இணக்கம் ஏற்பட்ட பின்பே ரணில் – சஜித் சந்திப்பர்
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இடையே இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட பின்னரே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இடையிலான ஒன்றிணைவு தொடர்பான பேச்சுவார்த்தைகளின் நிலவரம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அதன்போது ஹர்ஷன ராஜகருண மேலும் தெரிவிக்கையில்,
சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. நாளைய தினமும் (இன்று) கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. சிறந்த முன்னேற்றமொன்று ஏற்பட்டுள்ளது. இனியுள்ளவையே கடினமான விடயங்களாக இருக்கும். அவற்றை சரியாக செய்து ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எமது நிலைப்பாட்டுடன் இருக்கக் கூடிய சகல கட்சிகளுடனும் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வோம். நாங்கள் பரந்துபட்ட கூட்டணியை அமைத்து ஆட்சியை மாற்றக்கூடிய பலமான அணியை உருவாக்குவோம். இதனால் உள்ளூராட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு மட்டுமன்றி அதற்கும் அப்பால் சென்று எமது அரசியல் முகாமை பலப்படுத்தவே நடடிக்கை எடுப்போம்.
தலைமைத்துவத்தில் மாற்றத்தை மேற்கொள்ள வேண்டிய தேவை கிடையாது. எம்மிடம் பலமான தலைவர் சஜித் பிரேமதாச இருக்கின்றார். இவர் நேர்மையான மற்றும் திறமையான தலைவராக இருக்கின்றார். மாற்ற வேண்டிய பல இடங்கள் உள்ளன. அவற்றை மாற்றி பலமான முகாமை உருவாக்கிக்கொள்வோம்.
ரணில் விக்கிரமசிங்கவின் பிரதிநிதிகளால் மூவரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள. அதேபோன்று சஜித் பிரேதாசவின் பிரதிநிதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களிடையேவே பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இணக்கப்பாடுகளுக்கு வந்த பின்னர் சஜித் பிரேமதாசவும் ரணில் விக்கிரமசிங்கவும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கின்றோம். முதலில் இந்த இரண்டு குழுக்களுக்கு இடையிலேயே பேச்சுவார்தைகள் நடத்தப்படும் என்றார்.