ஜனாதிபதி விஜயத்தின் போதான போராட்டத்திற்கு நீதிமன்றத் தடை கோரப்பட்டுள்ளது

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களுக்கு தாம் எதிர்க்கவில்லை எனக் கூறும் ஜனாதிபதி, இம்மாத இறுதியில் வடக்கிற்கு விஜயம் செய்யும் போது நடத்த திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் போராட்டங்களை தடை செய்யுமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் நீதவான் நீதிமன்றத்திடத் விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த நீதவான், பொலிஸாரால் பரிந்துரைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட தமிழ் ஆர்வலர்கள் குழுவை வியாழக்கிழமை (30) நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளும் வேளையில், ​​யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் சர்வானந்தசிவம் சசிகரன், போராட்டக் குழுவின் யாழ்ப்பாண மாவட்டத் தலைவர் பொன்ராஜ் பிரேம் டக்ளஸ் பிரபாகரன், தற்காலிக சுகாதார ஊழியர்கள் சங்கத் தலைவி எஸ். ஜெஸ்மின் மற்றும் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன் ஆகியோர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக, யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்றைய தினம் (ஜனவரி 29) நீதிமன்றுக்கு அறிவித்துள்ளதாக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற பதிவாளரின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க குற்றவியல் சட்டக்கோவையின் பிரிவு 106 (1) (2) (3) இன் கீழ், போராட்டங்களை தடைசெய்யும் நீதிமன்ற உத்தரவைப் பிறப்பிக்குமாறு யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கோரியுள்ளதாக நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொலிஸாரால் பெயரிடப்பட்ட ஐவரையும் ஜனவரி 30ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு நேரடியாகவோ அல்லது சட்டத்தரணிகள் ஊடாகவோ யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையாகி தமது தரப்பு நியாயங்களை முன்வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க ஜனவரி 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள மாவட்ட செயலகத்தில் நடைபெறும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் போராட்டங்களில் ஈடுபட்ட நீண்ட வரலாற்றைக் கொண்ட கட்சியின் தலைவரான ஜனாதிபதி, அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் தலையிடப்போவதில்லை என பகிரங்கமாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *