கவிதைகள்

ஜீவா! சரித்திரம் படைத்தாய்! போய் வா!…. கவிதை… செங்கதிரோன்

இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இலங்கைத் தமிழ் இலக்கிய நிறுவகமும்
இணைந்து ஏற்பாடு செய்து, 02.02.2025 அன்று பேராசிரியர் சபா ஜெயராஜா அவர்களின்
தலைமையில் நடைபெற்ற அமரர். அந்தனி ஜீவா நினைவேந்தல் நிகழ்வில் செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் அளித்த கவிதாஞ்சலி.

 

 

 

 

 

 

 

“கலைத் தேனீ’ என்று உன்னைக்
கவிஞராம் சில்லையூரார்
அழைத்தனர் அகவை நீயோ
ஜம்பதை அடைந்த போதில்.
உழைப்பவர் உயரவென்றே
ஊழியம் செய்தாய்! மண்ணில்
நிலைக்குமே உந்தன் நாமம்
நீள்துயில் கொண்டாய் ! போய் வா !

கொழும்பிலே பிறந்து கல்வி
கொழும்பிலே கற்றுப் பின்னர்
தொழும்பெலாம் மலையகத்தின்
தோட்டத்தில் என்று வாழ்ந்தாய்!

அழும்பிள்ளை கண்ணீர் போக்கும்
அன்னையைப்போலும் நின்று
விழும்தொழில் ஆளர் வாழ்வில்
விளக்கேற்ற முனைந்தாய்! போய் வா!

நாடகத் தமிழில் கீர்த்தி
நாட்டினாய்! மட்டுமல்ல
ஊடகத்துறையும் ஓங்க
ஓடி நீ உழைத்து மேலும்
சோடனையில்லா உந்தன்
சொற்களால் சுரண்டுவோரைச்
சாடவும் செய்த ஜீவா!

சரித்திரம் படைத்தாய்! போய் வா!
‘அந்தனி ஜீவா’ என்றால்
அனைவரும் அறிவர் உன்னை
வந்தனை செய்து வாழ்ந்தோம்!

வானிலே உறைய எம்மை
முந்தினாய் ஜீவா! ஜயோ!

மூளுதே சோகம்! கண்ணீர்
சிந்திநாம் அஞ்சலித்தோம்!
சீர்பெறு தோழா! போய் வா!

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *