31ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு ஜனாதிபதி விஜயம் பட்ஜெட்டில் வடக்கிற்கு பல விசேட திட்டங்கள்
ஜனாதிபதியினால் எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாணத்திற்கென விசேட வேலைத்திட்டங்கள் முன்வைக்கப்படவுள்ளதாக அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் யாழ். விஜயம் தொடர்பில் யாழில் நடத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 31ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அவரின் விஜயத்தில் முதல் அம்சமாக 31ஆம் திகதி முற்பகல் 9 மணிக்கு நடக்கவுள்ள யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இந்த குழுவின் தலைவரான அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சகல பிரதேச அதிகாரிகளுக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளதுடன், பிரதேசங்களில் உள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்காக குறுகியகால மற்றும் நீண்டகால தீர்வுத் திட்டங்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்குமாறு கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பிற்பகல் தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டங்கள் இரண்டு நடத்தப்படவுள்ளது. யாழ். வல்வெட்டித்துறை மற்றும் மிருசுவிலில் இந்தக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் வெற்றி மற்றும் பாராளுமன்றத் தேர்தல் வெற்றியில் வடக்கு மக்கள் விசேட வெற்றியை பெற்றுக்கொடுத்துள்ளனர். ஒரே இலங்கைக்குள் எமது பிரச்சினைகளை தீர்க்க முடியுமென்ற எதிர்பார்ப்புகளை இந்த வெற்றியின் ஊடாக ஏற்படுத்தியுள்ளனர். இதன்படி ஜனாதிபதி இந்த மக்களை சந்திக்கவுள்ளார்.
இதேவேளை பெப்ரவரி 17ஆம் திகதி ஜனாதிபதியினால் முன்வைக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் அனைவருக்குமானதை போன்று வடக்கிற்கென விசேடமான வேலைத்திட்டங்கள் பலவற்றுக்கான யோசனைகளை முன்வைக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக வடக்கு மக்கள் தமது அரசியல் பயணத்திற்காக தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்துள்ளனர். இதனால் இவர்களுக்கு தனது கௌவரத்தை வழங்குவதற்காகவே ஜனாதிபதி வடக்கிற்கு வருகை தரவுள்ளார். ஜனாதிபதியின் இந்த விஜயத்துடன் நீண்ட காலமாக தீர்க்கப்படாது இருக்கும் பிரச்சினைகள் பலவற்றுக்கு தீர்வுகள் கிடைக்கும் என்று நம்புகின்றோம் என்றார்.