“கனகர் கிராமம்”… தொடர் நாவல் அங்கம் – 61 … செங்கதிரோன்

அரசியல் – சமூக – வரலாற்று நாவல்
நீர் நிரம்பிய குளத்தின் அடியிலிருந்து நீர்க்குமிழிகள் மேலெழுவதைப்போல நினைவுகள் நிரம்பிய கோகுலனின் மனக்குளத்தின் அடியிலிருந்து பாவற்குளத்தில் கடமையாற்றிய காலத்து நினைவுக்குமிழிகள் இவ்வாறு மேலெழுந்துகொண்டிருந்தன.
ஒரு கட்டத்தில் பாவற்குளத்திற்குக் கோகுலன் மாற்றலாகிவந்து சில மாதங்கள் கழிந்த ஒருநாள் அவன் முன்பு கல்முனை நீர்பாசனப்பிரிவில் கடமையாற்றிய காலத்தில் அவனுக்குக்கீழ் வேலைகள் மேற்பார்வையாளராகவிருந்த இலட்சுமணிடமிருந்து வந்த கடிதமொன்று கோகுலனின் நினைவுத்திரையில் வந்து விழுந்தது ஆம்! நினைவுக் குமிழிகளிலொன்று அக்கடிதத்தைக் காவி வந்தது.
அன்புள்ள சேர்,
தங்களினதும் தங்களது மனைவி, மகனினதும் சுகத்திற்காக ஆண்டவனை வேண்டுகின்றேன்.
நீங்கள் இங்கிருந்து பாவற்குளத்திற்கு மாற்றலாகிச்சென்றது எங்கள் எல்லோருக்கும் மட்டுமல்ல இப்பகுதி ஊர் மக்களுக்கும் கவலைதான்.
ரங்கநாயகி எம்.பி. அம்மா கனகரட்ணம் ஐயா தொட்டுச்சென்ற வேலைகளை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறா. நீங்கள் இங்கே இருந்திருந்தால் அவவுக்கு இன்னும் உதவியாக இருந்திருக்கும்.
கஞ்சிக்குடிச்சஆற்றுக்குள வேலைகளும் மும்முரமாக நடந்து இப்போது முடியும் தறுவாயிலுள்ளன. நானும் தொடர்ந்து அந்த வேலைத்தலத்தில்தான் கடமை செய்கிறேன். பாவட்டாக்குளம் வேலைகளும் முடிந்துவிட்டன. கமக்காரர்களெல்லாம் உங்களுக்குத்தான் நன்றிசொல்லிக் கதைக்கிறார்கள்.
காரைதீவு வெட்டுவாய்க்கால் வேலைகளும் முடிந்துவிட்டன. கனகரட்ணம் ஐயாவின் மரணத்தினால் இழுபட்டுக்கிடந்த அறுபதாம்கட்டைக் கனகர் கிராமம் முப்பது வீட்டுத்திட்ட வேலைகள் முடிவடைந்து போனகிழமை ரங்கநாயகி எம்.பி.அம்மா வந்து அதைத்திறந்து வைத்தார். நானும் அந்த நிகழ்ச்சிக்குப்போயிருந்தேன். உங்களை அப்போது நினைத்துக்கொண்டேன். அங்கு கூடியிருந்த எல்லோரும் உங்களைப்பற்றித்தான் அதிகம் கதைத்துக்கொண்டார்கள். அதுதான் இக்கடிதத்தை எழுத என்னைத்தூண்டியது.
சிறிதுகாலம் பாவற்குளத்தில் பணியாற்றிய பின்னர் மாற்றம் எடுத்துக்கொண்டு மீண்டும் நமது ஊர்ப்பக்கம் வரப்பாருங்கள் சேர்! நன்றி.
இப்படிக்கு
தங்கள் கீழ்ப்படிவுள்ள
இலட்சுமணன்.
