இந்தியா

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகினார் நடிகை வினோதினி!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுவதாக நடிகை வினோதினி தெரிவித்துள்ளார்.

தமிழில் பல்வேறு திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை வினோதினி. இவர், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 13-ஆம் திகதி இணைந்தார். இந்த நிலையில் மய்யத்திலிருந்து மிகுந்த வருத்தத்துடன் வெளியேறுவதாக என நடிகை வினோதினி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது;

‘அரசியல் பெரிய கடல். அதில் முத்தெடுத்து, மக்களுக்குச்சேர்க்க, தனிப்பட்ட நபரால் ஆக்கப்பூர்வமான விஷயங்கள் செய்ய தேவை – எண்ணம், சிந்தனை, செயல், பணம். என்னிடம் எண்ணமும் சிந்தனையும் மட்டுமே உள்ளது என்பதைக் காலம் புரியவைத்திருக்கிறது.

கட்சி எடுத்த பல நிலைப்பாடுகளைக் கேள்வி கேட்டிருக்கிறேன். பெருந்தன்மையோடு எனக்கு புரிய வைத்திருக்கின்றனர். யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்புக்கள் எனக்குக் கிடைத்திருக்கின்றன. தலைவரோடு நேரடியாக உரையாட, கேள்வி கேட்க, பற்பல நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைக்க, பற்பல செயல்பாடுகளை முன்னெடுக்க. ஆனால் அவற்றையெல்லாம் நான் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

நம்மவர் போன்ற மகத்தான தலைவனைத் தவறவிட்டது தமிழ்நாடு மட்டுமல்ல,வினோதினியும்தான். தொடர்ந்து என் எண்ணமும் சிந்தனையும் தமிழ்நாட்டு அரசியலை மையப்படுத்தியே இருக்கும். ஏனெனில், நான் பிறந்த இம்மண்ணுக்கு என் மக்களுக்கு என்னால் ஆன சிறு மாற்றத்தையாவது, குறைந்தபட்சம் சிந்தனையளிவிலாவது, இப்பிறவியில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் என் நோக்கம். தொடர்ந்து பயணிப்போம். சமரசமற்ற நடு நிலையிலிருந்தபடியே” இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நடிகை வினோதினி விலகியுள்ளமை தமிழக அரசியல் அரங்கில் பெரும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.