“ஆகாயப்பந்தல்”… கதை -07 … ஏலையா க.முருகதாசன்

இந்த யூஸ் நல்ல ருசியாக இருக்குது,எங்கள் வீட்டில் நாங்கள் செய்யம் யூஸைவிட வித்தியாசமாக இருக்கின்றது,எப்படிச் செய்தனீங்கள் என்று மதுசா கேட்க,உங்களை நான் அண்ணியென்றே கூப்பிடுகிறேன். அது உங்களுக்கான ஏறன்நாமவான கௌரவப் பெயராக உணர்கிறேன்.
மதுசா என்று எப்படி அண்ணி தயக்கமில்லாமல் கூப்பிட முடியும்.என்னைவிட நீங்கள் வயசுக்கு மூத்தவர்,மதுசா என்று கூப்பிட மனம் ஒத்துக் கொள்ளாது என்றவள் அண்ணி என்றே கூப்பிடவா என்று மதுசாவைக் கேட்க உங்கடை விருப்பம் மாதிரியே கூப்பிடுங்கள் என்கிறாள் மதுசா.
தங்கச்சியாரும் மதுசாவும் கதைப்பதை சரவணன் கேட்டும் கேளாத மாதிரி தங்கச்சியார் குடுத்த யூஸைக் குடிச்சுக் கொண்டிருந்தான்.
அண்ணி இந்த யூஸ் செய்வதற்கு முதலிலை எங்களுடைய நாக்கை ஆராய வேண்டும்.எந்தப் பழவகைகளைச் சாப்பிட்டால் மனம் மகிழுமோ அது போல எந்தெந்த பருப்பு வகைகளை எங்கடை நாக்கு ருசிக்க விரும்புமோ அதை நாங்கள் அதை உணவாக்க வேணும்.
நாம் உணவு சம்பந்தமான ஒன்றைத் தயாரிக்கும் போதோ இல்லாட்டில் குடிக்கிற யூஸ் போன்றவற்றைத் தயாரிக்கும் போதோ,சாப்பிடும் போது எந்தச் சுவையாக இருக்க வேண்டும் என்று நாக்கு விரும்புகின்றதோ அல்லாவிட்டால் குடிக்கிற போது எந்தச் சுவையை நாக்கு விரும்புகின்றதோ அதை நினைச்சுக் கொண்டு உணவைச் சமைத்தாலும் சரி குடிக்கிற யூஸைத் தயாரிச்சாலும் சரி நாம் நினைச்ச சுவை அதில் இருக்கும்.
அண்ணி உங்களுக்கும் சுவையாக இருக்க வேணும் எங்களுக்கும் சுவையாக இருக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் தயாரிச்ச யூஸ்தான் இது.
தண்ணீரின் சுவையும் கெடாமல் இதில் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் போட்ட இனிப்பான தோடம்பழத் துண்டுகள்,,இனிப்பான அன்னாசிப்பழத் துண்டுகள்,பேரீச்சப்பழத்துண்டுகள்,சிறிது சிறிதாக வெட்டிப் போட்ட கயூநட்ஸ் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசியில் இருக்கும் என்ற சாரிணி நாம் யாருக்காவது விருந்து கொடுக்க வேண்டுமென்றால் ஏனோதானோ என்று சமைக்கக்கூடாது வந்தவர்கள் இரசிச்சு ருச்சு சாப்பிட வேண்டுமென்பதற்காகச் சமைக்க வேண்டும் அச்சே என்று சொன்னதும்,திகைச்ச மதுசா என்ன என்னுடைய பெயரை மாற்றிவிட்டீர்களா என்று சாரிணியைக் கேட்க,இல்லை அண்ணி மாற்றவில்லை நானும் அண்ணையும் உருவாக்கிய மொழிகளில் அண்ணி என்ற சொல்லுக்கு அச்சே என்றுதான் புதுச் சொல்லை உருவாக்கியிருக்கிறோம் என்கிறாள் சாரிணி.
தொடர்ந்து அவள் ஜேர்மனியிலை பெரும்பாலும் எல்லாரும் அவரவர் பெயரைச் சொல்லியே கூப்பிடுகினம்,ஆனால் நான் அப்படிக் கூப்பிட மாட்டன்,உங்களை அண்ணி என்று கூப்பிடுவதாலை உங்களுக்குப் பிரச்சினை இல்லைத்தானே என்று சாரிணி கேட்க,ஒரு பிரச்சினையும் இல்லை என்று மதுசா சொல்ல எப்படியம் நீங்கள்தான் எனக்கு அண்ணியாக வரப் போகிறீர்கள் என்று சாரிணி மனசுக்குள் நினைச்சு மகிழ்கிறாள்.