கோகுலனின் நினைவுத்திரையில் வந்து விழுந்த இலட்சுமணனின் கடிதத்தில் தோய்ந்துபோயிருந்த கோகுலனை மீண்டும் அவனது மனைவி அருகில் வந்து,
“என்ன இன்னும் யோசிச்சி முடியல்லயா? கப்பல் தாண்டவனும் இப்படி முழுநாளும் இருந்து யோசிக்கமாட்டான். இரவு ஒம்பது மணியாப் போய்த்து. யோசிச்சது காணும். நாளைக்கும் கொஞ்சம் மிச்சம் வச்சிக்கொள்ளுங்க. எழும்புங்க. வாங்க வந்து நித்திரயக்கொள்ளுங்க”
என்று அக்கறையோடு தோளில் தட்டி உலுப்பியபோதே கோகுலன் நனவுலகத்திற்கு மீண்டான்
கோகுலனும் உடன் தாமதியாது மனைவியின் அன்பான அக்கறையோடுகூடிய சொல்லைத் தட்ட முடியாமல் எழுந்து படுக்கையறைக்குள் சென்று கட்டிலில் சாய்ந்து விழுந்து இமைகளை மூடினான். சற்று நேரத்தில் உறக்கமும் ஓடிவந்து அவனை ஒட்டிக்கொண்டது.
பொத்துவில் அறுபதாம்கட்டையில் “கனகர் கிராமம்” வீட்டுத்திட்டப் பிரதேசம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. மட்டக்களப்பு – அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியின் இடது பக்க ஓரத்தில் வீதியில் பயணிப்போருக்குப் பார்வையில் படும்படியாக ‘கனகர் கிராமம் வீட்டுத்திட்டம் – 300 வீடுகள் – உதவி : இந்தியக்குடியரசு’ எனக் கொட்டை எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீளமான பெயர்ப்பலகை தரையில் நிலைக்குத்தாக நடப்பெற்ற இரு உருக்குக்கம்பங்களின் மேற்பகுதிகளின் குறுக்கே கம்பங்களில் அறையப்பட்டிருக்கிறது. சிங்கள மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு வாசகங்களும் அப்பெயர்ப்பலகையில் எழுதப்பட்டிருக்கின்றன.
பிரதான வீதியிலிருந்து கடற்கரைத்திசையை நோக்கிக் கனகர் கிராமம் வீட்டுத்திட்டத்தினுள் நுழையும் அகலமான கிறவல் வீதியொன்று சிறிதுதூரம் சென்று நாற்சந்தியாகப்பிரிகிறது. கிளை வீதியிலிருந்து இன்னும்பல உபகிளை வீதிகள் பக்கவாட்டில் இருபுறமும் பரந்த வயல்வெளியொன்றில் வரம்புகள் கட்டி நிலத்தைப் பிரித்ததுபோல நிர்மாணிக்கப்பெற்றிருந்தன. நாற்சந்தியிலே பிரதான வீதியை முகம்பார்த்தபடி அமரர் கனகரட்ணம் அவர்களின் சிலையொன்று சதுரவடிவக் கனக்குற்றி வடிவத்தில் நிர்மாணிக்கப்பெற்ற கருங்கல்பீடமொன்றில் நிமிர்ந்த நிலையில் நிற்கின்றது.சிலை தலையிலிருந்து முகத்தை மறைத்துக் கால்வரை சீலையொன்றினால் திரையிடப்பட்டிருக்கிறது. வீதிகளுக்கிடையே கொள்கலன்களை இடைவெளிவிட்டு வரிசையிலே ஒழுங்காக அடுக்கியதுபோல வீடுகள் காணப்படுகின்றன. எல்லாமே செங்கல் சுவர்களும் ஓட்டுக்கூரைகளும் கொண்ட வீடுகள்.
வீடுகள் அமைக்கப்பெற்றிருந்த பகுதியின் ஓரமாக அகன்ற விளையாட்டுமைதானமொன்றும் அவ்விளையாட்டு மைதானத்தின் ஓரமாக மேடையொன்றும் காணப்படுகின்றன. பிரதான வீதியிலிருந்து மைதானம் வரைக்கும் செல்லும் வீதியின் இருபக்கமும் கம்பங்கள் நடப்பெற்று அக்கம்பங்களுக்கிடையில் நீளத்தில் கயிறுகள் கிடையாகக் கட்டப்பெற்று அவற்றில் தென்னங்குருத்தோலைச் சோடனைகள் தொங்கவிடப்பட்டிருக்கின்றன. பாதையின் இரு மருங்கும் இடைவெளிவிட்டுச் சில கம்பங்களில் இராமாயண காவியத்தில் இராமனுக்குப் பட்டயம் சூடும் நிகழ்வில் அயோத்தி மாநகரின் அலங்கரிப்பைக் கவிச்சக்கரவர்த்தி கம்பன் வர்ணித்தவாறு “மங்கையர் குறங்கென” வாழைகள் கட்டப்பெற்றும் அவற்றின் அடியிலே “கொங்கையை நிகர்த்த கனக” கும்பங்களும் வைக்கப்பெற்றுமிருக்கின்றன.
“மங்கையர் குறங்கென வகுத்த வாழைகள்
அங்கவர் கழுத்தென கமுகமான்றன
தங்கொளி முறுவலிற் ராமனான்றன
கொங்கைகள் நிகர்த்தன கனக கும்பமே”
என்ற தான் படித்த கம்பராமாயணப் பாடலைக் கோகுலன் அசைபோடுகிறான்.
மைதான நுழைவாயிலிலிருந்து மேடைவரைக்குமான வழியிலும்கூட இருமருங்கும் கம்பங்கள் நடப்பெற்றுச் சோடனைகள் சற்று அடர்த்தியாகச் செய்யப்பட்டிருக்கின்றன.
மைதானத்தின் நடுவே மேடையின் முன்னால் நடப்பெற்றிருந்த உயர்ந்த இரு உருக்குக் கம்பங்களின் உச்சியில் இலங்கை மற்றும் இந்தியத்தேசிய கொடிகள் சுற்றி மடிக்கப்பெற்றுத் தொங்கிக்கொண்டிருக்கின்றன.
மேடையின் முன்னால் நாற்காலிகள் வரிசையாக நீளப்பாட்டிலும் அகலப்பாட்டிலும் வரிசையாகப் போடப்பட்டு அவற்றில் பொதுமக்கள் அமர்ந்திருக்கிறார்கள்;. மைதானத்தை நோக்கித் திரண்டுவந்துகொண்டிருக்கும் பொதுமக்களை வழிகாட்டி நாற்காலிகளில் வரிசையாக அமரச்செய்யும் கருமத்தில் காணிமீட்புப் போராட்டத்தலைவி ரங்கத்தனா ஓடியாடி ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். மேடையும் நன்கு அலங்கரிக்கப்பெற்றுப் பிரமுகர்கள் அமர்வதற்கென அலங்கார நாற்காலிகள் வரிசையாகப் போடப்பட்டிருக்கின்றன. மேடையின் ஒருபக்கத்தின் முன்பக்க மூலையில் ஒலிவாங்கியொன்று நிறுத்தப்பெற்றிருக்கிறது. ஒலி வாங்கியின் முன்பு கோகுலன் நின்று கொண்டிருக்கிறான்.
திடீரென்று பிரதான வீதியின் திசையில் படார்…படார்…சட்…சட் எனப் பட்டாசுகள் தொடர்ந்து வெடிக்கும் சத்தம் வானத்தைப்பிளக்கிறது. ஆடம்பரக்கார்கள் இரண்டும் அவற்றைத்தொடர்ந்து மேலும் சில வாகனங்களும் வந்து பிரதான வீதியோரம் தரிக்கின்றன. ஆடம்பரக்கார்கள் இரண்டிலுமிருந்து இரு முக்கியமான பிரமுகர்கள் இறங்குகிறார்கள். மேடையில் ஒலி வாங்கியின் முன் நின்றிருந்த கோகுலனின் குரல் ஒலிக்கின்றது.
“கனகர் கிராமம் வீட்டுத்திட்டத்தைச் சம்பிரதாயபூர்வமாகத்திறந்து வைக்க வருகை தந்துள்ள கௌரவ இலங்கைப் பிரதமரையும், முந்நூறு வீடுகள் – விளையாட்டு மைதானம் – சந்தைக் கட்டிடம் – சனசமூகநிலையம் – நூல்நிலையக்கட்டிடம் – கலாசார மண்டபம் – குடிநீர்க்கிணறு – நீர்த்தாங்கி குடிநீர்விநியோகக் குழாய்கள்- மின்சாரம் என ஒரு கிராமத்தின் அனைத்துத்தேவைகளையும் உள்ளடக்கிய கனகர் கிராமம் மீள்குடியேற்றக்கிராமத்தின் நிர்மாணத்திற்குரிய நிதிப்பங்களிப்பை முழுமையாக வழங்கி உதவிய இந்தியக் குடியரசின் இலங்கைக்கான கௌரவ தூதுவரையும் வருக வருக எனக் கனகர் கிராம மக்கள் மனம்மகிழ்ந்து வரவேற்கிறோம்”.
இலங்கைப் பிரதமரும் இந்தியத் தூதுவரும் உள்ளூர்ப் பிரமுகர்களால் மலர்மாலை அணிவித்து வரவேற்கப்படுகிறார்கள். மைதானத்தில் அமைக்கப்பெற்றிருந்த மேடையின் முன்னால் நாற்காலிகளில் அமர்ந்திருந்த அனைவரும் முகம் மலர எழுந்து நிற்கிறார்கள். தொடர்ந்து,
“தற்போது கனகர் கிராமம் பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்யப்படும்” என்ற அறிவிப்பு ஒலிபெருக்கியிலிருந்து வருகிறது.
இலங்கைப் பிரதமரும், இந்தியத்தூதுவரும் உள்ளூர்ப் பிரமுகர்கள் புடைசூழ்ந்து நிற்க கனகர் கிராமம் பெயர்ப்பலகையை மூடித்தொங்கவிடப்பட்டிருந்த திரைச்சீலையைக் கயிற்றுமுடிச்சின் நுனியை இருவரும் பிடித்துச்சுண்டி இழுக்கத் திரைச்சீலை விலகி ஒரு பக்கமாக ஓடிப் பெயர்ப்பலகை பளிச்சிடுகிறது. அனைவரும் கரவொலி எழுப்புகிறார்கள்.
தவில் மற்றும் நாதஸ்வர வாத்தியக் கலைஞர்கள் மங்கள இசையை எழுப்பியபடி முன்னால் செல்ல அதற்குப்பின்னால் கொக்குகள் போன்று வெள்ளையுடை தரித்துக் கிளைவீதியின் இருபுறமும் பூக்கள் நிரம்பிய சிறிய தளிசைகளைக் கரங்களில் ஏந்திநின்ற பாடசாலைச் சிறுமிகள் பரதநாட்டிய நர்த்தகிகள் அசையும் லாவகத்தில் அபிநயத்துடன் பூக்களை அள்ளி மேலே எறிந்து தூவியவண்ணம் அன்னநடை பயில இருபுறமுமிருந்து மேலே தூவப்பட்ட பூக்கள் ஒரு பரவளைவுக் கோலத்தைக் காட்ட உள்ளூர்ப் பிரமுகர்களுடன் இலங்கைப் பிரதமரும் இந்தியத் தூதுவரும் ஊர்வலமாகச்சென்று கிளை வீதியின் நாற் சந்தியில் நிர்மாணிக்கப்பெற்றிருந்த அமரர் கனகரட்ணத்தின் சிலையை அண்மிக்கிறார்கள்.
மேடையிலிருந்த ஒலிவாங்கியிலிருந்து,
“இப்போது கனகர் கிராம வீட்டுத்திட்டத்தின் பிதாமகரான அமரர் கனகரட்ணம் அவர்களின் திருவுருவச்சிலையைக் கௌரவ இலங்கைப்பிரதமர் திறந்து வைப்பார்.” எனக்கோகுலனின் வார்த்தைகள் புறப்படுகின்றன.
மரத்தினால் செய்யப்பட்ட அகலமான ஏணியொன்று பீடத்துச் சுவரில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. அதில் மெதுவாகக் கால்களை ஊன்றி ஏறிச்சென்ற இலங்கைப் பிரதமர் திருவுருவச்சிலையை மூடியிருந்த துணியின் முடிச்சொன்றைச் சுண்டி இழுத்துவிடச் சிலையை மூடியிருந்த துணி மெதுவாக அவிழ்ந்து கீழேவிழ கனகரட்ணம் மலர்ந்த முகத்துடன் வேட்டியுடனும் நெஸனலுடனும் காட்சிதருகிறார்.
