியாதையில்லாம வாடா போடா ன்னு தான் கூப்புடுவான். ஐயான்னாலே அந்த பயலுவளோட கோர முகந்தான் ஞாபகத்துக்கு வருது.. நீங்க ரொம்ப நல்லவங்க.. உங்கள சாருன்னே கூப்புடுறேனே”

ஏனோ கண்களில் நீர் கோர்த்துக் கம்மிற்று எனக்கு. என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சட்டென அது பள்ளியென்பதையும் மறந்து இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டார். எனக்கு கொஞ்சம் கூச்சமாகவே இருந்தது. முதுகில் தட்டிக் கொடுத்தார். பிறகு சொன்னார்.
“ஆசிரியர்களும் உங்களுக்கு அப்பா மாதிரி தான். நீங்க எல்லாரும் நாங்க பெக்காத புள்ளங்கடா. உங்களுக்குக் கெட்டதுக்கு நாங்க வழி காட்டுவோமா? சங்கடப்படாம போயிட்டு அப்புறமா வந்து பாரு” என்றார்.

பயமாய் இருந்தது எனக்கு. மதியத்திற்கு மேல் ஆசிரியர்கள் அமர்ந்திருக்கும் அறையைக் கடந்து சென்ற போது சண்முகநாதன் ஏதோ ஒரு பெரிய புத்தகத்தைக் கையில் வைத்துப் புரட்டிக் கொண்டிருந்தார்.

என்னைக் கண்டதும் அழைத்தார்.
சென்றேன்.
“இங்க பாரு.. இதுக்கு பேரு தமிழ் அகராதி.. தமிழ்ல உள்ள அத்தனைச் சொற்களுக்கும் இதுல சரியான பொருள் வழங்கப்பட்டிருக்கும்.. ஆங்கிலத்துல இதுக்கு டிக்சனரின்னு பேரு. இதுல ஐயாங்குறதுக்கு நேரா என்ன போட்டிருக்குன்னு பாரு”
கை வைத்துக் காட்டினார்.
கவனித்துப் பார்த்தேன்.
“ஐயா- மரியாதைக்குரியவர்களை அழைக்கப் பயன்படுத்தும் சொல்” என்றிருந்தது.
நான் ஐயாவைப் பார்த்தேன்.
“பண்ணை மொதலாளின்னு அர்த்தம் போட்ருக்கா?” என்று கேட்டார்.
இல்லையென்று தலையாட்டினேன்.
“நான் மரியாதைக்குரியவனா இல்லையா?” என்றார் ஐயா.
அந்தக் கேள்வி என்னை வெகுவாகத் தாக்கியது. நீங்கள் உத்தமர் என்று நினைத்துக் கொண்ட எனக்கு ஏனோ என்னயுமறியாமல் கண்களிலிருந்து நீர் வழிய கையெடுத்து முகம் பொத்தி அழுதேன்.
“அழாதே. உனக்கு புரிய வைக்கத் தான் நான் இருக்கேன். இப்ப புரிஞ்சிக்கிட்டியா? இனிமே சார் ன்னு கூப்புடாதே. ஐயான்னே கூப்பிடு.. தமிழனா பொறந்த நாமே தமிழ்ல பேச மறுத்தா வேற யாரு பேசுவா? தமிழ்நாட்டை விட்டு வெளில போறப்ப சாருன்னு கூப்புடு இல்ல மோருன்னு கூட கூப்பிடு. அது அவனவன் விருப்பம். இங்க ஐயான்னே சகூப்பிட்டுப் பழகு. என்ன நான் சொல்றது புரியுதா?” என்றார்.