அந்த நினைப்பின் மகிழ்ச்சி சாரிணியின் முகத்தைப் பூரிப்பாக்க,என்ன முகம் பிரகாசமாகுது என்று மதுசா கேட்க ஒன்றுமில்லை அண்ணி எனச் சமாளிக்கிறாள் சாரிணி.
வீட்டின் பின்புறமாக பந்தி போல் இறக்கப்பட்ட ஒரு சற்சதுர இரண்டு பக்கம் மட்டுமே முழுச்சுவர்களால் மறைக்கப்பட்ட அறையிலிருந்து கொஞ்ச நேரத்துக்கு முன்தான் அந்த மாயப் பறவை பற்ந்து சென்றிருந்தது-
அந்த அறையின் மிகுதி இரண்டு பக்கமம் அரைச்சுவரால் மறிக்கப்பட்டிருக்க ஒரு பக்க அரைச்சுவர் அந்த அறையின் வாசலாக அமைக்கப்பட்டிருந்தது.
சரவணன் அந்த அறையில் தெற்குப் பக்கமாக ஒரு கதிரையைப் போட்டு உட்கார்ந்து தங்கச்சியார் கொடுத்த யூஸைக் குடிச்சபடி ஸ்ரட் போகும் சைற்றுங் என்ற பத்திரிகையை மனசால் வாசிச்சுக் கொண்டே தனது தங்கச்சியாரும் மதுசாவும் கதைப்பதை கவனமாக உள்வாங்கிக் கொண்டிருந்தான்.
மதுசாவும் சாரிணியும் அரைச்சவரில் ஏறி ஒவ்வொரு பக்கத்hதிலும் உள்ள தூண்களில் சாய்ந்து கொண்டே யூசைக் குடிப்பதும் கதைப்பதுமாகவிருந்தனர்.
காதல் என்பது முதலில் நட்;;பாகவும்,பின்னர் மெதுமெதுவாக காதலாக மாறுவதும் உண்டு.இன்னும் சிலரின் காதல்கள் ஆணோ பெண்ணோ ஒருவரையொருவர் காதலிக்கிறார்களா எனத் தெரியாமல் ஒருவர் காதலிப்பர்,மற்றவர் நட்பாக இருப்பார்.
இன்னும் சிலர் ஒருவரையொருவர் காதலிப்பது நீண்ட நாட்களுக்குப் பின் தெரிய வருவதுமுண்டு.
சிலரின் காதல் பேரிரைச்சலுடன் அலையடிப்பது போல ஊர் உலகம் முழுக்க தெரியவந்து அவர்கள் ஒருவரையொருவர் சந்திப்பதை உளவு பார்த்து நோட்டம் விட்டு அதைப் பற்றிப் பேசுவதிலும் கதை காவுவதிலும் கதை காவிகள் மகிழ்ச்சியடைவார்கள்.
சிலரின் காதலில் எந்த ஆரவாரமும் இருக்காது,கல்யாணம் நடக்கும் போது சங்கதி தெரியுமோ இது பேச்சுக்கால் சம்பந்தம் இல்லையாம் ஒருத்தரை ஒருத்தர் விரும்பி இந்தப் பூனையும் பால் குடிக்குமோ என்பது போல இந்த இரண்டு பூனைகளும் நடந்திருக்குதுகள்,பொடியனை விடு அவன் ஆம்பிளைப்பிள்ளை,அவளைக் கவனிச்சியே ஒன்றும் தெரியாதா பாப்பா போட்டாளாம் தாழ்ப்பா என்பது போல பொல்லாத சம்மங்கி என்று சும்மா மெல்லுற வாயக்கு அவல் கிடைச்சது போல ஊருக்குள்ளை கதைப்பதுமுண்டு.
சரவணனைக் கவனித்தால் அவனோடு மதுசா ஒன்றாகப் படிக்கிறவள் அந்தச் சகவாசத்தில் வந்திருக்கிறாள் என்றுதான் நினைப்பார்கள்.
ஆனால் சரவணன் மதுசாவை ஆழமாகக் காதலிக்கிறான் என்பது மதுசாவுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருந்தது.
சரவணன் மீது அவளுக்கும் லரு ஈர்ப்பு இருந்தது.அது காதலா அல்லது அது நட்பா என அவளாலும் தீர்மானிக்க முடியவில்லை.
இருவருமே ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள ஈர்ப்பை அதன் போக்கிலேயே அனுபவிக்கத் தொடங்கினர்.
ஆனால்,மதுசாவை தனது அண்ணன் விரும்புகிறான் என்பதை சாரிணி தெளிவாகவே கண்டு கொண்டு விட்டாள்.
தங்களுடைய மகனும் மதுசாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி மதுசாதான் தங்களுடைய மகனுக்கு மனைவி ,அவள்தான் தங்களுடைய வருங்கால மருமகள் என சரவணன்,சாரிணியின் பெற்றோர்களான மகேந்திரராஜாவும் சசிகலாவும் முடிவே எடுத்துவிட்டனர்.
மதுசாவும் தங்களுடைய மகனும் காதலர்களானால் இன்னும் சந்தோசமாக இருக்குமே என பெற்றோர்கள் நினைத்தார்கள்.
தங்களுடைய மகனும் மதுசாவும் ஒருவரையொருவர் விரும்புகிறார்களா என்பதன் அசிகையை சாரிணியிடம் நோட்டம்விடச் சொல்லியிருந்தார் சசிகலா.
மகேந்திரராஜா தனது விருப்பத்தை தனது மனைவியைப் போல வெளிப்படையாக சொல்ல முடியவில்லை.
கண்டும் காணாமல் இருந்து உள்ளுக்குள் மகிழ்வது அவரின் இயல்பாக இருந்தது.
சரவணன் தனக்கும் இந்த உலகத்துக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை என்பது போல அங்குமிங்கும் பார்ப்பதும்,இமையை உயர்த்தி பறவை பறந்து போன திசையில் வானத்தைப் பார்ப்புதுமாக இருந்தான்.
சாரிணி காலை ஆட்டியபடி யூஸைக் குடிச்சுக் கொண்டே சிரிச்சுக் கொண்டிருந்ததைப் பார்த்த மதுசா,என்ன சாரிணி உங்கடை பாட்டுக்கு யோசிச்சுச் யோசிச்சு சிரிக்கிறியள் என்று கேட்க,இல்லை அண்ணி அண்ணையின்ரை எதிர்காலத்தை யோசிச்சன் சந்தோசமாயிருந்தது சிரிச்சன் என்று தமையனைக் கடைக்கண்ணால் பார்த்து மதுசாவுக்குப் பதில் சொல்லிக் கொண்டே கீழ்க் கண்ணால் மதுசாவைப் பார்த்த சாரிணி,மதுசா தமையனைப் பார்க்கிறாளா எனக் கவனிச்சாள்.
சரவணனில் தனக்குப் பெரிசாக ஈர்ப்பு எதுவும்: இல்லை என மதுசா தனது மனசை தானே ஏமாற்றி நடிச்சுக் கொண்டிருந்தாள்.
அண்ணையின்ரை எதிர்காலத்தை யோசிச்சன் அதனால் சந்தோசம் வந்தது என்று சாரிணி சொன்னதைக் கேட்ட மதுசா சில நொடிகளுக்குள் அவனைப் பார்த்ததையும்,மதுசாவின் முகம் சிவந்ததையும் சாரிணி பார்த்துவிடுகிறாள்.
மதுசாவை இன்னும் நாண வைக்க வேண்டும் அதைத் தான் இரசிக்க வேண்டும் என்பதற்காக என்ன அண்ணி உங்களுக்குத் தடிமனா மூக்கும் முகமும் சிவந்திருக்குது என்கிறாள்.
இல்லையே எனக்குத் தடிமன் இல்லை என்றவள்ன் மூக்கு நாணத்தால் இன்னும் சிவக்கின்றது,அதை சாரிணி இரசித்தவள் தனது அண்ணனும் மதுசாவும் உண்மையாக அவர்களை அறியாமலே ஆழமாக நேசிக்கிறார்கள் என்பதை உணர்ந்தவள் மதுசாவைச் சீண்ட ம் நடக்கட்டும் என்றவள்,மீண்டும் அண்ணி நீங்கள் எனக்கு வயசுக்கு மூத்தவர்,எப்படி உங்களைப் பெயர் சொல்லிக் கூப்பிட முடியும்,எப்படிப் பார்த்தாலும் அண்ணி என்று உங்களைக் கூப்பிடுவதே மிகச் சரியானது என்கிறாள்.
இந்த மனக்கிளர்ச்சியான சூழ்நிலையிலும் மதுசா, பறந்து போன பறவை எப்பொழுது திரும்பி வரும் என்பதையே நினைச்சுக் கொண்டும் இருந்தாள்.
என்ன அண்ணி திடீரென்று எதையோ யோசிக்கிறியள் என்று சாரிணி கேட்க,ஒன்றும் இல்லை என்று இழுத்தவள் அந்தப் பறவை எப்ப வரும் என்று அண்ணாந்து ஆகாயத்தைப் பார்க்க ஆகாயத்தில் இரண்டு பறவைகள் வருவது தெரிகின்றது.
(தொடரும்….)