கரவொலியால் கனகர் கிராமத்தைச் சுற்றியிருந்த காடே அதிர்கிறது. அடுத்து ஒலிபெருக்கியிலிருந்து, “அடுத்ததாகக் கௌரவ இந்தியத்தூதுவர் அவர்கள் அமரர் கனகரட்ணம் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செய்வார்” என்ற அறிவிப்பு வெளிவருகிறது.
இந்தியத்தூதுவரும் மரஏணிப்படிகளில் கால்களை வைத்து ஏறிச்சென்று கனகரட்ணத்தின் சிலையின் கழுத்தில் மலர்மாலை ஒன்றை அணிவித்துப் பின் கைகூப்பி மரியாதை செய்கிறார். ஊர்வலம் இப்போது மைதானத்தில் அமைக்கப்பெற்றிருந்த மேடையை நோக்கிச் சிற்றாறு ஒன்று மெதுவாக ஓடுவதுபோல ஊர்கிறது.
இலங்கைப்பிரதமரையும் இந்தியதூதுவரையும் காவிவந்த ஆடம்பரகார்களிரண்டும் பிரதான வீதியின் ஓரத்தில்வந்து தரித்ததுமே எழுந்து நின்று மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்த பொதுமக்கள் இப்போதும் எழுந்து நின்றபடியே முகங்களில் முல்லைப்பூப் பூத்ததுபோல் முறுவல்களைச்சிந்தியபடி கரவொலிகளைத்தொடர்ந்து எழுப்பிகொண்டேயிருக்கிறார்;கள்.
ஊர்வலம் இப்போது இலங்கையினதும் இந்தியாவினதும் தேசியக்கொடிகள் கட்டப்பட்டிருந்த கம்பங்களை வந்தடைகிறது. ஒலி பெருக்கியிலிருந்து கோகுலனின் குரல் ஒலிக்கிறது.
“இப்போது தேசியக்கொடிகள் ஏற்றிவைக்கப்படும்.”
இந்தியத்தூதுவர் இந்தியத் தேசியக் கொடியையும் சமகாலத்தில் இலங்கைப்பிரதமர் இலங்கைத் தேசியக்கொடியையும் ஏற்றுகிறார்கள். இரு நாட்டினதும் தேசியக் கொடிகள் காற்றில் படபடவெனப் பட்டொளி வீசிப் பறக்கின்றன. பின்னணியிலே இலங்;கை மற்றும் இந்திய தேசிய கீதங்கள் மாறி மாறி ஒலிக்கின்றன. இலங்கைப்பிரதமரும் இந்தியத் தூதுவரும் விழா ஏற்பாட்டாளர்களால் மரியாதையாக அழைத்துச்செல்லப்பட்டு மேடையில் போடப்பட்டிருந்த ஆடம்பர நாற்காலிகளில் அமரவைக்கப்படுகிறார்கள்.
எழுந்துநின்றிருந்த பொதுமக்கள் மீண்டும் வானைமுட்டும் கரகோஷத்தை எழுப்பியபடி ஆசனங்களில் அமர்கிறார்கள். கோகுலன் ஒலிவாங்கியின்முன் நின்றபடி வரவேற்பு வசனங்களை வாரி இறைத்துக்கொண்டிருக்கிறான். மக்களின் கரவொலியும் வாத்தியங்களின் மங்களஇசையும் படிபடியாக அமர்முடுகலை அடைகின்றன.
திடீரென்று சற்றும் எதிர்பாராதபடி பிரதான வீதிப்பக்கமிருந்து யானையொன்று பிளிறும் சத்தம் வான்வெளியைத் தகர்க்கிறது. கோகுலன் உட்பட எல்லோரும் பிளிறல் சத்தம் எழுந்த திசையை நோக்கித் திரும்புகின்றனர். அங்கே பிரதான வீதியின் மறுபக்கத்தில் வீதியை ஒட்டியதாகவிருந்த தேக்குமரக் காட்டுப்பகுதியிலிருந்து யானையொன்று வெளிப்பட்டுத் தும்பிக்கையை ஆட்டியவாறு ஓடிவந்து வீதியில் ஏறுகிறது.
