முகநூல்

யாழ்ப்பாண மாட்டுச்சவாரி வரலாறு!

மாட்டுச் சவாரிக்கலை தோன்றிய வரலாற்றைக் கவனிக்கலாம். மாடு என்பது தமிழ்ச்சொல். சவாரி என்ற சொல் உருது மொழி வழியாக தமிழிற்கு வந்தசொல். சவாரி என்றால் “வண்டி முதலியவற்றில் செல்லுகை” என்பது பொருள். இஸ்லாமியர் தமிழ் நாட்டிற்கு வரமுன்னர் மாட்டுச்சவாரி நடக்கவில்லை என்பது கருத்தன்று. மாட்டுப்போட்டி ஓட்டம் தமிழ்நாட்டில் பல காலம் இருந்து வந்துள்ளது. எருதை மையமாக வைத்து நடக்கும் பொங்கல் விழாக்கள் தமிழ்நாட்டில் இருந்து வந்துள்ளன. மாடும் நாயும் தமிழ் மக்களின் நண்பர். “மாட்டு விழா” எடுப்பது தமிழ் நாட்டின் பண்பாட்டு மரபு. தைப்பொங்கலுக்கு அடுத்தநாள் நிகழ்வது மாட்டுப்பொங்கல். இப்பொழுது யந்திர கலப்பை வந்துவிட்டது. அந்தக்காலத்தில் மாடு இல்லாமல் கமத்தொழில் இல்லை ; போக்குவரத்து இல்லை ; செக்கு இழுப்பதும் மாடுதான்.
பொங்கலைத் தவிர சல்லிக்கட்டு என்னும் வீரவிளையாட்டு இன்னும் தமிழ்நாட்டில் வழக்கிலுள்ளது. ஐரோப்பாவிலும் தென் அமெரிக்காவிலும் உள்ள “எருதுடன் மோதுதல்” விளையாட்டில் எருது இறக்கும்; அது கொல்லப்படும். உயிர் மீது அன்புடைய தமிழ் மக்கள் சல்லிக்கட்டு வீர விளையாட்டின்போது எருதைக் கொல்வதில்லை; அதனை மடக்கிப் பிடிப்பர்.
இந்தச் சல்லிக்கட்டு வீரவிளையாட்டைப் பற்றி நோக்கலாம். இதனை மாடு பிடித்தல். எருது பிடித்தல். காளைப் போர் எனவும் தமிழ் மக்கள் கூறுவர். பண்டைக் காலத்தில் நிலவியது எருது தழுவுதல். இந்தச் சல்லிக்கட்டு வீரவிளையாட்டு தோன்றியது பற்றிப் பல கருத்துக்கள் உண்டு. முதலாவது தொன்மையாளர் தரும் கதை. சல்லி என்ற பெயருடைய யாதவகுல வீரன் ஒருவன் இருந்தான். மகா பாரதத்தில் சல்லியன் பெரும் வீரன் என்பது இங்கு கவனிக்க வேண்டியது. சல்லி என்ற வீரன் தோற்றுவித்த கலை சல்லிக்கட்டு காளை வீரவிளையாட்டு என்பர். சமுதாய அடிப்படையில் சல்லிக்கட்டை ஆராய்ந்தவரும் உளர். சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையம். சல்லிக்கட்டு விளையாட்டின்போது சல்லியுடன் பணமுடிப்பும் பவுணும் கட்டப்படும். யார் மாட்டை மடக்கிப் பிடித்துச் சல்லியை எடுக்கிறாரோ அவருக்கு காசும் பவுணும் உடைமையாகும். அத்துடன் கிராமத்து தலையாரியின் மகளை அல்லது மாட்டுச் சொந்தக்காரரின் மகளை திருமணம் செய்து வைப்பர். மாட்டை கைக் கயிற்றில் கட்டி மாட்டுடன் இளைஞர் ஓடுவர். இப்படிப் பலர் கிராமத்துப் புலத்தில் பந்தய ஓட்டத்தில் ஈடுபடுவர். இதில் வென்றவருக்கு தலையாரி பரிசு வழங்குவார். இப்படியான விளையாட்டை யாழ்ப்பாணத்தில் அரசரும், மணியகாரன். உடையார். விதானை போன்ற தலைமைக்காரரும் நடத்தினர் என்பர். பின்னர் மாட்டை வண்டியில் பூட்டி ஓடும் விளையாட்டு வந்தது. இரட்டை மாட்டுவண்டி ஓட்டம், ஒற்றை மாட்டுவண்டி ஓட்டம் என புறம்பாக ஓட்டம் நடைபெறும். சோடி மாட்டை யாழ்ப்பாணத்தவர் “ஓறணை” என்பர். இதன் செந்தமிழ் வடிவம் “ஓரிணை”. இது ஓர் + இணை எனப் பிரியும். இணை என்றால் சோடி.இணைபிரியாத நண்பர் என்பது மரபுச்சொல்.
மாட்டைப் பழக்குதல்:
யாழ்ப்பாணத்து மாட்டுச் சவாரிக் கலையை இனி ஆராயலாம். “சவாரி
மாட்டைப் பழக்கி எடுத்தல் குழந்தைப் பிள்ளையை வளர்த்து எடுப்பது போன்றது” |
என்பர் சவாரி மாட்டுப் பழக்குனர். இந்தச் சவாரிக் கலையை பிரித்து நோக்கலாம்..
முதலாவது கட்டம் கன்றைத் தெரிவு செய்தல். இரண்டாவது கட்டம் கன்றைத்
தேற்றுதல் அல்லத கொழுக்கச் செய்தல். மூன்றாவது கட்டம் மூக்கணாங் கயிற்றை
இடுதல். அதாவது நாணயக் கயிறு குத்துதல். நான்காவது கட்டம் நாம்பனுக்கு ஏர்
வைத்தல். இது பெரும்பாலும் நல்ல நாளில் நடக்கும். இதற்கெனப் பஞ்சாங்கங்களில்நாள் குறிக்கப்பட்டிருக்கும். ஐந்தாவது கட்டம் நாம்பனுக்கு ஆண்மை நீக்கம், குறி சுடுதல் என்பன. ஆறாவது கட்டம் கைக் கயிற்றில் நடத்துதல். இதுவரையில் வயலில், கமத்தில், வீட்டில், புலத்தில் நடத்திப் பழக்கப்பட்ட நாம்பன் தெருவுகளில் நடத்தப்படும். அதாவது மக்கள் கூட்டம். வண்டிப் போக்குவரத்து என்பவற்றைக் கண்டு வெருளாமல் இருக்கவே இந்தப் பயிற்சி நடைபெறும். ஏழாவது கட்டத்தில் “கடைக் கிட்டி பிடித்து” வண்டியில் மாடு பூட்டப்படும். வண்டி நுகத்தில் நுனியில் ஒருவர் பிடிப்பார். இவரின் வழிகாட்டலில் மாடு வெருளாமல் நேராகச் செல்லப் பழகும். வண்டி விடுபவர் நாணயக் கயிறு மூலம் விடுக்கும் கட்டுப்பாட்டையும், குரல் மூலம் உணர்த்தும் கட்டளைகளையும் துவரந்தடி அடி மூலம் வழங்கும் தண்டனை களையும் மாடு ஏற்கப் பழகும். எட்டாவது கட்டத்தில் மாடு சவாரிக்குத் தயாராகும். இந்த எட்டுக் கட்டங்களையும் ஒரு மாடு தாண்டப் பல மாதமாகும்.
ஒருவர் தன் பசுவின் கன்றை ஏர் வைத்து வயலில் உழவு பழக்குவித்தார். நாம்பன் மிக விரைவாக கள்ளம் இன்றிச் சென்றது. இதனால் களிப்புற்ற அவரின் புலன் எல்லாம் மாட்டின் மீது சென்றன. அவ்வழியால் வழிப்போக்கர் ஒருவர் வந்தார். “கடம்பூருக்கு வழி எது?” என்றார் வழிப்போக்கர். மாட்டிலே கவனம் செலுத்தியவர் “இடம்பூணி என்னாவின் எருது” என்றார். அதாவது இடது பக்கத்தில் பூட்டப்பட்ட நல்ல எருது என் மாட்டின் கன்று என்பது பொருள். தன் மாட்டின் பெருமையில் மயங்கி இருந்தவர் காதினிலே “கடம்பூருக்கு வழி எது?” என்ற வினா இடம்பூணி யார் எருது?” என்பது போன்று ஒலித்தது போலும். சவாரி மாட்டினாலே பெருமையடைந்த செல்வந்தர், சொந்தக்காரர் பலர் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தனர் ; இன்னும்
வசித்து வருகின்றனர்.