வந்து விட்டேன். அவரின் அணுகுமுறையும், பேச்சும் நெஞ்சுக்குள் நிழலாடிய படியே இருந்தன. அடுத்தடுத்த காலங்களில் என் மீது நெருங்கி நேசம் கொண்டார். அப்பா, அம்மாவிற்குப் பிறகு ஏனோ அவரைத் தான் ரொம்பவும் பிடித்தது. பேச்சுப் போட்டியில் பேசிப் பாரேன் என்றார். சில பயிற்சிகளையும் கொடுத்தார். பேசினேன். முதல்பரிசு கிடைத்தது. இதோ பார், கவிதைப் புத்தகம். நீயும் எழுதிப் பாரேன் என்றார். எழுதினேன். நாடெங்கும் அங்கீகாரம் கிடைத்தது. கொஞ்சம் கொஞ்சமாக தமிழுக்குள் முழுமையாக நான் ஐயா வழியாகக் கரையத் துவங்கினேன். ஐயாவைப் போல நானும் ஆங்கிலம் கலவாத தமிழைப் பேசவும், எழுதவும் பழகிப் போனேன். இப்போது சார் என்பது கசந்தது. ஐயா தேனாய் இனித்தது.
அந்த அகங்கார வெறி பிடித்த வடிவங்களிலிருந்து முற்றிலும் மாறி ஐயா என்ற சொல் தமிழாசிரியரின் அன்பு வடிவாய் மாறிப் போயிருந்தது எனக்கு. அவர் கொடுத்த இந்த ஒழுக்கம், பண்பு, உழைப்பு, மனிதநேயம் எல்லாமும் தான் என்னை இன்று ஒரு மாண்புள்ள மனிதனாக்கியிருக்கிறது. ஒரு வங்கியில் அதிகாரி நிலை வரை என்னை உயர்த்தியிருக்கிறது என்றால் வியப்படைய ஒன்றுமில்லை.? அத்தனைக்கும் சண்முக நாதனய்யா தான் முழு பொறுப்பு என்பது இப்போது புரிகிறதா?!.

இப்போதும், சுத்த தமிழிலேயே பேசுவதும், எழுதுவதும், பழகுவதும், இவர்களிடமிருந்து என்னை வேறுபட்டவனாய்க் காட்டிக் கொண்டிருக்கிறது. இது தமிழ் நிலம்தானா என்று கவலை கொள்ள வைக்கிறது? என்னுடன் பணி புரிபவரிலிருந்து வரும் வாடிக்கையாளர்கள் வரையும் நான் ஐயா என்றே அழைக்கிறேன். பழகுகிறேன். சார் என்று யாரையும் தவறியும் விளிப்பதில்லை. எனக்கென்னவோ இதிலொரு மனநிறைவு கிடைக்கிறது. ஆனால் இவர்களுக்கு? நானென்ன கேலிப் பொருளா? ஏனிப்படிப் பாரக்கிறார்கள்? நடந்து கொள்கிறார்கள்? ஒன்றும் புரியவில்லை. எவர் கேலியும் என்னை எதுவும் செய்துவிடப் போவதில்லை. இது இரும்புப் பந்து. சிற்றெறும்புகள் சிதைக்க முடியாது. இந்த உறுதி இன்று நேற்று ஏற்பட்டதல்ல.
இப்படியே தான் நகர்ந்து கொண்டிருக்கிறது வாழ்க்கை.
அண்மையில் ஒரு நாள் காலை-
வங்கி பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. வாடிக்கையாளர் கூட்டம் கூட அன்று சற்று அதிகமாகவே இருந்தது. நான் எப்போதும் ஒரு தலைமை நிர்வாகி என்கிற செருக்கோடு நடந்து கொள்வதில்லை. வாடிக்கையாளர் நலன் தான் எனக்கு முக்கியம் என்பதால் ஓடியாடி நானும் செயல்படுவதைக் கண்டு வியந்தவர்களுமுண்டு. ஓரளவு கூட்டம் குறைந்த பின்பு எனது அறையில் வந்து அமர்ந்து கொண்டு காற்றாடியைச் சுழல விட்டேன். வியர்வை சிறகு விரித்துப் பறந்து கொண்டிருந்தது.

வெளியில் ஏதோ சப்தம் கேட்கவே ஜன்னலைத் திரும்பிப் பார்த்தேன். திரைச்சீலை விலகியே இருந்ததால் பார்ப்பதற்கு வசதியாகவே இருந்தது. என்னவென்று அனுமானிக்க முடியவில்லை. அந்த ஊரில் உயர்ந்த மனிதர் என்று சொல்லப்படும் வெங்கடாசலம் பொன்னவராயன் நின்று கொண்டிருந்தார். அவரின் எதிரில் நின்றவாறு ஒருவர் பாவமாகக் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
“ஐயா.. என்னைய மன்னிச்சிடுங்கய்யா. அவன் ஏதோ சின்னப்புள்ளத்தனமா அப்படி நடந்துக்கிட்டான்.. இனிமே அவனை நான் பாத்துக்கிடுறேன். இந்த ஊர விட்டு ஒதுக்கி வைக்கிறேன். அப்படி இப்படின்னு எதுவும் பெரிய காரியம் பண்ணிராதிங்கய்யா”
வெங்கடாசலம் பொன்னவராயன் எதையும் கேட்பதாய் இல்லை. கோபம் முன்னை விடவும் பிரம்மாண்ட வடிவம் கொண்டிருந்தது. தொடர்ந்து அவரின் எகிறல் துளியும் குறையவில்லை. வெப்ப அலைவீசம் வார்த்தைகளின் வீச்சும் குறைந்தபாடில்லை.

“யலே வடிவேலு.. உன் மவன் என்னடா பெரிய மயிறு படிப்பு படிச்சிட்டான்.. யார் யாருகிட்ட எப்படி நடத்துக்கணும்னு தெரியாதா? இவன் என்ன பெரிய புரட்சி பண்றானாமாம்? எங்க வீட்டுவல்ல புலுக்கவேல செய்யலேன்னா ஒரு வேள கஞ்சி குடிக்க வழியிருக்காடா உங்களுக்கு..? என்னவோ தெருவைக் கூப்பிட்டுக் கூட்டம் போடறானாமே… யாரும் எவனையும் இனிமே ஐயான்னெல்லாம் கூப்புடக் கூடாது. உலகம் எவ்வளவோ திருந்திட்டு.. மாற்றம் கண்டு வர்ற உலகத்துல நீங்க மட்டும் அப்படியே அந்தக் காலத்திலேயே இருக்குறீங்கன்னு பேச்சு வேற பேசறானாமே.. ”

அவர் என்னவோ கெட்ட வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டே இருந்தார். அவற்றில் சாக்கடைப் புழுக்கள் நெளியாத குறை தான். அவ்ஊரில் உள்ள பெரியவர்கள் யாராவது அக்காட்சியை நேரில் கண்டிருந்தால் அவ்வளவு கீழ்த்தரமான சொற்களை அவர் பேசுவாராவென பேரதிர்ச்சியில் திகைத்து நின்றிருப்பர்.

வெடிப்பில் விழும் நீர்த்துளி போல அத்தனை கெட்ட வார்த்தைகளையும் உள்வாங்கியவாறே வடிவேல் கருமமே கண்ணாய் அவரைக் கெஞ்சிக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் வெங்கடாசலம் பொன்னவராயன் உச்சமாய்க் கத்தினார்.

“யலே இந்த பேங்க் மேனேஜர் இருக்காரே.. எவ்ளோடா சம்பளம் வாங்குறாரு?. எவ்ளோ பெரிய வேலைல இருந்தாலும் என்னையெல்லாம் பாத்தா எவ்வளவு மரியாதையா நடக்குறாரு. உள்ள போனா ஐயா.. ஐயா.. ன்னு உருகலே? நாங்களெல்லாம் எங்க போனாலும் ஐயா தான்டா.. எவன் கூப்டாலும் ஐயாதான்டா… அவரை விட உன் மவன் என்ன பெரிய புடுங்கியா? இல்ல பொடலங்காயா?”

வடிவேலு கை குவித்தபடி உடம்பைக் குறுக்கி சிலையாக நிற்கிறார். உடம்பு முழுவதிலும் நடுக்கம் பரவி நிற்கிறது.

“இங்க பாருடா சல்லிப்பய மொவனே.. இப்ப என்னோட நீயும் பேங்குக்குள்ள வர்றே… உள்ளே நொழஞ்சதும் மேனேஜர் ஐயா.. ஐயா.. ன்னு ஆடுற ஆட்டத்த உன் கண்ணாலப் பாரு. பாத்துட்டுப் போயாவது உன் மவன்கிட்ட சொல்லு, எத்தனை சென்மம் எடுத்தாலும் நீங்க நீங்கதான்டா. நாங்க நாங்கதான்டா.. எல்லா காலத்திலேயும் எங்களுக்குன்னு சில மதிப்பு மரியாதை இருக்குடா. எவனும் அதை புடுங்க முடியாது. எவன் என்ன படிச்சாலும் இந்த ஊருக்குள்ள கால வச்சிட்டான்னா எங்களுக்குக் கட்டுப்பட்டவன் தான். இங்க நாங்க தான் போலீசு. நீதிபதி எல்லாமும். அதை மீறி வாலாட்டினா உசிறு உடம்புல இருக்காது ஆமா!”
பேசியபடியே தோளில் கிடந்த துண்டைச் சரி செய்து கொள்கிறார். மீசையை நீவி மேலேற்றி விட்டுக் கொள்கிறார்.
சிங்கத்திடம் மாட்டிய ஆடாய் சிதைந்து நிற்கிறார் வடிவேலு,
“வாடா என்னோட!”
மிரட்டிய மிடுக்கோடு திரும்பவும் மீசையைத் நீவியபடியே உள்ளே நுழைகிறார் வெங்கடாசலம் பொன்னவராயன். செம்மறி ஆட்டைப் போலப் பின் தொடர்ந்து செல்கிறார் வடிவேலும்..
வெங்கடாசலம் பொன்னவராயன் பெரிதாக ஒரு கணைப்பு கணைக்கிறார். சத்தம் கேட்டு நிமிர்ந்து பார்க்கிறேன் நான்.

சிங்கப்பல் தெரிய அழகாய்ச் சிரிக்கிறார் அவர்.
சண்முகநாதன் ஐயாவிடம் மளசுக்குள்ளேயே மானசீகமாக ஒரு மன்னிப்பு கோருகிறேன். பிறகு கூடுதல் சப்தத்துடன் அழைக்கிறேன்.

“வாங்க வெங்கடாசலம் சார்… உட்காருங்க!” என்கிறேன். வெங்கடாசலம் முகம் இருள்கிறது. விழிகள் பிதுங்கி வெளியில் விழுந்து விடுமோ என்கிற அதிர்ச்சி. வெங்கடாசலம் பொன்னவராயன் மட்டுமல்ல.., சக ஊழியர்கள் உட்பட வங்கியே இப்போதும் அதிர்ந்து என்னை வித்தியாசமாகப் பார்க்கிறது. எதுவும் புரியாமல் வடிவேலு கைகளைக் கட்டியபடியே அப்பாவியாய் விழித்துக் கொண்டிருக்கிறார். அவர் காலடிக்குக் கீழே வெங்கடாசலம் பொன்னவராயனின் மானமும், மரியாதையும், திமிரும், மிடுக்கும், ஆணவமும் கழுத்து நெறிப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தன.

 

Loading

One Comment

  1. நானாக இருந்திருந்தாலும் கதையின் மாந்தன் போலத்தான் மாறியிருப்பேன்.

    இறுதி அத்தியாயம் அருமை அண்ணா.

    மனம் கனிந்த வாழ்த்துகள் அண்ணா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.