தேங்காய் சம்பலை சாப்பிடுவதால் அரசாங்கம் என்னை கைது செய்யலாம்
தேங்காய் சம்பலை விரும்பி சாப்பிடுவதாலும், விலங்குகளுக்கு சோறு வைப்பதை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும் கூறியதால் என்னை அரசாங்கம் கைது செய்யலாம் என்று பிவிருத்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பிவித்துறு ஹெல உறுமய கட்சித் தலைமையகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கம் கூறிய எதனையும் செய்யவில்லை. மக்களை முட்டாள்கள் போன்று நினைத்தே தேசிய மக்கள் சக்தி செயற்படுகின்றது. இன்னும் பொய்களை கூறி மக்களை ஏமாற்ற முடியும் என்றே நினைக்கின்றேன். இந்த அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை நானே நானே ஆரம்பித்து வைத்தேன். நல்லாட்சி அரசாங்கத்தை போன்று இந்த அரசாங்கத்தின் மீது பாரதூரமான விமர்சனங்களை முன்வைக்கின்றேன். இப்போது அரசாங்கம் கூட்டுறவு சங்க தேர்தலிலும் தோல்வியடைந்து வருகின்றது. அந்த கோபத்தை எங்கள் மீது தீர்த்துக்கொள்ளலாம். இதன்படி நான் பாரதூரமான குற்றம் செய்துள்ளதாக கூறலாம்.
அதாவது நான் எனக்கு பிடித்த உணவாக வாரத்திற்கு ஐந்து நாட்களாவது தேங்காய் சம்பல் சாப்பிடுவேன். இப்போது நாட்டில் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு இதுவே காரணம் என்றும் என்னை கைது செய்யலாம். அதேபோன்று விலங்குகள் நலன்புரி ஒன்றியத்தின் பாராளுமன்ற குழு தலைவராக நான் இருந்த போது, மக்கள் உணவுகளை வீசாது அவற்றை நாய்களுக்கு வழங்கலாம் என்றும் அதனை முன்னெடுக்க வேண்டும் என்றும் யோசனை முன்வைத்தேன். இந்நிலையில் நாய்கள் சோறு சாப்பிடுவதாலேயே அரிசிக்கு தட்டுப்பாடு என்று ஜனாதிபதி கண்டுபிடித்துள்ளார். வீட்டில் உள்ள நாய், பூனைகளுக்கு வீட்டில் சோறு வைப்பது வழமையாகும். ஆனால் நாய்களுக்கு உணவு கொடுப்பதை ஊக்குவிக்க வேண்டும் என்று நான் கூறியுள்ளதால் அதனை பாரதூரமான விடயமாக கருதி எவ்வேளையிலும் என்னை கைது செய்யலாம்.
இதேவேளை திருடர்களை பிடிப்பதாக கூறிக்கொண்டு ஊடக கண்காட்சிகளையே நடத்துகின்றனர். யோஷித ராஜபக்ஷ கைது விடயத்தில் இதனை புரிந்துகொள்ள முடிகின்றது என்றார்.