சவாரிக்குச் சரியான மாட்டைத் தெரிந்தெடுத்தலில் நிபுணர் பலரும் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றனர். சவாரி மாட்டை இரண்டு பிரிவாகப் பிரிப்பர். அவையாவன “நாட்டான்”. “வன்னியான்” என்பன. நாட்டான் என்பது யாழ்ப்பாணத்தில் பிறந்து வளர்ந்த மாடு. வன்னியான் என்பது முல்லைத்தீவு தொடக்கம் மன்னார் மாதோட்டம் வரை உள்ள வன்னிப்பகுதியில் பிறந்து வளர்ந்த மாடு. யாழ்ப்பாணத்து தோட்டங்களில் பிறந்த மாடு “நாட்டான்” சிறு கன்றாக இருக்கும் போது இது துள்ளுவது நடப்பது போன்றவற்றைக் கவனிப்பர். கால், வால், தலை அமைப்பு போன்ற அங்கலட்சணவியல் மரபு வழியாக வருவது. இதற்கேற்ப கன்றைத் தெரிவு செய்து அதற்கு நிறைப் பால் கொடுத்து வளர்ப்பர். இளம் வயதிலே அதற்கு தேன்புல். முள்ளுமுருக்கம் இலை போன்ற உணவு ஊட்டப்படும். பனை அடைப்புகளில் இச்சவாரிக்கன்று துள்ளி விளையாட விடப்படும். அப்போதுதான் அதன் உடல் குறிப்பாக கால்கள் வலிமை பெறும். வன்னியான் கன்றுக்கு இப்படியான வளர்ப்பு முறை தேவையில்லை. அது போதியளவு தாய்ப்பாலைக் குடித்து புல்லை மேயும். தாயுடனும் பட்டியுடனும் சேர்ந்து வளரும். நரி, புலி போன்ற காட்டு மிருகங்களின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில் ஓடித்தப்பப் பழகிக் கொள்ளும். எனவே இது இயல்பாக உடல் உறுதி பெற்றுவிடும். வன்னியான் கட்டாக்காலி மாடு. ஒரு வயதானதும் யாழ்ப்பாணத்தில் இருந்து செல்கின்ற மாட்டு வியாபாரிகள் இவற்றை வாங்கி கந்துவானாக பூட்டி கால்நடையாக யாழ்ப்பாணம் கொண்டுவந்து விற்பர்.
இரண்டாவது கட்டம் கன்றைத் தேற்றுதலுடன் தொடங்கும். தாய்ப்பாலை மறந்த கன்றிற்கு கறியுப்பு, தவிடு, எள்ளுப்புண்ணாக்கு, சுண்ணாம்புத் தண்ணீர், பச்சையரிசி, பனை வெல்லம் போன்ற சத்துணவு வழங்கப்படும். குடற்புழு நோய் ஏற்படா வண்ணம் இடையிடையே வேப்பம் நெய்யும் பருக்கப்படும். மாடு நல்லாக வளர்வதை நன்றாகப் பார்த்தவர் “கண்ணுக்குள் வைத்திடுவர்” அதாவது கண்ணூறு அல்லது “நாவீறு பார்த்தல்” இதனைப் போக்கப் பார்வை பார்த்தல், மந்திரம் ஓதப்பட்ட தண்ணீர் வைத்தல் போன்றவைகளும் இடம் பெறும். இதற்கென கிராமங்களில் மாட்டுப் பரிகாரிமார் இருக்கின்றனர். இங்ஙனம் மாட்டைத் தேற்றுவதும் ஒரு தனிக் கலை.
மூன்றாவது கட்டம் மாட்டிற்கு நாணயக் கயிறு குற்றுதலுடன் தொடங்கும். மாட்டுக்கு மூக்குக்குத்தி நாணயக்கயிறு இடுதல் நல்ல நாளில் இடம்பெறும். இதற்கென தனிப்பயிற்சி பெற்றவர்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கின்றனர். தைப்பூசம் போன்ற நாள்கள் தெரிந்து எடுக்கப்படும். இலையான் மாதங்கள் தவிர்க்கப்படும். குத்துப்புண்ணில் இலையான் மொய்த்தால் புண் பெருத்துவிடும் என்பதே காரணம். மூக்கணாங்கயிறு இட்ட நோ. எரிச்சலினால் கன்று சில நாட்களுக்கு உணவு அருந்தாமல் இருக்கும் ; கூச்சப்படும். எனவே அப்போது வளர்ப்பவர் பெரும் கவனம் செலுத்துவர்.
