புதிய ஜனநாயக முன்னணி ரணில்,சஜித்துடன் இணையும்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் புதிய ஜனநாயக முன்னணியும் இணையும் நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று சந்தித்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் உட்பட எதிர்வரும் தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடுவது மற்றும் நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருகட்சிகளும் இணைந்து பொதுச் சின்னத்தில் போட்டியிடும் நிலைப்பாடடை ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவுடன் புதிய ஜனநாயக முன்னணியில் போட்டியிட்ட மூவர் வெற்றி பெற்றதுடன் இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களும் கிடைக்கப்பெற்றன.

அநுராத ஜயரத்ன, சாமர சம்பத் தசநாயக்க மற்றும் ரோகித அபேகுணவர்தன வெற்றி பெற்றதுடன் தேசியப் பட்டியல் ஆசனத்துக்கு ரவி கருணாநாயக்க மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். தேசியப்பட்டியல் ஆசன நியமனத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக புதிய ஜனநாயக முன்னணியின் கூட்டணி கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *