ஆக்கிரோசமாக சுற்றிவளைத்து தாக்கி கடற்படையினரின் துப்பாக்கியை பறிக்க இந்திய மீனவர்கள் முற்பட்டனர்
சட்டவிரோதமான முறையில் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த படகை சோதனையிட சென்ற போது அதற்கு ஒத்துழைக்காமல் அந்தப் படகில் இருந்த இந்திய மீனவர்கள் படகில் ஏறிய கடற்படையினரை ஆக்கிரோசமான முறையில் சுற்றிவளைத்து அவர்களை தாக்கி துப்பாக்கியை பறிக்க முயன்றவேளை ஏற்பட்ட முறுகல் நிலைமையின் போது தவறுதலாகவே துப்பாக்கி இயங்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட தெரிவித்துள்ளார்.
28ஆம் திகதி அதிகாலை இலங்கையின் வடக்கு கடல் பகுதியில் கடற்படையினரின் சோதனை நடவடிக்கையின் போது இந்திய மீனவர்கள் இருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் நேற்று புதன்கிழமை நடத்தப்பட்ட விசேட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற விமானப்படையின் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்தவும் கலந்துகொண்டிருந்தார்.
முதலில் செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் கூறுகையில்,
தேசிய பாதுகாப்பு விடயத்தில் இலங்கை கடல் எல்லையை பாதுகாப்பதற்கு நாங்கள் கடற்பட்டுள்ளோம். இதன்படி வடக்கு கடல் மட்டுமன்றி நாடு முழுவதையும் உள்ளடக்கியதாக கடற்படையினர் சோதனை நடவடிக்கைகளை 24 மணிநேரமும் முன்னெடுக்கின்றனர். இதன்படி கடல் எல்லையை மீறி சட்டவிரோதமான முறையில் எமது கடலுக்குள் வந்த இந்திய ரோலர் படகொன்றை கடற்படையினர் சோதனையிட சென்ற போது அந்த சோதனைக்கு ஏற்றவாறு அந்த படகில் இருந்தவர்கள் நடந்துகொள்ளாமையினால் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டு அந்த படகிற்குள் நுழைய கடற்படையினர் முயற்சித்துள்ளனர். அதன்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. குறித்த படகிற்கு இரண்டு கடற்படையினர் மட்டுமே ஏறியுள்ளனர். கடற்படையினர் சட்டபூர்வமாக முன்னெடுக்கும் சோதனை நடவடிக்கைகளுக்கு இடமளிக்காத காரணத்தினாலேயே அங்கே மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அப்பால் சட்டவிரோத போதைப் பொருள் வியாபாரம், ஆயுத வியாபாரம் மற்றும் ஆட் கடத்தல்கள் நடக்கின்றன. அண்மையில் சட்டவிரோதமாக வந்த படகொன்றில் இருந்து பெருமளவான போதைப் பொருட்கள் மீட்கப்பட்டன. இதனால் சட்டவிரோதமாக நுழையும் எந்தப் படகாக இருந்தாலும் அதனை சோதனையிட பாதுகாப்பு தரப்பினர் கடற்பட்டுள்ளனர். தேவையான முறைமைகளை பின்பற்றி சட்டப்படியே அவ்வாறான சோதனைகள் நடக்கின்றன. இதன்படி சம்பந்தப்பட்ட படகில் இருப்பவர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என்றார்.
இதனை தொடர்ந்து கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொட கூறுகையில்,
இலங்கை கடற்படை படகும் கரையோர பாதுகாப்பு படகும் அதனுடன் தொடர்புடைய கடற்படையினரும் தேசிய கடல் எல்லை பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடும் நிலையில் அவர்கள் படகுகளை ரேடரில் காணும் போது அது தொடர்பில் அவதானம் செலுத்தி சம்பந்தப்பட்ட படகை எல்லையில் இருந்து அப்பால் செல்லுமாறு அறிவிப்பர். ஆனால் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய படகு அந்த அறிவித்தலையும் பொருட்படுத்தாது செயற்பட்டமையினால் அதனை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர். அதன்போது அதனை நிறுத்தாது செயற்பட்டமையினால் அந்தப் படகை சோதனையிடுவதற்காக அந்தப் படகில் ஏறுவதற்கு முயற்சித்துள்ளனர். அதன்போது முதலில் இருவர் படகில் ஏறியுள்ளதுதுடன், அவர்கள் கப்பலை செலுத்தும் பிரிவுக்குள் செல்ல முயன்ற போது அங்கிருந்த இந்தியர்கள் இருவர் ஆக்கிரோசமான முறையில் கடற்படையை சேர்ந்த இருவரையும் தாக்கி, சுற்றிவளைத்து துப்பாக்கியை பறிக்க முயன்ற போது ஏற்பட்ட நிலைமை காரணமாகவே துப்பாக்கி இயங்கும் நிலைமை உருவாகியுள்ளது.
இதன்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்தியாவை சேர்ந்த இருவர் சிறிய காயத்ததிற்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்களை கூடிய விரைவில் மருத்துவ சிகிச்சைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்தப் படகு நிறுத்தப்பட்ட பின்னர் அந்தப் படகை சோதனைக்கு உட்படுத்திய போது சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்ட மீன்கள் அந்த படகில் இருந்துள்ளன. குறித்த படகில் இருந்தவர்கள் எமது கடல் எல்லைக்குள்ளேயே கைது செய்யப்பட்டுள்ளனர். படகில் இருந்த மீன்கள் மூலம் அவர்கள் சட்டவிரோதமாக எமது கடலுக்குள் நுழைந்துள்ளமை உறுதியாகியுள்ளது. அத்துடன் எமது கடற்படையினருடன் ஆக்கிரோசமான முறையில் நடந்துகொண்டுள்ளதாகவும் மற்றும் எமது கடற்படையினரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஏனைய மீனவர்கள் கடற்றொழில் திணைக்களத்தின் ஊடாக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த மீனவர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு சுகமடைந்து வருகின்றனர்.
இவ்வாறாக தேசிய நீரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை நாடுமுழுவதும் முன்னெடுக்கின்றோம். இதன்படி குறித்த நடவடிக்கை வல்வெட்டித்துறை கடலுக்கு அப்பால் நடந்துள்ளது. இதன்போது சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மேலும் மூன்று படகுகளுடன் 34 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாங்கள் எமது கடமைகளை முறையாகவே முன்னெடுக்கின்றோம். இதன்போது எமது கடற்படையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய வகையில் நடந்துகொள்வதன் காரணமாகவே அவர்கள் துப்பாக்கியுடன் படகில் ஏறியுள்ளனர். இதன்போதே அங்கு முறுகல் நிலைமை ஏற்பட்டு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் முடிவடைந்துள்ள போதும், தொடர்ந்தும் கடற்படை தலைமையகத்தினால் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் ஆரம்பகட்ட விசாரணைகளில் சம்பவத்தின் போது துப்பாக்கி குண்டு கீழ் நோக்கி வெளியேறியுள்ள விதத்தை ஆராயும் போது அது தவறுதலாக நடந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது என்றார்.