நான்காவது கட்டம் கைக் கயிற்று நடை தொடங்கும். கைக் கயிற்றிலே
நாம்பனை நடத்திப் பழக்குவர். நடத்துபவர் நாணயக் கயிறு மூலம் விடுக்கும்
கட்டளைக்கு நாம்பன் கீழ்ப்படிந்து நடக்கப் பழகும். கயிறு மூலம் நாம்பன்
பயிற்சிபெறும். கயிற்றை சுண்டப் பிடித்தல், தளர்த்துதல் போன்றவை இவற்றில் சில.
அத்துடன் இப்படிப் பயிற்றுபவர் ஒலிக் குறிப்புகளை எழுப்புவர். இந்தக் கட்டத்தில்
நாம்பனுக்கு ஏர் வைக்கும் பயிற்சி நடக்கும். ஏர் வைக்கும் போது நாம்பன் எப்படி
நடந்துகொள்ளுகின்றது என்பது முக்கியம். வெருளுதல், குறுக்கே அள்ளுதல் –
அதாவது குறுக்கே இழுத்தல் – விழுந்து படுத்தல்போன்ற பிழைகளைச் செய்யாமல்,
நேராக விறுக்காக “அட்டகாசம்” செய்து போகின்ற நாம்பன் சவாரிக்கு உகந்தது
என்பன கவனிக்கப்படும். ஏர் வைத்தல் பெரும்பாலும் தோட்ட உழவு, வயல் உழவு என்பவற்றுடன் நின்றுவிடும்.
ஐந்தாவது கட்டம் ஆண்மை நீக்கம், குறி சுடுதல் ஆகியவற்றுடன் தொடங்கும். ஆண்மை நீக்கம் செய்தால் மாடு கொழுக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. அத்துடன் மாட்டின் கீழ்ப்படிவு உணர்ச்சியும் கூடிவிடும் என்பர். குறிசுடுதல் முக்கியம். குறிசுடப்பட்ட மாட்டிற்கு வலி போன்ற நோய் வராது. அத்துடன் குறி சுட்டால் அழகாக இருக்கும் என்பது மற்றும் ஒரு நம்பிக்கை. குறி சுட்ட மாட்டின் நோவைப் போக்கப் பனங்கள்ளுப் பருக்குதல், வாழைப்பழம் கொடுத்தல். சர்க்கரை கலந்த தவிடு வைத்தல் போன்ற உணவு வகைகளும் வழங்கப்படும்.
இதுவரையும் வயலில் தோட்டத்தில் நின்ற நாம்பன் ஒழுங்கை, தெரு போன்ற சன நடமாட்டம் உள்ள இடங்களில் கைக் கயிற்றில் நடத்தப்படும். இது ஆறாவது கட்டம். சனக்கூட்டம், ஏனைய வாகனப் போக்குவரத்து ஆகியவற்றைக் கண்டு மாடு “வெருண்டடியாமல் நடக்கப்பழகும். கடும் வெருட்சி உள்ள நாம்பன்” சவாரிக்கு உதவாது. இங்ஙனம் வெருட்சி உணர்வு தெளிந்த மாட்டை மேலும் கொழுக்கச் செய்வர்.
ஏழாவது கட்டத்தில் மாடு வண்டியில் பூட்டப்படும். இப்படி பூட்டப்பட்ட மாடுகளின் நுகத்தில் இரண்டுபேர் இரண்டு நுனியிலும் பிடித்துக்கொண்டு நடத்துவர். இதனை “கடைக்கிட்டி ஓட்டம்” என்பர். வண்டி நுகத்தில் மாட்டின் கழுத்து வைக்கும் இடத்தில் இரண்டு பனந்தடிகள் இருக்கும். உட்பக்கமாக இருப்பது உட்கிட்டி : வெளிப் பக்கமாக இருப்பது கடைக்கிட்டி. கடைக்கிட்டியை பிடித்துக்கொண்டு நடப்பவர் இளைஞர். மாட்டின் வேகம், இழுவை. துள்ளல். வெருளல், குறுக்கே இழுத்தல் போன்றவற்றிற்கெல்லாம் ஈடுகொடுத்து மாட்டை வழிநடத்துவது பெரும் பொறுப்பான அலுவல். அத்துடன் வண்டி ஆசனத்தில் இருந்து வண்டியைச் செலுத்துபவரும் கடைக்கிட்டி பிடிப்பவரும் நன்கு ஒத்துழைக்க வேண்டும். பெரும்பாலும் புது மாடுகள் சந்தை போன்ற சனம் நிறைந்த இடங்களுக்கு பூட்டிச் செல்லப்படும்.
இதே கட்டத்தில் சோடி சேர்த்தல் நடைபெறும். ஒற்றை மாட்டு வண்டிச் சவாரி. இரட்டை மாட்டு வண்டிச் சவாரி என்பன புறம்பாக நடைபெறும். இரட்டை மாட்டு வண்டிச் சவாரியே முக்கியமான இடத்தைப் பெறும். மாடுகளைச் சோடி சேர்த்தல் முக்கியம். இரண்டு மாடுகளும் ஒன்றையொன்று புரிந்து நடக்கப் பழகும். சில்லறை நடை, ஓடுதல், நாலுகால் பாய்ச்சல் என்பவற்றில் சோடி -அல்லது ஓர் இணை நன்கு பயிற்சிபெறும். இப்படி இரண்டு மாடுகளும் ஒன்றையொன்று விளங்கிக் கொண்டு சவாரி செய்வதுதான் தனிச்சிறப்பு. சோடி ஒத்துழைக்காவிட்டால் சவாரியில் வெற்றிபெற முடியாது. மேலும் சோடியை ஒன்றாகக் கட்டிப் பழக்குவர்.
சோடி
ஒன்றையொன்று இடிக்காமல், முட்டாமல் இருப்பது முக்கியம். இப்படி நெருங்கிப்
பழகிய சோடி தொட்டிலில் நிற்கும் போது ஒன்றையொன்று நக்கிக் கொடுக்கும். சவாரி
விடுபவர் இரண்டு மாட்டையும் தட்டித் துடைத்து அன்புடன் பழகுவர். அத்துடன்
மாட்டுடன் கதைத்துப் பழகுவர். “வாடா”, “திரும்படா”, “இஞ்சாய்” என்றெல்லாம்
பேசுவார். “இங்கேபார்”, “வா இங்கே? என்பன செந்தமிழ் வடிவம். இவை மாடு
வளர்ப்போரின் வாயில் “இஞ்சாய்”. “வாஞ்சை” எனத் திரிந்து வழங்கும். சவாரி
இரண்டு பிரிவாக நடைபெறும். ஒன்று கன்றுகளுக்கு உரியது – அதாவது கனிட்ட
பிரிவு; மற்றது பெரிய மாடுகளுக்குரிய பிரிவு – அதாவது சிரேட்ட பிரிவு.
சவாரி மாடுகளின் பெயர் : மாட்டு இலட்சணம், நிறம், சொந்தக்காரரின் பெயர் |
ஆகியவற்றைக் கொண்டு இடப்படும். மாட்டு இலட்சணம் பற்றி எழுந்தவை சில:-
கிடாய்க்கொம்பன், விரி கொம்பன், ஏரியன், குதிரைவாலன். நிறத்தை
அடிப்படையாகக் கொண்டு எழுந்தவை:- வெள்ளையன், பெரிய மாவெள்ளை,
செங்காரி, கறுவல், பூச்சியன், சுட்டியன். மாட்டின் குணம் பற்றியும் பெயர் வைப்பதும்
உண்டு :- இடியன் கறுவல், கள்ளக் கறுவல். மாட்டின் சொந்தக்காரரின் பெயர்
கொண்டு எழுந்த பெயர் – மாப்பாணஞ்சோடி, கதிரவேல் சோடி, ஐயற்றை சோடி.
பழக்கப்பட்ட மாடு முதல் முதலாக சவாரிக்கு விடப்படும். இதனை
முதலோட்டம், வெள்ளோட்டம், கன்னி ஓட்டம் என்பர். முதல் ஓட்டத்திலேயே வெற்றி
பெற்ற மாட்டுச் சோடியின் விலை உயரும், அடுத்தடுத்து வெற்றிபெற்ற சோடியின் விலை மேலும் கூடும். சவாரி மாட்டைப் பழக்கி விற்பவர் பலரும் இருந்தனர். இவர்
இதில் தனி இன்பம் பெறுவர். அத்துடன் இலாபமும் பெறுவர். சவாரியைத்
தொழிலாகப் பொழுது போக்காகக் கொண்ட பலர் யாழ்ப்பாணத்தில் இருந்தனர்.
எனவே இவரை சவாரித் தம்பர், சவாரிச்சுப்பர். சவாரிக் கந்தர், சவாரித் இலகர் என்பர்
பொதுமக்கள்.