மைதானத்தில் கூடியிருந்த சனக்கூட்டம் அபாய ஓலமிட்டவாறு கடற்கரைப்பகுதியை நோக்கி முண்டியடித்துக் கொண்டும் விழுந்தும் இடறி எழும்பியும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். வீதியில் ஏறிய யானை கனகர் கிராமம் பெயர்ப்பலகைக் கம்பத்தைப் பிடுங்கிச்சாய்க்கிறது. பின் கிளை வீதியுள் நுழைந்து கும்பங்களைக் காலால் உதைத்துக் கவிழ்த்தும் வாழை மரங்களைப் பிய்த்து எறிந்தும் கம்பங்களைக் காலால் தட்டித் தரையில் சாய்த்தும் தென்னம் குருத்துச்சோடனைகளைப் பிய்த்தெறிந்தும் துவம்சம் செய்தபடி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
மேடையிலிருந்த இலங்கைப்பிரதமரையும் இந்தியத்தூதுவரையும் சுற்றிவளைத்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கைகளில் துப்பாக்கியை ஏந்தியபடி நின்று கொண்டிருக்கிறார்கள்.
ஒலிவாங்கியின்முன் நின்றிருந்த கோகுலன் செய்வதறியாது சிலைபோல் அசையாமல் விறைத்துப்போய் நிற்கின்றான். திடீரென்று “டுமீல்” என்று பாரிய வெடிச்சத்தம் கிளம்புகிறது.
கோகுலன் கனகரட்ணத்தின் சிலை நிறுவப்பெற்றிருந்த திசையை நோக்குகிறான்.
என்ன ஆச்சரியம்! தன் கண்களைக் கோகுலனால் நம்பவே முடியவில்லை. கனகரட்ணத்தின் சிலை உயிர்பெற்று நிற்கிறது. உயிர்பெற்ற அச்சிலையின் கைகளில் நீளமான துவக்கொன்று யானையை நோக்கிக் குறிபார்த்து நீட்டியபடி இருக்கிறது.
வியப்படைந்த கோகுலன் யானை முன்னேறிவந்துகொண்டிருந்த திசையைப் பார்க்கிறான். யானை சிறிய மலைக்குன்றொன்று சாய்ந்ததுபோல் நிலத்தில் சரிந்து கிடக்கிறது.
கோகுலன் மேடையிலிருந்து இறங்கி யானை சரிந்து கிடந்த இடத்தை நோக்கி வேகமாக ஓடிச்சென்று யானையை அதன் அருகில் சென்று பார்க்கிறான்.
யானை அதன் நெற்றிப்பொட்டிலே குண்டுபாய்ந்து குருதி கொப்பளிக்க உயிரற்றுக்கிடக்கிறது.
கோகுலன் ஆ…ஆ… என்று ஆரவாரிக்கிறான்.
கோகுலனின் மார்பில் தலைசாய்த்தபடி துயின்று கொண்டிருந்த அவன் மனைவி சுந்தரி கோகுலன் சத்தமிட்டதைக்கேட்டுச் சடுதியாகக் கண்விழித்தவள்,
கோகுலனைத் தட்டி உசுப்பி “என்ன! கனவுகண்டு கத்தின நீங்களா? ” என ஆதரவாகக்கேட்டாள்.
கண்விழித்துக்கொண்ட கோகுலனும் “ ஓம்! ” என்று மெல்லிய நீண்ட முனகலுடன் மறுபக்கம் புரண்டு ஒருக்களித்துப்படுத்தான்.
தான் கனவுகண்டவாறு “கனகர் கிராமம்” மீள்குடியேற்றம் எதிர் காலத்தில் அமையுமா? என எண்ணி ஏங்கினான். அதன் பின்பு அவனுக்கு நித்திரையே வரவில்லை. விடியவிடியப் புரண்டு புரண்டு கட்டிலில் நெளிந்தான்.
2019 ஆகஸ்ட் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலைப்பொழுது ஏக்கத்துடன் விடிந்தது.
(‘கனகர் கிராமம்’ அரசியல் – சமூக – வரலாற்றுநாவல் முற்றிற்று)