சவாரி மாட்டைப் பராமரித்தல் ஒரு தனிக்கலை; அதற்கு உணவு ஊட்டுதல்,
தட்டிக் கொடுத்தல், கால் பிடித்தல் எல்லாம் தனிக்கலை. “மாட்டின் வெற்றி அதன்
உணவில்” என்பர். பனம் ஓலை வைத்தால் மாட்டின் கால் உழைவைக் கூட்டும்
என்பது நம்பிக்கை. அரிசி, கடலை, கொம்புப் பயறு, உழுந்து, சிவப்புத் தவிடு, எள்ளுப்
பிண்ணாக்கு என்பன முக்கியமான உணவு. சவாரிக்கு முதல் நாள் எல்லாம்
மாட்டின் ஏரியைத் தட்டி, உடலை உருவி, காலைத் தடவிவிடுவார்கள். சவாரி
முடிந்ததும் துணியைச் சுடுநீரில் நனைத்து “ஒத்தனம்” பிடிப்பர். பச்சைத் தேங்காய்
மட்டையைச் சூடாக்கி உருவிவிடுவர். சவாரியின்போது மாடு பட்ட அடிகாயத்தை
ஆறவைக்க வேப்பநெய், இருப்பைநெய், தேங்காய் நெய், கற்பூரம் காய்ச்சிப் பூசுவர். துவரந்தடி அடிகாயம், குத்தூசிக் காயம் என்பவற்றிற்குச் சிறப்பான
கவனஞ்செலுத்தப்படும்.
ஒவ்வொரு கிராமத்திலும் மாட்டுச்சவாரி ஓட்டத்திடல் இருக்கும். கீரிமலை வீதி
இறக்கம், அளவெட்டி வீதி, ஈவினை வெளி, கூத்தியவத்தை வெளி என்பன
புகழ்பெற்ற போட்டி நிலையங்களுட் சில. யாழ்ப்பாணத்துக் கமக்காரர் மட்டும்
சவாரியில் ஆர்வம் உடையவர்களெனக் கொள்தல் பொருந்தாது. கோப்பாய்
அதிகாரம் நாகநாதன், தமிழரசுத் தந்தை சா.ஜே. வே. செல்வநாயகம். சட்டத்தரணி
“ஐயக்கோன்” செல்லத்துரை போன்றவர் இக்கலையில் பெரும் ஈடுபாடுடையவர்.
இக்கலையை நவீனமயப்படுத்தி விதிமுறைகளை ஏற்படுத்தவேண்டும் என்பதில்
பலரும் ஆர்வம் காட்டி வந்தனர். எல்லோருடைய பெயரையும் இங்கு குறிப்பிட
இயலாது எனினும் அரசாங்க அலுவலராகக் கடமை புரிந்த “இலங்கையர்கோன்”
சிவஞானசுந்தரம், “சவாரி செல்வரத்தினம். அரசாங்க மரக் கூட்டுத்தாபன
உத்தியோகத்தர் இ. இளையதம்பிபோன்றோர் அவருட்சிலர்.
சவாரி வண்டி செய்வது தனிப் பெருங்கலை ; இதிலே போதிய தேர்ச்சி பெற்ற
வல்லுநர் பலர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வருகின்றனர். வண்டிக்குரிய “அளவுக்
கணக்குப் பிரமாணம்” என்பவற்றில் இவர் கைதேர்ந்தவர். இக்கலை பரம்பரையாக
இருந்து வருகின்றது. வண்டி செய்வதில் புகழ்பெற்ற ஒருவர் “வண்டில்” செல்லப்பா
ஆசாரி என்ற பெயரைப் பெற்றிருந்தார். வண்டி அதிகம் பாரமாக இருக்கப்படாது
அத்துடன் அது உறுதியாகவும், பெலமாகவும் இருக்க வேண்டும். வண்டிச்
சிலைகம்பு பூவரசு மரத்தினால் செய்யப்படும். வண்டித்துலா “கமுகுப்” பனையினால்
செய்யப்படும். கமுகுப்பனை என்பது காரணப்பெயர். கமுகு என்பது பாக்குமரம்.
பாக்குமரம்போல மெல்லிதாக உறுதியாக வளர்ந்த பனையே கமுகுப்பனை, நுகம்
மஞ்சள் நுணாவினால் ஆனது. இது வைரம் நிரம்பிய மரம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.